Thursday, March 21, 2024

நான் - I Am

                                 அருட்பெருஞ்ஜோதி                                      அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                  அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

நான்

                                ”நான்” என்பது ஆணவமா? அல்லது ஆன்மாவா?

தமிழக சித்தர்கள் உலகில்தான் “நான்” என்பது யார்? என்கின்ற கேள்வி முதன் முதலில் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வும் காணப்பட்டது. இக்கேள்விக்கு பதிலாக “ஆன்மா” என்கின்ற பதிலும் அழுத்தமாக வைக்கப்பட்டது. ”நான்” என்பது ”ஆன்மா” என்றால் இவ்வுடம்பு நான் இல்லையா? அப்படி என்றால் இவ்வுடம்பு யார்? தாய் தந்தையர் வைக்கும் வெறும் பெயர்தான் இவ்வுடம்பின் உண்மையா? வெறும் காற்றடைத்த பை தானா?

வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த

            மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்

அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்

            கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே

இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான

            இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்

ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை

            உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே.

இவ்வுடம்பை ”மலக்கூடு” என்கின்றார் வள்ளலார். அடுத்த நொடியில் இம்மலக்கூடு வாழுமோ? அல்லது வீழுமோ? என்று அறிஞர்கள் எல்லாம் வருந்திக்கொண்டிருப்பதைக் கேட்டும், நான் என்ன செய்கின்றேன் தெரியுமா? கட்டி அணைத்துக்கொள்ள பெண் என்கின்ற பேய் இல்லையே! வயிறு என்னும் தொப்பை மேட்டில் அடைத்திட வெண் சோறு இல்லையே! இம்மலக்கூட்டை அழகு படுத்திப் பார்க்க ஆடை இல்லையே! இரு கண்களும் கண்டு களிக்கக் கூடிய வியப்பான விடயம் இல்லையே! இம்மலக்கூடு தங்கி இளைப்பாற வசதியான இடம் இல்லையே! என்றே திரிந்து இளைக்கின்றேனே தவிர, இறைவா உன்னை ஒரு நொடியேனும் நினைக்க வில்லையே! எனக்கு உடையவன் நீ அல்லவா? அப்படியிருக்க உன்னை நினைக்காமல் ”நான்” எந்த வகையில் உருப்படப்போகின்றேனோ? தெரியவில்லை! என்று வள்ளற்பெருமான் வருத்தப்படுகின்றார்.  

நமக்கும் இவ்வுடம்பின் உண்மை என்ன? எனத்தெரிந்தும் வள்ளலார் சொல்வது போல, அருவெறுக்கத்தக்க மலத்தை சுமந்துக்கொண்டிருக்கின்ற இவ்வுடம்பிற்காகத்தான் நாமெல்லாம் இவ்வுலகில் சோற்றுக்காகவும், பெண் சுகத்திற்காகவும், இன்னும் பல வசதி வாய்ப்புகளுக்காகவும் அலைந்து திரிகின்றோமே அன்றி நமது ஆன்மாவிற்காக நாம் ஒரு போதும் இறைவனிடம் அன்பு செலுத்துவதில்லை.

நாம் செய்யும் வினைகளினால் நமக்கு ஏற்படும் இன்பத் துன்பங்களையும், புண்ணிய பாவங்களையும் அனுபவிப்பது இந்த மலக்கூடு என்னும் உடம்பா? அல்லது மலக்கூட்டினுள் இருக்கும் ஆன்மாவா? உங்களை ஒரு எறும்புக் கடிக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவ்வமயம் அந்த வலியை உணருவது உங்களது உடம்பா? அல்லது உங்களது ஆன்மாவா? உடம்புதானே வலிக்கின்றது! ஆன்மா வலிப்பதாகத் தெரியவில்லையே? ஆன்மாவை எறும்புக் கடிக்க முடியுமோ? எனவே உடம்புதான் வலியை உணருகின்றது என்றே நாம் பதில் சொல்வோம்.

ஆண், பெண் உடலுறவு கொள்ளுகையில் ஏற்படும் இன்பத்தை உணர்வது உங்கள் உடம்பா? அல்லது உங்கள் ஆன்மாவா? அட என்னப்பா இது கேள்வி? இருவருக்கும் உடம்பில்தானே இன்பம் தோன்றுகின்றது! ஆன்மாவில் இன்பம் தோன்றுவதாகத் தெறியவில்லையே! இரண்டு ஆன்மாக்கள் உடலுறவு கொள்ள முடியுமோ? என்றே நாம் சொல்வோம்.

உடம்பிலிருந்து ஆன்மா வெளியேறியப் பின்பு, அந்த உடம்பை (பிணத்தை) ஒரு எறும்புக் கடிக்கின்றது. இப்பொழுது அந்தப் பிணம் என்னும் உடம்பு வலியை உணருமோ? உணராது! ஏனெனில் அவ்வுடம்பில் “நான்” இல்லை. அப்படி என்றால் அன்று “நான்” என்னும் ஆன்மாதானே வலியை உணர்ந்தது! பாவங்களைச் செய்தது!

