Sunday, October 22, 2017

ஞானசபை திருப்பணி

ஞானசபை திருப்பணி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு என்னும் நூலில் முதல் பதிப்பு 1996-ஆம் ஆண்டு குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் சென்னை பதிப்பித்துள்ளார்கள். அதனை ஞானசபை திருப்பணி பகுதியை மட்டும் அருட்பா பதிப்பகம் 2017-ல் மறு அச்சாக வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் உள்ளதை அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

          1936-ல் வயலூர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஹிந்துப் பத்திரிகையில் வயலூர் என்பதை வடலூர் திருப்பணி என்று தவறாக வெளியிட்டு விட்டார்கள். இதனைப் பார்த்த திருச்சிராப்பள்ளி என் ஆப்த நண்பர் முனிசிபல் மேனேஜர் திரு.வி.எஸ். லோகநாத பிள்ளை அவர்கள் “ஐயா வடலூர் திருப்பணியை நீங்கள்தாம் செய்யப் போகின்றீர்கள்” என்று என்னைப் பார்த்துக் கூறினார். நான் வடலூர் திருப்பணியைப் பற்றிச் சிந்திக்காத காலம், “அது நம்மால் ஆகக் கூடிய காரியமா? என்று கேட்டேன்.

          வடலூரில் வள்ளலார் மூன்று நிறுவனங்கள் அமைத்தார்கள். உடம்பு தழைக்க சத்திய தருமச்சாலையும், உணர்வு தழைக்க சத்திய வேத பாடசாலையும், உயிர் தழைக்க சத்திய ஞான சபையும் நிறுவினார்கள். இவற்றுள் சத்தியஞான சபை பழுதடைந்து விட்டது.
         
          பாலாலயம் செய்து பல ஆண்டுகளாக யாரும் திருப்பணியை மேற்கொள்ளாமல்           சத்தியஞானசபை பழுதுற்றுக் கிடந்தது. பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் மற்றும் பலர் முயன்றும் திருப்பணி நடைபெறவில்லை. கடலூர் ஜில்லாபோர்டு தலைவர் திரு.கே.சீதாராம ரெட்டியார் அவர்களின் தலைமையில் ஒரு திருப்பணிக் குழு அமைக்கப் பெற்றது. இடையில் அமாவாசைப் பரதேசி அவர்கள் “நான் திருப்பணி செய்வேன்” என்று சிறிது வசூல் செய்து செப்புத் தகடுகள் வாங்கி ஒரு சிறிது பணி செய்யத் தொடங்கினார். திருப்பணிக் குழுவினரிடம் வசூல் செய்த கணக்குத் தர மறுத்தார். அதனால் அத்துடன் அது நின்று விட்டது.

          அப்பொழுது திருச்சியிலிருந்து மதுரைக்கு மாறுதலாகி மதுரையில் முனிசிபல் மேனேஜராகப் பணி புரிந்த வி.எஸ்.லோகநாத பிள்ளை அவர்கள் வடலூர் வள்ளலாரிடம் அளவு கடந்த அன்பு பூண்டவர். அவர் என்னைப் பார்த்து “ஐயா! வடலூரில் திருப்பணி தொடங்கி யிருக்கின்றார்கள், நாம் ஏதாவது அதில் ஈடுபட வேண்டும்” என்று கூறி, மதுரையில் ஞாயிறுதோறும் நானும், அவரும் வசூல் செய்தோம். திருபணிக்குப் பணம் கொடுத்து வாருங்கள் என்று என்னை வடலூருக்கு அனுப்பினார். எழுநூறு ரூபாய் எடுத்துக்கொண்டு வடலூருக்குச் சென்றேன். அங்கு சத்திய ஞான சபையைப் பூசனை செய்யும் சிவஸ்ரீ பால சுப்ரமண்ய சிவாச்சாரியாரைக் கண்டு அவரிடம் தங்கினேன். பின்னலூர் வாகீசம்பிள்ளை அவர்களின் தந்தையார் திரு.கணபதிப் பிள்ளையும்    அங்கு   வந்திருந்தார்.    நான் சிவாச்சாரியாரைப் பார்த்துத் “திருப்பணிக்குப் பணம் கொண்டு வந்திருக்கின்றேன்” என்று சொன்னேன். குருக்கள் “யாரும் இங்குப் பொறுப்பாக இருந்து திருப்பணி செய்வாரில்லை. கணபதியாப் பிள்ளை என்னும் இவர் சிறந்த அறப்பெருஞ் செல்வர், உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் இவரிடம் பணம் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று கூறினார்.

          நான் அதுபடியே கணபதியாப் பிள்ளையிடம் எழுநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு மதுரைக்குச் சென்றேன். இவ்வாறு மாதந்தோறும் எழுநூறு, எண்ணூறு என்று எடுத்துக் கொண்டுபோய் பாலசுப்ரமண்ய சிவாச்சாரியார் மூலம் கொடுத்து வந்தேன்.

          அவருடைய மேற்பார்வையில் மூவாயிரம் ரூபாய் அளவில் ஜோதி மேடைக்குத் தூண்கள் செய்யப்பட்டன.

          மதுரையிலிருந்து முனிசிபல் மேனேஜர் ஓர் இன்ஜினியரை அனுப்பித் திருப்பணியைப் பார்வையிடச் செய்தார். அந்த இஞ்ஜினியர் வந்து பார்த்து ‘செய்த தூண்கள் பாரம் தாங்கா” எனக் கூறிவிட்டார். அதனால் செய்த வேலைகள் வீணாகி விட்டன.

          அப்பொழுது சிதம்பரத்தில் திருப்பணிக் குழுவினர் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நான் அந்தக் கூட்டத்தில் திருப்பணிக் குழுத் தலைவரைப் பார்த்து “திருப்பணியைப் பொறுப்பாகப் பார்க்க ஒருவரை நியமிக்க வேண்டும். இப்பொழுது செய்த வேலைகள் வீணாகி விட்டன” என்று கூறினேன்.

          திருப்பணிக்            குழுத்     தலைவர் கே.சீதாராம ரெட்டியார் என்னிடம் “நீங்களே பொறுப்பாக இருந்து செய்யுங்கள். ஆனால், திருப்பணிக் குழுவுக்கு உட்பட்டுச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். நான் ‘சரி’ என்று திருப்பணியை முழுப் பொறுப்பாக ஏற்றுச் செய்ய மேற் கொண்டேன்.

          வடலூர் சத்திய ஞானசபைத் திருப்பணியைச் செய்ய முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொண்ட நான் சிற்பவல்லுனர் துறையூர் நா.செளந்தரபாண்டியப் பிள்ளை அவர்களை ஸ்தபதியாக நியமனம் செய்து, பல கொத்தனார்களை அழைத்துச் சமையல் முதலிய ஏற்பாடுகள் அமைத்துத் திருப்பணி நடைபெறச் செய்தேன்.

          விரிவுரைக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் வசூல் செய்வேன். அவ்வப்பொழுது சேரும் பணத்தைக் கடலூர் சீதாராம ரெட்டியாருக்கு அனுப்புவேன். என் அன்பர் செளந்தரபாண்டியன், அவரிடம் சென்று பணம் வாங்கி வந்து திருப்பணியைச் செய்து வந்தார்.

