Monday, March 25, 2024

கலாச்சாரம்

அருட்பெருஞ்ஜோதி                                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கலாச்சாரம்

வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்...... இதயம் பலவீனமானவர்கள் இப்பதிவை படிக்க வேண்டாம்.

சமீபத்தில் நான் ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று பார்த்தேன்........ அந்த படத்தின் பெயர் தி க்ரீன் இன்பெர்னோ (The Green Inferno).. படம் என்னவோ நல்ல மையக்கருத்தை கொண்டதாக இருந்தாலும்,பல நாடுகளில் சென்சார் போடால் தடை செய்யப்பட்ட படமும் கூட..ஏனென்றால் இந்தப் படத்தில் வெறுக்கத்தக்க மனிதனை கொன்று நரமாமிசம் உண்ணும் படும் மோசமான, அருவருக்கத்தக்க ரத்தவாடை கொண்ட சித்திரவதைக் காட்சிகள் ஏராளம்...


இதனை எதற்காக எப்பொழுது கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்துகிறான் என்று கேட்கிறீர்களா.....இந்த கேள்வியை பார்த்ததும் எனது மண்டையில் சுத்தியால் அடித்தது போல் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான் ஞாபகம் வந்தது. அது என்னனா இந்த படத்தில் பேராசிரியை ஒருவர் மாணவர்களுக்கு உலகின் சில பகுதியில் பெண்களுக்கு எதிராக பின்பற்றப்படும் ஒரு மோசமான கலாச்சாரா சடங்கை பற்றி விளக்குவார்.....அதை பார்த்ததும் எனக்கு பகீர் என்று ஆனது.. அப்படி என்ன கலாச்சார சடங்கு என்று கேட்கிறீர்களா?..... வாருங்கள் பார்க்கலாம் இப்பதிவின் வாயிலாக...

21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் நாம் எவ்வளவோ அறிவியல் முன்னேற்றம் அடைந்து விட்டோம்..... குறிப்பாக பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு நிகராக தங்களது பங்களிப்பையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றனர் என்னும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும்.....அதே சமயம் பெண்களுக்கு எதிரான சில வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம்தான் உள்ளது.... அந்த வகையில் பெண்களுக்கு எதிராக சடங்கு என்ற பெயரில் ஒரு கேவலமான, மடத்தனமான, அருவருக்க தக்க, விரும்பத்தகாத கலாச்சார சித்ரவதை நிகழ்த்தப்பட்டு வருவதை தெரிந்துகொள்ளும் போது ஆத்திரங்கள்தான் வருகிறது......

ஆம் அந்த சடங்கின் பெயரை ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா) -பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation) என்று குறிப்பிடப்படுகிறது. சுருக்கமாக FGM என்றும் அழைக்கின்றனர்.

இந்த பெண் பிறப்புறப்பு சிதைப்பு (FGM) கலாச்சார சடங்கானது பெரும்பாலும் ஆப்பரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, சோமாலியா போன்ற 27 நாடுகளால் அதிக அளவு கடைப்பிடிக்கப்படுகிறது.



ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து இந்தோனேசியா, ஈராக் , குர்திஸ்தான், ஜெர்மன் போன்ற நாடுகளிலும் இம்முறை செறிவாக காணப்படுகிறது. அது மட்டும இல்லாமல் ஆசியா, ஆஸ்திரெலியாவில் குடிபெயர்தந்த இவ்வினத்தோர், அரபு நாடுகள் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடி பிரிவினரால் குறிப்பாக இஸ்லாம் மதத்தை சார்ந்த குறிப்பிட்ட பிரிவினரும் இந்த அநியாய கலாச்சார சடங்கை பின்பற்றுகின்றனர் என்பதை அறியும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. அவ்வளவு ஏன் இந்தியாவில் கூட மும்பை போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சம்பவம் நடக்கிறது என்ற தகவலும் வலம் வருகிறது.

