பாவங்களிலிருந்து விடைபெற்று புனிதமுற ஓதவேண்டிய திருவருட்பா
5-ஆம் திருமுறை - திருவடி சூட விழைதல்
021. திருவடி சூட விழைதல்
tiruvaṭi sūṭa viḻaital
- 1. தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 2. தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 3. மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 4. ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 5. விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 6. வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 7. தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 8. கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 9. கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே. - 10. பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.