Monday, March 25, 2024

சித்த வித்தையும் நானும்

அருட்பெருஞ்ஜோதி                       அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                 அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

சித்த வித்தையும் நானும்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

கடந்த ஒரு வருடமாக சித்த வித்தைபற்றின காணொளிகளை யூட்யூப் வழியாக பார்த்து இரசித்து வருகின்றேன். சென்னையைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ தாவா ஐயாவின் காணொளி வாரந்தோறும் ஞாயிறு அல்லது திங்கள் அன்று பார்த்துவிடுவேன். அதன் ஈர்ப்பில் சித்த வித்தையினைப் பற்றி அறிந்துக்கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகரித்தது. அதனைப் பற்றி ஆராயும் பொழுது அப்பயிற்சியானது மூச்சுப் பயிற்சி அதாவது வாசி யோகம் சம்பந்தப்பட்டது என்றும் அதன் முடிவு ஜீவ சமாதி அடைதல் என்பதனையும் அறிந்தேன். இந்த அமைப்பின் தலைமை கேரளா வடகாராவில் அமைந்துள்ளதாகவும், இதன் தலைவர் சிவானந்த பரமஹம்சர் என்பதனையும் அறிந்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றைத் தேடி படித்தேன். அதனை இந்த வலைப்பூவிலும் வெளியிட்டேன்.

கடந்த டிசம்பர்-2023 மாதம் முதல் இவ்வமைப்பைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். அவ்வமயம் முகநூலில் சித்த வித்தையாளர் ஒருவரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் சித்த வித்தை பழகுவதற்கான நூல்களை (மொத்தம் ஏழு நூல்கள்) சென்னையிலிருந்து அஞ்சல் மூலமாக வாங்கிப் படித்தேன். அந்த ஏழு நூல்களையும் படித்து முடித்தப் பின்பு மரணமிலாப் பெருவாழ்விற்கும் சித்த வித்தைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிந்தேன். ஆனால் இவ்வமைப்பைத் தோற்றுவித்த சிவானந்த பரமஹம்சர், சித்த வித்தையானது மரணத்தைத் தடுக்கும் எனக் கூறி சித்த வித்தையினை மக்களிடையே பரப்பி வரவே, அதனை ஏற்று இன்று ஆயிரங்கணக்கான சித்த வித்யார்த்திகள் பயிற்சி செய்துக்கொண்டும், ஆயிரங்கணக்காண சித்த வித்யார்த்திகள் ஜீவ சமாதி ஆகியும் உள்ளதை அறிந்தேன். மேலும் வாசி யோகம் என்பது தமிழ்ச் சித்தர்கள் மரபில் வழிவழியாக வந்துக்கொண்டிருக்கின்ற ஒன்றுதான் என்பதை அறிந்தேன். வள்ளற்பெருமானும் மூச்சுப் பயிற்சி மற்றும் சமாதி பழக்கத்தினைப் பற்றி கூறியுள்ளதை நான் ஏற்கனவே அறிவேன்.

உடனே ”மரணமிலாப் பெருவாழ்வில் சுத்த சன்மார்க்கமும் சித்த வித்தையும்” என்ற தலைப்பில் ஒரு ஒப்பீடு செய்து அதனை இந்த வலைப்பூவில் வெளியிட்டேன். அதனை யூட்யூப் செய்தும் காணொலி வாயிலாகவும் வெளியிட்டு அதனை எனது முகநூலிலும் விளம்பரப்படுத்தினேன். என்னதான் நான் சித்த வித்தைக்கு எதிராக தற்போது இருப்பினும், மூச்சுக் கலையை கற்க வேண்டும் என்ற ஆர்வம் என்னில் அதிகரித்துக்கொண்டே இருந்தது. சிவானந்த பரமஹம்சரின் படத்தை வைத்து வணங்க ஆரம்பித்துவிட்டேன். மேலும் சரக் கலையைப் பற்றியும் நான் ஏற்கனவே ஒரு பதிவை இதே வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன். 

