Wednesday, June 14, 2017

மே – தின வாழ்த்துக்கள்:

மே – தின வாழ்த்துக்கள்:

“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்” என்பதே வள்ளற்பெருமானின் மே-தின வாழ்த்தாக அமைந்துள்ளது. உலகத் தொழிலாளர்களுக்காக அன்றைய தினம் வள்ளலாரால் உரைக்கப்பட்டதே இவ்வார்த்தைகள்.  வள்ளற்பெருமான் வெளிப்பட வாழ்ந்த காலத்தில்தான் உலகில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் உயர்ந்தோர்களால் சுரண்டப்படுகின்றோம் என்பதனை உணர்ந்து விழிப்படைந்தார்கள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமாக நடத்தப்படுதல், கொத்தடிமை முறைகள் போன்ற இழிவான செயல்களை உயர்ந்தோர்கள் எனக் கருதப்படும் முதலாளி வர்க்கத்தினர் தாழ்ந்தோர்கள் எனக் கருதப்படும் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏவி விட்டனர். இதனை எதிர்த்து 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளர்களின் புரட்சிகள் உலகெங்கும் வெடிக்க ஆரம்பித்தன.

ஆஸ்திரேலியா நாட்டில் 1856 – ஆம் ஆண்டு தொழிலாளர்களின் தொடர் போராட்டம் நடைபெற்றது. அதன் காரணமாக அவ்வருடம் மே – 01 ஆம் தேதி அப்போராட்டம் வெற்றி கண்டது. இதனைக்  கொண்டாடவே மே – 01 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. 1856 – ஆம் ஆண்டு தொழிலாளர்களின்  புரட்சி வென்ற போது  வள்ளற்பெருமானுக்கு  வயது 33 நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வயதில்தான் மேற்காணும் வார்த்தைகளை  பாடலாக வள்ளற்பெருமான் அருளி இவ்வுலகிற்கு அதனை தமது  செய்திகளாகவும், வாழ்த்தாகவும்  தெரிவித்திருக்க வேண்டும். மேலும் இந்த மே தினம் உலகம் முழுதும் வியாபிக்க 33 ஆண்டுகள் ஆகியது. அதாவது 1889 – ஆம் ஆண்டுதான் உலகம் முழுதும் தொழிலாளர்களின் புரட்சிவிழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் முதல் தொழிலாளர் தினத்தை பொதுவுடைமை வாதியான தலைசிறந்த  சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் அவர்கள் 1923-ஆம் ஆண்டு சென்னை  உயர்நீதி மன்றம் அருகே உள்ள கடற்கரையில் கொண்டாடினார். நமது வள்ளற்பெருமானும் பொதுவுடைமைவாதிதான் என்பது  குறிப்பிடத்தக்கது. அதனால்தானோ என்னவோ வள்ளற்பெருமானின் நூறாவது  வயதில், ஒரு பொதுவுடமை வாதியால் சென்னையில் இந்த மே – தினம் இந்தியாவிலேயே முதன் முதலாக கொண்டாடப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும்”

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்…”

“எளியரை வலியர் அடித்தபோது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன்….”
“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க, தெருள் நயந்த நொல்லோர் நினைத்த நலம் பெறுக, நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து”

“ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ”
“தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ”
“மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ”
“வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ”
“பசித்தோர் முகத்தை பாராதிருந்தேனோ”
“இரப்போர்க்கு பிச்சை இல்லையென்றேனோ”
“குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ”
“வெய்யிலுக்கு ஒதுங்கும் விருசஷமழித்தேனோ”
“பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ”

இவைகள் போன்று பொதுவுடைமை கருத்துக்களை வள்ளற்பெருமான் தமது திருவருட்பாவில் நிறைய  பேசியுள்ளார்கள். பேசியதோடு மட்டுமல்லாமல் இந்த மே – மாதத்தில்தான் (23-05-1867) உலக ஏழைகளுக்காக வடலூரில் தருமச்சாலையை  தொடங்குகின்றார். அதே நாளில் ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரமும் வெளியிடுகின்றார்.

வள்ளற்பெருமானின் கனவாகிய  ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் யாவரும் ஒருமை கண்டு ஒரு பொதுவுடைமை சமதரும சமுதாயம் இவ்வுலகில் நடைபெற வேண்டும் என்று விரும்பி தொழிலாளர் தின வாழ்த்துக்களை உலகியர்களுக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் வெளிப்படுத்தி மகிழ்கின்றேன்.                                                                                                     TMR














No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.