அதாவது பெண் பிறப்புறப்பு சிதைப்பு (FGM) என்பது இஸ்லாம் மதத்தில் உள்ள ஒரு குறிப்பிட இனத்தின் பழங்குடி மக்களால் ஆண்களுக்கு சுன்னத்து செய்வது போல் பெண்களின் பிறப்புறப்பை அறுக்கும் ஒரு இழிவான, கொடுமையான மூட நம்பிக்கையின் உச்சம் தொட்ட ஒரு பாரம்பரிய கலாச்சார சடங்கு.

இந்த சடங்கானது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று எகிப்தில் உள்ள மம்மிகளின் மாதிரி உடலமைப்பை வைத்து ஒரு கருத்தும் நிலவுகிறது..

இந்த பெண் பிறப்புறப்பு சிதைப்பு நிகழ்த்தும் குறிப்பிட்ட இனத்தோர் இதை "காஃப்டா" அல்லது பெண் சுன்னத்து என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த சடங்கை நிகழ்த்தும் குடும்பங்களில் இது பெரிய விழாவாக தன் உறவினர்களை அழைத்து விருந்து உபச்சாரத்துடன் கொண்டாடுகிறார்களாம் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள். இந்த மதச் சடங்கிற்கு பலியாக இருக்கும் பெண்களின் வயது வரம்பு 3 முதல் 12 வயதுக்குள் இருப்பார்களாம். அதாவது பெண்கள் பருவமடைவதற்குள் இந்தச் சடங்கை செய்து வைத்து விடுவார்களாம். இந்த சடங்கை செய்பவர்கள் மருத்துவர்கள் அல்லாத அதே சமூகத்தை சார்ந்த வயதில் முதியவர்கள் என்னும் போது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


இந்த சடங்கு செய்ய இருக்கும் பெண் குழந்தைகளை அவரது பெற்றோர்கள்..... "செல்லக்குட்டி இங்கே வா, தங்கத்திற்கு சாப்பிட என்ன வேணும்" அப்படி என்று விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை ஆசை வார்த்தை காட்டி சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று துணிகளை அவிழ்த்து விட்டு படுக்க வைக்கின்றனர்.பின்பு தன் குழந்தையின் கண்களை கைகளால் இருக்க பொத்தி ஊரில் இந்த சடங்கு செய்வதற்கென்றே இருக்கும் கெழகட்டைகள்(கெழவி) முன்பு ஆஜார் படுத்துகின்றனர். அதன் பிறகு அந்த பெருசு தன் கைப்பையில் உள்ள அசுத்தமான பிளேடு அல்லது கத்தி அல்லது கூர்மையான கண்ணாடி சில்லை கொண்டு பெண்ணின் உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் சங்கமிக்கும் பெண் உறுப்பின் கிளிடோரியஸ் என்னும் கந்துப்பகுதியை எந்த வித வலி நிவாரணியோ, மயக்கமருந்தோ வழங்காமல், இரத்தம் தெறிக்க தெறிக்க ஈவு இரக்கமின்றி அறுத்து எறிந்து விடுவார்களாம்.....பெண்களின் புணர்ச்சி இன்பத்தை அதிகரிப்பது இந்த கிளிட்டோரியஸ். இதை அறுத்து எறிவதினால் அவர்களின் வாழ்நாளில் ஒரு போதும் பரவசநிலையை (orgasam) அடையமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.கீழே உள்ள படம் அதனை தெளிவுபடுத்தும்... இந்த புகைப்படத்தை கனத்த இதயத்துடன்தான் இங்கு பதிவேற்றுகிறேன்.


பெண் சுன்னத்து முறை (FGM) அந்த அந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு தகுந்தார் போல் மூன்று படிநிலைகளில் பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.

முதல் படிநிலை: இம்முறையில் பெண்ணின் கந்து முனையை (கிளிடோரியஸ்) மட்டும் நீக்கிவிடுகின்றனர்.

இரண்டாவது படிநிலை: இம்முறையில் பெண்ணின் கந்து முனையுடன் பெண் உறுப்பின் இதழ்களையும் வெட்டி நீக்கி விடுகின்றனர்.