அதுபோல், அந்த ஆண் மற்றும் பெண் உடம்புகளிலிருந்து ஆன்மாக்கள் வெளியேறியப் பிறகு அப்பிணங்கள் உடலுறவு கொள்ள முடியுமோ? முடியாது. ஒருவாறு அப்பிணங்களை உடலுறவு கொள்ளுமாறு நாம் இயக்கினாலும், அவ்விரண்டு உடம்பும் இன்பங்களை அனுபவிக்க முடியுமா? முடியாது. ஏன்? அந்த இரு உடம்பிலும் ”நான்” இல்லை. அப்படி என்றால் அன்று “நான்” என்னும் ஆன்மாதானே இன்பத்தை உணர்ந்தன! புண்ணியங்களைச் செய்தன!

இப்பொழுது நாம், ”நான்” என்றால் “ஆன்மா” என்றும் “உடம்பு” அல்ல என்றும் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டோம். “நான்” என்பவன் ஓர் சிற்றணுவாக இருக்கின்றான். “நான்” என்பவன் கோடி சூரியப் பிரகாசமுடையவனாக இருக்கின்றான். ”நான்” என்பவன் கால் பங்கு பொன்மை முக்கால் பங்கு வெண்மை நிறத்துடன் இருக்கின்றான். இவ்வுடம்பில் இரு புருவ மத்தியில் “நான்” என்பவனின் இருப்பிடமாக உள்ளது. ஏழு மாயாசக்திகள் (திரைகள்) கொண்டு “நான்” என்பவனின் கோடி சூரியப் பிரகாசமும் மறைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது “நான்” (ஆன்மா) உடம்பின்றி தனித்து இருக்கின்றேன். எனது உடம்பிலிருந்து ”நான்” வெளியேறியதால் எனது உடம்பு மரணமுற்றது. நானும் (ஆன்மாவும்) அவ்வாறே மரணமுற்றேனா?  இந்நிலையில் எனக்கு (ஆன்மாவிற்கு) இன்பத் துன்பங்கள் உண்டாகுமா? புண்ணிய பாவங்கள் ஏற்படுமா? என்றால், ஆன்மாவாகிய ”நான்” ஆன்மாவாக தனித்திருக்கும் பொழுது இன்பத் துன்பங்கள், புண்ணிய பாவங்கள் என ஏதும் என்னை (ஆன்மாவை) புதியதாக அண்டாது. ஏனெனில் எனக்கு (ஆன்மாவிற்கு) உணர்ச்சிகள் கிடையாது. உலகியலில் கூறுவது போல் சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் ஆன்மாவிற்கு கிடையாது. அது இன்பத் துன்பங்களில் சிக்காது.  உடம்புடன் ஆன்மா இணைந்தப் பிறகே சொர்க்கம் நரகம் எல்லாம் உள்ளது என்று வள்ளற்பெருமான் உண்மை உரைப்பார்.

”நான்” ஏற்கனவே இருந்த உடம்பின் மூலம் செய்த இன்பத் துன்பங்கள், புண்ணிய பாவங்கள்தான் தற்போது தனித்திருக்கும் என்னிடம் இருக்கின்றன. அவைகளுக்கேற்ப “நான்” மறுபடியும் இன்னொரு உடம்பினை எடுக்க நேரிடும். ஓர் உடம்பின் மூலமாகத்தான் “நான்” புண்ணிய பாவங்களையும் இன்பத் துன்பங்களையும் அனுபவிக்க முடியும். அதுபோல் தனித்திருந்தாலும், ஒர் உடம்புடன் இணைந்திருந்தாலும் எனக்கு (ஆன்மாவிற்கு) மரணம் என்பது இல்லை. அவ்வாறே எனக்கு (ஆன்மாவிற்கு) பிறப்பு என்பதும் இல்லை. நான் (ஆன்மா) இறைவனைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

 ”நான்” என்னும் ஆன்மாவை எவ்வாறு காண்பது?

இவ்வுடம்பிற்குள் “நான்” இருந்தாலும் என்னைக் காண்பது எவ்வாறு? “நான்” கோடி சூர்யப் பிரகாசமுடையவனாக இருப்பினும் என்னைக் காண முடியவில்லை எனில் “நான்” எவ்வளவு சிற்றணுவாக இருக்க வேண்டும்! என்னையே “நான்” காண்பதுதான் ஆன்ம தரிசனம். காணப்படும் பொருளும் காண்பவரும் ”நான்”தான். “நான்” என்னும் ஆன்மாவினை “நான்” பார்க்க முடியாதவாறு ஏழு திரை மறைப்புகள் உள்ளன. அவைகளை நமது முயற்சியினாலும் இறை அருளாளும் நீக்கிக்கொள்ளும் பொழுது எனக்கு “நான்” தரிசனமாவேன். தரிசனத்துடன் ஆன்மாவிற்கு உள்ள ஒரு பங்கு மலமும் நீங்கி, ஆன்மாவானது முற்றும் மலமற்ற சிவமாகும். மறைப்பிற்கான அந்த ஏழு திரைகள்;

1.  1. கருப்புத் திரை: மாயா சத்தியானது கருமை நிறத்துடன் ஆன்ம பிரகாசத்தை மறைத்துக்கொண்டிருக்கின்றது. சத்தி என்றால் இயக்க ஆற்றலாகும். (திரை என்பதும் அதன் நிறம் என்பதும் உருவகத்திற்காக சொல்லப்பட்டுள்ளது. உண்மை அல்ல) இவ்வுலகம் முழுதும் மாயா இயக்க ஆற்றலாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. எறும்பு முதல் (மனிதன் உட்பட) யானை வரையுள்ள உயிரினங்கள் அனைத்தும் தினமும் தாங்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும், எவ்வுலக இயங்களும், பிரபஞ்ச இயக்கங்களுக்கும் இந்த மாயா சத்தியே காரணமாகும். மாயை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது அல்ல. இறையாற்றல் போல் மாயையும் ஆதி அந்தம் இல்லாதது. இறையாற்றலைவிட மாய ஆற்றலே உயிர்களை மிக விரைவில் ஆட்கொண்டுவிடும்.

