வள்ளற்பெருமான் தொற்றுவித்த
சுத்த சன்மார்க்கம் என்பது மானிட வர்க்கங்களுக்கு மரணமிலா பெருவாழ்வு அளிக்கக் கூடிய
உலகின் முதலில் தோன்றிய முதல் மார்க்கமாகும். இப்படிப்பட்ட சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி
சாகாக் கல்வியினைப் பயின்று பெருவாழ்வு வாழ வேண்டுமானால் நாம் அனைவரும் சுத்த சன்மார்க்க
ஒழுக்கங்களை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்.
சாகாதவனே சன்மார்க்கி
என்பார் வள்ளலார். சன்மார்க்கிகள் சாகாமல் இருக்க, வள்ளற்பெருமான் எழுதிய திருவருட்பாவை
ஆதாரமாகக் கொண்டு “சுத்த சன்மார்க்கர் ஒழுக்க நடவடிக்கை விதிகள்” என்பதனை அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரின் துணை கொண்டு நாம் உருவாக்கியுள்ளோம். இவ்விதிகளை சன்மார்க்கிகள் அனைவரும்
கடைபிடித்து ஒழுகி மரணமற்று வாழ்வதே இதனின் நோக்கமாகும். இது சுத்த சன்மார்க்கர்களின்
சட்ட புத்தகம் எனக் கொள்ளுதல் வேண்டும்.
இறை வணக்கம்
எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி
ஆண்டவரின்
துணையால் சாகாக்
கல்விபயிலும் சுத்தசன் மார்க்கர் யாரும்
கடைபிடித்
தொழுகும் விதிகளாவும்
வல்லான் சொல்ல வரைந்தேன் இங்கே
வஞ்ச
வினைகளினி ஏதும்
இல்லான் என்றும் இறவான் என்றே
ஆக்கும்
நடைமுறை இதுவாமே.
சுத்த சன்மார்க்கர்களின்
ஒழுக்க நடவடிக்கை விதிகள்
1.1. புலை
கொலை தவிர்க்க வேண்டும். தோல் பொருட்களை உபயோகிக்கக் கூடாது. பட்டாடைகள் உடுத்தக் கூடாது.
போதை பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டவை.
2.ஏக
இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வழிபட வேண்டும். அவ்விறைவனை தனது அகத்தில்
வழிபட வேண்டும். புறத்தில் வழிபட வேண்டுமாகில் வடலூர் ஞான சபை மட்டுமே புற வழிபாட்டு
இடமாகும். வேறு எந்த உருவ வழிபாடும் கூடாது.
புறத்தில் தீபம் மட்டும் ஏற்றி வழிபடலாம்.
3. வள்ளற்பெருமானின்
உருவங்களை மண், கல், மரம், பொன், வெள்ளி, இவ்வாறு மற்ற உலோகங்கள் யாதொன்றிலும் செய்தலோ,
அவற்றை வணங்குதலோக் கூடாது. தேவைப்படின் அவரது உருவத்தை ஒளி உடம்பாக வரைந்து (அவரது உடல்
பாகங்களை வரையாமல், வெறும் உடலை ஒளியாக வரைவது) வணங்கலாம். அவ்வொளி உடம்பையும் பத்திரிக்கைகளில்
அச்சடித்து விநியோகம் செய்தல், பொதுச் சுவற்றில் வரைவது போன்ற ஆடம்பரங்கள் செய்யக்கூடாது.
4.உலகியல்
மதங்கள், சமயங்கள், மார்க்கங்களை பற்ற்ற கைவிட வேண்டும். அவற்றில் சொல்லப்பட்டுள்ள
எவ்வித ஆச்சாரங்களும், வழிபாடுகளும் அறவேக் கூடாது. விபூதி பூசுதல், நாமம் இடுதல் போன்ற
இந்து மத அடையாளங்கள், இஸ்லாமிய மத அடையாளங்கள், கிறுத்துவ மத அடையாளங்கள் இவ்வாறுள்ள
அனைத்தும் தடை செய்யப்பட்டவை.
