காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி
2017 ஆம் மாதம் வெளிவந்தவை:
திரு
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை
தி.ம.இராமலிங்கம்
இகநிலைப்
பொருளாய் பரநிலைப் பொருளாய்
அகமறப்
பொருந்திய வருட்பெருஞ் ஜோதி - 8
இகநிலைப்
பொருள்: இகநிலை என்பது இவ்வுலக உயிர்களின் இயக்கங்களை குறிக்கும். இவ்வுலகம் மட்டுமன்றி
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கின்ற உயிர்கள்
எல்லாம் எதனை பொருளாக / அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன?என்றால், அந்த அடிப்படையான
பொருளாக விளங்குவது அருட்பெருஞ்ஜோதியே ஆகும்.அருட்பெருஞ்ஜோதியையே பொருளாகக் கொண்டு
இகநிலையான இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
பரநிலைப்
பொருள்: பரநிலை என்பது கடவுளின் இயக்கத்தை குறிக்கும். அண்டத்தில் பரமாகாச சொரூபராக
விளங்கும் கடவுளின் இயக்கம் எதனை பொருளாக / அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது?என்றால்,
கடவுளின் அடிப்படை இயக்கமாக விளங்குவதும் அருட்பெருஞ்ஜோதியே ஆகும்.அருட்பெருஞ்ஜோதியையே
பொருளாகக் கொண்டு அந்த பரநிலையான கடவுளும் இயங்கிக்கொண்டிருக்கின்றார்.
அகம்
அற பொருந்துதல்: ‘அகம்’ என்பது ‘நான்’ என்கின்ற, ஆன்மாவுக்கே அமைந்துள்ள இயற்கையான
ஆணவ மலம். கடவுளின் வல்லபத்தால் அந்த ஆணவ மலத்தை அழித்து அவ்விடத்தில் அருட்பெருஞ்ஜோதியை
பொருந்த செய்தலே, ஆன்மா பரமான்மாவாக உயரும் நிலையாகும்.இவ்வாறு அருட்பெருஞ்ஜோதி நம்
அகம் முழுதும் பொருந்துதலே இறையணுபவமாகும்.
இகநிலை
என்பது உயிர்கள் சம்பந்தமுடையது.எனவே இகநிலை பொருள் என்பது உயிர் இரக்கமாகும்.உயிர்
இரக்கமாகிய ஜீவகாருண்ய வழிபாட்டுடன் இருக்கும் ஒரு ஆன்மாவானது பரநிலை பொருளான சர்வசித்தியான
ஞானசித்தியினை அடையும்.அவ்வாறு ஞானசித்தியை அடையும் ஆன்மாவின் அகத்தில்தான் நான் என்கின்ற
ஆணவம் அகற்றப்பட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவ்வான்மாவில் பரிபூரணமாக பொருந்துவார்.
எவ்வுயிர்
பிண்டத்திலும் அதன் புருவ மத்தியில் இகநிலை பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதுபோல்
அண்டத்தில் பரமாகாசத்தில் பரநிலைப் பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.இகநிலையானாலும்
பரநிலையானாலும் அருட்பெருஞ்ஜோதியே அதனதன் இயக்கங்களாகஉள்ளன.எனவே நாம் இகநிலையினைக்
கொண்டு பரநிலை அடைந்து இறைமயமாவதே அருட்பெருஞ்ஜோதி அனுபவமாகும்.
ஈனமின் றிகபரத்
திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய
வருட்பெருஞ் ஜோதி – 10
ஈனமின்றி: குறைவு
ஏதுமின்றி முழுதுமாக
இகம் பரம் என
இரண்டு: இகமாகிய புருவமத்தி, பரமாகிய பரமாகாசமாகிய இரண்டிலும்
மேற்பொருள்:
உயர்ந்த அனுபவப்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி
ஆனலின்: ‘ஆகநின்று’
என்பதே இலக்கணம் கருதி இங்கு ‘ஆனலின்’ என்று மருவியது.
நமது புருவமத்தியாகிய இகம் மற்றும் பரமாகாசமாகிய
அண்டமான பரம் ஆகிய இவை இரண்டிலும் குறைவு ஏதுமின்றி முழுமையாக, அனுபவப்பொருளாக நின்று
ஓங்குவது அருட்பெருஞ்ஜோதியே ஆகும்.
உரைமனங் கடந்த
வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு
மருட்பெருஞ் ஜோதி – 12
உரைமனம்: பேசும்
மனம் / மனதினால் நினைத்து சொல்லக்கூடிய நிலை.