மிகவும் ஆற்றலுடைய இந்த மாயையை, மனித உயிரினம் மட்டுமே தனது முயற்சியால் கண்டு கொண்டு அதனிலிருந்து விலகி வாழ முடியும். மண், பெண்/ஆண், பொன் ஆசைகளாகிய இவை மூன்றும் அதி முக்கிய மாயை ஆகும். இம்மூன்று மாயைகளை கடந்துவிட்டாலே மாயையை வென்றுவிடலாம். அவ்வாறு வென்றுவிட்டால் மாயை நடத்தும் அரசிலிருந்து விடுபட்டு இறைவன் நடத்தும் மாயை அற்ற உண்மையான அரசைக் காணமுடியும். இவ்வாறு இறை அரசைக் காண்பது என்பது ஆன்மாவின் உள்ள ஒரு பங்கு மலத்தைப் போக்குவதற்கான முதல் படியாகும்.

 

2. நீலத்திரை: கிரியா சத்தியானது நீல நிறத்துடன் ஆன்ம பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. ”நான்” என்பது ”ஆன்மா”வாகும் என்கின்ற உண்மையினை நமக்குத் தெரியவொட்டாது மறைத்துக் கொண்டிருப்பது இந்த கிரியா சத்தியாகும். நமது ஐம்புலன்களையும் உண்மைக்கு மாறாக எந்நேரமும் வீணே இயக்குவதுதான் கிரியா சத்தி. வேறு எந்த உயிரினமும் “நான்” ஒரு “ஆன்மா” என்று அறியாது. மனிதர்களுள் கருப்புத் திரையை நீக்கியவர்கள் மட்டுமே “நான்” ஒரு “ஆன்மா” என்பதை அனுபவ பூர்வமாக அறிவார்கள். (கருப்புத் திரையை நீக்காமலேயே ஏட்டுக் கல்வியில் அறிவது அனுபவம் ஆகாது). அவ்வான்மாவை பார்க்க செயலில் இறங்குவார்கள்.

அவ்வாறு செயலில் இறங்குகையில், நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஆன்மாக்களே என்று உணர்ந்து ஆன்ம நேயத்தை கடைபிடிக்கவும் செய்வார்கள். மாயா சத்தியை கடந்துவிட்டால் ஆன்மாவின் இயக்கமாக இவ்வுலகம் (இறைவன் அரசாட்சி செய்யும் இவ்வுலகம்) இருப்பதை அறிவார்கள். இவ்வாறு அறிவது ஆன்மாவிலுள்ள ஒரு பங்கு மலத்தைப் போக்குவதற்கான இரண்டாம் படியாகும்.

3. பச்சைத் திரை: பரா சத்தியானது பச்சைத் திரையாக நமது ஆன்ம பிரகாசத்தை மறைத்துக்கொண்டிருக்கின்றது. ஆன்மா இருக்குமிடம் புருவ மத்தி என்பதை நாம் அறிந்துக்கொண்டோம். ஆனால் இறைவன் இருக்குமிடம் எது? என்பதை நாம் அறிய வொட்டாது மறைத்துக்கொண்டிருப்பதே இந்த பரா சத்தியாகிய பச்சைத் திரையாகும். பரத்தை மறைப்பது பரா சத்தியாகும். பரா-பரம்: பரா என்பது மாயை, பரம் என்பது இறைவன். மாயையுடன் கடவுளை சம்பந்தப்படுத்துவது இந்த பரா சத்தியாகும்.

பச்சைத் திரை என்பது இரு கூறுகளாக இருக்கின்றது. பச்சைத் திரையில் அசுத்த மாயா திரையும், சுத்த மாயா திரையும் உள்ளன. கருமையில் பச்சை நிறமுடையது அசுத்த மாயா திரையாகும். இத்திரை இகலோக லட்சியமுடையதாக உள்ளது. பொன்மையில் பச்சை நிறமுடையது சுத்த மாயா திரையாகும். இத்திரை பரலோக லட்சியமுடையது.


பரா சத்தி என்பது, நம்மை மாயையை கடவுளாகப் பார்க்க வைக்கும். கருப்புத் திரை மற்றும் நீலத் திரைகளை நீக்கிக்கொண்டவர்களை இந்த பரா சத்தி எவ்வாறு இயக்கும் என்றால்? இறைவன் யார்? என அறிவதில் இவர்களை இரண்டு விதமாக இயக்கும். இகலோகத்தில் உள்ள மதங்களை பின்பற்றி அவைகள் கூறும் கடவுள்களான (ஒவ்வொரு மதத்திலும் ஒன்று அல்லது பல கடவுள்கள் உள்ளன) அருவக் கடவுள், உருவக் கடவுள், மரம், உலோகங்கள், மண், கல், வரைபடங்கள் போன்ற வஸ்துக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கடவுள் என்னும் கற்பனைகளை உண்மை என மதித்து உலக அரசியலுக்காக அல்லது கற்பனையானாலும் கற்சிலை ஆனாலும் அதுதான் கடவுள் என விளக்கமில்லாமல் அறியாமையில் கடைபிடிக்கும் கடவுள் கொள்கைகாரர்கள் பச்சைத் திரையில் அசுத்த மாயா திரையை விலக்கிக்கொள்ளாதவர்கள் ஆவர்.

