Wednesday, June 14, 2017

“திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்” – உரை.

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று வெளியான திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்” – உரை.

சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி                - 32

சுத்தமெய்ஞ் ஞானம்: சுத்த+மெய்+ஞானம். ‘சுத்த உடம்பைப் பெறுகின்ற அறிவு’ என்பதே சுத்த மெய்ஞ்ஞானமாகும். சுத்த உடம்பிற்கே “மெய்” எனப்பெயர். சிலர் மெய்ஞ்ஞானம் என்றால் உண்மை அறிவு என்றும் கூறுவர். இடத்திற்குத் தக்க நாம் பொருள் கொள்ளலாம். “தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்…” (3766) என்றும் “சாகாத கல்விநிலை காணேன் பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்…”(3035) என்றும் சுத்த உடம்பைப் பெறுகின்ற அறிவை எனக்கருள்வாய் என வள்ளற்பெருமான் இறைவனிடம் வேண்டுகின்றார்.  

அவ்வேண்டுதல் கிடைத்ததா?... கிடைத்தது. “தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே…”(4626) என்றும் “எல்லாம் வல்ல சித்தனைக் கூடிக் குலவி அமுதுண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன்…”(5413) என்றெல்லாம் அந்த சுத்த மெய்ஞ்ஞான தேகத்தை தாம் பெற்றுவிட்டதை தெரிவிக்கின்றார்.

சுகோதய வெளி: அலுப்பில்லாத ஆனந்த நிலையே சுகம் ஆகும். அப்படிப்பட்ட சுகம் உதயமாகின்ற இடமே சுகோதய வெளியாகும். அது எந்த இடமெனில் “அத்துவிதமாக” விளங்குமிடமான சிற்சபை அல்லது புருவமத்தியாகும்.

“என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
 இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்…”(5818)

“நான்” என்கின்ற ஜீவாத்மா இருக்குமிடமான சிற்சபையில் பரமாத்மா என்கின்ற சாமி வந்து அமர்ந்துவிட்டப் பிறகு, “நான்” என்பது ஆசாமியா? சாமியா? என்று கூறமுடியாது, இருவரும் இரண்டற கலந்துவிடும் நிலையே அத்துவிதமாகும். அப்படிப்பட்ட அத்துவித நிலையை தருகின்ற இடமே சுகோதய வெளியாகும்.

          “…ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
                    தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
           ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
                   உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.”(5440)

தம்முடைய சிற்சபையில் நடைபெற்ற அத்துவித நிகழ்வினை எவ்வளவு அழகாக எடுத்துரைக்கின்றார் பாருங்கள். சிற்சபையில் உதயமான சுகமான அனுபவம் பெருவெளியெல்லாம் நிறைந்தது என்கின்றார். இதனைத்தான் இந்த திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளிலே நாம் காண்கின்றோம். அத்துவிதம் என்பதை “கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்பார் வள்ளலார். நாம் அடையவேண்டிய நான்கு புருஷார்த்தங்களில் இந்த அத்துவிதமும் ஒன்று. புருஷார்த்தம் என்றால் சத்தான பொருள்  எனக்கொள்க. இப்படிப்பட்ட அத்துவிதத்தை நாம் அடைய வேண்டுமானால் நமக்கு ஜீவ ஒழுக்கம் தேவை.

          ஜீவ ஒழுக்கம் என்பது, “ஆண் மக்கள் பெண் மக்கள் முதலிய யாவர்களிடத்தும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்வது.”

          ஜீவ ஒழுக்கத்தை சுருங்கக் கூறவேண்டுமாகில், மனித நேயமே ஜீவ ஒழுக்கமாகும். மனித நேயம் வேண்டுமானால் முதலில் நாம் ஒவ்வொருவரும் மேற்காணும் ஜாதி, சமயம் போன்ற பேதங்களை விட்டொழிக்க வேண்டும். அவ்வாறு விட்டவர்களால்தான் மற்றவர்களை பேதமின்றி பார்க்கமுடியும். நம்மை அடுத்தவர்கள், ஜாதிகளை மதங்களை குலங்களை சாத்திர சம்பந்தங்களை இவைபோன்ற பிற பேதப்பொருட்களை கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லாம் நம்மவர்கள்தாம் என்று தமக்கு சமமாக மற்றவர்களை உணர்வதே ஜீவ ஒழுக்கமாகும்.

