Friday, August 20, 2021

அலையும் மனதினை மீட்டெடுக்க நாம் ஓதவேண்டிய திருவருட்பா

         அலையும் மனதினை மீட்டெடுக்க நாம் ஓதவேண்டிய திருவருட்பா

                    5-ஆம் திருமுறை - நாள் அவம்படாமை வேண்டல்


037. நாள் அவம்படாமை வேண்டல்
nāḷ avampaṭāmai vēṇṭal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
    கோதையர் பால்விரைந் தோடிச்
    சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
    திருவடிக் காக்கும்நாள் உளதோ
    என்தனி உயிரே என்னுடைப் பொருளே
    என்உளத் திணிதெழும் இன்பே
    மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
    வந்தமர்ந் தருள்செயும் மணியே.
  • 2. மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
    வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
    கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
    கழலடிக் காக்கும்நாள் உளதோ
    குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
    குறிகுணங் கடந்ததோர் நெறியே
    எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
    எந்தையே தணிகைஎம் இறையே.
  • 3. இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
    இலைநெடு வேற்கணார் அளகச்
    சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
    திருவடிக் காக்கும்நாள் உளதோ
    மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
    வள்ளலே உள்ளகப் பொருளே
    அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
    அணிதிருத் தணிகைவாழ் அரைசே.
  • 4. அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
    அலர்முலை அணங்கனார் அல்குல்
    புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
    பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
    பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
    பாலனே வேலுடை யவனே
    விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
    வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
  • 5. விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
    விம்முறும் இளமுலை மடவார்
    களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
    கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
    அளக்கருங் கருணை வாரியே ஞான
    அமுதமே ஆனந்தப் பெருக்கே
    கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
    கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
  • 6. கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
    கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
    திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
    இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
    விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
    மெய்அடி யவர்உள விருப்பே
    திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
    தெய்வமே அருட்செழுந் தேனே.
  • 7. தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
    திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
    கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
    கழல்வழி நடத்தும்நாள் உளதோ
    மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
    வண்புனத் தடைந்திட்ட மணியே
    வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
    மாமலை அமர்ந்தருள் மருந்தே.
  • 8. மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
    வாணுதல் மங்கையர் இடத்தில்
    பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
    பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
    அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
    ஆனந்தத் தேறலே அமுதே
    இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
    இனிதமர்ந் தருளிய இன்பே.
  • 9. இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
    ஏந்திழை யவர்புழுக் குழியில்
    துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
    துணையடிக் காக்கும்நாள் உளதோ
    அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
    அரிஅயன் பணிபெரி யவனே
    வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
    மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
  • 10. வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
    வலித்திடும் மங்கையர் தம்பால்
    தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
    தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
    சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
    தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
    ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
    உதவுசீர் அருட்பெருங் குன்றே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.