Sunday, February 26, 2017

பலாசு கற்பம்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

                                              பலாசு கற்பம்
                                             ===========

பலாசு என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உண்டு. நவகோள்களில் ஒன்றான இராகுவின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். பலாசு மூலிகையினை வைத்து கற்பம் செய்திடும் முறையினை போகர் அருளியுள்ளார்.

போகாமல் பலாசுனுட கற்பங்கேளு
புகழ்ந்தவேர்ப் பட்டையிலை காய்பூவோடு
நோகாம நிழலுலர்த்தா யுலர்த்திடித்து
நேரிசையாய் வடிகட்டிச் சூரணமேசெய்து
வேகாமல் வெள்ளாட்டுப்பாலிற் வெருகடிகொள்ளு
விரைந்துமே மண்டலந்தான் கொண்டாயானால்
சாகாமலிருக்கலாஞ் சதுமுகவன் படைப்பு
தகர்ந்துமே சமாதியினி லிருந்திடாயே.

பலாசு மரத்தின் வேர் பட்டை காய் மற்றும் பூ ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை நன்கு இடித்துச் சூரணமாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து வெருகடி அளவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் குழைத்து உண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால் மரணமில்லாத வாழ்வு கிடைக்கும். அவ்வாறு ஒரு மண்டலம் உண்டபின் சமாதி நிலையில் இருப்பது மேலும் நன்மை பயக்கும்.

வெருகடி: வெருகு என்பது காட்டுப்பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

கர்ம சித்தர்கள் கூறும் இந்த சாகாமலிருக்கும் வித்தையில் உண்மை உள்ளது. இந்த உண்மை எதுவரையில் சாத்தியப்படும் என்றால் சதுமுகவன்/பிரமனின் படைப்பு தொழில்கள் நிற்கும்வரை சமாதி நிலையில் சாகாதிருக்கலாம் என்கிறார். அதற்கு மேல் சாகத்தான் வேண்டும். பிறகு மீண்டும் பிறவி நம்மை தொடரத்தான் செய்யும்.

ஞான சித்தரான நமது வள்ளற்பெருமான் கூறும் சாகாமலிருக்கும் வித்தை என்பது இந்த மல தேகத்தை ஞான தேகமாக்கிக்கொள்வது. இத்தேகத்திற்கு மரணம் என்பதே கிடையாது. காலாதீதனாகுவது. சமாதி பழக்கம் கூடாது என்பதே ஞான சித்தமாகும். சமாதி நிலையில் அவருக்கும் அவர் சார்ந்த உலகிற்கும் யாதொரு பயணுமில்லை. ஆனால் ஞான தேகம் பெற்றவர்களால் எவ்வுலக உயிர்கள் எல்லாம் இன்புறும்படி ஆக்க நிலையில் செயல்பட முடியும்.

எனினும் மேலே கூறிய கர்ம சித்தரின் கற்பத்தை உண்டு சமாதியில் இல்லாது தேகத்தை நீட்டிக்க செய்துகொள்வதிலும் தவறில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.