5.மதங்கள்
சார்ந்த புத்தங்கள், புனித நூல்கள் என்கின்ற யாவும் தடை செய்யப்பட்டவை. திருவருட்பாவில்
சைவ வைணவ சமயங்களை அடையாளப்படுத்தும் பாடல்களை
தவிர்த்து மற்ற சுத்த சன்மார்க்கப் பாடல்களை பாடித் தொழலாம். (திரு அருட்பெருஞ்ஜோதி
அகவல், ஞானசரியை போன்றவைகளை தேர்ந்தெடுத்துத் தொழலாம்.)
6.சுத்த
சன்மார்க்கிகள் வள்ளற்பெருமானை மட்டுமே குருவாகவும் அருட்பெருஞ்ஜோதிதனை ஆண்டவராகவும்
கொள்ளுதல் வேண்டும்.
7.அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கின்ற மஹா மந்திரம் ஒன்றே எந்நேரமும்
மனதுள் உச்சரித்துக்கொண்டு வரவேண்டும். சுத்த சன்மார்க்கிகளுக்கு வேறு எந்த ஒரு மந்திரமும்
தடை செய்யப்பட்டுள்ளது.
8. சுத்த
சன்மார்க்கிகள் சமயம் மதம் சார்ந்த கோயில்களுக்கோ, தேவாலயங்களுக்கோ, மசூதிக்கோ மற்றய
மார்க்க வழிபாட்டுத் தலங்களுக்கோ வழிபடும் பொருட்டுச் செல்லக்கூடாது. திருவிழாக்களை நடத்தவோ
அதில் கலந்துக்கொள்ளவோக் கூடாது. தனித்திருக்க வேண்டும். ஆண்டவனுடைய திருவடியில் சதா
ஞாபகமுடையவராய் இருத்தல் வேண்டும்.
9. சுத்த
சன்மார்க்கத்தில் உள்ள தடைகள் என்று சொல்லக்கூடியவைகளிடத்தும், கூடாது என்று ஒதுக்கக்கூடியவற்றிலும்
நாம் வெறுப்பினை காண்பிக்கக்கூடாது. வெறுப்பின்றி விடுதல் வேண்டும். அது போல் சுத்த
சன்மார்க்கத்திற்கு வேண்டியவைகளையும் விருப்பு இன்றி ஏற்றல் வேண்டும். விருப்பு வெறுப்பு
இன்றி சத்துவ மயமாய் நிற்றலே சுத்த சன்மார்க்கம் ஆகும்.
10.சுத்த சன்மார்க்கர்களுக்கு தியானம், யோகம்,
மூச்சுப் பயிற்சிகள், விரதம், விழாக்கள் போன்ற அனைத்து சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இல்லறத்தில் இருக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்களை ஏற்கலாம்.
11. சுத்த சன்மார்க்கிகள் நினைப்பு மறைப்பு
இன்றி நிர் அதிசய ஆனந்தமாய் அருள் வடிவமாக ஆவதே சுத்த சன்மார்க்க சாதனமாகக் கொள்ள வேண்டும்.
12. எல்லா உயிர்களையும் தனது உயிராய் பார்க்கும்
உணர்வுதான் சுத்த சன்மார்க்க சாதனம் ஆகும். இச்சாதனத்தை கையாளும் சுத்த சன்மார்க்கி
இறந்தவர்களை எழுப்புவான். அவனே ஆண்டவனுமாவான்.
13. சுத்த சன்மார்க்கிகளுக்கு பரோபகாரமும்,
சத்விசாரமும் இரண்டு முக்கிய சாதனமாகும். தனது தேகத்தாலும் வாக்காலும் பொருளாலும் பிற
உயிர்களுக்கு உபகாரம் செய்வது பரோபகாரமாகும். கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின்
உண்மையை விசாரித்தல், தன் சிறுமையை கடவுளிடத்து விண்ணப்பித்தல் போன்றவை சத்விசாரமாகும்.
இச்சாதனத்தை கடைபிடிப்பவர்கள் சுத்தமாதி மூன்று தேகங்களையும்
பெறுவார்கள்.
14.தேசுத்த சன்மார்க்கிகள் தங்களது மனதில்
யாதொன்றும் பற்றாமல் சுத்த மனமாக, நாம் நஷ்டமடைய மாட்டோம் என்று உள்ளழுந்தி நிச்சயித்து
சங்கல்பம் செய்தல் வேண்டும்.
