Saturday, March 9, 2024

சுத்த சன்மார்க்கம் – சித்த வேதம் ஓர் ஒப்பீடு

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

சுத்த சன்மார்க்கம் – சித்த வேதம் ஓர் ஒப்புமை 

(இரண்டாம் பாகம்)

(முதல் பாகம்: https://vallalar.blogspot.com/2024/02/blog-post_22.html )



வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்ட ஆண்டு 1874 ஆகும். அதே ஆண்டில்தான் கேரளாவில் வடகரா நகரில் இராமன் நம்பியார் என்கின்ற சிவானந்த பரமஹம்சர் பிறந்தார். சூரியன் மறையும் போது நிலவு தோன்றித்தானே ஆகவேண்டும்.



வள்ளற்பெருமானின் பெயரிலும், சிவானந்த பரமஹம்சர் பெயரிலும் “இராம” நாமம் ஒன்றிணைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வள்ளலாரும் சிவானந்தரும் தங்களது மார்க்கத்தை போதிக்க சங்கங்களையே தோற்றுவித்தனர். ”சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்பது வள்ளலாருடையது. ”சித்தவித்தை சங்கம்” என்பது சிவானந்தருடையது. ஆனால் பிற்காலத்தில் 14-03-1936 ஆம் ஆண்டு “சித்தவித்தை சங்கம்” என்பதை கலைத்துவிட்டு அதற்கு பதில் “சித்தவித்தை அப்பியாச ஆலயம்” என்ற பெயரில் தமது மார்க்கத்தை பரப்ப வேண்டும் என சிவநாதர் ஆணையிட்டுள்ளார்.

புலால் (மாமிசம் உண்ணுதல்) மறுத்தல் என்பது சுத்த சன்மார்க்கத்திற்கும் சித்த வித்தைக்கும் அடிப்படை ஒழுக்கமாகவே உள்ளது. புலால் மறுத்தவர்கள் மட்டுமே இவ்விரண்டு மார்க்கங்களையும் பின்பற்ற முடியும். மாமிசம் உண்பவர்களோடு சேர்ந்து வசித்தல் கூடாது. அவற்றைத் தின்பவர்கள் சண்டாளர்கள் என்று கூறுகின்றது சித்த வித்தை.

ஜாதி, மதம், இனம் போன்ற ஆசாரங்களை முற்றிலும் தவிர்ப்பது இவ்விரு மார்க்கங்களிலும் உள்ளன.

விரதம் இருத்தல் (உண்ணா விரதம்) கூடாது. கோவில்களில் ஆராட்டு, பூரம், உற்சவம், வேளை, குருசி, திறை போன்ற விழாக்கள் நடத்துவது, அதில் கலந்துகொள்வது கூடாது.

சுத்த சன்மார்க்க அனுபவத்திற்கும், சித்த வித்தை அனுபவத்திற்கும் அவரவர்களது தலையே பிரதானமாக உள்ளது. அதாவது மனித உடலில் ”தலை” பாகம் மட்டுமே இந்த இரு மார்க்க அனுபவத்திற்கும் ஏற்றதாக உள்ளது. (புருவ மத்தி) எனவே இந்த இரு மார்க்கத்திற்கும் புறத்தில் உள்ள புனித இடங்கள், கோயில்கள், சபைகள், சர்ச்சுகள், மசூதிகள், பல்வேறு கடவுள் சிலைகள், படங்கள், குருமார்கள், மதங்களின் புனித நூல்கள் இப்படி எதுவும் தேவையற்றது / கூடவே கூடாது என்ற இரு மார்க்கங்களும் கண்டிப்பாகச் சொல்கின்றன. இவை இரண்டும் அக வழிபாட்டையே வலியுறுத்துகின்றன.

