Sunday, October 22, 2017

இந்து மதம் எங்கே போகின்றது? தொடர்-14



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

இந்து மதம் எங்கே போகின்றது?
தொடர்-14
‘அடியே… உனக்கு நாங்கள் கொடுக்கும் சீதனத்திலே மிக உயர்ந்த மெல்லிய, அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய ஜரிகை வஸ்திரங்கள் இருக்கலாம். அவற்றை நீ அணிந்தால் உனக்கு அலங்காரமாக இருக்கலாம். ஆனால்… இவையெல்லாம் ஒரு நாள் மக்கிவிடும், மடிந்துவிடும், கிழிந்துவிடும்.

          ஆனால்… என்றென்றும் கிழியாத வஸ்திரம் உனக்கொன்று உள்ளது. புகுந்த வீட்டில் புருஷனும்… மற்றவர்களும் உன்னைப் புகழ்ந்து பேசவேண்டும். அவர்கள் உன்னை மெச்சிக்கொள்ளும் புகழ்மொழிகள்தான் உனக்கு உண்மையான ஆடை. அதனால் புகுந்த வீட்டில் அவர்கள் சொன்னபடி நீ நடந்து அந்த ஆடையை அணிந்துகொள்.

          இப்படியாக பெண்களுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளித்தரும் வேதம்… திருமணத்துக்குப் பிறகு அவளை எப்படி நடத்த வேண்டும், நடத்தக்கூடாது என்பதற்கு அகஸ்தியர் மூலமாக ஒரு கதையை சொல்லியிருக்கிறது.

          அகஸ்திய முனிவர் ரொம்ப குள்ளமானவர். அவர் லோபா முத்ரை என்னும் மங்கையை பார்த்ததும் அவளை அடைந்தே தீரவேண்டும் என்று அவருக்குள் உயரமாக உதித்தது ஆசை.

          நேராக அந்தப் பெண்ணின் தந்தையிடமே போனார் அகஸ்திய முனி, உன் பெண்ணை பார்த்தேனப்பா… அவளையே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேனப்பா… எனக்கூற… தந்தையோ, அகஸ்திய முனியை கொஞ்ச நேரம் பார்த்தார். ‘என் பெண்ணிடமே கேட்டு அவளுக்கு இஷ்டமா, இல்லையா என தெரிந்து கொள்ளப்பா…’ என சொல்லிவிட்டார்.

          இப்படியே இந்த உருவத்திலேயே போனால் லோபாமுத்ரை நம்மை ஏற்றுக்கொள்வாளா? தன்னையே ஒரு தடவை பார்த்துக்கொண்டார், அகஸ்தியர். கடைசியில் தன் குள்ள உருவத்திலிருந்து சில மந்த்ரங்களைச் சொல்லி தன்னை அழகனாக மாற்றிக்கொண்டார் அகஸ்தியர்.

          லோபாமுத்ரையிடம் போனார். பேசினார்… அகஸ்தியரின் வாளிப்பிலும், வார்த்தைகளிலும் மயங்கிய லோபமுத்ரா அவர் கழுத்தில் மாலையை போட்டாள். தன் மணாளனாக்கிக் கொண்டாள்.

          அகஸ்தியருக்கு சந்தோஷம். மறுபடியும் லோபாவின் அப்பாவிடம் ஓடினார். ‘உன் பெண்ணை கல்யாணம் செய்து விட்டேன் பார்’ என்றார்.

          கல்யாணம் ஆன பிறகுதான்… தன் கணவன் அகஸ்தியரின் நிஜ உருவத்தை தரிசித்தாள் லோபாமுத்ரை… பிறகு?

          லோபாமுத்ரா திருமணத்துக்குப் பிறகுதான் தன் கணவன் அகத்திய முனியின் சுயரூபத்தையே தெரிந்து கொண்டாள். குள்ள ரூபம் தாடியும் மீசையுமாய் ரோமக் காடாய் முகம்.

          இப்படிப்பட்ட ஒருத்தர்...அழகானவர் போல் நம்மை ஏமாற்றி விட்டாரே என லோபாமுத்ராவுக்குள் அழுகையும் ஆத்திரமும் பொங்கின. ஆனால்… ஸ்த்ரி தர்மப்படி புருஷனுக்கு பணிவிடைகள் செய்வதுதானே பத்தினியின் கடமை.

          அதன்படி… தன் புருஷன் அகத்தியனுக்கு பணிவிடைகள் செய்வதையே வேலையாகக் கொண்டு பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள் லோபா. காலை எழுந்தவுடன் ஸ்நானம் செய்வது… பிறகு மந்த்ரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவது… பிறகு ஆகாரம் புசிப்பது… மறுபடியும் தியானம்… மந்த்ரம்… பிறகு இரவு நெடுநேரம் தீப ஒளியில் ஏதேனும் மந்த்ரங்கள் இயற்றிக் கொண்டே இருப்பது… பிறகு தூங்கி விடுவது இதுதான் அகத்தியனின் வாழ்க்கை முறை.

          வேண்டி விரும்பி திருமணம் செய்து கொண்டவளைப் பற்றி அகத்தியன் சிந்திக்கவே இல்லை. லோபாவும் தன் புருஷன் தன்னையும் கவனிப்பான் என காத்திருந்தாள் கைங்கர்யம் செய்தபடியே.