15.சுத்த சன்மார்க்கிகள் தன் ஒருவருக்காக மட்டும்
பிரார்த்தனை செய்யக் கூடாது. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
16.சுத்த சன்மார்க்கிகள் திருமணம் செய்தல்
கூடாது. ஆண் அல்லது பெண் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவருடைய திருவடியில் சதா
ஞாபகமுடையாருக்கு கோசத்தடிப்பு உண்டாகாது. உலகியலை
சிறிதும் உள்ளம் பற்றக்கூடாது.
17. சுத்த சன்மார்க்கர்கள் தங்களது தேக சுதந்தரம்,
போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் ஆகிய மூன்று சுதந்தரத்தினையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து
ஒப்படைத்துவிட்டு, ஆண்டவரின் சுதந்தரத்திரத்தில் தமது தேக, போக, ஜீவன்களை நடத்துதல்
வேண்டும். இதனால் துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போன்ற அவத்தைகள் நீங்கும். ஐந்தொழில்
செய்யும் ஆற்றல் கைகூடும்.
18. சுத்த சன்மார்க்கிகள் சன்னியாசம் மேற்கொள்ளக்
கூடாது. குடும்ப சன்னியாசிகளாக இருக்க வேண்டும்.
19. சுத்த சன்மார்க்கிகள் தங்களது பெயரில்
யாதொரு சொத்தும் வைத்திருக்கக் கூடாது. ஆடம்பரமாக வாழும் நிலையில் இருந்தாலும் அதனை
விடுத்து மிகச் சாதாரணமாக வாழுதல் வேண்டும்.
20.சுத்த சன்மார்க்கிகள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது. அரசியல் சார்பற்றவர்காக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குச் செலுத்துவதிலிருந்தும் தவிர்க்க வேண்டும். வாக்கு செலுத்துவது குடிமக்களின் கட்டாய செயலாகும் என விதி வந்தால், வாக்குச் செலுத்தலாம்.
21 .சுத்த சன்மார்க்கிகளுக்கு நனவிலும் மண்ணாசை,
கனவிலும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்று ஆசைகளும் கூடாவாம்.
1.22.சுத்த சன்மார்க்கிகள் புற இனத்தாரோடு
கொடுக்கல் வாங்கல் மற்றும் புற இனத்தாரின் உதவிகளை நாடவும் கூடாது. அவர்களுக்கு உதவிகளை
செய்யவும் கூடாது. சொந்தக்காரர்கள் புற இனத்தவர்களாக இருந்தால், அவர்களது வீட்டிற்கு செல்லுதல் கூடாது. செல்ல வேண்டிய நிலை வந்தால் அங்கு எதுவும் உண்ணக்கூடாது.
23.ஆண்டவன் சுதந்தரத்தில் நமக்கான உணவை நமது
உடம்பே தருகின்ற வரையில் (அமிழ்து ஊறுதல்), நமது ஆகார நிமித்தம் காரணமாயும் ஜீவ காருண்யம்
செய்யும் பொருட்டும் ஏதேனும் வேலைகள் செய்து ஊதியம் ஈட்டலாம். (ஊதியம் என்பது அறத்திற்கு
அப்பாற்பட்டதாக இருக்கக் கூடாது. இலஞ்சம், ஊழல், ஏமாற்றுதல், அதிக இலாபம், வட்டி போன்ற
தீய வழிகளில் ஊதியம் ஈட்டக்கூடாது.) தேவைக்குப் போக மீதமுள்ளதை ஜீவகாருண்யம் செய்தல்
வேண்டும். உண்மை அன்பினால் உண்மை கடவுளை தொழுதலால், தேக மாற்றம் (அமிழ்து சுரந்துவிட்டால்
பசி எடுக்காது) அடைந்தப் பின்னர் ஊதியம் ஈட்டும் வேலைகளை விடுத்து அனுதினமும் உண்மை
அன்பில் ஆழ வேண்டும்.
24.சுத்த சன்மார்க்கிகளுக்கு மைதுனம், பயம்
இவை இரண்டும் கிடையாது. ஆகாரம், நித்திரை இவை இரண்டில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சுத்த சத்துவ ஆகாரங்களையே புசிக்க வேண்டும். நித்திரை தினமும் 3 மணி நேரம் போதுமானது.
