Sunday, October 22, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை




காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…


                    திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை
 
                                         தி.ம.இராமலிங்கம்
 


மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 82

மனாதி – மனம் முதலிய உட்கருவிகளை மனாதி என்பர். மனம், அகங்காரம், புத்தி, சித்தம் ஆகியவையே மனாதிகள் ஆகும்.

மனம் – வழி வழியாக வந்தவைகளை ஆராயாமல் அப்படியே பிடித்துக்கொள்ளும் இயல்புடையது மனம். சில நேரங்களில் எது உண்மை, எது பொய் என்ற ஐய நிலை இதற்கு ஏற்படும்.

அகங்காரம் – இறைவன் முதற்கொண்டு யாவற்றையும் பின்னுக்குத்தள்ளி தன்னை மட்டும் முன்னிலை படுத்துவது அகங்காரம்.

புத்தி – மனம் சொல்வதை ஆராந்து தெளிய வழிவகுக்கும் அறிவே புத்தி.

சித்தம் -  மனம், அகங்காரம், புத்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே சித்தம் எனப்படும். மனம், அகங்காரம், புத்தி ஆகிய மூன்றின் வழியாக ஏற்படும் அனுபவங்களையும், காட்சிகளையும் சேகரித்து வைத்துக்கொண்டு நமக்குத் தேவையானபோது அதனை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொடுப்பது சித்தம் எனப்படும்.

மதாதீதம் என்பது இவ்வுலகில் உள்ள மதங்கள் அனைத்திற்கும் மேலானது. மதங்களால் வெளிப்பட்ட எண்ணற்ற மார்க்கங்கள் எல்லாம் பலன் அறியாத மார்க்கங்கள். கடவுள் நிலை என்னும் நமது மெய்யை சாம்பலாக்கிவிடும் அல்லது மண்ணாக்கிவிடும் இயல்புடையவை மதவெளிகள் ஆகும்.

கூறுகின்ற சமயமெல்லாம் மதங்களெல்லாம் பிடித்துக்
          கூவுகின்றார் பலனொன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்… (திருவருட்பா-3766)

மதாதீத வெளி என்பது சுத்த சன்மார்க்க வெளியாகும். இவ்வெளியில் நடப்பவர்கள் தமது மெய்யை மெய்யாக்கி இறவாநிலை உறுவார்கள்.

அனாதி சிற்சபை என்பது தோற்றமும் முடிபும் இல்லாத மனித தேகத்திற்குள் விளங்கும் புருவ மத்தி. மனித தேகம் மட்டுமல்லாமல் மற்ற தேகத்திற்குள்ளும் இந்த அனாதி சிற்சபை உள்ளது. ஆனால் அவை விளக்கம் இல்லாமல் இருக்கின்றன. மனித தேகத்தில் மட்டுமே அனாதி சிற்சபை காரியப்பட்டு கடவுள் நிலை என உள்ளது. அனாதி இடத்தில்தான் அனாதி கடவுளும் விளக்கமுற உள்ளான்.

மனாதிகளான மனம், அகங்காரம், புத்தி, சித்தம் ஆகியவைகளினால் அறியப்படாதது, மதங்களுக்கு எல்லாம் மேலான சுத்த சன்மார்க்க வெளியாகும். இதுவரை நாம் கண்டுள்ள மதத்தில் கூறப்பட்டுள்ள வெளிப்பாடுகள் எல்லாம் மனாதிகளால் மட்டுமே அறியப்பட்டனவாகும். மனாதிகள் கடந்து ஆன்ம நிலையில் அறியப்படுவனவே சுத்த சன்மார்க்க வெளியாகும். இச்சுத்த சன்மார்க்க வெளியானது, யாராலும் தோற்றுவிக்கப்படாத அனாதி இடமான புருவ மத்தியிலே நீக்கமற நிறைந்து விளங்கிக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு விளங்கிக்கொண்டிக்கும் அனாதி சிற்சபையில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 84

ஓதி நிற்றல் என்பது கிரியையில் சரியை வழிபாடு. வேதாகம மந்திரங்களை ஓதிக்கொண்டே இருத்தல். வாய்விட்டு படித்துக்கொண்டே இருத்தல்.

ஓதிநின்று உணர்தல் என்பது கிரியையில் கிரியை வழிபாடு. வேதாகம மந்திரங்களை உணர்ந்து படித்தல். ஓதி நிற்றலைவிட சற்று மேலான படிநிலை இது.

ஓதிநின்று உணர்ந்து உணர்தல் என்பது கிரியையில் யோக வழிபாடு. வேதாகம மந்திரங்களை உணர்ந்து படித்து உணர்தல். ஓதிநின்று உணர்தலைவிட சற்று மேலான படிநிலை இது.

ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தல் என்பது கிரியையில் ஞான வழிபாடு. வேதாகம மந்திரங்களை உணர்ந்து உணர்ந்து படித்து உணர்தல். மேற்காணும் அனைத்தையும்விட சற்று மேலான படிநிலை இது.