          ஜீவ ஒழுக்கத்தை கடைபிடிப்பவன் எவனோ அவனே, “தன்னைப் போன்றே இறைவனும்” என்ற உறுதி பொருளை அடைவான். என்னைப்போன்றே மற்ற மனிதர்களும் இருக்கின்றார்கள் என்ற உண்மையானது, என்னைப்போன்றே கடவுளும் இருக்கின்றான் என்ற பேருண்மையை நோக்கி அழைத்துச்செல்கின்றது.

அதாவது நாம் எவ்வாறு பிற மனிதர்களும் நம்மைப்போன்றவர்கள் என்று எண்ணி ஜீவ ஒழுக்கத்தில் இருக்கின்றோமோ, அதேபோல கடவுளும் ஜீவ ஒழுக்கத்தை கடைபிடித்து, நம்மைப்போன்றே மற்ற உயிர்களும் இருக்கின்றன என்று கருதுவான். கடவுளின் ஜீவ ஒழுக்கத்தை அறிய வேண்டுமாகில் மனிதன் தன்னளவில் ஜீவ ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். “உயிருள் யாம் எம்முள் உயிர்” என்பதுதான் இறைவனின் ஜீவ ஒழுக்கமாகும். இதனை இறைவனே வள்ளற்பெருமானுக்கு அறிவிக்கின்றார்.   

இப்படி இறைவனின் ஜீவ ஒழுக்கத்தை அறிந்துக்கொண்டால், கடவுள் “நிலை”யாக தம் தேகத்தில் இருப்பதை உணர்வான். அதன் பிறகு தம் தேகமே “கடவுள் நிலை” என அறிவான். அவ்வாறு அறிபவன் உத்தமன். அதன் பிறகு தம் தேகத்தை நிலையாக்கிக் கொள்வதே “கடவுள் நிலையாதல்” (அம்மயமாதல்) என்றுணர்ந்து முத்தேக சித்தி அடைவான். அவ்வாறு முத்தேக சித்தியடைந்தவன், சுத்தமெய்ஞானியாவார். சுத்தமெய்ஞ்ஞானி என்பவர் இறைமயமாய் இருப்பவர். இதுதான் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்பதின் விளக்கமாகும். இதுவே அத்துவிதம் என்பதாகும். இப்படிப்பட்ட அத்துவிதம் நமது தேகத்தில் நெற்றிக்கண்ணான சிற்சபையில் நடந்தேறும்.

“கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமம்…. பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்தமாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும்.” என்று திருவருட்பா உரைநடை நூல் (பக்கம் 374) உரைப்பதையும் காண்க.

வள்ளற்பெருமான் இறைவனுடன் இரண்டற கலந்துவிட்டார் என்றால், வள்ளற்பெருமான் இறைவனாகிவிட்டார். இனி வள்ளற்பெருமான் என்கின்ற தேகம் கிடையாது என்பதல்ல. இறைவன் எவ்வாறு நிலைத்த தன்மையோடு இருக்கின்றாரோ அதுவாறு தமது தேகத்தையும் நிலைத்த தன்மையாக்கிக்கொண்டார் என்றே பொருள். அதுதான் முத்தேக சித்தி. அதுதான் வள்ளற்பெருமானின் அத்துவிதமாகும். அதுதான் கடவுணிலை யறிந்து அம்மயமதலாகும்.   அதுதான் வள்ளற்பெருமானின் சுத்த மெய்ஞ்ஞான சித்தியாகும்.       

என்னுடைய உடம்பினுள் சிற்சபை இடத்தே இரண்டறக் கலந்து, பேரானந்தச் சுகத்தை கொடுத்து, சுத்த மெய்ஞ்ஞான சித்தியை எனக்கு அளித்த இறைவனே.   
  
தூய கலாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 34

அந்தங்கள் (முடிபுகள்) மொத்தம் ஆறு வகைப்படுகின்றன. இதனை ஷடாந்தம் என்பர். வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்பனவையே அவை.