          ஈரோடு வள்ளல் வி.வி.சி.ஆர்.முருகேச முதலியார் அவர்கள் பலமுறை ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்தார். அதுபடியே நாகப்பட்டினம் திரு.பச்சைமுத்து நாடாரும் பலமுறை ஆயிரம் ஆயிரமாகத் தந்தார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் திருப்பணி நடந்தது.

          அறநிலைய ஆட்சிக் குழுவிலிருந்த ஓர் அதிகாரிக்கும், வேலை பார்க்கும் செளந்தரபாண்டியப் பிள்ளைக்கும் மன வேறுபாடு உண்டாயிற்று. திருப்பணிக் குழுவைக் கலைத்துத் திருப்பணி அதிகாரத்தைத் தன் வசமாக்கிக் கொள்ள வேண்டுமென்று           எண்ணிய       அவர் திருப்பணிக் குழுவைக்  கலைத்து விட்டார். கணக்குத் தருமாறு சீதாராமரெட்டியாரை அறநிலைய ஆட்சிக் குழுவினர் கேட்டார்கள். அவர் “திருப்பணியை முடித்த பிறகு கணக்குத் தருவதுதானே நியாயம்!” என்றும், “திருப்பணிக் குழுவைக் கலைத்து விட்ட பின் என்னைக் கணக்கு கேட்பது என்ன நியாயம்!” என்றும், “திருப்பணியைக் கிருபானந்தவாரியார்தான் செய்கிறார். அவரைத்தான் கேட்க வேண்டும்” என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொன்னார்.

          அறநிலைய ஆட்சிக் குழுவினர் திருப்பணியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்கள். திருப்பணி நின்று விட்டது. இதனால் எனக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. என் அன்பர் வி.வி.சி.ஆர்.முருகேச முதலியாரும், மன்னார்குடி சாமிநாத உடையாரும் திருப்பணி நின்றிருப்பதை அறிந்து,  வருந்தி அப்பொழுது அறநிலைய ஆணையராக இருந்த திரு.சின்னையா பிள்ளையிடம் “வடலூர் திருப்பணியை வாரியார் சுவாமிகள் செய்வது மிகவும் நல்லது” அவர் வழிபாட்டில் கண்ணீர் வடித்தால் உங்களுக்கு இருபத்தொரு தலைமுறைக்கு ஆகாது. ஆதலால், திருப்பணியை அவரிடமே ஒப்புவித்துத் திருப்பணி செய்ய உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

          பழநியில் சின்னையாபிள்ளை என்னைச் சந்தித்து, “வடலூர் திருப்பணிக் கணக்குப் பூராவும் என்னிடம் கொடுங்கள். கணக்கைப் பார்த்தபின் அதைப்பற்றி முடிவு எடுப்பேன்” என்று சொன்னார். கணக்கு முழுவதும் சின்னையா பிள்ளையிடம் ஒப்படைத்தேன். அவர்கள் அதற்கென்று   ஒரு  தனி  ஆளை ஏற்படுத்தி ஆறுமாதம் கணக்குகளைத் தணிக்கை செய்தார். இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்து அதுவரை திருப்பணி நடந்துள்ளது. வசூல் செய்த வகையில் பயணச் செலவு எழுதவில்லை. ஆதலால், கணக்கு ஒழுங்காக இருக்கிறது என்று மதித்து மகிழ்ந்து கணக்கை என்னிடம் கொடுத்து, “நீங்களே திருப்பணியைச் செய்து முடிக்க வேண்டும்” என்று கூறினார்கள். மாதந்தோறும் வரவு செலவுக் கணக்கை அனுப்ப வேண்டுமென்று கூறினார்கள். அவ்வண்ணமே மாதந்தோறும் வரவு செலவு அறிக்கையைச் சென்னை அறநிலைய ஆட்சித் துறைக்கு அனுப்பி வந்தேன்.

               வள்ளலாரின் அருட்செயல்

          திருவாரூர் தியாகராஜாவின் விழாவில் விரிவுரை செய்ய அடிக்கடி திருவாரூர் போவேன். அவ்வாறு செல்லும்போது வடபாதி மங்கலம் திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார் அவர்கள் திருமாளிகையில் தங்குவேன். அவ்வாறு தங்கும்பொழுது வி.எஸ்.டி.. அவர்களின் தந்தையார் ஜி.ரங்கநாத முதலியாரும் அவர்களின் மனைவியாரும் நன்கு உபசரிப்பார்கள்.

          ஒருநாள் பெரிய அண்ணி அவர்கள் என்னுடைய பூஜையில் “சுவாமி மருமகளுக்குச் சந்தானம் கிடைக்கவில்லை. காசி முதல் இராமேசுவரம் வரை தெரிசித்திருக்கின்றார்கள். வைதீகச் சடங்குகள் பலவும் செய்து முடிந்தன. இந்த வீட்டில் கட்டில்கள் பல இருக்கின்றன. தொட்டில் தான் இல்லை!” என்று கூறி வருந்தினார்கள்.

          நான் முருகப் பெருமானைத் தியானம் செய்து கொண்டே “அம்மா! தாங்கள் மகனையும்,     மருமகளையும்    அழைத்துக்கொண்டு மாத பூசத்தின் பொழுது வடலூருக்கு வாருங்கள். மேட்டுக்குப்பத்தில் வள்ளல் பெருமானார் நீராடிய “பாபஹரம்” என்னும் தீர்த்தத்தில் மகனும், மருமகளும் மூழ்கி, ஞானசபையில் விண்ணப்பம் எழுதி வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ளட்டும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளினால் சந்தானம் உண்டாகும்” என்று கூறினேன்.

          அடுத்து வந்த ஆனிமாத பூசத்தன்று பெரிய அண்ணி அவர்கள் தன் புதல்வர் வி.எஸ்.தியாகராஜ முதலியார் அவர்களையும், அவர் மனைவியாரையும், கணக்குப் பிள்ளை ஐயங்காரையும் அழைத்துக் கொண்டு, வடலூருக்கு வந்தார்கள். மேட்டுக்குப்பம் ஓடையில் மூழ்கிச் சத்திய ஞான சபையில் விண்ணப்பம் எழுதி வைத்து அர்ச்சனை செய்தார்கள். அப்பொழுது வி.எஸ்.டி. அவர்கள் திருப்பணிக்கு ரூபாய் ஆயிரத்தொன்றைக் காசோலையாக வழங்கினார். அதே மாதத்தில் அம்மையாரின் மணி வயிறு வாய்த்தது. ஆண் குழந்தை பிறந்தது. வி.எஸ்.டி. அவர்கள் என்னைக் கண்டு “சுவாமி! வள்ளலார் எனக்கு மகப்பேறு வழங்கினார். சத்தியஞான சபைத் திருப்பணிக்கு நான் என்ன செய்ய வேண்டும்!” என்று கேட்டார்.

