Wednesday, June 14, 2017

“புத்தம்” - நமது தனிச் சிறைகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று புத்தம்” என்ற தலைப்பில் வெளியானவை…

நமது தனிச் சிறைகள்

உருவம், வேதனை, குறிப்பு, சங்காரங்கள், விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்கள் உள்ளன. இவ்வைந்தும் நமது அனுபவங்களின் ஐந்து அம்சங்கள். இவற்றோடு பற்றுக்கொள்வது நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொள்வது போல. கந்தம் (kantam, skandha, khandha ) என்றால் தொகுதி, குவியல் (Aggregate, collection, heap) எனப்படும்.

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன  
                   - மணிமேகலை 30-189,190

உதாரணம்: கட்டட வேலை நடைபெறும் இடத்தில் மணற் குவியல், செங்கற் குவியல், ஜல்லிக் குவியல், சிமென்ட் குவியல் போன்ற பொருட்களின் குவியல்களைக் காணலாம். இவற்றைக் கொண்டு கட்டடம் எழுப்பப் படுகிறது.

கந்தங்களின் ஐந்து குவியல்களான உருவம், நுகர்ச்சி (வேதனை), குறிப்பு, பாவனை (சங்காரம்), உணர்வு (விஞ்ஞானம்) ஆகிய ஐந்து. கந்தங்களை அனுபவிக்கும் போது அதனோடு நிற்பதில்லை. அழகிய உருவங்கள், நல்ல நுகர்ச்ச்சிகள் (வேதனா) போன்றவற்றை  நமது, என்னுடையது என்று நினைத்து, இந்த ஐந்து கந்தங்களை வைத்து "நான்" என்ற கற்பனைக் கட்டடம் கட்டி விடுகிறோம். ஆனால் கந்தங்களோ நிலையற்றவை, நம்பத்தகாதவை, சாரமற்றவை, மழை பெய்யும் போது நீரில் உண்டாகும் நுரையைப் போன்றவை என்று வர்ணிக்கபடுகின்றது. ஆனால் அவற்றோடுள்ள நமது இரும்புப் பிடியின் காரணமாக அவை மிகவும் பாரமாகத் தோன்றுகின்றன. இந்த இரும்புப்பிடியின் காரணமாக நாம் துக்கம் அனுபவிக்கின்றோம். அந்த அழகிய உருவமும், இன்ப நுகர்ச்சியும் என்னுடையது, அவைதான் நான் என்று நினைக்கும் போது, மாறும் தன்மை கொண்ட அவை மாறும் போது துக்கம் அனுபவிக்கின்றோம். கந்தங்களை அனுபவிப்பதில் நோக்கம் அத்தியாவசியமானது. ஆகவே நோக்கத்தை மாற்றிவிட்டாலோ, விட்டுவிட்டாலோ துக்கத்தையும் முடித்து விடலாம். இதுவே புத்தரின் போதனைகளின் சாரம். 

இவற்றைப் பற்றுக் கந்தங்கள் எனச் சொல்வதற்குக் காரணம் அவற்றோடு "நான்", "எனது" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பற்றுக் கொள்வதால் தான். உறுதியாக மண்ணில் பதிக்கப்பட்ட கட்டையில் கட்டப்பட்ட மிருகம் எப்படி அந்தக் கட்டையையே சுற்றிச் சுற்றி வருகிறதோ, அதன் அருகிலேயே நின்று, உட்கார்ந்து, படுத்துப் புரள்கிறதோ, அது போலவே இவ்வைந்து கந்தங்களைத் ‘தான்’ என்று நினைப்பவன் அவற்றிடமிருந்து தப்பிக்கவே முடியாது. எனவே இக்கந்தங்களோடு உடன்பட்டிருக்கும் துன்பத்திடமும், ஏமாற்றத்திடமும், கவலைகளிடத்திலுமிருந்தும் தப்பிக்கவே முடியாது.

1. உருவம்: ஒருவன் தமது உடலையே நான் எனக்கருதுவது ‘உருவம்’ என்கின்ற கந்தம் ஆகும். உடல் அதன் வாழ்நாளில் மழலைப் பருவம், குழந்தைப் பருவம், வளரும் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயது, முதுமை என்று பல பருவங்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வோர் நிலையிலும் அந்த வயதுக்கான துன்பத்தை அனுபவிக்கிறது. எனவே அதனை "நான்", "எனது" என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் பயன் ஏதும் இல்லை.