அரைசு: ‘அரசு’
என்பதே இலக்கணம் கருதி ‘அரைசு’ என மருவியது.
மனம் உரைக்கக்கூடிய எல்லையையும் கடந்து பெருவெளிக்கும்
மேற்பட்டு தம்முடைய ராஜாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது அருட்பெருஞ்ஜோதி.
இறைவனின்
நிலை இன்னது, இறைவனது இடம் இன்னது என்று இறைவனைப்பற்றி ஒரு துரும்பும் நமது
மனமானது நினைத்து உரைத்துவிட முடியாது என்பார் வள்ளலார். நாம் பேசுவதற்கும், நினைப்பதற்கும்,
நடப்பதற்கும் இப்படி என்னென்ன செய்தாலும் அதற்கு ஆதாரம் நமது மனமே. மனம் செயல்படவில்லை
என்றால் மனிதன் பிணமே. மனம் செயல்படுவதாலேயே அவன் மனிதன் ஆனான். அப்படிப்பட்ட மனதால்கூட
இறைவனின் நிலையினை உரைத்துவிட முடியாது. நமக்கு எதிரில் உள்ள வெட்ட வெளி எவ்வளவு தூரம்
நீண்டிருக்கும் என்று நமது மனதால் உரைத்துவிட முடியாது.
பிரமத்தை மனதினால் உணரவேண்டுமே தவிர உருவ வழிபாட்டால்
பிரமத்தை எங்ஙனம் உணரமுடியும்? என்ற கேள்விக்கு வள்ளற்பெருமானின் பதில்,
“பிரமத்தை மனதால்
எப்படி நினைக்க முடியும்? ஆகாயம் அடியாலும் படியாலும் அளக்கப்படுமோ? காற்று கைக்கு
அகப்படுமோ? அகப்படாது. அதுபோல் பிரமம் மனதிற்கு அகப்படாது. மனம் சிறிது தோன்றினும்
ஆத்ம ஞானம் விளங்காது. மனதிற்கு அகப்படும் எதுவும் நமது ஐம்புலன்களுக்கும் அகப்படும்.
மனம் என்பது அசத்து, சடம், அநித்தியம், துக்கம், அசுத்தம் உடையது. பிரமம் சத்து, அறிவு,
நித்தியம், இன்பம், சுத்தம் உடையதாகும்.”
மேற்காணும்
மனதின் நிலையால் நாம் இறைவன் நிலையினை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று புலனாகின்றது.
வள்ளற்பெருமானுக்கு மட்டும் எப்படி புலனாகியது? என்றால், அவருடைய மனமான அகம் அகன்றதால்,
அருட்பெருஞ்ஜோதி அவருடன் ஒன்றியது. நாம் இதற்கு முன்னரே “அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி”
-8, என்கின்ற இடத்தில் கண்டோம். இவ்வாறு அவருக்கு புலனாகிய அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தை
நமது மனதளவில் புலனாகும் வண்ணம், அருவ வழிபாட்டை எதிர்த்து அதே சமயம் உருவ வழிபாட்டையும்
ஆதரிக்காமல் அருவுருவ வழிபாடான “ஜோதி” வழிபாட்டினை கொண்டுவந்தார். இந்த ஜோதியானது நமது
மனதிற்கும் ஐம்புலன்களுக்கும் உட்படுவதால், உண்மையில் ஜோதி என்பது இறைவன் அல்ல என்பது
தெளிவு. எனினும் இதனைக்கொண்டு நம் மனதினை அகற்றி உண்மையான ஜோதி சொரூபத்தை நமது ஆன்ம
ஞானத்தால் காணவேண்டும் என்பதே வள்ளற்பெருமானின் நோக்கம் ஆகும்.
எனவே அருட்பெருஞ்ஜோதி
என்கிற இறைவன், பெருவெளிக்கும் மேல் நின்று விளங்கி அங்கிருந்து தமது இராஜாங்கத்தை
நடத்தி வருகின்றார். அது எப்படிப்பட்ட வெளி, அவ்வெளி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில்
அல்லது அருகில் இருக்கின்றது? அவ்வெளியையும் கடந்த இடம் எப்படியிருக்கும்? வெளியில்லாத
ஒரு இடத்தை நாம் எப்படி ஊகிப்பது? அங்கே அருட்பெருஞ்ஜோதி எவ்வடிவில் இருக்கின்றது?
எப்படி இராஜாங்கம் செய்து வருகின்றது? என்பதனை எல்லாம் நமது மனதால் உரைத்துவிட முடியாது.