          நான் “அருட்பெருஞ்ஜோதி மண்டபத்திற்கு மேலே அமைக்கப்படும் மரங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று சொன்னேன். அவர் மாயூரம் எஸ்.கே.பிரதர்ஸ் கரக்கடைக்குத் தேவைப்பட்ட மரங்களை எனக்கு அளிக்குமாறு கடிதம் கொடுத்தார். அவ்வாறே மாயூரம் எஸ்.கே.பிரதர்ஸிடமிருந்து   மரம்  வாங்கிக் கொண்டேன். அதன் பில் பதின்மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய், அந்தப் பில்லை வி.எஸ்.டி. யிடம் அனுப்ப, அவர் அத்தொகையைச் செலுத்திவிட்டார்.

          ஒரு மாதம் ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் இடர்ப்பாடு வந்தபொழுது வி.எஸ்.டி. அவர்களைத் திருவாரூரில் அணுகினேன். தன் சுவீகாரத் தாயார் ஜானகி அம்மையாரிடம் கூறி மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கி வழங்கினார். கும்பாபிஷேகத்தின்போது உடன் இருந்து நடத்தினார்.

          ட்ரோஜன் அண்ணாமலைச் செட்டியார் கும்பாபிஷேகத்தின் பொழுது வி.எஸ்.டி. அவர்களையும், அவரது தந்தையாரையும் கடலூரிலுள்ள சிறந்த பங்களாவில் வந்து தங்குமாறு வேண்டிக் கொண்டார்.

          வி.எஸ்.டி. அவர்களின் பிதா திரு.ஜி.ரங்கநாத முதலியார் அவர்கள் “ஆயுள் முழுவதும் பங்களாவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தக் கும்பாபிஷேகத்தில் அடியார்கள் உண்ட எச்சில் தரையில்தான் படுப்போம்” என்று கூறிக் கடலூருக்கு வர மறுத்துவிட்டார். கும்பாபிஷேகம் முடிந்ததும் அவர் என்னைப் பார்த்துத் “தங்களுக்கு கதா காலட்சேபம்தான் செய்யத் தெரியும் என்று எண்ணியிருந்தேன். இந்த மகத்தான நிர்வாகத்தைக் குறைவின்றி நிறைவேற்றினீர்களே! என்று பாராட்டிக் கூறினார்.

          நான் “என்னுடைய செயலில் ஒன்றும் நடைபெறவில்லை. எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நடத்திக் கொள்கின்றார்” என்று கூறினேன்.

வள்ளலாரின் கருணை:

வடலூர் திருப்பணி நடந்து வரும்பொழுது ஒரு மாதம் ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமின்றி நான் அணிந்திருந்த அணிகலன்களை அடகு வைத்து மூவாயிரத்து ஐநூறு ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். கடவுள் நம்மை அணிகலன்களை அடகு வைக்குமாறு செய்து விட்டாரே! என்று எண்ணி உள்ளம் உலைந்தேன். ஒரு நாள் வடலூரில் வழிபாடு  செய்து கொண்டிருந்தேன். அங்கு ஒரு கணவனும், மனைவியும் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டார்கள். அருகிலிருந்தவர்கள், “இவர் தெம்மூர் இராஜமாணிக்கம் பிள்ளை. தனமும் மனமும் படைத்தவர்” என்று கூறினார்கள். நான் அவர்களைப் பார்த்துத் “தெம்மூரில் ஒரு விரிவுரைக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஞானசபைத் திருப்பணிக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள்” என்று கூறினேன். அவர்கள் அன்புடன் அதற்கு இசைந்தார்கள். அதுபடியே ஒரு நாள் தெம்மூருக்கு விரிவுரை செய்யப் போயிருந்தேன். அன்று பெருமழை கொட்டிற்று. எங்கும் வெள்ளக் காடாக ஆயிற்று. நிகழ்ச்சி நன்றாக நடைபெறுவதற்கு மழை தடை செய்கின்றதே! என்று எண்ணி நான் வருந்தினேன். இரவு எட்டு மணிக்கு மழை நின்றது. வைக்கோற்புல்லைப் பரப்பி அதன் மீது தென்னங் கீற்றுகளையிட்டு ஜனங்கள் இருந்து கேட்க வசதி செய்தார்கள்.

          அன்றிரவு வள்ளலாரைப் பற்றி விரிவுரை செய்தேன். விரிவுரை முடிந்தது. பிள்ளை அவர்கள் ஐநூறு தருவார்கள். நாம் ஆயிரமாவது கேட்க வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். பிள்ளையவர்களும் அவரது மனைவியாரும் ஒரு பெரிய வெள்ளித் தட்டில் இருபத்தைந்து சாத்துக்குடி, ஆரஞ்சுப் பாழங்கள், ஏழெட்டு வாழைப் பழச் சீப்புகள், நிறைய வெற்றிலைப்பாக்கு வைத்துக்கொண்டு வந்தார்கள்.

          இதைப் பார்த்தவுடன் நான் சிறிது அஞ்சினேன். சில சங்கங்களில் பெரிய பூமாலையாகச் சூட்டி, நிறைய பழங்களைத் தட்டில் வைத்துத் தருவார்கள். பழத்துக்கு அடியில் ரயில் செலவிற்காக இருபத்தைந்து உரூபாய் மட்டுமே இருக்கும். செட்டி நாட்டில் இரண்டு வாழைப்பழம், ஒரு சாத்துக்குடி, ஆரஞ்சு, நான்கு வெற்றிலைப்பாக்கு மட்டுமே இருக்கும். உரூபாய் ஆயிரம் வைத்திருப்பார்கள். இப்பொழுது இவர்கள் நிறைய பழங்களை வைத்துக் கொண்டு வந்திருக்கின்றார்களே! பணம் குறைத்துத் தருவார்கள் என்று எண்ணினேன்.

          தெம்மூர் இராஜமாணிக்கம் பிள்ளையும், அவர் மனைவியாரும் பழங்களுக்கு மேல் நூறு உரூபாய் நோட்டுகள் கற்றையாக வைத்திருந்தார்கள். அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இரசீது போடும் பொருட்டுப் பணத்தை எண்ணிப்பார்த்தேன். நூறு உரூபாய் நோட்டுகள் முப்பத்தைந்து இருந்தன. நான் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருந்த தொகை மூவாயிரத்து ஐநூறு. தெம்மூர் பிள்ளை நன்கொடை கொடுத்ததும் மூவாயிரத்து ஐநூறு. அதே தொகையை அன்பர் வழங்கியிருக்கின்றார். மூவாயிரமாகவோ, நாலாயிரமாகவோ கொடுக்காமல் மூவாயிரத்தைந் நூறே கொடுக்குமாறு செய்த திருவருளின் திறத்தை நினைந்து வியந்தேன்.

          வடலூர் திருப்பணிக்கு நிதி திரட்டியது.