சித்த வித்தைப் பற்றி (நெய்வேலியைச் சார்ந்த சுத்த சன்மார்க்கம் சார்ந்த திருமதி சாவித்ரி அம்மாள் அவர்களுடனும் அவரது மகன் திரு.சபரி அவர்களுடனும் அவ்வப்போது சத்விசாரம் (கைப்பேசி மூலம்) செய்வது வழக்கம். இவர்கள் நமது யூட்யுபில் சில பதிவுகளையும் செய்துள்ளார்கள்.) திருமதி சாவித்ரி அம்மாள் அவர்களுடன் நான் விவாதிப்பது உண்டு. அவர்கள் ஏற்கனவே சித்த வித்தையார்த்திகள் வாட்ஸாப் குழுவில் இருக்கின்றார்கள் என்று அப்போது, அவர்கள் சொல்லித் தெரிய வந்தது. (வடகரை வள்ளல் குழு). மேலும் அக்குழுவில் என்னையும் இணைத்து விட்டார்கள். நான் சித்த வித்தை பயில ஆசைக் கொண்டதால், அவர்களுக்கும் சித்த வித்தை மீது பற்று வரினும், ஒரு கட்டத்தில் சுத்த சன்மார்க்கத்திலிருந்துக்கொண்டு ஏன் சித்த வித்தைக்கு ஆசைப் படுகின்றீர்கள்? ஏதேனும் சித்து வேலை செய்ய ஆசையா? பெருமான் அதற்கு இசைவு அளிக்கமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, உங்களுக்கு இருக்கும் அனுபவத்திற்கு இவ்வித்தையினால் சீக்கிரம் சமாதி ஆகிவிடப்போகின்றீர்கள்? என்றெல்லாம் பயந்தார்கள். அவர்களால் முடிந்தவரை என்னை தடுக்கப் பார்த்தார்கள். பிறகு முடியாத பொழுது, சித்த வித்தை கற்றுக்கொண்டு அதன் அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள் என்றுச் சொல்லிவிட்டார்கள். 

சித்த வித்தை கற்றுக்கொள்ள அந்த வாட்சாப் குழுவில் உள்ள வேலூரில் உள்ள ஒரு பிரம்மஸ்ரீ அவர்களிடமும் திருமதி.சாவித்ரி அம்மா அவர்களே எனது சார்பில் பேசினார்கள். வித்தை அளிக்க ஒரு நாள் போதும் என்று அவர் கூறியதாக சொன்னார்கள். எனினும் நான் கடலூரில் யாரேனும் பிரம்மஸ்ரீ உள்ளார்களா? என தேடும் பொழுது, மறுநாளே தமிழகம் முழுதும் உள்ள சித்த வித்தை அப்பியாச நிலையங்களின் முகவரியை யாரோ பதிவிட்டிருந்தார்கள். அப்பதிவு எனது கண்ணிற்கு கிட்டியதை நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். அதில் கடலூர் வில்லுபாளையம் கிராமத்தில் (தவளக்குப்பம் அருகில்) அப்பியாச நிலையம் இருப்பதை அறிந்தேன். அதன் நிறுவுனர் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா என்பதையும் அறிந்து அவருடன் கைப்பேசி மூலம் அழைத்து (15-03-2024) எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். உடனே அவர் இந்த வாரம் (17-03-2024-ஞாயிறு) விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் (புதுச்சேரி கருவடிக்குப்பம் அருகில்) அப்பியாச நிலையத்தில் நான்காம் ஆண்டு விழா உள்ளது, அதற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் புதுவை அப்பியாச நிலைய வாட்சாப் குழுவிலும் என்னை இணைத்துவிட்டார்.