தினமும் 1 மணி நேரம் தூங்கப் பழகினால், அவர் 1000 வருடங்கள் ஜீவிக்கலாம்.
25.சுத்த சன்மார்க்கர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கின்ற
வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். அதாவது சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய
செந்தூரம், தாமிரம் முதலிய பஸ்பம். ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை
பரியாயத்தில் சர்க்கரை என்று லவணத்தைச் சொல்வதுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு நீக்கி
ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதுவன்றி, சத்வ பதார்த்தத்தில்
லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளலாம். நெய், பால், தயிர், மோர் இவைகளை ஆகாரத்தில் விசேஷம்
சேர்ப்பது தேக நஷ்டம். பசுக்களினது முதல் தாது நெய். அதனை எடுத்தல் சுத்த சன்மார்க்க
மரபு அல்ல.
சன்மார்க்கத்தில்
தேக விருத்தி செய்து கொள்வதற்கு புறப்புற அமுதம் வேண்டும். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக்
கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின் மேல் பெய்கின்ற பனிசலம் மழைச்சலம் இவைகள்தான்
சுத்த சலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமும் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை
5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம்.
இவைகள் தேக விருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புதான். ஆதலால்
தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக்கொள்வது உத்தமம்.
26.சுத்த சன்மார்க்கர்கள் பால். தயிர், மோர்,
வெண்ணை, நெய் போன்ற பால் பொருட்களை உண்ணக்கூடாது. அதனால்
பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய காபி, தேநீர் போன்றவைகளையும் இதர பால் கலந்த வஸ்துக்களையும்
சுத்த சன்மார்க்கிகள் சாப்பிடக்கூடாது.
27.சாதத்தை வடித்துதான் சாப்பிட வேண்டும்.
பொங்கி சாப்பிடக்கூடாது. மேலும் உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய்
போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். உஷ்ணத்தை உண்டுபண்ணக் கூடிய ஆகாரங்களை கொள்ளுதல்
வேண்டும்.
28.சுத்த சன்மார்க்கிகள் பச்சை ஜலம் கொள்ளக்கூடாது.
வெந்நீர் அருந்துதல் வேண்டும். வெந்நீரில் குளிக்க வேண்டும்.
29.சுத்த சன்மார்க்கிகள் தினந்தோறும் கரிசாலையை
பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது சாப்பிட்டு வர வேண்டும். இது உள்ளுடம்பை நீடிக்கச்
செய்யும். முக்தி அடைவதற்கும் சகாயமாய் இருக்கும். தந்த சுத்தி செய்து அண்ணாக்கில்
தர்ஜனி விரலால் தேய்க்க, மேற்குறித்த மூலிகையால் பித்த நீர், கப நீர் வெளியாகி கண்ணொளி
விசேஷமாகும். மேலும் தூதுளை, கையாந்தக்கரை மூலிகைகளையும் எடுக்க வேண்டும்.
30.சினம், வெகுளி, காமம், குரோதம் போன்ற
பெருங்குறைகளை அவசியம் நீக்க வேண்டும்.
31.சுத்த சன்மார்க்கிகள் தங்களது சாகா முயற்சி
தோல்வி அடைய நேரிட்டு, தேக ஆணி ஏற்பட்டால் (மரணம்) அவர்களின் தேகங்களை எரிக்காமல் கட்டாயம் புதைக்க
வேண்டும்.
32.சுத்த சன்மார்க்க முயற்சியில் தோல்வியுற்றவர்களின் தேகங்களை புதைக்கும் பொழுது, இறுதி நிகழ்ச்சி அன்று எந்த ஒரு அழுகுரலும் எழுப்பக்கூடாது.
அகவல் ஓத வேண்டும். வேறு எந்த சடங்குகளும் செய்தல் கூடாது. அவர் இறுதியாக உடுத்திய
ஆடைகளை கலைக்காமல், அவ்வாடை மேல் தேவைப்பட்டால் புத்தாடைகளை உடுத்தி (குளிப்பாட்டும்
சடங்குகள் கூடாது) அப்படியே தேகத்தை தகுந்த இடத்தில் புதைக்க வேண்டும். அவரைப் பொருட்டு
எதிர் காலத்தில் கருமாதி, திதி போன்ற எந்த மத சடங்கும் செய்தல் கூடாது.
