Thursday, October 26, 2017

ஜோதி வழிபாடு


                                            ஜோதி வழிபாடு
 
வியாழக்கிழமையாகிய இன்று வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் அருள் நிலையத்தில் ஜோதி வழிபாடு நடைபெற்றது. 

          மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

          இன்றைய அன்னதான உபயதாரர் ஆன்மநேயர் திரு.M.சண்முகநாதன் ஐயா, கும்பகோணம் அவர்களால் பசியாற்றுவித்தல் நடைபெற்றது. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அருள் நிலையத்தின் அருளும் வள்ளற்பெருமானின் பேரருளும் கிடைக்க வேண்டுகிறோம்.
 
      அன்னதானத்திற்காக வாகன உதவி செய்த எடப்பாளையம் திரு.கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கும் அருள் நிலையத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.




          வருகின்ற நவம்பர் 25-ஆம் தேதி சனிக்கிழமை அன்று ச.மு.க. அவர்களின் குருபூசை நடைபெறவுள்ளது. அவ்வமயம் இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவதற்கு வள்ளற்பெருமானின் அருளை வேண்டி தியானிக்கப்பட்டது.
 

அருட்பெருஞ்ஜோதி.

















Sunday, October 22, 2017

பஞ்ச மகா பாவங்கள்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

                                               பஞ்ச மகா பாவங்கள்

கள், காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விஷேஷ  பாவம். எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது, கொலை  செய்யத்துணிவு வராமலிருக்காது, களவு செய்யாமலிரான், பொய் பேச அஞ்சான். ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்த னானாலும் அவனை மற்றவை தொடராம லிரா.


n                                                                                                                                               --திருவருட்பிரகாச வள்ளலார்.



“கள்” என்பது நமது பழந்தமிழர்கள் போதைக்காக பயன்படுத்திய தாவர நீர். பனை மரம், தென்னை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேம்பு, சப்பாத்தி என பலவற்றில் இருந்தும் கள் எடுத்து தமிழர்கள் பயன்படுத்தினர். வேதாந்திகள் “சுரா” என்னும் போதை பானத்தை அருந்தினர். அன்றைய தமிழர்களும் வேதாந்திகளும் ஆண் பெண் பேதமின்றி போதை பானங்களை அருந்தி வந்துள்ளனர்.

தமிழ் வளர்த்த ஒளவையார் கள் பருகக்கூடியவர். கள் குறைவாக இருந்தால் அதியமான் அதை தனக்கு கொடுத்துவிடுவான் என்றும், அதிக அளவு கள் இருந்தால், தான் கவிதைப்பாட அதியமான் கள் குடித்துக்கொண்டே அதை ரசிப்பான் என்றும் சங்ககால அரசர்களில் ஒருவனான அதியமானின் புகழை கூறியுள்ளார் ஒளவையார். சங்ககால மன்னன் ஒருவன் கள் விற்கும் பெண்டிற்கு கடன் வைத்த சம்பவங்கள் எல்லாம் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

இதனிடையே புத்த மதம் இந்தியாவின் வடக்கே வளர்ந்த போது கள்ளுண்ணாமையும், புலால் உண்ணாமையும் மக்களிடையே போதிக்கப்பட்டது. இந்தியாவின் தெற்கே திருவள்ளுவரால் இந்த இரண்டு போதனைகளும் மக்களிடையே எடுத்துச் செல்லப்பட்டன. நவீன இந்தியாவில் காந்தியடிகளும் கள்ளுண்ணாமையும், புலால் உண்ணாமையும் குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார். காந்தியடிகளின் கோரிக்கைகளில் கள்ளுண்ணாமையை மட்டும் நமது ஈரோடு பெரியார் அவர்கள் பின்பற்றினார். தமது குடும்பத்திற்கு சொந்தமான 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

கள் என்னும் போதையானது மனாதிகள் என்று சொல்லக்கூடிய மனம், அகங்காரம், புத்தி, சித்தம் ஆகியவைகளை செயலிழக்கச் செய்யும். தற்போது “கள்” என்ற இடத்தில் டாஸ்மாக் மது வகைகள், சாராயம், அயல் நாட்டு மது வகைகள் எல்லாம் அடக்கம் என்பதை மறக்கலாகாது.    

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள்-926)

செயலொன்றும் செய்ய முடியாத செத்த பிணத்தை ஒத்தவர் கண்மூடி தூங்குபவர். அதுபோல் நம் செயல்களை முடக்கக்கூடிய விஷத்தினை அருந்தியவரை ஒத்தவர் மது அருந்தியவர் ஆவர்.