அந்தமோ ராறும் அறிவார் அதிசுத்தர்
அந்தமோ ராறும் அறிவார் அமலத்தர் – 2371

மேற்காணும் அந்தவகைகள் ஆறின் அனுபவத்தையும் ஒருங்கே அடைந்தவர்கள் சுத்த தேகியர் மற்றும் மலமற்றவர்கள் என்கின்றார் திருமூலர். இந்த ஆறு அந்தத்தில் இறுதியாக உள்ளது கலாந்தம். கலாந்தம் என்றால் அருள்ஒளியின் முடிபு. சிற்சபையில் தோன்றும் ஒளிகாட்சி நிறைவுபட்டு (பாழ்பட்டு) அதற்கும் மேற்பட்ட துரிய நிலைக்குச் செல்லுதல். ஒளிக்காட்சி பாழ்படும் நிலைக்கு கலாந்தம் எனப்பெயர். இவையெல்லாம் வள்ளலார் வருகைக்கு முன்னம் இவ்வுலகம் கண்ட சமயத்தார்கள் கண்ட முடிபுகள் ஆகும். வள்ளற்பெருமானின் அனுபவ முடிபுகளானது இவைகளையொட்டியே இன்னும் சற்று மேலான அனுபவத்தைக் காண்கின்றார். அப்படி தான் கண்ட அந்த ஆறு முடிபுகளுக்கும் ஒவ்வொரு அடைமொழியினை அளித்து எமது அனுபவமானது சற்று மாறுபட்டது மேலானது என்று இவ்வுலகிற்கு அறிவிக்கின்றார். ஆனாலும் சமயத்தில் காணப்பட்ட ஆறு அந்தங்களின் அனுபவமும் எமது அனுபவத்திற்கு அநந்நியமானது  அந்நியமல்ல என்கின்றார். அதாவது சமய அந்தத்தின் அனுபவங்கள் எனது அனுபவத்திற்கு உறவுகளாகத்தான் உள்ளன. ஆனால் அந்த அனுபவத்தைவிட எமது அனுபவம் சற்று மேலானது என்கின்றார். ஒரே வகுப்பு படித்த மாணவர்களுள் 60 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும், 100 சதவிகித மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் உள்ள விக்தியாசம் இது எனலாம்.

          சுத்த வேதாந்தம், சுத்த சித்தாந்தம், விமல போதாந்தம், பெரிய நாதாந்தம், ஞான யோகாந்தம், தூய கலாந்தம் என்று தமது அனுபவத்தின் மாறுபாட்டை பெயரிலும் மாறுபடுத்திக் காட்டுகின்றார். மேலும் போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆகிய நான்கு அந்தங்களும் தனித்து இயங்காமல் அவைகள் வேதாந்தத்திலும் சித்தாந்தத்திலும் ஐக்கியமாக உள்ளன என்கின்றார் வள்ளலார். எப்படி எனில் போதாந்தமும் யோகாந்தமும் வேதாந்தத்தில் ஐக்கியமாகி உள்ளன. நாதாந்தமும் கலாந்தமும் சித்தாந்தத்தில் ஐக்கியமாகி உள்ளன. இப்படிப்பட்ட அந்தங்களின் இரகசியம் வள்ளற்பெருமானால் இவ்வுலகில் வெளிப்பட்டுள்ளது.

          இவ்வாறு போதாந்தந்தமும் யோகாந்தமும் அடங்கிய வேதாந்தத்தை “சுத்த வேதாந்தம்” என்றும், நாதாந்தமும் கலாந்தமும் அடங்கிய சித்தாந்தத்தை “சுத்த சித்தாந்தம்” என்றும் வள்ளற்பெருமான் அழைக்கின்றார். இப்புதிய இரண்டு அனுபவங்களான சுத்த வேதாந்தத்திற்கும் சுத்த சித்தாந்தத்திற்கும் அதீதமாக விளங்கும் சுத்த வேதாந்தாந்தம், சுத்த சித்தாந்தாந்தம் ஆகிய இவையே வள்ளற்பெருமான் இப்புவியில் புதியதாக வெளிப்படுத்திய “சமரச சுத்த சன்மார்க்கம்” ஆகும். இந்த சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கமாகும். இப்போது நாம் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளுக்கு வருவோம்…                               
ஆய சிற்சபை: வலது கண், இடது கண், நெற்றிக்கண் ஆகிய முக்கோண மாடத்தை ஆய்த எழுத்தாக வரையறுத்ததை நாம் இதற்கு முன்பே கண்டோம். அப்படிப்பட்ட ஆய்த இடத்திற்கு சிற்சபை எனப் பெயரிட்டு அழைக்கின்றோம். ஆய்த சிற்சபையே இங்கு ஆய சிற்சபை என வழங்கப்பட்டுள்ளது.

          மாசற்ற ஒளி வடிவின் முடிபைக்காட்டுகின்ற வெளி, சுகந்தரு வெளியாக உள்ளது. அப்படிப்பட்ட சுகந்தரு வெளியான சிற்சபையில் விளங்குகின்ற இறைவனே.

ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 36

ஞான யோகாந்தம்: சித்தத்தை அடங்குதலே யோகம் ஆகும். சித்தத்தின் விரிவுகளாகிய மனம், அறிவு, அகங்காரம் இவைகளை அடக்குவதே யோகமாகும். இதுவரை அனைத்து சமயங்களிலும் யோக வழிமுறைகள் இவ்வாறே கற்பிக்கப்பட்டுள்ளன. இந்த கற்பினைகளை கற்கும் ஒருவர் இறுதியில் சமாதி நிலை அடைவார். அதனையே யோகாந்தம் என்பர். யோகத்தின் முடிபு சமாதியாகும். வள்ளற்பெருமான் கூறுவது ஞான யோகாந்தம். ஞான யோகம் என்பது, மேற்கூறிய மனம், அறிவு, அகங்காரமாகிய சித்தங்களை அடக்காமல் அவைகளை ஞான வழியில் செலுத்துதல் ஆகும். இதனைத்தான் “சமாதி பழக்கம் பழக்கமல்ல. சகஜ பழக்கமே பழக்கம்” என்று திருவருட்பா உரைநடை பக்கம் 438 கூறுகின்றது. ஞான வழியில் சித்தத்தை திருப்புவதே சகஜ பழக்கமாகும். ஞான யோகத்தின் முடிபு அதாவது ஞான யோகாந்தம் என்பது மரணமிலா பெருவாழ்வு ஆகும்.

நெகிழ்ச்சியுறுதல், ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை கொள்ளுதல், சிற்சபையின் கண்ணே மனதை நிறுத்துதல் போன்றவையே மனம் ஞான வழியில் செல்லுதலாம்.

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிந்து அதன் வழி செல்லுதலும், உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளுதலும் - அறிவு ஞான வழியில் செல்லுதலாம்.

தன்னை மதியாதிருத்தலும், தன்னை தாழ்த்திக்கொள்ளுதலும், மானமெலாம் போன வழி விடுத்தேன் என்று நடப்பதுவே – அகங்காரம் ஞான வழியில் செல்லுதலாம்.

இவ்வாறு ஞான யோகத்தை பயின்றால் ஞான யோகத்தின் முடிபான மரணமிலா வாழ்வு கிடைக்கும்.

ஆனியில் சிற்சபை: ஆன் என்றால் பசு. பசு என்பது நமது ஆன்மாவைக்குறிக்கும் சொல். ஆன்மிகம் என்றால் ஆன்மவியல் அல்லது ஆன்மநேயம் எனப்பொருள். “ஆனின்பால் ஆடுவீர் வாரீர்” (4432), எல்லா உயிருள்ளும் ஆடுவீர் வாரீர் என்றும் வள்ளலார் பாடுவதையும் காண்கின்றோம்.  ஆன்மாக்களை திருவெளி என்கிறார் வள்ளற்பெருமான். சிற்சபையிலிருக்கும் ஆன்மா என்பதே ஆனியில் சிற்சபை என்கின்றோம். ஆனி என்றால் ஆன்மாவைக்குறிக்கும். மரணத்தை “தேக ஆனி” என்று வள்ளற்பெருமான் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிற்சபையிலே அமர்ந்துள்ள எனதுயிரான திருவெளியில் ஞான யோகாந்த நடனமிடுகின்ற இறைவனே. 

விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 38

விமலம் என்றால் சுத்தம் எனப்படும். போதம் என்றால் அறிவின் மலர்ச்சி எனப்படும். இதனை தாமரைப்பூ மலர்ந்திருக்கும் காட்சிக்கு ஒப்பிடுவர். போதாந்தம் என்றால் அறிவின் எல்லை, அறிவின் முடிபு எனப்படும். அமலம் என்றால் மலமற்றது.

சுத்த அறிவின் முடிபே மெய்ப்பொருள் வெளியாக விளங்குகின்றது. சுத்த சன்மார்க்கத்தில் நடப்பதே சுத்த அறிவாகும். அப்படி சுத்த சன்மார்க்கத்தின் முடிபுகாக விளங்குவது எதுவெனில், இவ்வுடம்பே பொருள் வெளியாக இருக்கக்காணலாம். பொருள் என்றால் இறைவன். பொருள் வெளி = இறைவெளி.

மலமற்ற சிற்சபையை எமது உடம்பினுள்ளே காணும்போது சுத்த அறிவின் முடிபாக எமது உடம்பையே இறைவெளியாக ஆக்கிய இறைவா. 

                                                 – தி.ம.இராமலிங்கம் – கடலூர்        

1 comment:

  1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.