33.சுத்த சன்மார்க்கிகள் தங்களது உறவினர்களின்
அல்லது யாதொரு திருமண விழாக்களிலும், கருமாதி, திதி போன்ற அனைத்து அமங்கல விழாக்களிலும்
கலந்துக்கொள்ளக் கூடாது. காது குத்தல், மொட்டை அடித்தல், பெண்கள் ருது விழா, பிறந்தநாள்
விழா, அறுபது, எண்பது மண விழா போன்ற விழாக்களிலும் கலந்துக்கொள்ளக் கூடாது. வாழ்த்தவும்
கூடாது. தங்களுக்கு நடத்தவும் கூடாது.
34.உடல் முழுதும் அனுதினமும் வெள்ளாடையால்
போர்த்த வேண்டும். அல்லது வெள்ளாடைகளை உடுத்த வேண்டும். குறிப்பாக தலை உச்சியை மூட
வேண்டும்.
35.சுத்த சன்மார்க்கிகள் பெறக்கூடிய நான்கு
புருஷார்த்தங்கள் - ஏம சித்தி, சாகாக் கல்வி, கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல், தத்துவ
நிக்கிரகம். இந்த நான்கு புருஷார்த்தங்களையும் முறையே இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம்,
ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்கின்ற ஒழுக்கங்களை கடைபிடித்துப் பெறவேண்டும்.
36.கொடிய சொற்கள் செவியில் கேட்காத வண்ணம்
நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்க வேண்டும்.
37.அசுத்த பரிசமில்லாது தயாவண்ணமாகப் பரிசித்தல்.
அதாவது தீய எண்ணங்கள் இல்லாது அன்பின் வண்ணமாக தீண்டுதல்.
38.பிறரை குரூரமாகப் பாராதிருக்க வேண்டும்.
39.உணவில் உருசி விரும்பாதிருக்க வேண்டும்.
40.சுகந்தம் (நறுமணம்) விரும்பாமல் இருக்க
வேண்டும்.
41.யாவரிடத்தும் இன் சொல்லாடல் வேண்டும்.
பொய் சொல்லாதிருக்க வேண்டும்.
42.ஜீவ ஹிம்சை நேரிடுங் காலத்தில் எவ்விதத்
தந்திரத்திலாவது அதனை தடை செய்தல் வேண்டும்.
43.பெரியோர்கள் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்குச்
செல்லுதல் வேண்டும்.
44.ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வசிக்கும்
இடங்களிலும், வேறு இடங்களுக்கும் செல்லுதல்.
45.நன் முயற்சியில் கொடுத்தல் எடுத்தல் ஆகியவைகளை
செய்தல். அதாவது, கருணை எண்ணங்களுடன் தருமம் கொடுக்க
வேண்டும். கருணை எண்ணங்களுடன் பிறர் தருமம் பெறுதல் (எடுத்தல்) வேண்டும்.
46.மலம் ஜலம் உபாதிகளை அக்கிரமின்றி கிரமாக
(ஒழுங்காக) நெறிபடுத்த வேண்டும். மித ஆகாரத்தால் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்,
(மூலிகை மருந்து) மித போகத்தால் தடை நேர்ந்தால் பெளதிக மூலங்களாலும், (பூமியிலிருந்து
கிடைக்கக் கூடிய மருந்துகள்- (எ.கா)தங்க பஸ்பம்) கால பேதத்தால் தடை நேர்ந்தால் சரபேத
அஸ்தபரிச தந்திரத்தாலும், (வலது பக்க மூச்சோட்டத்தில் மலம் கழிக்க வேண்டும். இடது பக்க
மூச்சோட்டத்தில் ஜலம் கழிக்க வேண்டும்) உஷ்ண ஆபாசத்தால் தடை நேர்ந்தால் மூலாங்கப் பிரணவ
தியான சங்கற்பத்தாலும் (ஓம் என்னும் மந்திர ஜபம் செய்வதின் மூலம்) மல ஜல தடைகளை நீக்குதல்
வேண்டும்.