2. வேதனை: நமக்குள் எழும் உணர்ச்சிகளையே வேதனா கந்தம் என்கின்றோம். "நான் வசதியாக அல்லது மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கிறேன்," என்று கூறும்போது நாம் உணர்ச்சிகளோடு இணைந்து விடுகின்றோம். "என் மகிழ்ச்சியைப் பற்றி அவன் அக்கறை காட்ட வில்லை, அவன் என் மனதைப் புண்படுத்தினான்," என்று கூறுவதிலிருந்து நாம் உணர்ச்சிகள் நமக்குச் சொந்தமானவை என்று நினைப்பது தெரிகிறது. மூன்று வகையான உணர்ச்சிகள் உள்ளன. அவை இன்பமான உணர்ச்சிகள், கசப்பான உணர்ச்சிகள், நடுநிலையான உணர்ச்சிகள். இவற்றில் எச்சமயத்திலும் இரண்டு வகையான உணர்ச்சிகள் ஒரே சமயத்தில் எழாது. இன்பமான உணர்ச்சி இருக்கும் போது மற்ற இரண்டும் இருக்காது; பிடிக்காத உணர்ச்சிகள் இருக்கும் போது இன்பமான மற்றும் நடுநிலையான உணர்ச்சிகள் இருக்காது; அது போலவே நடுநிலையான உணர்ச்சியிருக்கும் போது மற்ற இரண்டு உணர்ச்சிகளும் எழாது. மஹாநிதான சூத்திரத்தில் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது: உணர்ச்சிகள் இவ்வாறு சிக்கலானவையாக இருக்கும் போது எந்த உணர்ச்சியை ‘நான்’ என்று ஏற்பது? 

வேதனாசம்யுத்தை காற்று மண்டலத்தில் பல விதமான காற்று வேவ்வேறு திசைகளில் அடிப்பது போல இந்த உடலில் எண்ணமுடியா உணர்ச்சிகள் எழுகின்றன என்று கூறுகிறது. நாம் பெரும்பாலும் இவ்வுணர்ச்சிகளை அறிவதில்லை, ஏனென்றால் அவற்றின் மேல் போதுமான கவனம் செலுத்துவதில்லை. நாம் இரண்டு நிமிடத்திற்கு மட்டுமே எவ்வளவு முறை நமது உடலை அசைக்கிறோம் என்பதையும் கால்களை இடம் மாற்றுகிறோம் என்பதையும் கவனித்தால் போதும், நாம் சில வினாடிகள் கூட நிலையாக இருப்பதில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்படுவோம். ஏன் இப்படித் தொடர்ந்து உடல் நிலையை மாற்றுகிறோம்? ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது அசௌகரியமாக இருப்பதால் வசதியைத் தேடி உடல் நிலையை மாற்றுகிறோம். உணர்ச்சிகளுக்குத் தகுந்தார்ப்போல் செயல்படுகிறோம். மேலும் மேலும் இன்பமான உணர்ச்சிகளைத் தேடுகிறோம். பிடிக்காத உணர்ச்சிகளை வெறுக்கிறோம். பொதுவாக நடுநிலையான உணர்ச்சிகளைக் கவனிப்பதில்லை. எனவே இன்பமான உணர்ச்சிகளுக்கு ஆசை பின்னனியில் உள்ள மனப்போக்காகவும், துன்பமான உணர்ச்சிகளுக்கு வெறுப்பும், நடுநிலையான உணர்ச்சிகளுக்கு அறியாமையும் பின்னனியில் உள்ள மனப்போக்காகவும் இருக்கின்றன. ஆகவே எல்லா உணர்ச்சிகளும் திறமையற்ற உள் நோக்கம் கொண்டுள்ளன. எனவே துக்கத்தைச் சார்ந்திருக்கின்றன. வசதியையும் இன்பத்தையும் வாழ்நாள் முழுவதும் தேடினாலும், நிரந்தரமான இன்பம் பாலைவனத்தில் உள்ள கானல் நீரைப் போல நமக்குக் கிடைப்பதில்லை.