17-ஆம் தேதி சின்ன கோட்டக்குப்பம் சென்று அப்பியாச நிலைய ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டேன். காலை 10.30 முதல் மாலை 03.30 வரை அங்கிருந்தேன். தமிழகத்திலிருந்து சில சித்த வித்யார்த்திகள் அங்கு வந்திருந்து சொற்பொழுவு ஆற்றினார்கள். பெரும்பாலும் வள்ளற்பெருமானின் கருத்தினைச் சொல்லி சித்த வித்தையினையும் விளக்கினார்கள். அதில் ஒருவர் பேசுகையில், நான் வடலூர் சென்றிருந்த பொழுது, ஞான சபை அருகில் சென்று அப்பியாசம் செய்த பொழுது வள்ளலார் ஆகாயத்தில் தோன்றி என்னிடம் பேசினார், நேற்று இங்கே (சின்ன கோட்டக்குப்பம் நிலையம்) சிவானந்த பரமஹம்சர் வந்ததையும் நான் பார்த்தேன் என்றெல்லாம் பேசினார். இதனால் எனக்கு இன்னும் சித்த வித்தையின் மீது காதல் பெருகிற்று. மேலும் எனக்கு உபதேசம் செய்ய இருக்கும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவையும் அன்றுதான் அந்நிலையத்தில் முதன் முதலில் நேரில் சந்தித்து பேசினேன். அங்கே கோட்டக்குப்பத்தைச் சார்ந்த எனது உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவரிடமும் பேசிவிட்டு மதியம் 02.00 மணியளவில் சொற்பொழிவு முடிந்து அன்ன விரயம் செய்தார்கள். உணவு உண்டுவிட்டு ஒரு மணி நேரம் காத்திருந்து மீண்டும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவிடம் பேசினேன். அவர் என்னிடம், புலால் உண்ணக் கூடாது, சைவமாக இருக்க வேண்டும், போதை வஸ்துக்கள் உபயோகிக்கக் கூடாது என்கின்ற கட்டுப்பாட்டினை சொன்னார். நானும் அதெல்லாம் நம்மிடம் இல்லை ஐயா என்று சொன்னேன். அங்கே சித்த வித்தை நூலில் உள்ள பரமஹம்சரின் உபதேசங்கள் வாரந்தோறும் படித்து விளக்கம் சொல்வார்கள் என்றார். உடனே நான், வித்தை தொடர்பான அந்த ஏழு நூல்களையும் படித்துவிட்டேன் ஐயா என்றேன். உடனே அவர், சற்று கோபமாக கதை படிப்பது போன்றெல்லாம் படிக்கக் கூடாது என்றார். (நான் இவ்விழாவிற்கு சந்தனக் கலர் ஃபேண்ட் மற்றும் மஞ்சள் கலர் டிசர்ட் அணிந்துச் சென்றேன். நீட்டாக சவரம் செய்து இருந்தேன். இதனைப் பார்த்து இவ்விழாவிற்கு வெள்ளாடையில் அள்ளவா வரவேண்டும். இவன் என்னத்த படித்தான் என்று நினைத்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன்.) பிறகு வருகின்ற ஞாயிறு அன்று (24-03-2024) 09.30 மணியளவில் வில்லுப்பாளையம் வந்துவிடவும் என்று கூறினார். இவ்விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் ஒரு சிறிய பையில் லட்டு பிரசாதம் கொடுத்தார்கள், அதனைப் பெற்றுக்கொண்டு விடைபெற்று கிளம்பி கடலூர் வந்துச் சேர்ந்தேன். 


சித்த வித்தை கற்றுக்கொண்டு சமாதி நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்ற விழிப்புணர்வு என்னிடம் இருக்கின்றது.  (அதைவிட ஆன்மாவை வெளியேற்றி இறந்துவிடுவதுதான் நல்லது) எனினும் இவ்வித்தையால் சுத்த சன்மார்க்கத்திற்கு ஏதேனும் செய்ய முடியுமா? என்ற ஆராய்ச்சிக்காக மட்டுமே நான் சித்த வித்தை கற்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அடுத்து சித்துக்கள் ஏதேனும் கைகூடினால், அதைக்கொண்டு அக இனத்தார்களின் சிறிய சிறிய நோய்களை நீக்க வேண்டும் என்ற எண்ணமும் எண்ணில் இருக்கின்றது. மேலும் சித்த வித்தைக்காண எனது தேடலின் பொழுது, எனக்குத் தேவையான உதவிகள் உடனுக்குடன் நான் இணையத்தில் தேடாமலேயே எனது கண்ணில் வந்து உற்றதை நினைக்கையில் வள்ளற்பெருமான் எனக்கு தடை ஏதும் கூறாமல் வழி காட்டுவதாகவே நினைத்தேன். 

