Sunday, February 26, 2017

தைப்பூசம் - 146



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

தைப்பூசம்
========


25-01-1872-ஆம் ஆண்டு பிரசோற்பத்தி தை மாதம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை தைப்பூசத்தன்று வள்ளற்பெருமான் தாம் தோற்றுவித்த சத்திய ஞானசபையில் முதன் முதலில் இவ்வுலகெலாம் பொதுநெறி ஓங்கும் பொருட்டு ‘அருட்பெருஞ்ஜோதி’ தரிசனம் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது 09-02-2017-ஆம் ஆண்டு 146-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் நிகழ இருக்கின்றது.

30-01-1874-ஆம் ஆண்டு ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தைப்பூசத்தன்று வள்ளற்பெருமான் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் இரவு 12 மணியளவில் நுழைந்து கதவைத் திருக்காப்பிட்டுக்கொண்டார்.

வள்ளற்பெருமான் தமது அகத்தே தாம் கண்டுணர்ந்த அருட்பெருஞ்ஜோதியை புறத்திலே சத்திய ஞான சபையில் காட்டிய நாளும், சித்திவளாகத்தில் கடவுள் நிலையறிந்து அம்மயமானவுடன் தமது புறத்தை மறைத்துக்கொண்ட நாளும் தைப்பூச நன்னாளே ஆகும். அகத்திலே மறைந்திருந்த இறைவனை புறத்திலே காட்டி, புறத்திலே இருந்த தமது உடலை அகத்திலே மறைத்தார். அகம் புறமானது. புறம் அகமானது. இவ்வுலகிடையே அகம் வெளிப்பட்டது, அதனைக் காட்டிய புறம் அகப்பட்டது. அகம் வெளிப்பட்ட இடம் சத்திய ஞானசபை. புறம் அகப்பட்ட இடம் சித்திவளாகம். புறத்தே காட்டியதை அகத்தே கண்டால், நமது புறம் அகமாகும் என்பதே வள்ளலார் நமக்குச் சொன்ன அபூர்வ உண்மை புரட்சி செய்தியாகும், அப்படிப்பட்ட புரட்சியினை ஏற்படுத்திய நாள் தைப்பூசத்தினமாகும்.

ஏன் வள்ளலார் தைப்புச நன்னாளை தேர்ந்தெடுக்க வேண்டும்? வள்ளற்பெருமான் வருவிக்க உற்ற நாட்களுக்கு முன்பே நமது தமிழகத்தில் சைவ சமயத்தில் முருக வழிபாட்டில் தைப்பூசம் மிகவும் சிறப்பாக கொண்டாடடப்பட்டு வந்துள்ளது. எனவே முருகனை வழிபடுவதற்காக இந்நாளை வள்ளற்பெருமான் தேர்ந்தெடுத்தாரா? என்றால் இல்லை.

சத்திய ஞானசபையை இயற்கை விளக்கம் என்பார் வள்ளலார். அது நமது உடலின் தலைப்பகுதியினைக் குறிக்கும். பிண்டத்தில் இயற்கை விளங்கும் இடம் தலைப்பகுதியாகும். அண்டத்தில் இயற்கை விளங்குமிடம் சூரிய / நட்சத்திர சந்திரன் என்னும் பிண்டமாகும். இவ்வாறு அண்டத்திலே பிண்டமாக விளங்கும் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று நிறைவு பெற்று நாமிருக்கும் பூமிக்கு ஒரே நேர்க்கோட்டில் எதிரெதிரே வருகின்ற நாளே இயற்கை விளங்கும் தைப்பூச நன்னாளாகும். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று இதேபோன்று இயற்கை விளக்கிக்கொண்டுதான் உள்ளது. தை மாதம் பூச நட்சத்திரத்தில் வருகின்ற பெளர்ணமியை தைப்பூசம் என்கிறோம். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும்போது பெளர்ணமியான முழு நிலவு பூமிக்கு காட்சி கொடுக்கும். இக்காட்சி ஒவ்வொரு மாதமும்தான் வருகின்றது. தை மாதத்தில் மட்டும் அதற்கு ஏன் அவ்வளவு சிறப்பு என்றால், தைமாதத்தில் சூரியன் வடதிசைநோக்கி பயணிக்கும். இவ்வாறு வடதிசை நோக்கி சூரியன் பயணிக்கும் வேளையில் ஏற்படும் பெளர்ணமி அன்று நமது தேகத்தில் சக்தி மிகும் என்பது வள்ளலார் கருத்தாகும். எப்படி அண்டத்தில் சூரியன் வடதிசை நோக்கி பயணிக்கின்றாரோ, அவ்வாறு நாமும் இதே நாளில் வடலூர் வடதிசை நோக்கி பயணிக்க அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் காணலாம் என்ற நோக்கில் தைப்பூசத்தை தேர்ந்தெடுத்தார் வள்ளலார். “வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே….” என்றதன் நோக்கம் இதுவே.

சேர்ந்தாரைக் கொல்லியான நெருப்பானது (நெருப்பினை தொட்டப் பொருள் எதுவானாலும் அழிந்துவிடும்) சூரியனில் தகித்துக்கொண்டிருக்க…. சூரியன் மட்டும் அழியாமல் இருப்பதுபோல், அருட்பெருஞ்ஜோதி என்கின்ற நெருப்பானது நமது உடலை நிலைத்து நிற்கச்செய்யும் என்கின்ற இயற்கை விளக்கமும் இங்கே விளங்குகின்றது. மேலும் சூரியன் என்பது உண்மை. (உண்மை ஒளி), சந்திரன் என்பது பொய். (பொய் ஒளி), பூமி என்பது மரணமில்லா பெருவாழ்வைக் குறிக்கும். உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்தான் நாம் இப்பெருவாழ்வை அடையமுடியும் என்கின்ற தத்துவமும் அடங்கியுள்ளன. அதாவது மாயை என்னும் சந்திரனைக்கடந்து உண்மை என்கின்ற சூரியனாவதே தைப்பூச ஜோதி தரிசனமாகும்.

இப்படிப்பட்ட தைப்பூச நன்னாளில் வடலூர் வடதிசைக்கு வந்திருந்து அருட்பெருஞ்ஜோதி காட்சியினை கண்டு களிக்க “சன்மார்க்க விவேக விருத்தி” மூலம் வள்ளலார் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றார். அன்றைய தினம் சத்திய ஞான சபையில் ஏழு திரைகளும் நீக்கப்பெற்று முழு இறைக்காட்சியினையும் கண்டு களிக்கலாம். அதிகாலையில் காணப்பெறும் காட்சியே சிறப்புவாய்ந்ததாகும். கிழக்கு வானிலே சூரியனும், மேற்கு வானிலே சந்திரனும் இடையில் இறைவனும் காட்சி கொடுக்கும் இயற்கை விளக்கம் அப்போது நமக்குக் கிடைக்கும்.

                                 --தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.