மதுரையில் ஒருமுறை எம்.கே. தியாகராஜபாகவதர், எம்.எம்.தண்டபாணி தேசிகர், பிரேம குமாரி என்ற மூவருடைய இன்னிசையரங்கு வைத்து நிதி திரட்டினோம். பாகவதர் வழிச் செலவும் வாங்கவில்லை. சத்தியஞான சபைத் திருப்பணிக்குப் பலர் அன்பாக உதவி செய்தார்கள். தருமபுரம் ஆதீனம் பதினாயிரம் வழங்கினார்கள். திருவாவடுதுறை ஆதீனம் ஆறாயிரம் வழங்கினார்கள். திருப்பனந்தாள் ஆதீனம் இரண்டு முறை இரண்டாயிரம் உரூபாய் வழங்கினார்கள். பண்ருட்டி சைக்கிள்ஷாப் ஆர்.கே.முருகேச நாயுடு அவர்கள் தனக்கிருந்த ஒரே ஒரு வீட்டை விற்று ஆயிரத்தெட்டு உரூபாய் நன்கொடையாக வழங்கினார்கள். இரும்பு விலை கொடுத்து வாங்க முடியாத காலத்தில் ஈரோடு இரும்புக்கடை வி.அர்த்தநாரி முதலியார் அவர்கள் இரும்பு பூராவும் இலவசமாக வழங்கினார்கள்.

          ஒருமுறை அறநிலைய ஆட்சிதுறை ஆணையர் சின்னையாபிள்ளை சுமுகம் இன்றி வெடுவெடென்று பேசினார். நான் பொதுக்காரியம், பொது ஜனங்களிடத்திலிருந்து வசூலித்து இப்பணியைச் செய்கின்றோம். இது இடையூறின்றி நடைபெற வேண்டும். ஆதலால், காரியசித்திக்கு மருந்து மெளனம் ஒன்றேயாகும் என்று சும்மாயிருந்தேன்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் நோக்கார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

என்ற பாடலை முழுவதும் அனுசரித்து நடந்து வந்தேன்.

          1941 முதல் 1950 வரை ஒன்பது ஆண்டுகள் வடலூர் சத்திய ஞானசபைத் திருப்பணி நான்கு லட்சம் உரூபாய் செலவில் நடைபெற்றது. இடையில் வந்த இடையூறுகள் எண்ணற்றவை. அவைகளை எழுதினால் ஏட்டில் அடங்கா.

          “வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக் கொண்டிருக்கின்ற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் திருப்பணி செய்தேன்.

          பி.டபிள்.யூ.டி. அலுவலகத்தில் ‘ஹெட் டிராப்ஸ் மேனாகப்’ பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் தாய்மாமா திரு.வி.சிவகுரு முதலியார் அவர்கள் திருப்பணி தொடக்கத்திலிருந்து பயன் கருதாது இத்திருப்பணியில் உடனிருந்து உழைத்து வந்தார். மண்ணெண்ணெய் பாட்டில் வடலூரில் மூன்று அணா. குறிஞ்சிப்பாடியில் இரண்டேமுக்கால் அணா. இந்தக் காலணா இலாபத்துக்காக வடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு நடந்து போய் மண்ணெண்ணெய் வாங்கி வருவார். நான் அவரைப் பார்த்துக் ‘காலணா இலாபத்துக்காக மூன்று மைல் நடக்க வேண்டுமா?’ என்று கேட்பேன். “எனக்கு அது வாக் (Walk) போனதுபோல் ஆகும். திருப்பணிக்கும் சிறிது பயனுண்டாகின்றது” என்று பதில் கூறுவார். ஸ்தாலீபுலாக நியாயமாக (பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தல்) அவருடைய நேர்மையையும், தொண்டு உள்ளத்தையும் இந்த ஒன்றே பறைசாற்றும். 24-04-1950 தமிழ் வருடம் விக்ருதி சித்திரை பன்னிரண்டாம் தேதியன்று கும்பாபிஷேகமென்று உறுதி செய்து பத்திரிகை அச்சிட்டேன்.

          கோர்ட்டில் வழக்கு:

          வடலூர் அறநிலையங்களின் அறங்காவலர்கள் மூவரும் அறநிலைய ஆட்சித் துறைக் கோர்ட்டில் கும்பாபிஷேகம் செய்யக் கூடாதென்று வழக்குத் தொடர்ந்தார்கள். கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய சாதனஙகளைச் சேகரிப்பதும், அன்னதானத்திற்குரிய பொருள்களைத் தேடுவதும், பொருள் ஈட்டுவதுமாகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு தத்தளிக்கின்ற நான் வழக்கு விசாரணைக்கு முதல்நாள் சென்னைக்குச் சென்றேன். திருப்பணிக்குழுத் தலைவராக இருந்த சீதாராம ரெட்டியாரைக் கண்டு விஷயத்தைக் கூறினேன். அவர் ‘ஒன்பது ஆண்டுகளாக உழைக்கின்ற உங்களுக்கு அனுகூலம் செய்யாமல் பிரதிகூலம் செய்கின்றார்களே! இது என்ன உலகம்? நல்லவர்களுக்கு காலம் இல்லையே!’ என்று வருத்தப் பட்டார்கள்.
         
          பின்னர் அறநிலைய ஆட்சித்துறை அலுவலகத்திற்குச் சென்றேன். அப்பொழுது தலைமை ஆணையராக இருந்த சின்னையா பிள்ளையைக் கண்டேன். “அவர் நாளைக்குத்தானே வழக்கு விசாரணை? நாளைக்கு வாருங்கள்.” என்றார். மற்றோர் ஆணையர் மண்ணாடி நாயரைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்து “உத்தமமான தொண்டு செய்யும் உங்களை இப்படி வழக்குத் தொடுத்து வம்பு செய்து வேதனைப்படுத்துகின்றார்களே!” என்று கூறி வருந்தினார்.

          பின்னர் மற்றோர் ஆணையரான கஜபதி நாயகர் என்பவரிடம் சென்றேன். “வணக்கம்” என்று கூறி அவருக்கு எதிரிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தேன். அவர் என்னைப் பார்த்து முகத்தைச் சுளித்துக்கொண்டு “நீங்கள் ரொம்ப ட்ரபிள் கொடுக்கிறீரே!” என்று கூறினார். அதைக் கேட்டு நான் மெளனமாக இருந்தேன். மறுபடியும் அவர் என்னைப் பார்த்து “நான் சொல்லுவதற்கு ஒன்றும் பதில் சொல்ல வில்லையே” என்றார். அப்பொழுதும், நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். அவர் “ஞானசபையைக் கட்டினீர்களே! டிரஸ்ட்டிகளைக் கேட்டுத்தானே கும்பாபிஷேகத் தேதிகளை நிச்சயிக்க வேண்டும்? கொத்தனார் வீட்டைக் கட்டினால் கட்டிய கொத்தன், வீட்டுக்காரனைக் கேளாமல் க்ரஹப்ரவேசத் தேதியை வைக்கலாமா?” என்று கேட்டார். அவர் கூறிய உவமை பொருந்தாது. வீடு ஒருவனுக்குச் சொந்தமானது. ஞானசபை யாருக்கும் சொந்தமானதன்று. கொத்தன் கூலிக்கு வேலை செய்பவன். நான் பயன் கருதாது பணிபுரிபவன். இவற்றையெல்லாம் எடுத்து நான் விளக்கினால் விவாதம் விளையும். ஆதலால், வீண் விவாதத்தை விரும்பாமல் “நாளைக்கு வருவேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டேன்.