47.இல்லறத்தார்கள் சுக்கிலத்தை மாதம் இரு
முறை விரயம் செய்தல் வேண்டும். இது மந்த தரம். சுத்த சன்மார்க்கிகள் எவ்வகையிலும் சுக்கிலத்தை
வெளிப்படுத்தக்கூடாது. இது தீவிர தரமாகும்.
48.இடைவிடாது கோசத்தை மறைத்தல். இது போல்
உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்.
49. சஞ்சரிக்கும் பொழுது / நடக்கும் பொழுது வெறுங்காலுடன்
நடக்கக் கூடாது. மிதியடி அணிய வேண்டும்.
50. அழுக்காடை உடுத்தாது இருக்க வேண்டும். (36-ஆம் விதியிலிருந்து 50-ஆம் விதி வரை உள்ள இந்திரிய ஒழுக்கங்களை கடைபிடிக்கும் சன்மார்க்கிகளுக்கு ஏம சித்தி
கைகூடும். தங்கம் செய்யும் வல்லபம் கிடைக்கும். சாதாரணமாக 'இந்திரியம்' என்றால்உயிரணு (விந்து) என்றுபொருள். இங்குஇதன்பொருள், 'நமதுஉடலில்உள்ளஐந்துபுலன்களை' குறிக்கிறது. ஐம்புலன்கள்என்றால், கண், வாய், மூக்கு, காது, உடம்பு (உடம்புஎன்பது, கழுத்துக்கீழேஉள்ளஅனைத்துஅவையங்களையும்குறிக்கும்) என்றஇந்திரியங்களைக்குறிக்கிறது. இவற்றிற்கானசெயல்பாடுவழிமுறைகளைநெறிபடுத்துவதே 'இந்திரியஒழுக்கம்' என்பதாகும்.
51.மனத்தை சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்குதல்.
இதன் பூர்வத்தில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் சுத்த சன்மார்க்கர்களின் வழக்கமாக
இருக்க வேண்டும். மனத்தை புருவ மத்தியில் எந்நேரமும் நிற்கச் செய்தால், மனம் சிற்சபை
ஆகிவிடும். அறிவாகிருதி என்றால் அறிவினை ஒன்றிணைத்தல் எனலாம்.
52.துர் விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்.
நமது மனதை தீய செயல்களின் மீது பற்றாதிருக்கச் செய்ய வேண்டும்.
53.ஜீவதோஷம் விசாரியாது இருத்தல் வேண்டும்.
ஒரு உயிரினுடைய குற்றத்தை விசாரம் செய்யக் கூடாது. சிங்கம் ஏன் மானை அடித்துத் தின்றது.
சிங்கத்திற்கு கருணையே இல்லையா. கடவுள் ஏன் ஒரு உயிருக்கு ஒரு உயிரை உணவாகப் படைத்தார்.
கடவுளுக்கு கருணையே இல்லையா? இவ்வாறு ஜீவ தோஷத்தை விசாரிக்கக் கூடாது. சிங்கம் புலி
போன்ற கொடிய மிருகங்கள் தங்களது பழக்கத்தால் அவ்வாறு மற்ற உயிர்களை கொன்று தின்கின்றன
என்கின்றார் வள்ளலார்.
54.தன் மதிப்பு இல்லாதிருத்தல். சுத்த சன்மார்க்கிகள்
தங்களைத் தாங்களே மதியாது இருத்தல் வேண்டும். நான் என்கின்ற உணர்வு கூடாது. நாயினும்
இழிந்தேன், மானமெல்லாம் போன வழி விடுத்தேன் என்கின்ற திருவருட்பா பாடல்கள் இதற்கு நல்ல
உதாரணம்.
55.இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல்.
இராகாதிஎன்பதுரஜோ, தமோகுணத்தைகுறிக்கும். இதுசெயற்கையானகுணமாகும். சத்துவ
குணத்தை மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் கடைபிடிக்க வேண்டும். ரஜோ, தமோ குணத்தை விட
வேண்டும்.
56.தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது
கண்டித்தல். அதாவது நமது எண்ண சக்திகளை நியாயமான வழியில் அல்லாது அக்கிரமத்தில் செல்வதைக்
கண்டித்து அடக்க வேண்டும். (விதி எண் – 51 இருந்து 56 வரையிலுள்ள கரண ஒழுக்க விதிகளை
நடைமுறைப் படுத்தும் சன்மார்க்கிகளுக்கு சாகாக்கல்வி கைகூடும்.