சரியையில் ஞான நிலை அடைந்தவர் என்று குறிப்பிடப்படுபவர் திருநாவுக்கரசர் ஆவார். கிரியையில் ஞான நிலை அடைந்தவர் என்று குறிப்பிடப்படுபவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

மேற்படி கிரியையில் ஞான அனுபவம் அடைந்தவர்களாலும் அடையா அனுபவப் பொருளாக இருப்பது சிற்சபையாகும். கிரியை ஞானம் உண்டாகினும் அவர்களுக்கும் அரிதாக இருக்கின்ற அந்த முழுமுதற் பொருளாகிய சிற்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி – 86

வாரம் – இறைவனிடம் செலுத்தக்கூடிய அழியா இன்பமான அன்பு.

அழியா வரம் – மரணமில்லா பெருவாழ்வை அளிக்கின்ற வரம்.

திருவாரமுதம் – இறைமையை அருளும் அருமையான அமுதம்.

அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய்… (திராவிட வேதம்-2440)

நாம் உலகியலர்களிடம் வைக்கும் அன்பு அழியக்கூடிய இன்பமாகும். நாம் இறைவனிடம் செலுத்தும் அன்பு ஒன்றே அழியா இன்பத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட அன்பை நாம் எளிதில் பெற்றுவிட முடியாது. ஏனெனில் அதனை பெறுகின்ற இடம் எது? என நாம் அறிந்தோமில்லை. அதுபோல மரணமிலா பெருவாழ்வை வழங்கக்கூடிய இடம் எது? என நாம் அறிந்தோமில்லை. அவ்விடம் எதுவெனில் நமக்குள்ளே இருக்கும் சிற்சபைதான். புறமான இவ்வுலகிலே புனிதமான இடங்கள் என்று நாம் வகுத்திருக்கும் இடங்களிலே இவ்வரங்கள் கிடைக்காது. புனித நீராடல்கள், புனித தீர்த்தங்கள் என்ற எது ஒன்றும் இவ்வரங்களை கொடுத்துவிட முடியாது. வேறு எது கொடுக்குமெனில், நமது சிற்சபை தருகின்ற அருமையான அமுதம் ஒன்றே அன்பையும் அழியா வரத்தையும் தரும்.

          இறைவனிடம் செலுத்தக்கூடிய அன்பையும், நம்மை இறைவனாக்கக்கூடிய வரத்தையும் தருகின்ற மேன்மையான அருமையான அமுதத்தைக் கொண்ட சிற்சபையில் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.  


இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 88


இப்பொருளை பிச்சையிடு என்று நான் ஒருவரிடம் நின்று கேளாத குணமும், என்னிடம் ஒருவர் இப்பொருளை பிச்சையிடு என்று கேட்கும்போது அவருக்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும், இறைவன் என்றும் என்னை விடாத நிலையும், நான் என்றும் இறையை மறவாத நெறியும், அயலார் பொருளை சிறிதும் விரும்பாத மனமும், மெய்ந்நிலையை விட்டு என்றும் இடராத திடமும், உலகில் சீ என்றும் பேய் என்றும் நாய் என்றும் பிறரை தீங்கு சொல்லாத தெளிவும், வாய்மையும், தூய்மையும் பெற்று இறைவனின் திருவடிக்கு ஆளாகுவதும், பொய்யாத மொழியும், மயல் செய்யாத செயலும், வீண் போகாத நாளும், விடயம் புரியாத மனமும், உட்பிரியாத சாந்தமும், புந்தி தளராத நிலையும், எய்யாத வாழ்வும், வேறெண்ணாத நிறைவும், நோயற்ற வாழ்வோடு மரணமிலா பெருவாழ்வும் பெருவதே இழியா பெருநலங்கள் ஆகும்.

என்றும் அழியாது நித்தியமாய் இருக்கக்கூடிய எனது சிற்சபைவாழ் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே… நீரே இழியா பெருநலங்கள் யாவற்றுடன் பெருவாழ்வையும் எமக்களித்தருள வேண்டும்.

       
கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி – 90

கற்பம் என்பது தமிழ் சித்தர்களால் கணக்கிடப்படும் காலவரையறையாகும். ஒரு கற்பம் என்பது ஒரு இலட்சம் கோடி ஆகும். சித்தர்களின் எண் அட்டவனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

1 ஒன்று (ஏகம்)
10 பத்து (தசம்)
100 நூறு (சதம்)
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்)
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

ஒரு இலட்சம் கோடி ஆண்டுகள் உடையது ஒரு கற்பமாகும்.

அழிவுறா அற்புதம் என்பது நமது உடல் மண்ணாலோ நெருப்பாலோ அழிந்துவிடாமல் என்றும் அழிவுறாது மரணமின்றி நிலைத்திருக்கக்கூடிய அற்புதமாகும். இவ்வற்புதத்தை மனிதனுள் விளங்கும் சிற்சபையானது என்றும் அளித்துக்கொண்டே இருக்கின்றது. அச்சிற்சபையை பயன்படுத்துவார் இன்மையால்தான் நாமெல்லாம் அழியக்காண்கின்றோம். அழிவுறா அற்புதத்தை சுத்த சன்மார்க்கிகளே காணமுடியும்.

          ஒரு இலட்சம் கோடி ஆண்டுகள் கொண்ட கற்ப காலம் போல் பல பல கற்ப ஆண்டுகள் கடந்து செல்லினும் அழிவுறா அற்புதத்தை அளிக்கின்ற சிற்சபை வாழ் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

  – தொடரும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.