புத்தர் உணர்ச்சியை ‘உணர்தல்’ என்ற நடவடிக்கை என்றார். உணர்ச்சி என்ற பொருள் ஒன்றும் இல்லை, உணர்ச்சி என்றால் உணர்தல். எனவே உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். அவை நிலையற்றவை. நமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையும் இல்லை. ஏனென்றால் நாம், "எனக்கு இந்த உணர்ச்சி வேண்டும் அல்லது அந்த உணர்ச்சி வேண்டாம்," என்று சொல்லமுடியாது. உணர்ச்சிகள் தானாக வந்து போகும். அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது. அவை நமக்குச் சொந்தமும் அல்ல. எனவே புத்தர் இவ்வாறு வலியுறுத்துகிறார்: "உங்களுக்குச் சொந்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்." மாற்றத்துக்குட்பட்டதையும், விரைவில் மாறுவதையும் ‘நமது, எனது’ என்று நினைப்பது துயரத்தை உண்டு செய்யும். அப்படி உணர்ச்சிகள் மீது சொந்தம் கொண்டாடுவதை விட்டு விட்டால் துக்கத்தின் முடிவைக் காணலாம்.

3. குறிப்பு: நமது மனம் ஒன்றை குறித்து குறிப்பெடுப்பதை குறிப்பு கந்தம் என்கின்றோம். நமது மனக்குறிப்புகளையே நமது கருத்துக்கள் என்கின்றோம்.     நமது கருத்துக்களோடு நாம் பற்றுக் கொண்டு அவை தான் நாம் என்று நினைக்கின்றோம்: "இது என் கருத்து, இது என் அபிப்பிராயம், இதைத்தான் நான் சொல்லவந்தேன்" - இது போன்ற சொற்களெல்லாம் நாம் கருத்துகளோடு ஒன்றி விட்டு அவற்றை நாம், நமது என்று நினைப்பதைக் குறிக்கிறது. சில சமயம் அதிகப் பற்றின் காரணமாக ஒரு கருத்துக்காக உயிரையும் விடத் தயாராகி விடுகிறோம். உலகில் கருத்துக்களைப் பரப்பவோ, பாதுகாக்கவோ போர்கள் நடத்தப் படுகின்றன. இது ஒரு குறிப்பிடத் தக்க பற்றென்பதால் புத்தர் இதனை "தித்'உபாதானா" என்றார் - நாம் நம்பும் ஒரு குறிப்பிட்ட கருத்தோடு பற்றுக் கொள்வது.

மன உத்வேக மாற்றத்தினாலும் சூழ்நிலைகளின் மாற்றத்தினாலும் நமது கருத்துக்களும் மாறுகின்றன. நண்பன் பகைவனாகிறான், பகைவன் நேசனாகிறான்; அறிமுகமில்லாதவர் கணவனாகிறார். ஆகவே கருத்துக்களும் மாற்றமில்லாமல் நிலையாக இருப்பதில்லை. அவற்றோடு "நான்", "எனது" என்று பற்றுக் கொண்டு விட்டால் பின் துயரம் அணுபவிக்காமல் இருக்கமுடியாது. 

பொதுவாகச் சில விஷயங்களில் இருவர் மேலோட்டமாக ஒரே கருத்துக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது மனக் குறிப்புகளைப் பொருத்தவரையும் நாம் ஒவ்வொருவரும் தனிச் சிறையில் இருப்பதை ஏற்றுக் கொள்வோம். நுண்ணறிவையும் மகிழ்ச்சியையும் உணர வேண்டுமானால் நாம் கருத்துக்களோடு உள்ள பற்றினையும் விட்டு விட வேண்டும். நீண்ட வருடங்களாகக் கற்றதை மறக்க வேண்டியிருக்கும். மனத்தை வெறுமையாக்க வேண்டியிருக்கும்.

4. சங்காரங்கள்: நாம் செய்யும் அல்லது செய்த வினைகளை செய்கைகளை நான் எனக் கருதுவதே சங்கார கந்தம் ஆகும். நான் செய்தேன், நடந்தேன், நின்றேன், படித்தேன், உட்கார்ந்தேன், வேலை செய்தேன், ஓய்வெடுத்தேன் என்ற செய்கைகளில் எல்லாம் “நான்” என்கின்ற பற்றுதலை இணைப்பதால் நாம் மிக ஈடுபாட்டுடன் ஒரு வேலையை செய்ய வேண்டியதாகின்றது. ஈடுபாட்டுடன் வேலைசெய்வதுமன்றி மற்றவரை மிஞ்சவும் பார்க்கின்றோம்.