வள்ளலார் போதிப்பது சாகக் கல்வியாகும். சிவானந்தர் போதிப்பது சித்த வித்தையாகும். இவை இரண்டிற்கும் அடிப்படையிலேயே முரண் காணப்படுகின்றது. ஆனால் மேலோட்டமாகப் பார்த்தால் இவை இரண்டும் சாகா நிலையையே போதிக்கின்றது என்பதாய்த் தோன்றும். சித்த வித்தையை போதிப்பவர்கள் தாங்கள் சாகா நிலையை எய்துவதாக கூறுவார்கள். ஆனால் அனுபவத்தில் அது உண்மையல்ல. சித்த வித்தை என்ற அனுபவம் ஜீவ சமாதி பெறுதல் ஆகும். இந்த ஜீவ சமாதி அனுபவத்தை பெறக்கூடாது என வள்ளலார் எதிர்க்கின்றார். ஜீவ சமாதி என்பது சாகா நிலை அன்று. தனது தேகத்தை யார் ஒருவர் நிலத்திற்கோ, நெருப்பிற்கோ, நீருக்கோ, காற்றுக்கோ, ஆகாயத்துக்கோ கொடுத்துவிடாமல் (பஞ்ச பூதங்களில் ஒன்றிலும் தனது தேகத்தை கரைத்துக்கொள்ளக் கூடாது) என்றும் ஜீவனும் ஆன்மாவும் அதே தேகத்தில் நிலைத்திருக்கச் செய்வது அத்தேகத்தை ஞான தேகமாக்கிக் கொண்டு, அதே தேகத்தில் என்றும் இருப்பதே சாகா அனுபவமாகும். சாகாதவனே சன்மார்க்கி, இப்படிப்பட்ட சாகா நிலையினையே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் கூறுகின்றது. வள்ளற்பெருமானுக்கு முன்பும் பின்பும் இப்படிப்பட்ட சாகா நிலையை அடைந்தவர்கள் யாருமில்லை. அப்படி இருப்பதாய் கூறியவர்கள் எல்லாம் பஞ்ச பூதத்தில் ஏதேனும் ஒன்றில் தங்கள் தேகத்தை அப்புறப்படுத்தியிருப்பார்கள். அது சாகா நிலை அன்று. தற்போது பல சன்மார்க்கிகள் தங்களது உண்மை அன்பின் மூலம் (உண்மை அன்பு என்பது ஆண்டவரிடத்து வைப்பது) சாகா நிலை எய்த முயற்சி செய்து வருகின்றனர். உண்மை அன்பு மட்டுமே சாகாவரத்தைக் கொடுக்கும்.

சித்தவித்தையினால் ஜீவ சமாதி அனுபவம் பெற்றவர்கள், தங்களது ஜீவனையும் ஆன்மாவினையும் தங்களது உடலிலேயே நிலை நிறுத்திக்கொள்வார்கள். அதாவது மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தங்களது ஜீவனை பிரம்மரந்திரத்தில் ஐக்கியமாக்கிக் கொள்வார்கள். அவ்வாறு ஐக்கியமானவர்களை மண்ணில் புதைத்து விடுவதே சித்த வித்தையாளர்களின் செயலாக உள்ளது. இப்படிப்பட்ட ஜீவ ஐக்கியமானவர்களின் அனுபவத்தைப் பொறுத்து அவர்களின் உடல் இயற்கையாக மண்ணில் கலக்க நீண்ட வருடங்கள் ஆகும். எப்படி ஆகினும் ஓர் நாள் அவ்வுடல் மண்ணில் முற்றும் கலந்துப் போகும். அவ்வயம் அவர்களது ஐக்கியமான ஜீவனும் ஆன்மாவும் அவ்வுடலை விட்டுப் பிரியும். அப்போது அவர்களுக்கு மரணம் நிகழும். அதன் பிறகு அவ்வான்மா வேறு பிறவி எடுத்தே ஆக வேண்டும். இதனை மரணமில்லா பெரு வாழ்வு என்று சொல்லவே கூடாது.

சுத்த சன்மார்க்கத்தில் தலை உச்சியினையும், உடம்பு முழுவதையும் வெண் துணியினால் மறைக்க வேண்டும் என்பது விதி. (காவி கூடாது). ஆனால் சித்த வித்தையில் உச்சி மறைப்பும், உடம்பு மறைப்பும் கூடாது. சட்டை போன்ற ஆடைகளை அணியக்கூடாது. (பெண்கள் விதி விலக்கு) கோவணம் மட்டுமே அணிதல் வேண்டும். வேட்டி கட்டிக்கொள்கிறார்கள். சித்த வித்தையிலும் காவித் துணி அணியக்கூடாது. வெண் துகில் அணிய வேண்டும். தலைமுடி வெட்டுதல், சவரம் செய்தல் போன்றவையும் கூடாது.