          மறுநாள் அறநிலைய ஆட்சித்துறை அலுவலகத்தில் காலை பதினொரு மணிக்கு மூன்று ஆணையர்களும் நியாய ஸ்தலத்தில் அமர்ந்திருந்தார்கள். முருகனுடைய ஆறெழுத்தை மிகவும் அழுத்தமாக ஜெபித்துக்கொண்டு நான் சென்றேன். என் மீது வழக்குத் தொடுத்த அறங்காவலர்களும் அவர்களுடன் இரண்டு மூன்று பண்பில்லாதவர்களும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் ஒருபுறமாக நின்று கொண்டிருந்தார்கள். என்னைச் சின்னையா பிள்ளையவர்கள் “வாருங்கள்” என்று கூறி வரவேற்று “நீங்கள் நாற்காலியில் இருந்தவண்ணமே பேசலாம்” என்றார்.

          ஆணையர் அறங்காவலரைப் பார்த்து “உங்கள் வழக்கு என்ன?” என்று கேட்டார். அவர்கள், “சத்தியஞான சபையில் தங்கக் கலசம் முன்னர் இராமலிங்க சுவாமிகள் வைக்கவில்லை. வாரியார் நூதனமாக வைத்து விட்டார். இது பெரும் பிழை” என்று கூறினார்கள்.

          ஆணையர் என்னைப் பார்த்தார். நான், “வள்ளலார் ஞானசபை கட்டும்பொழுது இவர்கள் உடன் இருந்திருப்பார்கள். நான் அப்பொழுது இல்லை. ஆனால், ஞான சபையில் முன் இருந்த தங்கக் கலசத்தை எடுத்து வைத்திருக்கின்றேன். அதை அழித்துவிடவில்லை. நான் முன் இருந்த மாதிரிதானே திருப்பணி செய்ய வேண்டும்? ஆகவே, முன் இருந்த தங்கக் கலசத்தைவிடச் சிறிது அழகாக  இப்பொழுது செய்திருக்கின்றேன். நீங்கள் ஏப்ரல் பத்தாம் தேதி வடலூருக்கு வருகின்றேன் என்று சொன்னீர்களே! அப்பொழுது நேரில் பழைய கலசத்தைக் காட்டுவேன்” என்று சொன்னேன். இதைக் கேட்டுச் சின்னையாபிள்ளை அதிர்ச்சி அடைந்தார். “அப்படியா?” பழைய கலசம் இருக்கின்றதா?” என்று சொல்லி டிரஸ்டிகளைப் பார்த்து ‘என்னையா! நீங்கள் கலசமே இல்லை என்று கூறுகின்றீர்களே!’ என்று கேட்டார். அவர்கள் “வள்ளலார் தங்கக் கலசம் வைக்கவில்லை. பின்னர் யாரோ வைத்துவிட்டார்கள் என்று கூறினார்கள். நான் “வள்ளலார் வைத்ததோ, மற்றவர் வைத்ததோ! எனக்குத் தெரியாது. முன் இருந்த மாதிரி நான் செய்தேன்” என்று கூறினேன்.

          ஆணையர் அறங்காவலர்களை நோக்கிக் “கலசம் விஷயம் முடிந்தது. கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்று ஆட்சேபித்திருக்கின்றீர்களே! வேறு காரணங்கள் உளவா?” என்று கேட்டார். அவர்கள் “வள்ளலார் கொள்கைக்கு மாறாக, இவர் கும்பாபிஷேகம் செய்வதை நாங்கள் தடுக்கின்றோம்” என்று கூறினார்கள்.

          “நான் வள்ளலாருடைய கொள்கைக்கு மாறானவன் அல்லன். எனக்கும் வள்ளலார் கொள்கை நன்கு தெரியும். சத்திய ஞானசபை உருவம் இல்லாத ஜோதி வழிபாட்டை உடையது. மேட்டுக்குப்பத்திலிருந்து பாபஹர தீர்த்தத்தைக் குடத்தில் கொணர்ந்து ஞானசபையில் வைத்து எல்லா அன்பர்களும் சேர்ந்து ஆறுவேளை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்து அந்தத் தீர்த்தத்தை எடுத்து ஸ்தூபிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஏற்பாடு” என்றேன். “இது நல்ல ஏற்பாடுதான்” என்றார் சின்னையா பிள்ளை.

          அப்பொழுது மற்றோர் ஆணையராகிய கஜபதி நாயகர் குறுக்கிட்டு, “ஸ்தூபி நீராட்ட வேண்டிய அவசியமில்லை. சும்மா ஜோதி வழிபாடு செய்தால் போதும்” என்று ஓங்கியடித்துக் கூறினார். “நான் நாகப்பட்டினம் மரக்கடை அ.மு.சுப்புராய செட்டியாரின் உபயமாக நாற்பத்தெட்டு தோலா செலவில் தங்க முலாம் கலசம் செய்வித்தேன். கலசத்துக்கு முலாம் இட்டவர் இஸ்லாமிய அன்பர். கும்பாபிஷேகத்தின் பொழுது லட்சோபலட்சம் ஜனங்கள் சேருவார்கள். ஜோதி வழிபாட்டைக் குறுகிய இடத்தில் சிலர்தான் சேவிக்க முடியும். ஸ்தூபி நீராட்டு செய்தால்தான் ஏக காலத்தில் எல்லாரும் தெரிசித்துத் தெரிசனை செய்தோம் என்ற ஒரு நிறைவை ஜனங்கள் பெறுவார்கள். ஆதலால், ஸ்தூபியை நீராட்டுதல் அவசியமானது” என்று கூறினேன்.

          சின்னையாபிள்ளை இதைக்கேட்டு “ஐயா சொல்லுவது நியாயம்தான். சாப்பிட்ட இடத்தில்கூட தண்ணீர் தெளிக்கின்றார்கள்” என்று சொல்லிக் கஜபதி நாயகர் தொடையை ஒரு தட்டு தட்டி “நீர் சும்மா இரும்” என்றார். மறுபடியும் அறங்காவலர்களைப் பார்த்துக் “கும்பாபிஷேகப் பிரச்சனை முடிந்தது. கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதான். வேறு என்ன உங்களுக்கு ஆட்சேபணை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “வாரியார் எங்களைக் கேளாமலே ஸ்தூபி நீராட்டு விழாப் பத்திரிகை அச்சிட்டு விட்டார்” என்றனர்.

          “நான் ஒன்பது ஆண்டுகளாக வடலூரில் திருப்பணி செய்கின்றேன். இந்த அறங்காவலர்களை நான் பார்த்ததே இல்லை. அவரகள் கறுப்பா, சிவப்பா என்று எனக்குத் தெரியாது. அவர்கள் இருப்பிடமும் நான் அறியேன். நான் ஒன்பது ஆண்டுகளாக மூன்றே முக்கால் லட்ச உரூபாய் ஈட்டி, பஞ்சு படாத பாடுபட்டுத் திருப்பணியைச் செய்தேன். இவர்களை இங்குதான் வழக்குத் தலத்தில் பார்க்கின்றேன்” என்று சொன்னேன்.