இந்த அறிந்து செய்யும் செய்கைகளினால் நாம் பிறந்திதிலிருந்து இறக்கும் வரை தொடர்ந்து எதற்கேனும் தயார் படுத்திக் கொண்டே இருக்கின்றோம். மழலைப் பருவத்தில் குழந்தைப் பருவத்திற்காகத் தயாராகிறோம். தவழ, நடக்க, பேசத் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். குழந்தைப் பருவத்தில் இளமைப் பருவத்திற்காகவும், இளமைப் பருவத்தில் தொழில், வேலை செய்வதற்கான திறன்களை வளர்த்துக் கொண்டும் இருக்கின்றோம். இளமைப் பருவத்தைத் தாண்டியவர்கள் பெற்றோராகப் பொறுப்பேற்கத் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதுமையிலும் தயார் செய்வதை விடுவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்று சமயங்களின் பக்கம் திரும்புகிறோம். இதனை ‘சேதனா, நோக்கம்’ என்றும் சொல்லலாம். இந்த நோக்கம் தான் கன்ம சக்திகளுக்கு இடம் கொடுத்து ஒரு பிறப்பிலிருந்து அடுத்த பிறப்பிற்குச் செலுத்துகிறது. 

நமது விதியினை விரும்பிச் செய்யும் ‘செய்கைகள்’ என்ற சிறையிலிருந்தபடி நாம் தனியாக உருவாக்குகிறோம். நாம் சுதந்தரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் இந்தச் சிறை மதிலோடும்கூடப் பற்றுக் கோள்ளாமல் விட்டுவிட வேண்டும்.

5. விஞ்ஞானம்: ஒரு பொருளை நமது புலன்களைக் கொண்டு தெரிந்திருப்பது என்பதே விஞ்ஞான கந்தமாகும். கண்-விஞ்ஞானம், காது-விஞ்ஞானம், மூக்கு-விஞ்ஞானம், நாக்கு-விஞ்ஞானம், உடல்-விஞ்ஞானம் மற்றும் மன-விஞ்ஞானம் ஆகியவைகள் உள்ளன. புலன் களால் அறியும் அறிவு மிக வேகமாகவும், தொடர்ந்தும் நடைபெறுவதால் நாம் புலன்களின் நடவடிக்கைகளோடு இவ்வாறு பற்றுக் கொள்கிறோம்: "நான் கண்டேன். நான் கேட்டேன். நான் முகர்ந்தேன். நான் சுவைத்தேன். நான் எண்ணினேன்." புத்தரின் போதனைப் படி நான் என்றும், ஆத்துமா என்றும் புலன் பொருட்களை அறிந்து அனுபவிக்கும் ஒன்றும் இல்லை. புலன்களால் அறியும் அறிவு காரண காரியத் தொடர்பினால் உண்டானது. புலன் உறுப்புகளும், பொருட்களும் இருப்பதால் தான் விஞ்ஞானம் உண்டாகிறது.

நமது புலன்களால் உருவாகும் அறிவை ‘நான்’ என்று உணர்வது தவறு. உதாரணமாக மூவர் இரு சிறுவர்கள் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மூவரும் சண்டையிடும் ஒருவனின் நண்பன், விரோதி மற்றும் பெற்றோர் என்றால் அவர்கள் மூவரும் வெவ்வேறு விதமாகத்தான் அச்சண்டையை உணர்வார்கள். அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கும். எனவே புலன் சம்பந்தப்பட்ட அனுபவங்களிலும் நாம் தனிப்பட்ட சிறையிலேயே அடங்கியிருக்கின்றோம்.
 
    இந்த ஐந்து கந்தங்களும் நமக்கு ஒரு நிஜமான தனிச் சிறை போன்றதாகும். இந்தச் சிறையோடு பற்றுக் கொள்வதாலும் அது எப்படி இருக்கவேன்டும் என்ற நமது எதிர்பார்ப்பினாலும் நாம் மிகவும் துன்புறுகிறோம். உலகினைப் பற்றிய நமது குறிப்பும் மற்ற மனிதருடன் உள்ள நமது உறவுகளும் இந்தச் சிறையின் இயல்பினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், உறவுகளும் மற்றவரிடத்தே கருத்துப் பறிமாற்றங்களும் மிகவும் சிக்கலாகி, துன்புறுத்தும், பிரச்சனைகளாகி விடுகின்றன. நாம் எந்த அளவு இந்தத் தனிச்சிறையோடு பற்றுக் கொள்கிறோமோ அந்த அளவு பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.


நமது தனித் தன்மையின் (பர்ஸனாலிடி) வட்டத்தினுள் நாம் ஒவ்வொருவரும் தனியான வாழ்க்கை நடத்துவதால், மனிதரிடையேயான உறவுகளும் மிகவும் சிக்கலானவையாகின்றன. இந்தச் சிறையிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்த ஐந்து கந்தங்களை 'நான்' அல்லது 'எனது' என்று நினைப்பதை நிறுத்தவேண்டும். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.