கரணம்என்பதுநமதுஅகஉடம்பில்உள்ளஐந்துஅந்தக்கரணங்களைகுறிக்கும். அவை - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம்என்பவையாகும். இவைகளைகட்டுக்குள்வைப்பதேகரணஒழுக்கம்.
இந்தமனம்இச்சையால்அலைந்துக்கொண்டேஇருக்கும். இதன்நிறைவேறாதஆசைகளால்தான்அடுத்தபிறவியேவருகின்றது. அதனால்மனதைஅதன்இஷ்டப்படிஅலையவிடாமல்தடுக்க
வேண்டும். மனம்என்கிறதுவாயுவின்தத்துவம். அதனாலசலித்துக் (நிலையாய்இல்லாமல்அலைபாய்ந்து) கொண்டேஇருக்கும்.
57.ஆண் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவர்களிடத்தும்
ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேசமார்க்கம்,
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.
(இதற்கு விளக்கம் தேவையில்லை.) இது ஒன்றுதான் ஜீவ ஒழுக்கம் ஆகும். நமது உயிர் கடைபிடிக்கக்
கூடிய விதி இது ஒன்றே ஆகும். இதனை கடைபிடிக்கும் சன்மார்க்கிகள் கடவுள் நிலை அறிந்து
கடவுள் மயமாகவே ஆவார்கள்.
58.யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவர்களது சூக்குமம் தனித் தலைவன் ஆதலால் – அவ்வச் சீவர்களில் ஜீவ ஆன்மாவே திருச்சபையாய் அதனுள்
பரம ஆன்மாவே பதியாய் நிற்பதால் - யாதும் நீக்கமற
எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.
அனைத்து
உயிர்களும் கடவுள் ஆகும். ஒவ்வொரு ஆன்மாவும் திருச்சபையாகும். அத்திருச்சபையினுள் இறைவனே
விளங்குகின்றான். அதனால் இதன் உண்மை உணரும் சன்மார்க்கர்கள் யாதும் நீக்கமற எவ்விடத்தும்
பேதமற்று எல்லாம் தானாக நிற்பான். இது ஒன்றே ஆன்ம ஒழுக்கமாகும். இந்த ஆன்ம ஒழுக்கத்தை
கடைபிடிக்கும் சன்மார்க்கிகளுக்கு தத்துவ நிக்கிரகம் கைகூடும். தத்துவங்கள் எல்லாம்
கடந்த நிலை உருவாகும்.
59.சுத்த சன்மார்க்கிகள் மல ஜல சங்கல்ப காலங்கள்
தவிர, மற்றக் காலங்களில் கடவுளிடத்தில் அன்பும், ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த
வேண்டும். பக்தி என்பது மன நெகிழ்ச்சி, அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி. ஈஸ்வர பக்தி
என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவன் வியாபித்து இருப்பதை அறிதலே ஆகும்.
60.கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தயவை விருத்தி
செய்யத் தடையாய் இருக்கின்றன. ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம்,
கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம்
ஆகிய ஆசார வகைகளை சுத்த சன்மார்க்கிகள் கைவிட்டு, கடவுள் அருளை பெற வேண்டும்.
61.தயவுதான் ஆன்மாவின் இயற்கை குணமாகும்.
தயவோடு இருந்தால் சிவமாகலாம். தயவோடு இருப்பவன் தேக நஷ்டத்தை அடையமாட்டான். அதனால்
சுத்த சன்மார்க்கிகள் தயவை இயற்கை குணமாக, தருமமாக கடைபிடிக்க வேண்டும்.
62.சுத்த சன்மார்க்கர்கள் உண்மை அன்பினால்
இறைவனை வழிபட வேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கத்தால்தான் உண்மை அன்பு தோன்றும். அந்நிய
உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம்.
63.சுத்த சன்மார்க்கிகள் இரவில் தீபமில்லாத
இடத்தில் இருக்கக்கூடாது. இருளான இடம் பிராண நஷ்டத்தை உண்டு பண்ணும். தீபம் வைத்து
இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரை இன்றி இருந்தால், ஆயுள் விருத்தியாகும். சாதகன்
ஒருவாறு நித்திரை செய்ய வேண்டும்.