 

பச்சைத் திரையில் அசுத்த மாயா திரையை நீக்கியவர்கள் உண்மையான இறைவன் விளங்கும் இடமான பரலோகத்தை அறிந்து வணங்குவார்கள். மேற்காணும் இரண்டரைப் படியினை கடந்தவர்கள் (கருமை, நீலம், பச்சையில் அசுத்த திரைகளை கடந்தவர்கள்) ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் இறைவன் விளங்குவதை அறிந்து ஆன்மாக்கள்தான் இறைவன் வசிக்கும் கோயில் என அறிவான். “உயிருள் யாம் எம்முள் உயிர்” என்ற கடவுள் உரைத்த வார்த்தையினை மதித்து உயிர் இரக்கத்துடன் ஒழுகுவான். இவ்வாறு பச்சைத்திரை விலக்கி உயிர் இரக்கத்துடன் நடப்பவன் தனது ஆன்மாவில் உள்ள ஒரு பங்கு மலத்தைப் போக்குவதற்கான மூன்றாம் படியினை கடந்தவனாவான்.


4. சிவப்புத்திரை: இச்சா சத்தியானது சிவப்புத்திரையாக நமது ஆன்ம பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. உலகியல் விருப்பமே இன்பத்தைக் கொடுக்கும் என்று நம்மை அறிவற்ற நிலையில் ஆழ்த்துவதே இந்த இச்சா ஆற்றலாகும். உலகியல் விருப்பமான இச்சா சத்தியை நீக்கினால் நமக்கு ஆன்ம அறிவு விளங்கும். சித்து உறும் (அறிவை நோக்கிச் செல்லுதல்) இடமாக நமது ஆன்மா விளங்குவதை உணரலாம். ஆன்ம அறிவை முற்றிலுமாக மறைப்பது இந்த இச்சா சத்தியாகும்.

அறிவு நான்கு வகைப்படும். அவை, இந்திரிய அறிவு, மன அறிவு, ஜீவ அறிவு, ஆன்ம அறிவு ஆகும். ஒரு பொருளை உள்ளது உள்ளபடி பார்ப்பது இந்திரிய அறிவு. அப்பொருளின் குணம் என்ன? குற்றம் என்ன என்று பார்ப்பது மன அறிவு. அப்பொருளின் உபயோகம் என்ன என்று பார்ப்பது ஜீவ அறிவு. அப்பொருளின் உண்மையினை அறிதல் ஆன்ம அறிவாகும். நாம் எப்போதும் ஆன்ம அறிவுக் கொண்டே ஒரு பொருளை பார்க்க வேண்டும். பார்க்கப்படும் பொருள் மாயையா அல்லது உண்மையா? என்பதைக் கொண்டு நாம் அப்பொருளுடன் உறவு கொள்ளலாமா? அல்லது வேண்டாமா? என முடிவெடுப்பதே ஆன்ம அறிவாகும். அதற்குத் தடையாக இருப்பது இச்சா சத்தியாகும். இதனை விலக்கினால் நமது ஆன்மாவில் ஒரு பங்கு மலத்தை போக்குவதற்கான நான்காம் படியினை கடந்தவனாகின்றான்.

5. பொன்மைத் திரை: ஞான சத்தியானது பொன்மைத் திரையாக நமது ஆன்மாவின் பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. “நான்” என்பவன் சிவப்புத் திரையை நீக்கியவுடன் அவனுக்கு ஆன்ம அறிவு விளங்கும் என சென்ற நான்காம் படியில் நாம் பார்த்தோம். ஒரு பொருளின் உண்மையை உணர்தலே ஆன்ம அறிவாகும். உண்மைப் பொருளை நோக்கி “நான்” செல்லும் பொழுது, சிறிய ஒளியினை காண்பித்து, ஞான சத்தியானது நம்மை உண்மையை நோக்கிச் செல்ல வொட்டாமல், சில அடிப்படை சித்துக்களை கொடுத்து நம்மை விளையாட வைத்து தடுத்துவிடும். இதனால் நாம் நமது இலக்கினை நோக்கி முன்னேற முடியாமல் ஏமாற நேரிடும்.

அவ்வாறு ஞான சத்தியால் நிகழும் சிறு ஒளிக்கும், சிறு சித்துக்கும் ஏமாறாமல் தொடர்ந்து உண்மை பொருள் இறைவன்தான் என்றும், இவ்வுலகத்தில் காண்பது எதுவும் பொருளல்ல என்ற தெளிவையும் நோக்கிச் செல்லும் “நான்”, எனது ஒரு பங்கு மலத்தை நீக்க ஐந்தாம் படியினை கடந்தவனாகின்றேன்.


6. வெண்மைத் திரை: ஆதி சத்தியானது வெண்மைத் திரையாக “நான்” என்னும் ஆன்மாவினை மறைத்துக் கொண்டிருக்கின்றது. ஐந்தாம் படியில் “நான்” பொருளுறு வெளியைக் கண்டு தரிசிக்கும் பொழுது, வெண்மைத் திரையானது அவ்வெளியில் உள்ள உண்மைப் பொருளைக் காண வொட்டாமல் தடுக்கும். அதாவது இப்பொருள் தான் அப்பொருள், அப்பொருள்தான் இப்பொருள் என்ற திரிபை நமக்குக் காட்டி மயக்கும்.