மூன்றாவது படிநிலை : இம்முறை கொடுரத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அதாவது இம்முறையில் பெண் உறுப்பின் கந்து முனை+பெண் உறுப்பு இதழ்களை வெட்டி வீசிவிட்டு .....பெண் உறுப்பின் சிறுநீர் வெளியேற்றம் மற்றும் யோனி குழாய் துவாரத்திற்கு மட்டும் சிரிய இடம் விட்டு பெண் உறுப்பை முழுவதுமாக துணிதைக்கும் ஊசியால் தைத்து மூடி விடுவர். பெரும்பாலும் தையல் போடும் முறை ஆபிரிக்காவின் எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா மற்றும் வடக்கு சூடான் போன்ற நாடுகளில் பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. கீழே உள்ள படத்தை பார்த்தால் இன்னும் தெளிவாக புரியும்.



இவ்வாறாக பெண் உறுப்பு சிதைப்பு சடங்கு முடிந்த பின்பு அந்த பெண்ணின் காலை கட்டி படுத்த படுக்கையாக மாற்றி விடுவர். காயம் ஆறும் பொருட்டு 40 நாள் கழித்தே இச்சடங்கிற்கு ஆளான பெண்ணை பெற்றோர்களால் விடுவிப்பர். இந்த சடங்கு முடிந்தவுடன் பெண்ணின் பெற்றோர் குறிப்பாக தாய் உறவினர்களிடம் தன்னுடைய பெண் "புனிதமடைந்துவிட்டாள்" என்று பெருமையுடன் கூறி விழா ஏற்பாடு செய்து விருந்தும் அனுசரிக்கப்படும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ வலியின் வேதனையால் ஒரு மூளையில் படுத்த படுக்கையாக அழது கொண்டிருப்பாள்.இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலுமாக அழிந்துவிடும். அவர்களுக்கு மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும்.

இயல்பாக பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியும், எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவதில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். செக்ஸ் உணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே கைகோர்த்து நிற்கிறது.

இந்த குறிப்பிட்ட பிரிவினரால் நிகழ்த்தப்படும் இந்த கொடூரமான கலாச்சார சடங்கு பின்பற்றப் படுவதற்கான காரணமாக பின் வரும் விதியையும் கூறுகின்றனர்.

அதாவது "பெண்கள் சைத்தானின் மறு உருவம், அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆதலால் அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்" என்கிறார்கள். இவ்விதி மட்டும் இல்லாமல் மேலும் சில மூடத்தனமும் நிலவுகிறது.இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும். உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப்படுகின்றன.

இவ்வாறாக FGM செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணமானவுடன் கணவன்தான் பெண்ணுறுப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னிதான் என்பதற்கான சாட்சி அந்த தையல்தான்.அந்த தையல் பிரித்தவுடன் மீண்டும் அதிக அளவு உதிரப்போக்கும் வலியும் அந்த பெண் அனுபவிக்கிறாள்....

இந்த சடங்கால் 0.000000001% கூட பெண்களுக்கு பலன் கிடையாது. மாறாக உடல் நலம் பாதிப்படைகிறது, அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது, நீங்காத வலி, குழந்தை இன்மை மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்கள். எல்லாத்திற்கும் மேலாக மன உளைச்சல். என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.ஏன் இறப்பும் கூட ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த பெண் உறுப்பு சிதைப்பு என்கின்ற நரக வேதனை சடங்கிற்கு பலிக் கடாவாக்கப்பட்ட பெண்கள் பலர் இந்த FGM க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் குறிப்பிடதக்க ஒரு பெண்மணி தன் 5வது வயதில் இந்த சடங்கால் பாதிக்கப்பட்டு பின்னாலில் மிகப்பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியா நாட்டுப் பெண் இச்சடங்கை என சாடுகிறாள். பின்னாளில் பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்துக்கு இவரைத்தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது. கீழே படத்தில் உள்ளவர் தான் வாரிஸ் டேரி.


