Friday, August 20, 2021

உலக மாயையிலிருந்து விடுபட ஓதவேண்டிய திருவருட்பா

                   உலக மாயையிலிருந்து விடுபட ஓதவேண்டிய திருவருட்பா

                                  5-ஆம் திருமுறை - நெஞ்சொடு புலத்தல்


019. நெஞ்சொடு புலத்தல்
neñsoṭu pulattal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
    பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
    மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
    ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
  • 2. வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
    காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
    ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
    மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
  • 3. வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
    சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
    வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
    தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
  • 4. காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
    போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
    பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
    நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
  • 5. தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
    மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
    நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
    தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
  • 6. தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்
    பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே
    உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்
    சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.
  • 7. நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
    கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
    முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே
    அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.
  • 8. இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
    குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
    நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
    வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
  • 9. நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
    மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
    நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
    உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
  • 10. கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
    தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்
    கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
    எள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.
  • 11. இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
    பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
    மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
    திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.