மேற்காணும் சிந்தனையுடன் வருகின்ற ஞாயிறு சித்த வித்தை தீட்சை பெற போகிறதை நினைத்து மனதுக்குள் மகிழ்ச்சி. மேலும் எனக்கு தீட்சை அளிப்பவர் சுமார் 70 வயது மதிக்கத் தக்க பிரம்மஸ்ரீ. அவரது பெயரும், சித்த வித்தை தோற்றுவித்தவர் பெயரும் ஒன்றுதான் (சிவானந்தம்) என்று நினைக்கையில் இன்னும் மகிழ்ச்சி. மிகச் சரியான இடத்தில் வள்ளற்பெருமான் நம்மை இட்டுச் சென்றுள்ளார் என்ற நினைப்பு எண்ணில் எழுந்தது.

ஞாயிறு (24-03-2024) வந்தது. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எனது தாயாரும் சகோதரியும் மகிழுந்தில் (காரில்) ஓட்டுனரை வைத்துக்கொண்டு திருவாரூர் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். நான் சித்த வித்தைக்காக செல்வதால் ஓட்டுனரைக் கொண்டு பயணம் மேற்கொண்டார்கள். இல்லையேல் இன்று நான் ஓட்டுனர் வேலையை பார்க்க வேண்டியிருந்திருக்கும். மூச்சுப் பயிற்சி பிடிக்க வில்லையெனில் வந்துவிடு, வீட்டில் சிவனேன் என்று இரு. உனக்கு எதுக்கு இதெல்லாம், என்று எனது அம்மா சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

நானும், காலையில் குளித்துவிட்டு, (இவ்வித்தை பயில வேண்டும் என்பதற்காகவே சென்ற வாரத்திலிருந்து நான் சவரம் செய்யாமல் சிறிது தாடியும் வளர்த்திருந்தேன்) வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, வெள்ளைச் சட்டை அணிந்துக்கொண்டு எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு 08.50 மணியளவில் கிளம்பினேன். இதுவரை வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து எங்குமே சென்றதில்லை. இதுதான் முதல் முறை. 

காலை சிற்றுண்டிக்காக முதலில் ஒரு உணவத்திற்கு சென்று நின்றேன். ஆனால் அங்கு ஞாயிறு விடுமுறை என்றதும் திரும்பி வந்து, வேறு ஒரு உணவகத்திற்குச் சென்றேன், அங்கு ஒரே கூட்டம், உட்கார இடமில்லை, நின்றுக்கொண்டு காத்திருப்பவர்களும் அதிகமாக இருக்கவே, அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு உணவகத்திற்குச் சென்றேன். அங்கு இடம் கிடைத்தது. மூன்று இட்லி வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். வழியில் நான் தலையில் அணிந்திருந்த தொப்பி (40 கி.மீ. வேகத்தில்தா சென்றேன்) காற்றில் பிய்த்துக்கொண்டு வேகமாக பின்னோக்கிச் சென்றுவிட்டது. அட, என்னடா இது... சோதனை என்று நிற்காமல் அதே வேகத்தில் சென்று காட்டுப்பாளையம் சென்று அங்கு வில்லுபாளையம் வழி கேட்டுச் சென்றேன். வில்லுபாளையம் சென்றவுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் அப்பியாச நிலையம் எங்கே இருக்கின்றது என வினவினேன். அவரும் ஒரு புளிய மரம் அருகில் உள்ள ஒற்றையடிப் பாதையைக் காண்பித்து இப்பாதையில் சென்றால் வந்துவிடும் என்று வழிகாட்டினார். 