          சின்னையா பிள்ளை சிரித்துக்கொண்டே “ஏனய்யா! கணவன் மனைவி சண்டை மாதிரி பேசிக் கொள்கிறீர்கள்? நீங்கள் வாரியாரை அணுகியிருக்கலாமே! நல்ல காரியத்தில் ஏன் குதர்க்கமிட்டு வாது செய்கிறீர்கள்?” என்றார்.

          அறங்காவலர்கள் “கும்பாபிஷேகத் தேதி நெருக்கமாக இருக்கின்றது. கடைகளை ஏலம் விடப் போதுமான அவகாசம் இல்லை” என்றார்கள். திரு.சின்னையா பிள்ளை அவர்களைப் பார்த்துக் “கும்பாபிஷேகத்தை வாரியார் செய்கின்றார். உங்களுக்கொன்றும் கடுகளவுகூட இதில் செலவில்லை. இன்னும் ஒரு மாத அவகாசம் இருக்கின்றது. கடைகளை ஏலம் போடுங்கள். சிறிது பணம் குறைவாக வந்தாலும் குற்றமில்லை. வீணான மனஸ்தாபங்கள் வேண்டாம், வாரியாருடன் ஒத்துழையுங்கள்” என்று கூறி முடிவு செய்தார். அத்துடன் அந்த நிகழ்ச்சி நிறைவேறியது.

          ஏப்ரல் பத்தாம் தேதி திரு.சின்னையா பிள்ளையவர்கள் வடலூருக்கு வந்தார். அவருடைய மனதை யாரோ மாற்றிவிட்டார்கள் போலும்! வடலூரில் ஒரு சிறு கூட்டம். சின்னையா பிள்ளை அக்கூட்டத்தில் என்னைப் பார்த்து ஸ்தூபி நீராட்டுவதைப் பொதுஜனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. நீங்கள் ஸ்தூபி நீராட்டுவதைத் தவிர்த்து விடுங்கள்” என்று சொன்னார். இதைக் கேட்டு நான் அயர்ந்தே போனேன்.

          விசனத்துடன் அமர்ந்திருந்தேன். சின்னையா பிள்ளை புறப்பட்டார். அங்கிருந்த கூட்டத்தில் ஒருவன் எழுந்து ஒரு தடியை கக்கத்தில் வைத்துக்கொண்டு அவரை வழி மறித்து நிமிர்ந்து நின்று, ‘எஜமான்! வாரியார் செய்தால் ஒரு செம்புதான் மேலே ஏறும். இல்லையானால் ஆயிரம் சொம்புகள் மேலே ஏறி ஸ்தூபி நீராட்டு விழா நிகழும். எஜமானுக்கு எச்சரிக்கை செய்கிறேன்” என்றான். அவர் அதைக் கேட்டு அஞ்சிய முகத்துடன் காரில் ஏறிப் புறப்பட்டுப் போனார்.

          கோர்ட்டில் நேர்முகமாக ஸ்தூபி நீராட்டு விழா செய்ய வேண்டும் என்று கூறிய ஆணையர் இப்போது இங்கு வந்து செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றாரே! என்ன செய்வது என்று நான் எண்ணி மறுநாள் சென்னை சென்றேன்.

          ஆணையரை அலுவலகத்தில் சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்து “நான் தங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றேன். கடிதத்தைப் பார்த்து அதன்படி செய்யுங்கள்” என்று கூறினார். நான் நல்லபடிதான் எழுதியிருப்பார் என்று கருதி வீட்டிற்கு வந்தேன். அங்குக் கமிஷனருடைய கடிதம் வந்திருந்தது. அதில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டாம். ஆனால், பொது ஜனங்களைக் கலந்து பொது ஜனங்களின் விருப்பப்படி செய்க!” என்று இருந்தது.

          நான் இதைப் படித்ததும் என் மனம் மறுகியது. உடனே புறப்பட்டுத் திரு.ஓ.பி.இராமசாமி ரெட்டியாரைக் கண்டு இதற்கு ஒரு பரிகாரம் தேடவேண்டும் என்று எண்ணிப் பூஜைப் பெட்டியுடன் ஓமந்தூருக்குப் பறந்து சென்றேன்.

          ஓமந்தூரில் ரெட்டியார் இல்லை. திருவண்ணாமலையில் இரமணரிஷி அவர்களுக்கு உடல்நலமில்லையென்று திருவண்ணாமலைக்குப் போயிருக்கின்றார் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நான் முருகப்பெருமானைப் பூசை செய்யாமலே பஸ்சில் ஓமந்தூருக்குப் போனேன். பூசைப் பெட்டியுடன் பஸ்சில் மறுபடியும் பறப்பட்டுத் திருவண்ணாமலையில் இரமணாசிரமம் சென்று சின்னையா பிள்ளையின் கடிதத்தைக் காட்டிக் “கும்பாபிஷேகம் நடைபெற ஒரு வழி செய்யுங்கள்” என்றேன்.

          ரெட்டியார் அப்பொழுதுதான் முதலமைச்சராக இருந்து விலகிய நேரம். ரெட்டியார் அக்கடிதத்தைப் பார்த்து மிகவும் வருத்தமும், சீற்றமும் ஒருங்கே அடைந்தார். நான் இப்பொழுது பதவியிலிருந்தால் ரிசர்வ் போலீஸ் வைத்து ஸ்தூபி நீராட்டு விழா செய்வேன். நான் பதவியில் இல்லையே” என்று கூறி வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் அவர்களுக்கு ஒரு கடிதமும், அப்பொழுது அறநிலைய அமைச்சராக இருந்த டாக்டர் ராஜன் அவர்களுக்கு ஒரு கடிதமும் கொடுத்தார். அக்கடிதங்களை அவர்களிடம் சேர்த்து விட்டேன். ஸ்தூபி நீராட்டு விழாவிற்குத் தலைமை தாங்குமாறு இராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து அழைத்தேன். பண்பாட்டின் சிகரமான இராஜாஜி அவர்கள், தனக்கே உள்ள வினயசம்பத்துடன் “வள்ளலார் சபை ஸ்தூபி நீராட்டு விழாவிற்குத் தலைமை தாங்க எனக்கு அருகதை கிடையாது. இதற்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார்தான். அவரைக் கண்டு அழைத்துப் பரம மங்களமாகச் செய்யுங்கள்” என்று அன்போடு கூறினார். நான் அது படியே ஓ.பி.ஆர். அவர்களை அணுகித் தலைமை தாங்குமாறு அழைத்தேன். அவர் இசைந்தருளினார்.

          அப்பொழுது கடும் ரேஷன் காலம். உணவுப் பங்கீட்டு அலுவலகப் பெருந்தலைவர் திரு.குற்றாலலிங்கம் பிள்ளை ஐ.ஏ.எஸ். அவர்களை அணுகி முந்நூறு மூட்டை அன்ன தானம் செய்ய அனுமதி பெற்றேன். அன்னதானத்திற்குரிய காய்கறிகள், வாழை இலைகள், பருப்பு வகைகள், புளி மிளகாய் வகைகள் எல்லாம் நிரம்ப வாங்கிக் குவித்தேன்.