          இப்படியாக காலம் ஓடிக் கொண்டிருக்க… மந்த்ரங்கள்… சிஷ்யர்கள்… கமண்டலம்… என வாழ்ந்த அகத்தியனுக்கு ஒரு நாள் தான்… ‘இதுவரை லோபாவைப் பற்றி நாம் சிந்திக்கவே இல்லையே… அவளை ஒரு வேலைக்காரியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டேனே தவிர… ஒரு புருஷனாக பத்தினிக்கு தரவேண்டிய சுகங்களை, அந்தஸ்தை நாம் தரவே இல்லையே… பேரழகியை திருமணம் செய்து கொண்டு பாராமல் விட்டு விட்டோமே…’ என அகத்தியனுக்குள் அடுக்கடுக்காய் எண்ணங்கள் உதித்தன. லோபாமுத்ராவின் லோக வாழ்வைப் பற்றி அகத்தியன் நினைத்துப் பார்த்து… கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பார்களே அது போல, ஏனென்றால்… இருவருக்கும் 80 வருடங்கள் ஓடிப்போய்விட்டன. அழகு ஆட்சி செய்த லோபாவின் மேல், காலம் தன் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டது.

          அழகான அவளது முகத்திலும், சருமத்திலும் காலதேவன் தன் விளக்கத்தை சுருக்கங்களாக எழுதினான். கருகருவென்ற அவளது வசீகரமான கேசத்திலே வெள்ளையடித்து விட்டான்.

          லோபாமுத்ரா என்ற பேரழகியின் மீதே காலதேவன் தன் முத்திரையை பதித்துவிட்டபோது… அகத்தியர் எப்படியிருப்பார்?... நரை கூடி கிழப்பருவம் எய்தி விட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் லோபாமுத்ரா பற்றிய நினைவு வர… அவளிடம் ஓடிப்போனார் அகத்தியர்.

          ‘தேவி… அம்மா… நான்தான் உன் ஆம்படையான் வந்திருக்கேன்’ என அவளது தோளைத் தொட… லோபாமுத்ரா தன் புருஷனிடம் இப்போது தான் வாய் திறந்தாள்.

          ‘உன்னாலே என் ஜென்மாவே பாழாய் போச்சு. என் அழகு வீணாப்போச்சு. இப்போது வந்திருக்கிறீரே என்ன பிரயோஜனம்?... இது நியாயமா?... என பொங்கியழுதாள் லோபாமுத்ரா.

          “நான் பண்ணிய மந்த்ரங்கள் எல்லாம் உனக்காகத்தானே தேவி…” என அகத்தியர் சமாதானம் சொல்ல…
         
          ‘மந்த்ரங்களுடனா நான் குடித்தனம் நடத்த முடியும்?... என் மணாளன் நீயா?...  மந்த்ரங்களா?... என பதில் பேசுகின்றாள் லோபாமுத்ரா. அகத்திய முனி அப்படியே நிற்கிறார்.

          இந்தக் காட்சியை அகஸ்தியரின் சிஷ்யர்கள் பார்த்து விடுகின்றார்கள். அவர்கள் வழியே தான் இந்த வேதக் கதையே வெளியே வருகின்றது. அதாவது… பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய சுகங்களை கொடுக்காவிட்டால் அது மகாபாவம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தக் கதை.

          சரி… திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கின்றேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா… அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்…

          “தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ
           யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
           யான ஊரு உஷதி விஸ்ரயாதை
           ப்ரஷரே பஷேபம்…”

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

          அப்படி என்ன சொல்கின்றது இந்த மந்த்ரம்? நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்…

          ‘இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதை விட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்… என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய் விடும்.

          அப்படிப்பட்ட மந்த்ரம் அது. என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகா புத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள். அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது…
                    
          வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல…

          “ஸ்வாமீ…. நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

          “இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்பிள்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை… நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே…”

          “வாத்யார் அதன் பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால்… வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல்… பல மந்த்ரங்களை உச்சரித்து வருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான்.

          இதுபோல் இன்னொரு மந்த்ரம்…

          விஷ்ணுர் யோனி கர்ப்பயது
          தொஷ்டா ரூபானி பீமிசது
          ஆரிஞ்சது ப்ரஜாபதி
          தாதா கர்ப்பந்தாது…

இதன் அர்த்தம்… இன்னும் ஆபாசம்…

          ‘விஷ்ணுர் யோனி கர்ப்பயது’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

          பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

          அதாவது விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கின்றார்கள். இவர்கள்தான் ஆணும் பெண்ணும் தேகசம்பந்தம் கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கின்றார்கள். அதாவது… நாம் தேக சம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கின்றார்கள்.

          இவ்வாறு கவனிக்கும் தேவதைகள், விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவருக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள் புரிய வேண்டும்… என்கின்றது இந்த மந்த்ரம். நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால்… பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

          இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக்கொள்ளலாம். அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான் என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளலாம். இங்கே முக்கியமானதொன்று… வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்றும், பாணி க்ரஹணம் என்றால் கைப்பிடித்தல் என்றும் பார்த்திருக்கின்றோம்.

          இவையெல்லாம் எதற்காக…? கர்ப்பாதானம் செய்து… குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே… அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

          இதற்காகவே கணவனுக்கும் மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கின்றது.

          அவள் கேட்கிறாள்…

          ‘மணாளா… நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும். அதுபோல உனது இந்திரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது. என்ன சரியா? என்கின்றாள். 

 –தொடரும்…

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.