“காமம்” என்பதும் மது போன்றதொரு ஒரு போதையே. காமம் என்பது முறையற்ற ஆண்/பெண் இன்பத்தைக் குறிக்கும். முறையான காமம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு திருமணத்தால் வழிநடத்திச் செல்லப்படுகின்றது. ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடு முறையான காமத்தில் உண்டு. ஆனால் நமது சங்ககால தமிழர்கள் பலர் முறையற்ற காமத்தால் மகிழ்ந்தோ அல்லது இழிந்தோ இருந்தனர். இன்றைக்கும் நாம் கோயிலுக்கு சென்றால், அங்குள்ள கோயில் கோபுரத்தை பார்த்து வணங்குகின்றோம். அந்த கோபுரத்தை இன்னும் சற்று உற்று பார்த்தால் அங்கே முறையற்ற காமலீலைகளின் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும். நான் கடந்த மாதம் வேதாரண்யம் கோயிலுக்கு சென்றேன். அங்குள்ள கோயில் கோபுரத்தை புகைப்படம் எடுக்கும்போது எனது பார்வையில் பட்டது முறையற்ற காமலீலை சிலைகள். ஒரு ஆண் சுய இன்பத்தில் ஈடுபட்டிருப்பது போலவும், மற்றோர் இடத்தில் ஒரு ஆண் பல பெண்களிடம் காமத்தில் ஈடுபட்டிருப்பது போலவும் சிலைகள் அக்கோபுரத்தில் கண்டு எனக்குள் அதிர்ந்தேன். இவை எல்லாம் அன்றைய நமது தமிழர்களின் கலாச்சாரங்களாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பெண் அடிமைகள் விற்கப்பட்டனர். தேவதாசி முறைகள் கோயிலில் தாண்டவமாடின.  

இப்படிப்பட்ட காமங்கள் சமுதாயத்தை இழிவான நிலைக்கு எடுத்துச்செல்லும் மற்றும் தனிநபரின் ஒழுக்கக்கேடான செயலாக இவைகள் பிற்காலத்தில் பார்க்கப்பட்டன. புத்த சமண மதங்கள் இவைகளை கண்டித்தன. தென்னாட்டில் திருவள்ளுவரும் முறையற்ற காமத்தை எதிர்த்தார். முறையான காமத்தை பாடினார்.

மலரினும் மெல்லியது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். (திருக்குறள்-1289)

காம உணர்வு மலரைவிட மென்மையானது. உலகியலில் ஒரு சிலரே அந்த மென்மையுணர்வை உணர்ந்து செயல்படுபவர். மற்றவர்கள் எல்லோரும் மின்சாரம் பாய்ந்த இயந்திரமாய் செயல்பட்டு சீரழிவர். ஒருத்திக்கு ஒருவன் என்றாகிலும் அவர்களுக்குள் மென்மை இருக்க வேண்டும். இல்லை எனில் அதுவும் முறையற்ற காமம் என்றாகிவிடுகின்றது. முறையற்ற காமமும் மது போதைபோன்ற பெரும் பாவச்செயலாகும்.

“கொலை” என்பது உயிர் வாழ்தலுக்கான சுதந்திரத்தை ஒருவரிடமிருந்து ஒருவர் துன்பப்படுத்தி பறிப்பதாகும். இதற்கான காரணங்களில் தலையாயதாக இருப்பது இரண்டுதான். ஒன்று மது போதை மற்றது ஆண்/பெண் போதை. இதனினும் மாறுபட்ட இரண்டு தலையாய காரணங்களும் உண்டு. ஒன்று உணவிற்காக பிற உயிர்களை கொலை செய்வது மற்றது கடவுளின் பெயரால் உயிர்களை பலி கொடுப்பது. மற்ற எவ்வகை பாவங்களை காட்டிலும் கொலை செயல் புரிவது பெரும் பாவமாகும். கொலையும் புலையும் ஒன்றுதானா? என்றால், இல்லை. இரண்டும் வெவ்வேறு. புலை நுகர்பவர் கொலை செய்யாமலும் இருக்கலாம். கொலை செய்பவர் புலை நுகராமலும் இருக்கலாம். இதனை அறிந்துதான்    “புலை கொலைத் தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்” என்ற கட்டளையை வள்ளலார் தாம் உருவாக்கிய ஞானசபை வாயிலில் பொறித்தார். திருவள்ளுவரும் கொல்லாமை, புலால் மறுத்தல் என்னும் இருவேறு தலைப்புகளில் பாடல் இயற்றியுள்ளதை காணலாம். பஞ்ச மகா பாவத்தில் கொலை மட்டுமே உண்டு. புலை விடுபட்டுள்ளது. அதனால் புலால் உண்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நினைத்துவிட வேண்டாம். சுத்த சன்மார்க்கத்தை பொறுத்த மட்டில் முதலில் புலை தடுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் கொலை தடுக்கப்பட வேண்டும். எனினும் கொலை தடுக்கப்பட்டுவிட்டால் அதன் வழி வருகின்ற புலையும் காணாமல் போய்விடும் என்பது இயல்பு.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (திருக்குறள்-253)

ஆயுதம் ஏந்திய ஒருவனது மனது இரக்கத்தை எண்ணாதது போல, புலால் உண்பவனின் மனமும் இரக்கத்தை எண்ணாது அரக்க குணத்தையே ஒத்திருக்கும்.