சுத்த சன்மார்க்கத்தில் திருமணம் கூடாது. (பெண்/ஆண் உடலுறவுக் கூடாது). வள்ளற்பெருமான் இந்தக் கட்டளையை வெளிப்படையாக உறைக்காமல் மறை முகமாகக் கூறுவார். அதாவது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகம் வைத்திருப்பதே சாகாக் கல்விக்கு வழி என்பார் வள்ளலார். அவ்வாறு சதா ஞாபகம் வைத்திருப்போருக்கு கோசத்தடிப்பு உண்டாகாது என்பார் வள்ளலார். இவ்வாறு அதி தீவிர பக்குவிதான் சுத்த சன்மார்க்கர் அவர்கள். அதற்காக சன்யாசம் மேற்கொள்ளக்கூடாது.  

சித்த வித்தை பயில்வோர்கள் திருமணம் செய்யத் தடையில்லை. ஆனால் சித்த வித்தை பெற்றவர்கள் சித்த வித்தை பெறாதவர்களை திருமணம் செய்ய கூடாது. சித்த வித்தை பெற்றவர்கள்தான் ஒருவருக்கு ஒருவர் திருமணம் செய்ய வேண்டும் என்பது விதி. திருமணத்தில் தாலி கட்டக்கூடாது. திருமணத்தில் அனைத்து விடயங்களிலும் சடங்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சித்த வித்தையும். சுத்த சன்மார்க்கமும் சடங்குகளையும் கண் மூடித்தனங்களையும் முற்றிலும் எதிர்க்கின்றன.

சுத்த சன்மார்க்கர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் ஐந்து. ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்பனவாகும். அதுபோல் சில ஒழுக்கங்களை சித்த வித்தையினர் கடைபிடிக்க வேண்டும் என சிவானந்த பரமஹம்சரும் கட்டளையிட்டுள்ளார்கள். அவற்றில் சில முக்கியமானவைகளைக் காண்போம்.

மது, கஞ்சா, அபின், சுருட்டு, பீடி, சிகரெட்டு, பொடி போடுதல், புகையிலை, பாக்கு, சுண்ணாம்பு, மாமிசம், முட்டை போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.

சவரம் செய்யவோ, முடி வெட்டவோக் கூடாது.

முன்பிருந்த ஜாதி, மதத்தைப்பற்றி அபிமானம் கொள்ளவோ, பாவிக்கவோ, சொல்லவோ கூடாது.

தன்னுடைய பெயருடன் யாதொரு ஜாதிப் பெயரோ, பட்டமோ சேர்க்கவோ, சேர்த்துக் கூப்பிடவோ கூடாது.

தன்னுடைய பெயரில் சொத்துக்கள் இருந்தால், அதனில் ஒரு பகுதியினை சித்த வித்தை அப்பியாச ஆலயத்திற்கும் மற்றதை பிரித்துக் கொடுக்க வேண்டும். தன்னுடையப் பெயரில் சொத்து ஏதும் இருக்கக் கூடாது.

சித்த வித்தையில் சேர விரும்பினால், அவர் யாதொரு அரசியல் கட்சியிலும் சேர்ந்தவர் அல்ல என்று கிராம நிர்வாக அதிகாரி அல்லது காவல் ஆய்வாளரிடம் சான்றிதழ் வாங்கிவந்து கொடுக்க வேண்டும்.

அனுதினமும் அதிகாலை 3 மணி முதல் 5.20 வரையிலும், பகல் 12 மணி முதல் 2.20 வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் 9.50 வரையிலும் சமாஜவாதிகளுடன் சேர்ந்து சித்தவித்தை அப்பியாசம் (ஜெபம்) செய்ய வேண்டும்.

வித்தையின் இரகசிய அனுபவங்களை சொல்லவோ கேட்கவோ கூடாது. அனுபவம் வரும்போது வேறிட்டு ஒதுங்கி மெளனமாக இருக்க வேண்டும்.

வித்தையைக் கொண்டு யாதொரு வகையிலும் சித்தாட்டம் செய்யக்கூடாது.