நானும் அந்தக் குறுக்கு வழியில் பிரதானச் சாலையை விட்டு இறங்கும் பொழுது ஒரு சிறிய குப்பை மேடு இருந்தது. அதனை ஒட்டி ஒற்றையடிப் பாதை துவங்குகின்றது. அவ்வாறு அந்த குப்பை மேட்டைஒட்டி எனது இரு சக்கர வாகனத்தை செலுத்தினேன். உடனே “டப்” என்று ஒரு சத்தம் கேட்டது, என்ன வென்று பார்க்கையில் எனது வேட்டி முழுதும் (முட்டிக் கால் அளவிற்கு) செக்கச் செவேல் என்று இரத்தக் கரை படிந்தது போன்று தக்காளிச் சட்டினியானது விசிறி அடிக்கப்பட்டிருந்தது. ஒரே சட்டினி நாற்றம் வேறு. அட, என்னடா இது... சோதனி என்று வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரேனும் பார்த்துவிட்டார்களா? என்று.... (அசிங்கம் அல்லவா...! ஹி... ஹி...) ஒரு கிழவி அந்த புளிய மரத்தடிக்கு பக்கத்திலிருந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து தலை குனிந்தேன். 

அந்தக் குப்பை மேட்டில் யாரோ தக்காளி சட்டினி பாக்கெட்டை பார்சல் வாங்கிச் செல்லுகையில் அல்லது வேண்டாம் என்றோ அங்கு போட்டு விட்டு சென்றுவிட்டார்கள். அதனில் எனது இருசக்கர வாகன டயர் ஏறும் போது அது வெடித்து அதில் உள்ள சட்டினி எல்லாம் எனது வேட்டியில் பீய்ச்சி பாய்ந்து விட்டது. இதுதான் நடந்தது. இப்படியே நான் எப்படி அப்பியாச வகுப்பிற்குச் செல்ல முடியும்? திரும்பிவிட வேண்டியதுதான் என்று நினைக்கையில், அந்தப்புளிய மரத்திற்கு பக்கத்தில் ஒரு மாடி வீடு உள்ளது. அந்த மாடி வீட்டின் மேலே உள்ள தண்ணீர் தொட்டி ரொம்பி கீழே வேகமாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. அங்கேச் சென்று எனது வேட்டியினை கசக்கி அந்த சிவப்பு நிறம் போக புழிந்து, ஏதும் நடவாதது போல ஆக்கிக்கொண்டாலும், அந்த நாற்றமும் ஆடையிலும் காலிலும் ஈரம் இருந்தது.

ஈரத்துடன் சென்று கலந்துக்கொள்வோம், அங்கே ஏதாவது சொல்லிக்கொள்ளலாம் என்று மீண்டும் வண்டியில் ஏறி பக்கத்தில் உள்ள அப்பியாச நிலையம் சென்றடைந்தேன். நான் செல்லும் பொழுது மணி 10.15 ஆகிவிட்டது. (09.15 க்கு வரச்சொன்னார்) ஆனால், இன்னும் அந்த நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. சரி, அவர்கள் வந்து திறப்பதற்குள் நமது வேட்டி காயட்டும் என சற்று வெய்யிலில் நின்றேன். வேட்டியும் காய்ந்து விட்டது. ஆனால் யாரும் வரவில்லை. பிறகு புதுவை அப்பியாச வாட்சாப் குழுவில் இன்றைய நிகழ்ச்சி நிரலை நேற்றே பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். அப்பதிவை திறந்துப் பார்த்தேன், அதில் 11.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக இருந்தது. 

அப்பொழுது ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு அவ்வழியே வந்தார். அவரிடம் நிலையம் எத்தனை மணிக்குத் திறப்பார்கள் என்று வினவினேன். ஞாயிற்றுக்கிழமையானால் காலை ஏழு மணிக்கே வந்துவிடுவார்கள். ஆனால், இன்று ஏன் யாரும் வரவில்லை எனத் தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார். எனக்கு சந்தேகம் வரவே 10.30 மணிக்கு பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவிற்கு கைப்பேசியில் தொடர்புக் கொண்டேன். ஆனால் அவர் எனது அழைப்பை ஏற்கவில்லை. பிறகு அங்கே உள்ள விளம்பரப் பலகையில் உள்ள வேறு ஒரு எண்ணில் தொடர்பு கொண்டேன். அவர் எடுத்துப் பேசினார். எனது நோக்கத்தை நான் தெரிவிக்கவே, “ஐயா, இன்று அனைவரும் சென்னைக்குச் சென்றுவிட்டார்கள். ஜபம் செய்பவர்கள் மட்டும் இனிமேல் யாரேனும் வருவார்கள். அதனால், நீங்கள் அடுத்த வாரம் வாருங்கள்” என்று சொல்லிவிட்டார். 

