Sunday, February 26, 2017

பன்றிமலை சுவாமிகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

பன்றிமலை சுவாமிகள்
==================

    கடவுள் அருளை அடைய சுத்த பக்தி அவசியம். அதோடு ஆத்ம சக்தி கிடைக்கும். அப்போது விவேகமும் வைராக்கியமும் வரும். அவற்றோடு சஞ்சங்கம், சாதுசேவை, நாம சங்கீர்த்தனம், சத்தியம் போன்றவை கிட்டுகின்றன. இப்படி பக்தி பிரவாகம் பெருகும்போது சித்தியடையலாம். கடைசியில் முக்தியடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வந்தவர் ஆசான் சற்குரு ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்.

        அன்பே சிவம்… அதுவே நிசம் என்னும் உயரிய தத்துவ மகிமையை அனைவரும் உணரும் வண்ணம் திருவருள் புரிந்தவர் இவர். சுவாமிகள் மதுரை மாவட்டம் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியில் 5000 அடி உயரத்திலுள்ள பன்றிமலை கிராமத்தில் வாழ்ந்த இல்லறஞானி ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்கும், அங்கம்மாள் என்னும் அம்மையாருக்கும் திவ்யபுத்திரனாக அவதரித்தார்.

        சித்திரை பரணி நட்சத்திரத்தில் அவதாரம் செய்த குழந்தைக்கு பெற்றோர்கள் இராமசாமி என்று பெயரிட்டு செல்வாக்கோடு வளர்த்தனர். இவர் தெய்வீகப் பிறவி என்பதை இவரது குழந்தைப் பருவத்திலேயே அனைவரும் அறிந்து கொண்டனர்.

        பிறக்கும் போதே இவர் திருஉடலில் சங்கு, சக்கரம், வேல் இருப்பதைக் கண்ட பக்தர்கள் இவரை விஷ்ணுவாகவும், திருமுருகனாகவும் வழிபட்டனர்.

        சங்கரரைப் போன்று குழந்தைப்பருவத்தில் பல தெய்வீக லீலைகள்! தொட்டிலிலிருந்து குழந்தை மாயமாய் மறையும், சிலசமயம் நாமமும், சிலசமயம் திருநீறும், சிலசமயம் குங்குமமும் கொண்டு விளங்கும்.

        சுவாமிகளுக்கு புதுசக்தி, பெரும்பலம், சித்தாற்றல் உண்டாயின. கல்லைக் கற்கண்டாக்கினார். பாம்புகளைப் பிடித்தாட்டினார்.

        சட்டி சுவாமிகள் அருள் பாலித்ததின் பேரில்… அவரருளால் திருமுருகனை என்றென்றும் காணும் பாக்கியம் சுவாமிகளுக்குக் கிட்டியது. ஜோதி சொரூபமாய் விளங்கிய குருமார்கள், சுவாமிகளை ஜோதி சொரூபமாகவே மாற்றினர். சுவாமிகள் அச்சாண்ட மலைப்பரதேசி என்பவருடன் கொண்டிருந்த தொடர்பால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களையும் கற்றுணர்ந்தார்.

        உண்மை விளங்கியது. தன்னை யுணர்ந்த மெய்ஞானி ஆனார் சுவாமிகள்! தன்னை மானிட வர்க்கத்திற்கு நன்மை செய்ய தொண்டராக்கிக் கொண்டார்.

        சுவாமிகள் கன்னிவாடி ஜமீனில் கணக்குப் பிள்ளையாகவும் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகவும், பன்றிமலை பஞ்சாயத்தின் முதல் தலைவராகவும் இருந்தபோதும் தனது திருத்தொண்டை மறக்கவில்லை. கடைசியில் இந்த வேலைகளையும் விட்டு விட்டு மக்கள் பணிக்குத் தம்மை ஆளாக்கிக்கொண்ட இராமசாமி பன்றிமலை சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.

        ஜோதியையே நாடி… ஜோதியையே துணை கொண்டு வாழ்ந்து வந்த சுவாமிகள் ஜோதி சொரூபமாகவே மாறி… சென்னையில் ‘நமசிவாய’ ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு சித்தபுருஷராக ஜீவன் முத்தராக தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

        ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அருள்வழங்கிய சுவாமிகளை ‘தத்துவ தெய்வம்’ என்று உலகம் அறிய ஆரம்பித்து விட்டது.

        அளவில்லாத சித்துக்கள் அற்புதமாய் நிகழ்ந்தேறின. சுவாமிகள் இறந்தவர்களையும் உயிர்ப்பித்தருளினார். சித்து உலகமே இதுவரையில் கண்டறியாத தெய்வீகக் கட்டுரைகளை வரவழைத்தது இவரது சாதனைகளுள் சிறந்ததொன்றாகும்.

        காரைக்கால் அம்மையார் மாம்பழம் வரவழைத்தது போல்… மாணிக்கவாசகர் வாய்பேசமுடியாத பெண்ணை பேசவைத்ததுபோல்… சாது மிருத்யசயர் காணாமல் போன லிங்கங்களை மறுபடியும் வரவழைத்தது அவரவர் பெட்டகத்துள் அடைய செய்ததுபோல்… சுவாமிகளின் வாழ்வில் விதம் விதமாக… நூதனமாக… கற்பனையை மிஞ்சும் அற்புதமாக… தெய்வீக சம்மதம் பெற்ற சித்துக்கள் நிகழ்ந்தேறின.

        மக்களுக்கு தொண்டு செய்து கடவுள் அவதாரமாக விளங்கி வந்த சுவாமிகள் 1986-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று மகாசித்தியடைந்தார்.

        மானிடருக்குத் தொண்டு செய்ய அவதாரம் எடுத்த சுவாமிகள் மக்கள் பிணி போக்கியும், அருளாசி வழங்கியும், அன்பே சிவம்… அதுவே நிசம் என்னும் வகையில் வாழ்ந்து வந்தது நிசம்தான்…
               

        சுவாமிகள் இன்றுவரையிலும் தமது ஜீவசமாதியில் இருந்து கொண்டு தமது அருளை அள்ளித் தந்துக் கொண்டிருப்பதும் நிசம்தான்…! தவத்திரு பன்றிமலை சுவாமிகள் ஆசிரமம், ‘ஓம் நமச்சிவாய’ ஆசிரமம், எண்-9, வில்லேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்கிற முகவரியில் இவரது ஜிவசமாதி அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.