எகிப்தில் 2007 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு இவ்வாறான சடங்கு செய்யும் போது இறந்துவிட்டால்.இதனால் அங்கு பெண் உறுப்பு சிதைப்பு சடங்கிற்கு எதிராக புரட்சி வெடித்தது. அதன் பொருட்டு அங்கு FGM சட்டப்படி குற்றம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

1970 முதல் ஐ.நா சபை (UNESCO) பெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக பெயரளவில் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இதன் தீவிரத்தை உணர்ந்து 2012 முதல் FGM க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தது.

ஐ.நா சபையின் 2016 கருத்துக்கணிப்பின் படி உலகில் சுமார் 200 மில்லியன் (20 கோடி) பெண்கள் பெண் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தது.அதாவது உலகம் முழவதில் 20:1 (20-ல் ஒரு பெண் வீதம்) இந்த சடங்கால் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். இதில் ஆப்பரிக்கா கண்டத்தில் மட்டும் 13 கோடி பெண்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அதாவது 1 நாளைக்கு உலகம் முழுவதும் 6000 பெண்கள் வீதம் பாதிப்புக்குள்ளாகின்றனர் போன்ற புள்ளி விவரங்களை ஐ.நா சபை 2016-ல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. மேலும் இந்த FGM க்கு எதிரா உலக நாடுகள் அனைத்திற்கும் குறிப்பா ஆப்பரிக்கா நாடுகளில் ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இதன் விளைவாக இந்த பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக பல நாடுகள் தடை விதித்துள்ளது. இதன் பொருட்டு இச்சடங்கு பெரிதும் குறைந்துள்ளது என நம்பப்படுகிறது. அவ்வாறாக நம்பப்பட்டாலும் இன்றும் இந்த சடங்கை மத நம்பிக்கையின் அடிப்படையில் சில மிருகங்கள் சட்டத்திற்கு புறம்பாக அரங்கேற்றம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் இந்த ஊரடங்கின் போது இது போன்ற பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சம்பவம் பல நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.......

ஐ.நா அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 6 ஆம் நாளை பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிரான நாளாக அனுசரித்து வரப்படுகிறது.



இதுபோன்ற ஐ.நா சபையின் பல நடவடிக்கையால் ஆப்ரிக்காவின் உகண்டா போன்ற பலநாடுகளில் இந்தச் சடங்கிற்கு சமீபத்தில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் பெண் பிறப்புறப்பு சிதைப்புக்கு எதிராக அரசால் வைக்கப்பட்ட பதாகை படம் தான் இது.


கடைசியாக மத நம்பிக்கை, சடங்கு, கலாச்சாரம் என்று மிருகங்களை விட மனிதன் பெண்களுக்கு எதிராக இது போன்ற அநீதியை இழைத்து கொண்டு தான் இருக்கிறான். கதைகளில் அரக்கர்களை பற்றி நான் படித்ததுண்டு..இந்த கலாச்சார சடங்கை படிக்கும் போது நிஜத்திலும் அரக்கர்கள் வாழ்கிறார்கள் போலும் என்று என்ன தோன்றுகிறது.

விருப்பத்துடன் தன் கற்பை விற்று ஆபாச படங்கள் (pornography) நடித்து சம்பாதித்து வாழும் பெண்களுக்கு மத்தியில் தான் கற்புடையவள் என்பதை நிருபிக்க இது போன்ற விரும்பத்தகாத பெண் உறுப்பு சிதைப்பிற்கு உள்ளாகி வேதனையுடன் வாழும் பெண்கள் இந்த சமுகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது ஒரு வேடிக்கையான முரண். வேற என்னத்த சொல்ல.

Thanks to Tamil Wikipedia & Villankachaithi


 சுத்த சன்மார்க்கச் சட்டம் விதி எண்:60

60.  கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தயவை விருத்தி செய்யத் தடையாய் இருக்கின்றன. ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் ஆகிய ஆசார வகைகளை சுத்த சன்மார்க்கிகள் கைவிட்டு, கடவுள் அருளை பெற வேண்டும்.

T           T.M.RAMALINGAM
        9445545475

W

V

V


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.