64.ஆசாரியர் (கடவுள்) அனுக்கிரகத்தால் சுத்த
சன்மார்க்கிகள் தங்கள் நெற்றிக்கண்ணை திறக்கப் பெற்றுக்கொள்ள வேண்டும். திறக்கப் பெற்றுக்கொண்டால்,
எல்லா அனுபவங்களும் பட்டப்பகல் போல் தெரியும். அவனே சுத்த ஞானி.
65.மேற்காணும் அனைத்து விதிகளையும் அனுசரிக்கும்
சுத்த சன்மார்க்கிகளுக்கு மட்டுமே வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய
சங்கம் உரியது. இச்சங்கத்தின் மூலம் சுத்த சன்மார்க்கக் கொள்கையினை உலகெங்கும் பரப்புதல்
வேண்டும். இவ்வகையில் பார்த்தால் ஒரு சிலரே சன்மார்க்க சங்கத்திற்கு உரியவர்களாக இருப்பார்கள்.
தற்போது
காணப்படும் சன்மார்க்க சங்கங்கள் எல்லாம் அக இனத்தார்கள் என்கின்ற ஒரே தேர்வில் வெற்றி
பெற்ற சமுசாரிகளால் உருவாக்கப்பட்டு, அவர்களால் நடத்தப்பெருவதாக உள்ளது. இச்சங்கங்களால்
உலகில் அக இனத்தார்களும், ஒளி வழிபாடும், அன்ன தானமும் பெருகும். ஆனால் மரணமிலா பெருவாழ்வு
அடைய யாருக்கும் வாய்ப்பே இல்லை. இச்சங்கள்
சத்திய சாதுக்களை உருவாக்கும் இடமாக விளங்க வேண்டும்.
அதனால்
மேற்காணும் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டவர்கள் இணைந்து “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதுக்கள் சங்கம்” என்ற ஒன்றை புதியதாக
உருவாக்கி நடை பயில வேண்டும். இச்சங்கத்தை அரசு பதிவு செய்யக்கூடாது. வங்கிக் கணக்கு
இருக்கக் கூடாது. இச்சங்கத்திற்காக மனை மற்றும் கட்டடங்கள் கட்ட வேண்டுமாகில் அச்சொத்துக்கள்
அனைத்தும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பெயரில் இருக்க வேண்டும். அதாவது
சத்திய சங்கங்கள் இணைந்தோ அல்லது தனித்தோ சத்திய சாதுக்கள் சங்கத்தை உருவாக்க வேண்டும். இச்சங்கம் முழுக்க முழுக்க மரணமிலா வாழ்விற்கான பயிற்சி கூடமாக மட்டுமே
இருக்க வேண்டும்.
சுத்த சன்மார்க்கிகள் மேற்காணும் 65 விதிமுறைகளையும்
நடைமுறை படுத்தினால் சுவர்ண தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்கின்ற முத்தேகம் கிடைக்கும்.
இதுவே மரணமிலா பெருவாழ்வு தேகங்களாகும்.
சுவர்ண
தேகம்: நரை திரை பிணி மூப்பு மலம் ஜலம் வியர்வை ஆகாரம் நித்திரை தாகம் நிழல் முதலியன
இல்லாமையே சுவர்ண தேகம் ஆகும். 1 முதல் 15 வரையுள்ள மாற்று. (ஒரு மாற்றுள்ள சுவர்ணதேகியின்
வயது 4,36,000 ஆண்டுகள் ஆகும்.
பிரணவ
தேகம்: தேகம் தோன்றும் ஆனால் பிடிபடாது. 16 முதல் 108 வரையுள்ள மாற்று. (வயது
4,70,88,000 ஆண்டுகள்)
ஞான
தேகம்: தேகம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். அளவு கடந்த மாற்று. காலத்திற்கு அப்பாற்பட்ட
தேகம். வயது கிடையாது. (இப்படிப்பட்ட மூன்று தேகத்தையும் பெற்றவரே நமது அப்பர் வள்ளலார்).
நாமும் சுத்த சன்மார்க்கராய் நடை பயின்று மூன்று தேகத்தையும் தமதாக்கிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சித்தி வளாகத்தை உருவாக்க வேண்டும். நன்றி.
தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com
.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.