Friday, March 29, 2024

காம சித்தி - 1

 அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

காம சித்தி - 1


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

காமனை எரித்திட்டு காருண்யம் செய்தால்
தாமதியா தருள் தரும்.

இறையருளை எதனால் பெறக்கூடும் எனில், ஜீவகாருண்யத்தால் மட்டுமே பெறக்கூடும் என்பார் வள்ளார். ஜீவகாருண்யம் செய்யும் சமுசாரிகளுக்கு பலவிதமான நன்மைகள் இறைவனால் கிடைக்கும் என்பார் வள்ளலார். பிரமனின் ஆயுள் கிடைக்கும். அதற்கு மேற்பட்டு இறவா நிலை கிடைப்பது இல்லை.

அதே ஜீவகாருண்யத்தை சுத்த சன்மார்க்கியாக இருந்து காமத்தை அழித்துவிட்டுச் செய்யின், காம சித்தி பெற்றுவிட்டுச் செய்யின், இறையருள் தாமதியாது கிடைக்கப் பெற்று ஞான தேகியாகலாம் என்பது திருவருட்பாவின் முடிவு.

காமத்தைப் பற்றிய எமது பதிவுகள் ஏற்கனவே இங்கே உள்ளன. அதனை கீழே உள்ள இணைப்பினை சுட்டிப் படித்துக்கொள்ளலாம்.

இங்கே நான், வள்ளற்பெருமான் சித்தி வளாகத்தில் உறைந்த நாட்களில் அவர் செய்த ஒரு காமச் சோதனையை பதிவிடுகின்றேன்.

ஒரு நாள் சித்தி வளாகத்தில் தம்மைச் சூழ்ந்திருந்த மக்களைப் பார்த்து, உங்களில் யார் ஒருவர் ஆறு மாதம் சுக்கிலம் அடக்கி உள்ளீர்களோ அவர்கள் என்னுடன் வந்து இந்த அறையில் உள்ள கனமான இந்தப் பெட்டியை தூக்கி வந்து வெளியில் வைக்க வாரும்... என்று அழைத்தார்.

(சித்திவளாக அறையில் வள்ளற்பெருமான் இரண்டு பெரிய பெட்டிகளை வைத்திருந்தார். ஒவ்வொன்றும் கனமாக இருக்கும். அப்பெட்டிகள் இரண்டும் இன்று ஞான சபையில் சிற்சபை, பொற்சபையாக உள்ளது.)

மக்கள் மற்றும் அடியார்கள் யாவரும் விழிப்பிதுங்கி நின்றனர். ஒருவரும் வரவில்லை. 

பிறகு, மூன்று மாதம் சுக்கிலம் அடக்கியிருப்பவர்கள் யாரேனும் இருப்பின் இப்பெட்டியை தூக்க என்னுடன் வரலாம் என்றார்....

ஒருவரும் அசையவில்லை. 

பிறகு, ஒரு மாதம் என்றார் வள்ளலார்....

அதற்கும் யாரும் முன்வரவில்லை...

பதினைந்து நாட்கள் அடக்கியிருந்தால் போதும்... அவர்கள் என்னுடன் வந்து இந்தப் பெட்டியை தூக்கி வெளியில் வைக்க வாருங்கள் என்றார்...

இப்போழுதும் அனைவரும் விழித்துக்கொண்டு நின்றார்களே தவிர யாரும் முன்வரவில்லை.

வள்ளலாருக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் - உலகியலில் இருப்போரும், துறவு நிலை பூண்டோரும்கூட பதினைந்து நாட்கள்கூட சுக்கிலத்தை அடக்க முடியாமல் இருக்கின்றார்களே என்று வேதனைபட்டார்.

இறுதியாக ஏழு நாட்கள் என்று குறைத்தும் ஒருவரும் முன்வரவில்லை. மூன்று நாட்கள் என்றதும் ஒருவர் முன்வந்தார். அவரை வைத்துக்கொண்டு வள்ளலார் சித்தி வளாக அறையிலிருந்த அந்த கனத்தப் பெட்டியை தூக்கி வந்து வெளியில் வைத்தார்.

இந்தச் சோதனையானது பெட்டியை தூக்குவதற்காக வள்ளற்பெருமான் செய்யவில்லை. சிற்றின்பத்தில் மக்கள் எந்த அளவிற்கு கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர் என்பதனை வெளி உலகிற்கு காட்டவே இவ்வாறு இங்கிதமாக இச்சோதனையைக் செய்துக் காட்டினார்.

எனவே சுத்த சன்மார்க்கப் பாதையில் நடை பயிலும் சமுசாரிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை என்பதே விதி. சுத்த சன்மார்க்கப் பாதையில் பயணிக்கும் அதிதீவிர சாதகர்களுக்கு ஒரு முறைகூட சுக்கிலம் ஆபாசபடக்கூடாது என்பது சுத்த சன்மார்க்கச் சட்டம் விதி எண்:16 கூறுகின்றது.

ஆகவே மரணமிலா பெருவாழ்வு என்னும் அந்தப் பெட்டியை வள்ளலாருடன் நாமும் தூக்க வேண்டுமெனில் சுக்கிலம் காப்போம். காம சித்தி பெற்றால்தான் ஞான சித்தி பெறமுடியும். நன்றி.

தி.ம.இராமலிங்கம்
கடலூர்
9445545475
vallalarmail@gmail.com
www.vallalarr.blogspot.in 

https://vallalarr.blogspot.com/2016/04/blog-post_8.html

https://vallalarr.blogspot.com/2013/09/blog-post_14.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.