எனக்கு உள்ளுக்குள் கோபம் தலைக்கேறியது. பிறகு அந்த அப்பியாச நிலையம் முன்புச் சென்று எனது கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டு 10.50 மணியளவில் அங்கிருந்து கிளம்பி கடலூர் வந்துச் சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்தவுடன், பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவின் வாட்சாப் எண்ணில் வாய்ஸ் மெசேஜ் செய்தேன். “ஐயா நலமா? நான் இவ்வாறு உங்களது நிலையம் வந்து ஏமாந்து வந்தேன். நான் இன்று திருவாரூர் செல்லும் வேலையை விட்டு இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் என்னை இன்று வரச்சொல்லிவிட்டு, நீங்கள் சென்னைக்கு சென்றுவிட்டதுதான் உங்களது சித்த வித்தை சேவையா. நன்றாக சேவை செய்கின்றீர்கள். என்று சொல்லி மெசேஜ் செய்தேன். மேலும் புதுவை அப்பியாச வாட்சாப் குழுவில் சென்று அங்கேயும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா அவர்களின் சேவையைப் பற்றி சற்று கோபமாக பேசி வாய்ஸ்மெசேஜ் செய்துவிட்டு, அக்குழுவிலிருந்து உடனே வெளியில் வந்துவிட்டு அக்குழுவை எனது கைப்பேசியிலிருந்து அழித்துவிட்டேன். (நான் கடலூர் நோக்கி வரும் பொழுது பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் என்பதை நான் வாட்சாப் பதிவுகளை பதிந்தப் பிறகு பார்க்க நேர்ந்தது. மேலும் நான் வாட்சாபில் இட்ட வாய்ஸ் மெசேஜை கேட்டுவிட்டு அவரும் ஏதோ வாய்ஸ் மெசேஜ் செய்திருக்கின்றார். எனினும் அவர் என்ன மெசேஜ் செய்துள்ளார் என்று இது வரை பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை.)  

அடுத்ததாக நான் கைப்பேசியில் தொடர்புகொண்டது நெய்வேலி திருமதி.சாவித்ரி அம்மாவிடமும் அவரது மகன் திரு.சபரி அவர்களிடமும்தான். நான் இன்று இவ்வாறு அனுபவப்பட்டேன் என்றவுடன், அவர்கள் சொன்னது, ”நீங்கள் வேறு மார்க்கத்திற்குச் செல்வதை பார்த்துக்கொண்டு வள்ளலார் சும்மா இருக்க மாட்டார். அதனால்தான் இந்தத் தடைகள்.” என்று கூறி உண்மை உரைத்தனர். அவர்களுக்கும் வள்ளற்பெருமானுக்கும் சிவானந்த பரமஹம்சர் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சித்த வித்யார்த்திகளுக்கு எவ்வளவோ அப்பியாசம் சார்ந்த பணிகள் இருக்கத்தான் செய்யும். அவர்களது அன்றாட அல்லது வார நிகழ்ச்சிகள் அதற்கேற்றார் போல மாறத்தான் செய்யும். அது எனக்கு வருத்தமில்லை. அதனை முன் கூட்டியே எனக்கு கைபேசியில் தெரிவித்திருந்தால் எனது நிகழ்ச்சியும் மாறி இருக்கும். நானும் இன்று இங்கு வந்து இவ்வளவு தடைகளை கடந்து ஏமாந்துச் செல்ல அவசியம் இன்றி இருந்திருக்கும். எனினும் இவை எல்லாம் சித்து விளையாட்டே. யார் மீதும் தவறு இல்லை, என்று மனம் சாந்தி அடைந்தேன். நான் சில மாதங்களாக வணங்கி வந்த சிவானந்த பரமஹம்சரின் படமும் எனது மேசையிலிருந்து புறம் சென்றது.