நல்லாறு  எனப்படுவது யாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி. (திருக்குறள்-324)

எவ்வுயிரையும் கொலை செய்யாமல் இருப்பதுவே நல்வழியாகும். எனவே கொலை செய்யும் பெரும் பாவத்தை செய்யாமலிருக்க வேண்டும்.

“களவு” என்பது பிறருடைய பொருளை அவருக்குத் தெரியாமல் கவர்வது. பிறர் பொருள் மேல் இச்சை கொள்வது பாவம். அவ்வாறு இச்சைகொண்டு அதனை திருடிவிடுவது மகா பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. களவும் சூதும் ஏறத்தாழ ஒன்றுதான். சூது என்பது பிறர் பொருளை தந்திரத்தால் கவர்ந்துவிடுவது. “களவும் கவறு மற” என்ற பழமொழியானது ‘களவும் கற்று மற’ என்று தவறாக திரிந்துவிட்டது.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். (திருக்குறள்-935)

கவறு என்றால் சூதாடும் கருவி. தாயக்கட்டைகளை கவறு எனலாம். கழகம் என்பது சூதாடும் இடம்.  சூதாடும் கருவியையும், ஆடும் இடங்களையும், கைத்திறமைகளையும், மதித்து கைவிடாதவர் எல்லாப் பொருள் உடையவராக இருந்தாலும் இல்லாதவர் ஆகிவிடுவார். எனவே ஒருவர் பொருளை திருடுவதும், கவறு என்கின்ற சூதாட்டக் கருவிகளாலே தந்திரமாய் பறித்தலும் பெரும் பாவமாகும்.

“பொய்” எனப்படுவது நடக்காத ஒன்றை நடந்ததாக அறிவித்தல் ஆகும். ‘பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது’ என்பது பழமொழி. பொய் சொன்னால்தான் போஜனம் கிடைக்கின்றது என்பது இன்றைய வாழ்வியல் மொழியாகிவிட்டது என்பது வெட்கக்கேடானது. பொய் சொல்லாதவர்கள் உலகில் யாரேனும் உளரோ? என்றால், இல்லை. பொய்யும் பேசலாம் என்கின்றார் வள்ளுவர்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (திருக்குறள்-292)

குற்றமற்ற நன்மை ஏற்படுமானால் பொய் சொல்வதும் வாய்மையே ஆகும் என்கின்றார். இந்த தன்மையில் நாம் பொய் சொல்வது தவறில்லை. ஆனால் பிறரின் வாழ்வை கெடுக்கும் நோக்கில், நம் வாழ்வை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் பொய் சொல்லுதல் பெரும் பாவமாகும். உண்மைக்காக தன்னுயிரை விட்டவன் அரிச்சந்திரன் மட்டுமே. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து, நானும் இனிமேல் பொய் பேசுவதில்லை என்று தீர்மானித்துக்கொண்டவர் நமது தேசப்பிதா காந்தியடிகள் ஆவார். பொய் மொழிதல் என்பது எவ்வளவு பாதிப்புகளை வலிகளை கொடுக்கும் என்பதை அதனால் பாதிக்கப்படும் மக்கள் நன்கு அறிவர். நமது வழக்காடு மன்றங்களில் ஒரு பக்கம் மெய்யும் மறு பக்கம் பொய்யும் பேசப்படுகின்றது. இதற்கு நடுவில் மெய்யோ அல்லது பொய்யோ தீர்ப்பாக அளிக்கப்படுகின்றது. மெய்யே ஆனாலும் அதற்கு சாட்சிகள் வேண்டும். சாட்சிகள் இல்லாத மெய், பொய் என்று ஆகிவிடுகின்ற நீதி முறைகளை என்னென்பது? தீர விசாரிப்பது என்பது சாட்சிகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை நீதிமன்றங்கள் உணரவேண்டும்.

கள், காமம், கொலை, களவு, பொய் என்கின்ற ஐந்து பெரும் பாவச்செயல்களில் யாரேனும் ஒன்றினை செய்தாலே மற்றதும் அவனை பற்றிவிடும். எனவே இவை ஐந்து பெரும் பாவங்களை நாமெல்லாம் நம்மிடமிருந்து ஒழிப்பது அவசியம் என்கின்றார் வள்ளலார். இன்றைய சமுதாயத்தையும், இன்றைய மக்களையும், இன்றைய அரசியலையும் நினைக்கும்போது வள்ளலார் கூறுகின்ற போதனை செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளதை அறிகின்றோம். நன்மார்க்கர்கள் ஆளும்போதுதான் சமுதாயம் சீர்படும். அதற்கு மக்கள் எல்லோரும் சன்மார்க்கத்திற்கு வரவேண்டும். சன்மார்க்கம் தழைத்தால் நன்மார்க்கம் உண்டாம்.

                             -தி.ம.இராமலிங்கம்.