ஆறாவது படியில் “நான்” என்பவன், மெய்ப் பதி என்பது அருட்பெருஞ்ஜோதிதான் எனக் கண்டுவிடும். ஆனால், அருட்பெருஞ்ஜோதி என்பது ”நான்” எனது சமய மதங்களில் வணங்கும் ஆதி கடவுள்தான் எனவும், நான் தொன்று தொட்டு வணங்கி வரும் சமய மதக் கடவுள்கள்தான் அந்த அருட்பெருஞ்ஜோதி எனவும் மயக்கத்தில் வைத்துவிடும் இந்த ஆதி சத்தி. எனவே இந்த ஆதி சத்தியை வென்றுவிட்டு, அருட்பெருஞ்ஜோதி என்பது அருட்பெருஞ்ஜோதிதான் எனவும், அக்கடவுள் வேறு எந்த சமய மதக் கடவுளர்களும் அல்ல எனவும் தெளிவாய்த் தெளிந்து உண்மைப்பதி அருட்பெருஞ்ஜோதியே என அதன் தரிசனம்/உண்மை கண்டுவிட்டால், “நான்’ எனது ஒரு பங்கு மலத்தை நீக்க ஆறாவது படியினைக் கடந்தவனாவேன்.

 

7. கலப்புத் திரை: சிற் சத்தியானது கலப்புத் திரையாக “நான்” என்னும் ஆன்மாவினை மறைத்துக் கொண்டிருக்கின்றது. நமது எண்ணங்களே மனம் ஆகும். மனமே சிற் சத்தியாகும். “நான்” என்பதை இயக்குவது மனமே ஆகும். இவ்வுடம்பில் மனம் அசையத்துவங்கும் போது “நான்’ எழுவேன். மனம் அடங்கும்போது “நான்” உறங்குவேன். தற்போது ”நான்” என்னும் ஆன்மா ஆறாவது படியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே உள்ளது உள்ளபடி திரிபற்று தரிசனம் செய்துவிட்டு உச்ச நிலையில் இருக்கும் உத்தமனாகும். அப்படியென்றால் இந்நிலையில் எனது மனம் சாதாரணமாக கண்டதிற்கும் அலைகின்ற மனமல்ல. அதனால்தான் நாம் இதுவரை கடந்துவந்த கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய திரைகள் எல்லாம் ஒன்றாய்க் கலந்தால் அவ்வளவும் எவ்வளவு சக்திவாய்ந்த இயக்கத்தைப் பெறுமோ அந்த அளவிற்கு ஒரு ஆவேசமாக ஆறு சத்தியும் இணைந்து வந்து சிற் சத்தியாக உருவெடுத்து நம்மை (நான்) அந்த உண்மை பதியாம் அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றலை பெற்றுவிடாமல் நம் சித்தத்தைக் கொண்டே நம்மைத் தடுக்கும்.

உலகியலை விட்டு “நான்” விலகியிருப்பினும் பலதரப்பட்ட உலகியல், உடலியல் சார்ந்த தாங்கொண்ணா வேதனைகள் நம்மை வந்தடையும். இத்தடைகளை நாம் கடக்க வேண்டும். எப்படி கடப்பது? என்னதான் நாம் நமது மனதினை கட்டுப்படுத்தியிருந்தாலும், நமது மனம் “நான்” என்னும் சுதந்தரத்தோடுதான் எதையும் செய்துக்கொண்டிருக்கும். அச்சுதந்தரம் இருக்கும் வரை சிற் சத்தியானது இறையாற்றலை பெறமுடியாதவாறு தடை செய்துக்கொண்டே இருக்கும். எனவே, “நான்” எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் ஆகிய மூன்று சுதந்தரத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சர்வ சுதந்தரமாய் கொடுத்துவிட வேண்டும். உண்மையில் இவ்வாறு சுதந்தரத்தைக் கொடுத்துவிடுபவர்களுக்கு மூன்று சுதந்தர தோற்றமும் தோன்றாது. (இறை அருள் பெற்றால்தான் நமது சுதந்தரத்தை கொடுக்கவும், இறை சுதந்தரத்தை பெறவும் முடியும். வெறுமனே சுதந்தரத்தை கொடுத்துவிட்டேன் என எழுதுவதாலோ அல்லது எண்ணுவதாலோ இவ்வற்புதம் நடைபெறாது. மேற்காணும் ஆறு படிகளையும்/திரைகளையும் கடக்க வேண்டும்.) அவ்வமயம் இறைவனின் சுதந்தரம் “நான்” என்பதை இயக்கத் துவங்கும். சிற் சத்தியின் தடைகளை இவ்விதம் உடைத்தெறிய வேண்டும்.

 

இந்நிலையில் “நான்” கருதுகின்ற/எதிர்பார்க்கின்ற இறை அனுபவங்களைப் பெற்று அதாவது மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இந்த தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழலாம். இறையாற்றலான இறந்தாரை எழுப்புதல், ஐந்தொழில் செய்யும் வல்லபம், சன்மார்க்க சித்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெறும். ஏழு திரைகளும் நீங்கியவுடன் ஒரு பங்கு மலமும் முற்றிலும் நீங்கி மலமற்ற இறை நிலை அடைந்துவிடுகின்றது.