சித்த வித்தைக்கு எதிராக இன்று (24-03-2024) நான் சந்தித்தத் தடைகள்:

1. காலை சிற்றுண்டிக்காக இரண்டு உணவகங்களில் ஏமாற்றம்.

2. வாகனத்தில் செல்லும் பொழுது எனது தொப்பி காற்றில் பறந்துச் சென்றது.

3. வில்லுபாளையத்தில் எனது வேட்டியில் இரத்தக் கரை போன்று தக்காளிச்           சட்டினியின் அடாவடித் தனம். ஈர உடம்பு, ஈர வேட்டி, சட்னி நாற்றத்துடன்         அப்பியாச நிலையம் சென்றது.

4. வழக்கமாக ஞாயிறு அன்று ஏழு மணிக்கெல்லாம் நிலையம் திறந்துவிடும்,         ஆனால் இன்று நான் வருகின்றேன் என்று 10.50 வரை நிலையம்                                 திறக்கப்படவே இல்லை. (இன்று திறந்தார்களா என்று தெரியவில்லை)                 மேலும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா சென்னைக்குச் சென்றுவிட்டார்.

மேற்காணும் நான்கு தடைகளும் மிக சர்வ சாதாரணமாகத் தோன்றும். ஆனால், இதனை நான், வள்ளற்பெருமான் ”சித்த வித்தை” வேண்டாம் என்று என்னை தடுத்தாட்கொண்டதகாவே கருதுகின்றேன். சித்த வித்தைக்கு எதிராக பதிவு போடும் அளவிற்கு உனக்கு நான் அறிவைக் கொடுத்திருந்தும், நீ ஏன் அதனை மீறி சித்த வித்தை நோக்கிச் சென்றாய்? என என்னை தடுக்கவே மேற்காணும் நான்குத் தடைகளையும் நான் பார்க்கின்றேன். எனவே நான் இன்றுடன் வாசி யோகம் பற்றின எனது கனவை அழித்துவிட்டு, சுத்த சன்மார்க்கம் நோக்கி எப்பொழுதும் போல் நான் நடைபயில்வேன். என்னைப் போல் யார் ஒருவரும் இனி யூட்யூப் வீடியோ பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. 

மீண்டும் நான் சொல்வதெல்லாம், வாசி யோகம், கிரியா யோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் எல்லாம் மரணம் இல்லா நிலையை நமக்குக் கொடுக்காது. சித்த வேதம் என்பது செத்த வேதம்தான். உங்கள் உடம்பை குழித்தோண்டி புதைத்து விட்டாலே அது மரணம்தான். உடலில் சூடு இருக்கின்றது, கை கால்கள் இலகுவாக அசைகின்றது... என பல சித்த வித்யார்த்திகளின் பூத உடலினை குழிக்குள் வைக்கும்பொழுதெல்லாம், ஐயோ! இவர் ஏமாந்து விட்டாரே! யார் பெற்ற பிள்ளையோ? என்ற எண்ணம் என்னில் எழுவது உண்டு.  எனவே மரணமிலாப் பெருவாழ்விற்கு ஆசை உண்டேல், சுத்த சன்மார்க்கத்திற்கு வம்மின் உலகியலீர்..... சமாதி பழக்கமெல்லாம் பழக்கம் அல்ல. சகஜ மார்க்கமே மரணத்தை வெல்லும் என்ற வள்ளற்பெருமானின் வார்த்தைதான் சத்தியம்....

வள்ளற்பெருமானின் சத்திய வார்த்தைகள்:

”தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.”

ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.”

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.”

கண்மூடிப் பழக்கம்தான் மண் மூடிப் போக வேண்டும்... நமது பூத உடல் மண் மூடிப் போகலாமா? விழித்திருங்கள்... நன்றி அன்பர்களே! 

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com
www.vallalarr.blogspot.in

for PDF
https://drive.google.com/file/d/1vkdg_9mUwNmOWAgi8kCOjEZ7jBrK_pu9/view?usp=drive_link


  


 




  



  




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.