உரைமனம் கடந்தது இறை நிலையாகும். எனினும் இதனை படிக்கும்போது நமக்கு ஒவ்வொருவருக்கும்
ஒரு கற்பனை நமது மனதில் தோன்றவே செய்யும்! இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று
நமது மனம் உரைக்கவே செய்யும். நமது மனம் அறும் வரை நமக்குத் தோன்றிய அந்த கற்பனையில்
இறைவன் நிலையினை நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இவ்வுலகை பொறுத்த
மட்டில் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் மட்டுமே ஞான சித்தரால் / ஞானதேகம் பெற்றவரால் எழுதப்பட்டுள்ளது.
மற்ற புனித நூல்கள் என்று கருதப்படும் எல்லாம் மாயையில் சம்பந்தமுடைய கர்ம சித்தர்கள்
மற்றும் பெரியவர்களால் இயற்றப்பட்டுள்ளது. கர்ம சித்தர்கள் மற்றும் பெரியவர்கள் இயற்றிய
நூல்களுக்கு மாயையில் சம்பந்தமுடைய நாம் உரை எழுதலாம். ஆனால் ஞானதேகமடைந்த ஞான சித்தர்
எழுதிய நூல்களுக்கு உரை எழுதுதல் என்பது பிறரை ஏமாற்றும் வேலையாகும். நான்கூட அதைத்தான்
இப்போது செய்துக்கொண்டிருக்கின்றேன். ஏனெனில் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் எல்லாம்
உரை மனம் கடந்த நிலையில் எழுதப்பட்டதாகும். நாமோ உரை மனம் உரைத்ததை அதன் உரையாக எழுதுவது
தகாது. அவ்வாறு எழுதினால் மாயை குறுக்கிட்டு தவறுகள் கண்டிப்பாக நேரும். உரைமனம் கடந்த
மற்றொரு ஞானசித்தரால்தான் திரு அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு உரை எழுத முடியும். அந்த
ஞானசித்தரும் கூடிய விரைவில் வருவார், எழுதுவார்.
ஊக்கமு முணர்ச்சியு
மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய
வருட்பெருஞ் ஜோதி - 14
உலகர்கள் எல்லாம்
பொய்யை பிடித்து புறத்திலே இருக்க, நான் போய் பொதுநடம் கண்டு களிக்கும்போது, என்னைப்
பார்த்து இறைவன் சொன்னான்…, ‘நீயே மெய்யினை பிடித்தாய்… வாழிய நீ… சமசர சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளங்குக’… என்று எனக்கு இறைவனே ஊக்க மருந்து அளித்தான் என்பார்
வள்ளலார்.
‘பொய்பிடித்தார்
எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
விளங்கஉல கத்திடையே விளங்குக…’ (5769)
அப்படிப்பட்ட
ஊக்கமும், நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும்
கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து… என்கிறவாறான அற்புதமான ஆன்ம உணர்ச்சியும் எனக்களித்தான்.
“நினைந்துநினைந்
துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ரதனால் உடம்பு
நனைந்துநனைந்து…”
(5576)
இவ்வாறு ஊக்கமும்
உணர்ச்சியோடு எனது பொய்யுடம்பையும் மெய்யுடம்பாக்கி ஒளிரச்செய்தான் என்பதனை,
“ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்”…
(5397)
என்று தமது
உடல் பெற்ற நிலையினை அருட்பாவாகப் பாடுவார்.
ஊக்கமும் உணர்ச்சியும்
ஒளி தேகமும் இறைவன் அருளாள் தாம் பெற்றதோடு இருந்துவிடாமல் அதனை பிறருக்கும் தானே இறைநிலையிலிருந்து
அருள வேண்டும் என்கின்ற ஆக்க சக்தியையும் தாம் பெற்றதை இந்த அகவல் வரிகளிலே பெருமான்
தெரிவிக்கின்றார். ஆக்க சக்தியானது இறைவனிடம் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று. அச்சக்தியினை
வள்ளலாரும் பெற்று தம்மை போல உள்ள யாவருக்கும் தாம் பெற்ற நிலையினை அளித்து அவர்களையும்
ஒளி உடம்பினராக ஆக்கும் வல்லமையினை பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். இங்கே, எமது செயலை
உனது செயலாக நடத்தும்படி இறைவனே அவருக்கு அருள் செய்தார் என்பதே செய்தி.
“தந்தேகம் எனக்களித்தார்
தம்அருளும் பொருளும்
தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்..”
(5704)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.