          இன்னிசை அரங்கிற்கு ஏழிசை கந்தர்வகான ஜோதி எம்.கே.தியாகராஜ பாகவதரையும், மாரியப்ப சுவாமி அவர்களையும், கே.பி.சுந்தராம்பாளையும் அழைத்திருந்தேன். கும்பாபிஷேக ஏற்பாடுகள் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

          சத்திய ஞான சபையில் முக்கியமாக திருவருட்பாக்களைக் கல்லில் பொறித்திருந்தேன். வள்ளலார் வாக்கில் மிகவும் உயர்ந்ததாகிய அருட்பெருஞ்ஜோதி அகவலைச் சத்தியஞான சபை முன் மண்டபத்தில் கல்லில் பொறித்திருந்தேன். இதற்குத்தான் அதிக பணச் செலவும், அதிக கால விரயமும் ஆயின. சத்திய ஞான சபையின் நுண்ணிய கருத்துக்களையும் திரைகளின் தத்துவங்களையும் அங்குக் கல்லில் பொறித்த பாடல்களையும் ஒரு நூலாக வெளியிட்டேன். அதற்கு ஸ்தூபி நீராட்டு விழா மலர் என்று பெயர் சூட்டினேன்.

          ஒருநாள் வள்ளலாருடைய முதல் மாணவராகிய தொழுவூர் வேலாயுத முதலியாருடைய புதல்வர் செங்கல்வராய முதலியார் எனக்கு ஒரு நீண்ட கடிதம் நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார். அதில் “நாங்கள் வடலூர் வள்ளலாரைத் தெய்வமாக எண்ணி வழிபடுகின்றவர்கள். எங்கள் மனம் நோவ நீங்கள் ஏன் ஸ்தூபி நீராட்டு விழா செய்கின்றீகள்? நீங்கள் பெரிய மகான். நீங்கள் ஒப்பற்ற உயர்ந்த பண்புடையவர்கள். ஆகவே, ஸ்தூபி நீராட்டு விழாச் செய்வது வள்ளலார் பக்தர்களாகிய எங்களுக்கு மனம் புண்படுகின்றது” என்று எழுதியிருந்தார். இதைப் படித்தவுடனே எனக்கு ஸ்தூபி நீராட்டு விழாவில் இருந்த ஆர்வம் குன்றி விட்டது.

          நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன். நான் அருணகிரிநாதருடைய பக்தன். நமக்கு வேதமாக விளங்குவது திருப்புகழ். நமக்கு உபாசனாமூர்த்தி முருகவேள். இராமலிங்க வள்ளலார் சிறந்த ஞானமூர்த்தி. அவரையே தெய்வமாக எண்ணுகின்ற சிலருக்கு உடன்பாடில்லாத ஒன்றை நாம் ஏன் செய்ய வேண்டும்? அவர் விருப்பம்போல் செய்து கொள்ளட்டும். நாம் சொற்பொழிவுகளும், இன்னிசை அரங்குகளும், அன்ன தானமும் மட்டும் செய்து விழாவை நிறைவு செய்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே, ஸ்தூபி நீராட்டு விழாவில் இருந்த ஆர்வமும் முயற்சியும் அறவே அகன்று விட்டன. பின்னர் வடலூருக்குச் சென்றேன்.

          வடலூரில் இராமலிங்க அடிகளாருக்கு நாங்கள்தான் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கும் முக்கியமான சிலரை அழைத்து, “உள்துறை விஷயங்களையெல்லாம் உங்கள் இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எதனை எப்படிச் செய்தாலும் எனக்கு அதனைப் பற்றிக் கவலையில்லை. வெளித்துறைச் சடங்குகளான அன்னதானம், இன்னிசை அரங்கு, விரிவுரை நிகழ்ச்சி ஆகியவைகளை நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினேன்.

          இப்படி நான் சொன்னவுடனே அவர்களுக்குப் பெரும் திகைப்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிப்பேசி என்னிடம் வந்தார்கள். என்னைப் பார்த்து “நீங்கள் ஒன்பது வருஷம் இந்தச் சபைக்காக இரவு பகலாக உழைத்து சபையைக் கட்டியிருக்கின்றீர்கள். உங்கள் மனம் நோவ நாங்கள் நடக்கக் கூடாது. இந்தச் சத்தியஞான சபையின் அமைப்பு வேறு எங்கும் இல்லாதது; தமிழருக்கே உள்ள தனிப் பெருஞ் சிறப்பு உடையது. ஆதலால், ஸ்தூபி நீராட்டும் பணியைக் குருக்களுக்குப் பதில் நீங்களே செய்ய வேண்டும்” என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.

          நான் “இத்தனைக் காலம் குருக்கள்தாம் பூஜை செய்து கொண்டு வருகின்றார். கும்பாபிஷேகத்தில் அவரை விலக்கி விட்டு நான் செய்வது பொருத்தமாகாது. இதற்கு நான் உடன்பட மாட்டேன்” என்று கூறினேன். அவர்கள் வாடிய முகத்துடன் சென்றார்கள். அன்று இரவு முழுவதும் அவர்களுக்கும், எனக்கும் தூது நடந்தது. அன்று இரவு ஒரு சிறிதும் கண் இமை பொருந்தவில்லை. கடைசியாகக் குருக்கள் உடன்வர மேட்டுக்குப்பத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவலை ஓதிக் குருக்களே நீராட்டுவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

ஸ்தூபி நீராட்டு விழாச் சிறப்பு

          உத்தரஞான சிதம்பரம் என்கின்ற வடலூரில் எக்காலத்திலும் எங்குமில்லாத பெரிய அளவில் அன்பர்களின் கூட்டம் திரண்டிருந்தது. சற்று ஏறக்குறைய எட்டு லட்சம் ஜனஙகள் இருக்குமென்று கூறிக் கொண்டார்கள். நாற்பது லட்ச ரூபாய்க்கு ரயில்வே டிக்கெட்டு விற்றதென்று ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள். 22-04-1950 மாலை மாரியப்ப சுவாமிகளின் கச்சேரி நடந்து கொண்டிருக்கின்றது. அப்பொழுது மாவட்டக் காவல் துறை அதிகாரி என்னைத் தனியே அழைத்துக்கொண்டு போய்க் “கும்பாபிஷேகம் செய்யப் போகின்றீர்களா?” என்று கேட்டார். ஏன் அப்படிக் கேட்டார் என்றால், “ஹிந்து அறநிலைய ஆட்சித் துறையிலிருந்து கும்பாபிஷேகம் செய்யக் கூடாது. ஆனால், பொது ஜனங்களின் கருத்தை அனுசரிக்கவும்” என்று அவர்கள் அனுப்பிய உத்தரவில் இருந்தது.