சித்த வித்யார்த்திகள் யாரும் தனியாக ஆகாரம் சாப்பிடக்கூடாது. ஒரு பாத்திரத்தில் உணவு பதார்த்தங்களை எல்லாம் (சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல், கூட்டு இன்னும் என்னவோ... இவைகளின் சேர்க்கை) ஒன்றாகக் கலந்து ஏக ருசியாக, அதனை ஒரே இலையில் இட்டு, அதை எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும். இதனை சத்தினி என்கின்றார்கள். இவ்வாறு ஒன்றாக நீர் பானம் அருந்துவது சபீதி ஆகும்.

மரப்புளி, கடுகு, தேயிலை முதலானவற்றை விட்டுவிட வேண்டும்.

காப்பியை கஷாயமாக்கி வடிகட்டி சாப்பிடலாம்.

உணவுப் பண்டங்களை வியாபாரம் செய்யக்கூடாது.

தானாய், அறிவாய், நித்தியமாய் விளங்கும் ஜீவனே ஈஸ்வரன். அந்த ஜீவனை பேணிக்காப்பதுவே ஜீவகாருண்யம். அதுவே உண்மையான இறை வழிபாடு.

குடும்பத்தை விட்டு சன்னியாசம் மேற்கொள்வது மூட நம்பிக்கை ஆகும். இல்லறத்தில் இருந்துக்கொண்டே ஈஸ்வர சேவை செய்து விடுதலை பேறு அடையலாம்.

நம்முள்ளே இருக்கும் ஜீவன் பிராணனும், வெளியேறுவது அபானனும் ஆகும். இந்த பிராணனையும் அபானனையும் ஒன்றுபடுத்துவதற்கு உதவும் பயிற்சியே சித்தவித்தை அல்லது பிராணாயாமம் ஆகும். அப்போது நடைபெறும் சுவாச இயக்கம்தான் நமது ஆழ்ந்த தூக்கத்திலும் நடைபெறுகின்றது.

மனம் அடங்கும்போது நீரில் உப்பு கரைவதைப் போல, எண்ணங்களும் ஒடுங்கி விடுகின்றன. ஆகவேதான் ஆழ்ந்த தூக்க நிலையில் நமக்கு எந்த எண்ணங்களும் இல்லை. நாம் விழித்திருக்கும் வேளையிலும் அதே நிலமை நமக்கு கிடைக்க வேண்டும். அந்த நிலைமை கிடைப்பதற்கு வேண்டிய பயிற்சிதான் சித்தவித்தை.

கடவுள் உண்டா? இல்லையா? என்றால், சிலைகளில் கடவுள் இல்லை. உருவ வழிபாட்டில் இறைவன் உண்டு என்று கருதி அவற்றை வழிபட்டு விலைமதிப்பற்ற உயிராற்றலை வீண்படுத்தி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விக்ரகத்திற்கு பிராண பிரதிஷ்டை செய்வதெல்லாம் பொய். உயிர் வழிபாடுதான் இறை வழிபாடாகும். 

இராம நாமம் உண்மை. ஆனால், இராம அவதாரம் பொய் ஆகும்.

தூணிலும் துரும்பிலும் இறைவன் உண்டு என்று எண்ணி, இறைவழிபாடு என்ற பெயரால் பறவைகளையும் விலங்குகளையும் ஈவிரக்கமின்றி கொடூரமாக பலியிடுவதோடு தம்முடைய ஜீவனையும் நாசம் செய்து உலகோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். கோயிலில் மூலஸ்தானம் என்ற இடத்தில் குழிதோண்டி நிலைநிறுத்தப்பட்டுள்ள சிலையை நாம் தொடக்கூடாதென்றும், கருவறைக்குள் நுழையக் கூடாது என்றும் சொல்லும்போது, ​​நாமெல்லாம் எப்போது எந்தக் காலத்தில் ஈஸ்வரனோடு சேருவது?

உயிர் வாழ்வதற்குள்ள ஆகாரம் அன்னமாகும். அன்னம் உட்கொண்டால் இறக்கமாட்டார்கள். அன்னம் என்றால் சோறு அல்ல. சோறு தின்றால் இறப்பார்கள். “அச்னாதீதி அன்னம்” அதாவது அசனம் முதலான அன்னம் எனப்பொருள். அசித்தல் (எரிவது), பசித்தல் (கொதித்தல்), தெஹித்தல் (வேகுதல்), பசஷித்தல் (உண்ணுவது) ஆகிய நான்கு வண்ணமாய் இருப்பதே அன்னம். அதுதான் வாயு. அதைத்தான் அருந்த வேண்டும். அதை அருந்தினால் இறக்க வேண்டியதில்லை.