 

இவ்வாறு “நான்” என்பதை “நான்” பார்க்கும் பொழுது இறைவனையும் சேர்த்து இந்த “நான்” தரிசித்துவிடுகின்றது. இதற்காக நாம் மேற்காணும் ஏழு கடல்களையும்/திரைகளையும் கடக்க வேண்டியுள்ளது. ஆன்மாவில் படிந்துள்ள அந்த ஒரு பங்கு மலத்தை நீக்கவே நாம் ஏழுத் திரைகளையும் நீக்க வேண்டியிருக்கின்றது. அந்த ஒரு பங்கு மலம் என்பது யாது? எனில், அந்த மலம்தான் “ஆணவம்”, “நான்” என்கின்ற ஆணவமாகும்.

உடல் அற்று ஆன்மா தனித்திருக்கையில் அதற்கு மலம் ஒரு பங்காகிய ஆணவம் மட்டுமே. உடல் அற்ற ஆன்மாவனது புவியில் ஓர் உடலை எடுத்து பிறந்துவிட்டால், அந்த ஜீவனுக்கு மலம் மூன்று ஆகும். அதாவது, ஆணவத்துடன் கன்மம், மாயை ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்று மலம் உடையதாகவே ஆன்மா இருக்கும். ஜீவனுக்கு மூன்று பங்கு மலம் உண்டு. இம்மூன்று மலமும் ஏழு திரைகளை நீக்கும் போது விலகிவிடும். முதல் மூன்று திரைகளாகிய கருப்பு, நீலம், பச்சை நீங்கும் போது மாயை என்னும் மலம் நமது ஆன்மாவிலிருந்து நீங்கும். கருப்பு, நீலம், பச்சை ஆகியவைகளை மனித முயற்சியால் நீக்கப்பட வேண்டும். ஒருவனுக்கு மாயை நீங்கினால் சுத்த தேகம் கிடைக்கும்.

அடுத்து, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய திரைகள் நீங்கும் பொழுது கன்மம் (செய்த வினைகள், செய்யும் வினகள், செய்ய இருக்கும் வினைகள்) என்னும் இரண்டாவது மலம் நமது ஆன்மாவை விட்டு அகலும். ஒருவனுக்கு மாயையும், கன்மமும் நீங்கினால் பிரணவ தேகம் கிடைக்கும். சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய மூன்று திரைகளும் விலக மனிதத் தரத்தால் முடியாது. இறைவனின் அருளாள் மட்டுமே இது சாத்தியம்.  எனவே இறை அருள் பெற ஜீவ காருண்யம் முக்கியம்.

அடுத்து, கலப்புத்திரை நீங்கும் பொழுது ஆணவ மலம் நமது ஆன்மாவை விட்டு அகன்று, முற்றும் மலமில்லாது இறை நிலை அடையும். ஆன்மாவின் இயற்கை குணமான தயவு வந்துவிடும். ஒருவனுக்கு மும்மலமும் நீங்கினால் அவனுக்கு ஞான தேகம் கிடைக்கும். கலப்புத் திரை நீங்கவும் மனிதத் தரத்தால் முடியாது. இறைவனின் அருள் வேண்டும்.

இவ்வாறு “நான்” முற்றிலும் மலம் நீங்கிய ஆன்மாவாக இருப்பின், எனக்குள் எவ்வளவு கடவுள் மகிழ்ச்சியும், கடவுள் ஆனந்தமும், கடவுள் அறிவும், கடவுள் ஆற்றலும், கடவுள் செயலும், கடவுள் பார்வையும் பொருந்தி இருக்கும் என்பதை நினைத்தாலே கடவுளின் அற்புதம் நமது மனதை நெகிழ்வுற செய்கின்றதல்லவா! இதோ, மனித உடம்பில் ஆன்மா எவ்வாறு  இருக்கும் என்று வள்ளலார் கூறியதை கற்பனையாகப் பாருங்களேன்,….


இந்த “நான்” என்ற ஒன்றானது, கருப்புத் திரையினைக் கூட நீக்கமுடியாமல், நீக்க வேண்டும் என்ற அறிவும் இல்லாமல், அறிவு இருந்தால் முயற்சி இல்லாமல், இந்த உலகியல் மாயையில் சிக்கித் தவிக்கும் மனித ஜீவன்களே அதிகம். உலகியலில் கிடைக்கும் இன்பத் துன்பங்களுக்கு காரணம் மும்மலமும்தான் காரணம். உலகியல் வாழ்க்கையில் யார் ஒருவருக்கும் இன்பங்களைவிட துன்பங்களே மிகுதியாக வந்து வாட்டும். ஒருவர் எவ்வளவுதான் புண்ணிய கர்மாவினை செய்யினும் துன்பங்களே வந்து அவரை வாட்டும். காரணம் அவர் மாயையில் இருந்துக்கொண்டு புண்ணியம் செய்வதே.