          காவல்துறை அதிகாரியைப் பார்த்துக் “கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அன்னதானம் செய்து கொண்டிருக்கின்றேன். இன்னிசை அரங்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன” என்று பிடிகொடுக்காமல் பதில் சொன்னேன். அவர் “சமயத்துறையில் நாங்கள் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், கலகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். பிறகு நான் பிரசங்க மேடைக்குச் சென்று விட்டேன்.

          23-04-1950 எம்.கே. தியாகராஜ பாகவதருடைய இன்னிசை அரங்கு மிக உயர்வாக நடைபெற்றது.

          24-04-1950 இரவு பாலாயத்திலிருந்து அருட்பெருஞ்ஜோதி திருவிளக்கை மூலாலயத்திற்கு என் கையினால் கொண்டுபோய் வைத்தேன். பெரிய கண்ணாடியையும் கொண்டுபோய் மூலாலய ஜோதி மேடையில் வைத்தேன்.

          24-04-1950 காலை ஒன்பது மணிக்கு ஓ.பி.இராமசாமி ரெட்டியாருடைய தலைமையில் ஞானசபை அர்ச்சகராகிய பாலசுப்ரமண்ய சிவாச்சாரியாரின் புதல்வர் சிற்சபேச சிவாச்சாரியார் ஸ்தூபிக்கு நீராட்டினார்.

          அறங்காவலர்கள் கும்பாபிஷேகத்தை நிறுத்த வேண்டுமென்று தடையுத்தரவு வாங்கிக் கொண்டு வந்தார்கள். காவல் துறையினர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் தங்கியிருக்கின்ற இடத்துக்குச் சென்றார்கள். இந்தக் கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்ற தடை உத்தரவைக் கண்டு ரெட்டியார் ரெளத்ராகாரமாகச் சீறி “இது அரசாங்கமா?” தனிப்பட்ட ஒருவர் இத்துணைப் பெரிய மகா கைங்கரியம் செய்து கொண்டிருக்கின்றார். அதற்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக கும்பாபிஷேகத்தை நிறுத்திவிடுவதா? இது மிகவும் அக்கிரமம். பேசாமல் போங்கள்” என்று சத்தமிட்டுச் சொன்னார். காவல் துறையினர் செயல்படாமல் சும்மாயிருந்தது விட்டார்கள். (இந்தத் தகவலை ரெட்டியார் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எனக்கு அறிவித்தார்)

          கும்பாபிஷேகம் முடித்து நானும், ரெட்டியாரும் பிரசங்க மேடைக்கு வந்தோம். எனக்கு அறங்காவலர்கள் அனுப்பிய இரண்டு பதிவுத் தபால் வந்தது; மேடையிலமர்ந்து பிரித்துப் படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்திற்கு என் மேல் வழக்குத் தொடுக்கப் போவதாக அதில் கண்டிருந்தது.

          ரெட்டியார் அதைப் படித்துவிட்டு “இதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்” என்று கூறினார். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. கே.பி.சுந்தராம்பாள் இன்னிசைக் கச்சேரிக்கு வரவில்லை என்று தந்தி வந்தது. நான் இதுவும் ஒரு நன்மைக்கே என்று கருதி விழாவை அத்துடன் பூர்த்தி செய்து விட்டேன். மைக்கில் எல்லாருக்கும் நன்றி கூறி முடித்துவிட்டேன். பின்னர், நெடுந்தூரம் நடந்துபோய் அற்பசங்கியைக் கழிக்கலானேன். சிறுநீர் நெடுநேரம் போய்க் கொண்டேயிருந்தது. ஏன் இவ்வளவு சிறுநீர் கழிகின்றது? என்று யோசித்தேன். முதல்நாள் மாலை சிறுநீர் கழித்ததுதான். இருபத்தி நான்கு மணி நேரம் சரீரநினைவு இன்றி இருந்தேன் என்று இதனால் விளங்குகின்றது. கண்ணப்ப நாயனாருடைய வரலாறும் எனக்கு நினைவிற்கு வந்தது.

          கும்பாபிஷேகத்திற்கு வந்த ஜனங்கள் ரயில், பஸ், வண்டி முதலிய சாதனங்களில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒன்பது ஆண்டுகளாகத் திருப்பணி செய்த தொழிலாளிகளுக்கு என் சொந்தச் செலவில் அவர்கள் மனம் மகிழுமாறு பரிசுகள் வழங்கினேன். 25-04-1950 மாலையுடன் சமையற்காரர்களைக் கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டேன்.

          26-04-1950 ஓர் ஐநூறு பரதேசிகள் தங்களுக்குச் சோறு போட வேண்டுமென்று கூட்டம் போட்டு என்னை வைது கொண்டிருந்தார்கள். நான் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கால்படி அரிசி கொடுத்து அனுப்பினேன். எஞ்சியிருந்த சிறு திருப்பணிகளை மண்டலாபிஷேகத்திற்குள் முடிக்குமாறு ஐநூறு ரூபாய் காண்டிராக்ட் பேசி என் அன்பர் பண்ருட்டி முருகேச நாயுடுவிடம் ஒப்படைத்தேன்.

          அவர் அதன்படியே செய்து முடித்தார். இவ்வாறு வடலூர் கும்பாபிஷேக நிகழ்ச்சி இறைவன் திருவருளால் அடியேன் இட்ட திட்டப்படியே எல்லாம் இனிது நிறைவேறின. எண்ணில்லாத இடையூறுகள் வந்து அவைகளெல்லாம் பகலவன் முன்னால் பனி விலகுவது போல் விலகின.

          நேரிசை வெண்பா
          என்றும் மறவேன் இடர்பலவும் நீக்கியே
          குன்று தனைப்பிளந்த கோமானே! – நன்று
           வடலூர் திருப்பணியை மாண்புடனே செய்த
           நடலூர் அருள்திறத்தை நான்.

          சென்னைக்குச் சென்றபோது ஸ்தூபி நீராட்டு விழா மலர், ஞானசபைப் படம், திருநீற்றுப் பை இவைகளை எடுத்துக் கொண்டுபோய் இந்து அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் சின்னையா பிள்ளையிடம் கொடுத்து “வடலூர் திருப்பணிக் கும்பாபிஷேகத்திற்குத் தாங்கள் செய்த உதவிக்கு என்றும் நன்றி” என்று கூறினேன். அவர் நாணத்துடன் ‘நான் ஓர் உதவியும் செய்யவில்லையே! இடையூறுதானே செய்தேன்!” என்று கூறினார்.

          வடலூர் சத்திய ஞானசபைத் திருப்பணி வரவு செலவு அறிக்கைகளை நானூறு பக்கத்தில் அச்சிட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கினேன். ஒரு சமயம் சென்னை பூக்கடை மல்லீசுவரர் கோயிலில் நான் விரிவுரை செய்து கொண்டிருக்கும்பொழுது சின்னையாபிள்ளை அங்கு வந்தார். அவர் “வாரியார் வடலூர் திருப்பணியை மிகவும் நேர்மையாக நடத்தி முடித்தார். நானூறு பக்கத்தில் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். அந்தப் புத்தகத்தை அலுவலக மேஜையில் வைத்திருக்கின்றேன். அது பற்றி குற்றம் குறை இதுவரை யாரும் கூறவில்லை. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

(முற்றும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.