சித்தவித்தை என்பது எவறாலும் வெல்ல முடியாத ஓர் ஆயுதமாகும். அவ்வாயுதத்தை எச்சமயமும் அவரவர்களுடைய கைகளிலிருந்து கீழே வைக்காமல் பயிற்சி செய்து கொண்டிருந்தால், எந்த எதிரிகளும் நம்மைத் தொடுவதில்லை. ஒருவேளை அவர்கள் தொட்டுவிட்டால் அந்த எதிரிகளுடைய கண்டம் துண்டாகிப் போகிறது. அதற்கு எந்த சந்தேகமுமில்லை. எனவே பயிற்சி செய்து கொண்டிருந்தால் நமக்கு நேராக எந்த விரோதிகளும் வருவதில்லை. இது எமது கட்டளை.

இதுகாறும் நாம் சித்த வித்தையின் சில முக்கிய தத்துவங்களைப் பார்த்தோம். சுத்த சன்மார்க்கத்திற்கும் சித்த வித்தைக்கும் அடிப்படை ஒற்றுமை இருப்பினும், வேற்றுமையும் அடிப்படையிலேயே வந்துவிடுகின்றது. அதாவது சித்த வித்தை என்பது சாகா நிலையை கொடுக்கும் என்று சிவானந்த பரமஹம்சர் கூறுவது தவறாகும். ஜீவனை நமது தலையில் பூட்டி வைத்துக்கொண்டு அதனை வெளியில் விடாமல் செய்யும் வழிமுறை (சித்தவித்தை / மூச்சுப் பயிற்சி) ஒரு தவறான வழிமுறையாகும். ஜீவனை தலையில் பூட்டுகின்றீர்... ஆனால் உடம்பை மண்ணில் அல்லவா பூட்டுகின்றீர். இது எவ்வாறு சாகா நிலையாகும். சித்தவித்தை பயின்றால்  சிறு ஒளி தோன்றும், சித்துகள் சில கைகூடும் இதுவன்றி இதனால் ஆவதொன்றும் இல்லை.

சுத்த சன்மார்க்கத்தின் வழியில் ஜீவன் மற்றும் ஆன்மாவையும் உடம்புடன் இணைத்து, அவ்வுடம்பை பொன்னுடம்பு ஆக்குவதே சாகாக் கலையாகும். மற்ற அனைத்து பயிற்சியும் சாகும் நிலையிலேயே கொண்டுச் சென்று விடும்.

மேலும் சுத்த சன்மார்க்கத்தின் வழியில் பயிற்சி செய்தும் சாகா நிலை எய்த முடியாவிடில், அந்த ஜீவனை ஆன்மாவை இயற்கையாக தனது உடம்பிலிருந்து விடுவிப்பதே (மரணிப்பது) மிகச்சிறந்தது. ஏனெனில் அவ்வான்மா உடனே மறு உடம்பெடுத்து வந்து இதே சுத்த சன்மார்க்கத்தில் மீண்டும் பயணித்து அடுத்த பிறவியிலாவது பொன்னுடம்பு எடுக்க வாய்ப்பு இருக்கும். அதுவல்லாமல் சாதாரண ஜீவனை உடம்பில் வைத்து பூட்டுவது காலத்தை கடத்துதலுக்குத்தான் தூண்டுகிறது. அவ்வாறு செய்தல் கூடாது. ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதே மரணமிலா பெருவாழ்வு. (வள்ளற்பெருமானின் தேகத்தை புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவரின் வரைபடம்தான் தற்போது வரை யாவரும் பயன்படுத்துகின்றோம்.)

இவ்வொப்புமை பற்றி பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கக் கூடும். உங்கள் மாற்றுக் கருத்துக்கள் ஏதெனும் இருப்பின் இங்கே தெரிவிக்கலாம். நன்றி.




தி.ம.இராமலிங்கம்.
9445545475
vallalarmail@gmail.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.