நான் இவ்வுலகில் அனைத்தையும் துறந்துவிட்டேன் என்று கூறும் துறவிகளுக்கும் துன்பங்களே சூழும். ஏனெனில் துறவு நிலையும் மாயையே. சகஜ நிலையில் துறவு (குடும்ப சன்யாசம்) மேற்கொள்வதே மாயையை வெல்லும் வழிமுறையாகும். இவ்வாறு எவரும் இவ்வுலகில் துயரம் அடையும் பொழுது, இவை அனைத்திற்கும் “நான்” என்னும் மனமே காரணமாக உள்ளதை ஒருவாறு இல்லறத்தில் இருப்பவர்களும், துறவறத்தில் இருப்பவர்களும் அறிந்துக்கொண்டு, ”நான்” என்பதை அழிக்க நினைத்து, அதற்கு மாறாக அறியாமையில் தங்களது மனத்தை அழிக்க முற்படுகின்றார்கள். மனம் அடங்கும் பொழுது கூடவே “நான்” என்பதும் அடங்குமல்லவா? அந்நிலையில் தற்காலிகமாக தங்களது துயரங்களிலிருந்து ஒரு விடுதலை கிடைப்பதை அறிந்து ஆனந்தமடைகின்றனர்.

இயற்கையிலேயே இறைவனால் சற்று இளைப்பாற கொடுக்கப்பட்டதுதான் தூக்கம். பாவம் மனிதர்கள், இவர்கள் படும் அவத்தைகளை சற்று நேரம் மறந்து இருக்கட்டுமே! என்று தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து “நான்” என்பதை மறக்கச் செய்கின்றான். இந்த தூக்கம் மட்டும் இல்லை என்றால் மனிதர்கள் மட்டுமில்லை அனைத்து ஜீவன்களுக்கும் மன நிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக்கொள்ளும். எனவே நாம் தூக்கத்தை பயன்படுத்திக்கொண்டு சற்று புத்துணர்ச்சிக் கொள்ளலாம். தவறில்லை.

ஆனால், சில ஆன்மீகவாதிகள் தியானம், வாசி பயிற்சி, சமாதி அடைதல் போன்ற குறுக்கு வழியில் சென்று தங்களது மனதை அடக்குகின்றனர். இதனால் மனம் அடங்கிக் கிடக்கும்வரை “நான்” என்கின்ற தன் முனைப்பும் இல்லாமையால் அவர்களுக்கு இவ்வுலக இன்பத் துன்பங்கள் அனுபவிப்பதில்லை. ஆனால், தியானம் முடிந்தவுடன், வாசி பயிற்சி முடிந்தவுடன், சமாதி நிலை முடிந்தவுடன் மீண்டும் அவர்களை இவ்வுலக இன்பத் துன்பங்கள் வந்து பற்றி விடுகின்றன. எனவே “நான்” என்பதை விடவேண்டுமாகில் மாயையை விட வேண்டும். கருப்புத் திரை விலக வேண்டும். மனதை இயங்கவிடாமல் செய்யக் கூடாது.

இதுபோலவே, சில துறவிளும், சில உலகியல் மக்களும் “நான்” என்பதை மறக்க நினைத்து போதை பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள். அவர்கள் உட்கொண்ட போதை மயக்கம் தீரும் வரை அவர்கள் மனமற்று கிடக்கின்றார்கள். இவ்வாறு கிடப்பது அவர்களுக்கு ஒரு வித ஆனந்தத்தை கொடுப்பதால் இவ்வுலகில் போதை பொருட்களும் மலிந்துவிட்டன.   

மேலும், சிலர் “நான்” என்பதே துன்பத்திற்கு காரணமாக இருக்கின்றதை அறிந்து ஒரு கட்டத்தில் நிரந்தரமாக “நான்” என்பதை நீக்க வேண்டி, தற்கொலைக்கு ஆளாகின்றார்கள். தற்கொலை செய்துக்கொண்டால் இவ்வுலகத் துயரங்கள் நீங்கிவிடும் என்பது அவர்களது கருத்தாகும். தற்கொலையும் இதற்கு தீர்வாகாது. மீண்டும் மாயா உலகில் பிறப்பெடுத்து அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஒரு சிலர், நான், எனது என்கின்ற பற்றினை விட்டுவிடுங்கள் என்றும், அகங்காரம் (ஆணவம்) கூடாது  என்றும், எல்லாம் அவன் செயல் என்று கருதுங்கள் என்றும்,  அப்போது உங்களை துயரம் அண்டாது என்றும் தவறாக போதனை செய்கின்றார்கள். இப்படிப்பட்ட போதனையால் ஆன்மீகத்தில் உள்ளவர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் “நான்” “எனது” என்கின்ற பற்றினை விட்டுவிட்டதாகவும், எல்லாம் அவன் செயல், நான் எதுவும் செய்யவில்லை என்றும் அவர்கள் தங்களது மனதளவில் பாவனை செய்துக்கொண்டு ஒவ்வொரு உலகியல் காரியத்தையும் செய்கின்றனர். அவ்வாறு செய்யும் வினைகளாலும் இன்பத் துன்பங்களை அடைகின்றனர். பெரும்பாலும் துயரங்களே அடைகின்றனர். அந்நிலையில் அவர் ஏற்ற போதனையும் தோல்வி அடைவதை நினைத்து மனம் கலங்கி என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் பலர் கடவுள் மறுப்பாளர்களாகவோ அல்லது மதம் மாறுபவர்களாகவோ ஆகிவிடுகின்றனர்.

ஒரு சில துறவிகள், “நான்” என்பதை மறக்க தங்களது தாய் தந்தையர் வைத்தப் பெயரினை நீக்கி நித்யானந்தம், சத்யானந்தம், பேரானந்தம் என்று மனம் போன போக்கில் தங்களுக்குத் தாங்களே அல்லது குரு என்று சொல்லப்படுபவர் மூலமாகவோ தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டு உலகில் திரிவார்கள். இதுவும் முட்டாள்தனம்தான்.

“நான்” என்னும் ஆணவத்தை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. ஆனால் ஏழு திரைகளையும் நீக்கினால் முடியும். அப்படியே ஆணவத்தை நீக்கினாலும் மும்மலமற்ற “நான்” என்றும் இருந்துக்கொண்டேதான் இருக்கும். இவ்வுலகில் நேற்று இருந்தவர்களும், இன்று இருப்பவர்களும், நாளை இருக்கப்போகின்றவர்களும் அவரவர்களுக்கு ஒரு பெயர் இருந்தேத் தீரும். யாரும் பெயர் அற்று வாழவே முடியாது. நீங்கள் இறந்தாலும் உங்களது பெயர் வடிவில் ஒரு அடையாளமாக “நான்” என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஏழு திரைகள் நீக்கி மும்மலத்தையும் நீக்கியவர்களுக்கும் “நான்” என்ற இயல்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும். மும்மலமற்ற இறைவனுக்கும் “அருட்பெருஞ்ஜோதி” என்கின்ற பெயர் வைத்தாகிவிட்டது. பெயரற்ற கடவுள் இருக்க முடியாது. இப்போது “அருட்பெருஞ்ஜோதி” ஆகிய “நான்” என்பது நிலைத்துவிடும். இவ்வாறு இறைவனுக்கும் “நான்” என்னும் இயல்பு உள்ளது. மும்மலம் நீக்கிய வள்ளலாருக்கும் “நான்” என்பது இராமலிங்கமாக உள்ளது.

வள்ளற்பெருமான் தனது அடியவர்களுக்கு கடிதம் எழுதி முடிக்கும் பொழுதும், தான் எழுதிய திருவருட்பா நூலை வெளியிடும் பொழுதும் தனது பெயரினை மறக்காமல் பதிப்பித்திருப்பார். கையொப்பம் இட்டிருப்பார். அப்பெயர்தான் “நான்” என்பதை மற்றவர்களுக்கும் இறைவனுக்கும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இது சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியக் காரியம்தான். ஆனால், சாதாரண மனிதர்கள் தங்கள் பெயரினை பதிப்பதும், கையொப்பமிடுவதும் ஆணவத்தில் (மும்மலத்தில்) இருந்துக்கொண்டு செய்வார்கள். அருளாளர்கள் மும்மலமற்று அதனைக் கடவுள் செயலாகச் செய்வார்கள். கடவுள் செயல் என்பது வெறும் பாவனையில் செய்வதில்லை. ஏழு திரைகளையும் நீக்கியவர்களுக்கே தாங்கள் செய்வது கடவுள் செயலாக இருக்கும். தன்னைக் காட்டாது ஒழிக்க வேண்டும் என்பது இதுதான்.

எனவே, இனிமேல் உபதேசம் செய்பவர்கள் வெறுமனே நான் என்பதையும் எனது என்பதனையும் நீக்குங்கள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லாமல், அதனை எவ்வாறு நீக்குவது என்கின்ற ஏழு திரை நீக்கும் வழிமுறைகளைச் சொல்லி ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுவல்லாமல் நான் ஆணவமற்று செய்கின்றேன், பணிவாகச் செய்கின்றேன், தயவாகச் செய்கின்றேன் என்று சொல் அளவில் சொல்லிச் செய்யும் வினைகள் அனைத்தும் துயரில்தான் சென்று முடியும். முன் வினை, செய் வினை, வரும் வினை, கர்மா, விதி என்கின்ற இவை எல்லாம் பெரும் துக்கத்தை கொடுக்கக் கூடியன. சாக்கடையில் பன்றியும், எருமையும் உழல்வது அவைகளுக்கு ஆனந்தமே. அது போல் இவ்வுலகியல் வாழ்க்கை என்பது பலருக்கு ஆனந்தமாகவே இருக்கின்றது. உலகியல் ஒரு சாக்கடை என்று உணர்ந்து அதற்கு மாறாக செயல்படுவதுதான் மாயை, கன்மம், ஆணவ நீக்கம் ஆகும்.

எனவே மனிதத் துன்பத்திற்கு காரணம் “நான்” மற்றும் “எனது” என்கின்ற பற்று காரணமல்ல. ஆணவம், கன்மம், மாயையை நீக்கிக் கொண்டவர்களுக்கு “நான்” மற்றும் “எனது” என்ற பற்று பேரானந்ததையே கொடுக்கும். உலகியல் மக்களுக்கு துயரம் வரக் காரணம் ஆணவம், கன்மம், மாயையே ஆகும். மும்மலம் நீங்கிய “நான்” அல்ல. நன்றி.  


என்சாமி "எனது"துரை என்உயிர் நாயகனார்
         இன்றுவந்து “நான்”இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே "எனது"
          பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே “நான்”தான்
          சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின்தனக்கே
          வெளியாகும் இரண்டரை நாழிகைகடந்த போதே.

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தி.ம.இராமலிங்கம்.
கடலூர்.
9445545475
vallalarmail@gmail.com
for PDF https://drive.google.com/file/d/1d2vOmyE7UyDZFx2ONFh3Bnhq_jdKDN0R/view?usp=drive_link
     


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.