Wednesday, June 14, 2017

“சமணம்” - ஜைனர்களின் அர்த்தமாகதி பிராகிருதம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று “சமணம்” என்ற தலைப்பில் வெளியானவை…


ஜைனர்களின் அர்த்தமாகதி பிராகிருதம்

ஜைனர்களின் மத வழிபாட்டு மொழியாக இருந்தது அர்த்த மாகதி மொழி. பிற்காலத்தில் பௌத்த மதப்பிரிவுகள் பெரும்பாண்மையானவை சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலும், ஜைனர்கள் பிராகிருதத்தை கைவிடவில்லை. மிகவும் பின்னரே அவர்கள் சமஸ்கிருதத்துக்கு மாறினர் (இருப்பினும் அவர்களின் மூல நூல்கள் அர்த்த மாகதியிலேயே இருந்தன). ஜைனர்களின் இந்த பிராகிருத பயன்பாடு, வைதிகர்களின் விமர்சனத்துக்கும் ஏளனத்துக்கும் உட்படுத்தபட்டது.

உதாரணமாக, 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், ஜைனர்கள் குறித்து இவ்வாறு பாடுகிறார்.

நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோடி யாரையு நாணிலா
மண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகிய வடிகளே

நமண நந்தி, கர்ம வீரன், தர்ம சேனன் என்றவாறு பெயர்களைக்கொண்டு, குமணன் என்ற பெருமலைக்கு அருகில் இருக்கும் குன்றுகளைபோல, ஆடையின்றி “ஞமண ஞாஞண ஞான ஞோண” என்று நாணமில்லாது உச்சாடனம் செய்யும் ஜைனர்களால் சிவன் பழிக்கப்படுதலுக்கு உடையரோ ?

பொதுவாகவே பிராகிருத மொழிகளில் மெல்லின பிரயோகங்கள் அதிகமாக இருக்கும். எனவே, அவர்களின் மந்திரங்களை மேற்கண்டவாறு (ஞமண ஞாஞண ஞான ஞோண)  ஏளனம் செய்கிறார் சுந்தரர். வேறு சில பாடல்களிலும், ஆகமங்களின் மொழியை (சமஸ்கிருதம்) விடுத்து திரிந்த பிராகிருத மொழியை பயன்படுத்துவதை விமர்சிக்கின்றனர் நாயன்மார்கள்.

இதனால் அக்கால ஜைனர்கள் கவலை ஏதும் பட்டிருக்கப்போவதில்லை, அர்த்த மாகதி தான் அவர்களுடைய தேவ பாஷை ஆயிற்றே. ஜைனர்களின் படி, அர்த்த மாகதியே தெய்வ பாஷையும் மூல பாஷையும் ஆகும். இம்மொழியே வர்த்தமான மஹாவீரராலும், மற்ற (ஜைன) தேவதாமூர்த்திகளாலும் உபயோகப்படுத்தப்படுவது. 

ஜைனர்களின் ஔபாதிக சூத்திரத்தில் இவ்வாறு காணப்படுகிறது:

 


ப⁴க³வம் மஹாவீரே […] ஸவ்வபா⁴ஸாணுகா³மிணீஏ ஸரஸ்ஸஈஏ ஜோயணநீஹாரிணா ஸரேணம் அத்³த⁴மாக³ஹாஏ பா⁴ஸாஏ பா⁴ஸை […] ஸா வி ய ணம் அத்³த⁴மாக³ஹா பா⁴ஸா தேஸிம் ஸவ்வேஸிம் ஆரியம் அணாரியாணம் அப்பணோ ஸபா⁴ஸாஏ பரிணாமேணம்  பரிணமை

பகவான் மஹாவீரர் […] அனைத்து பாஷைகளுக்கும் அனுசரனையாக இருக்கக்கூடிய, அர்த்த மாகதி பாஷையை, ஒரு யோஜனை வரை கேட்கக்கூடிய குரலில் பேசுகிறார் […] அந்த அர்த்த மாகதி பாஷையானது, அனைவரது, ஆர்யர்களினதும் (உயர்ந்தோர்) அனார்யர்களினதும் (உயர்வற்றோர்) , சுயபாஷையாக பரிணமிக்கிறது.

ஆகவே, மஹாவீரர் மாகதி மொழியில் உபதேசிக்க, அந்த உபதேசங்கள் அனைத்து மக்களுடைய சொந்த மொழியில் மாற்றம் அடைகிறதாக கருதப்படுகிறது. இதே போன்றதொரு கருத்து பௌத்தர்களுக்கும் உண்டு. அதை பின்னர் காண்போம்.

11ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜைன ஆச்சாரியர் ஒருவரான நமிசாது, சமஸ்கிருதம் பிராகிருதத்தில் இருந்தே தோன்றியது என்ற கருத்தை முன்வைக்கின்றார்.

 

[…]பா³ல மஹிலாதி³ ஸுபோ³த⁴ம் ஸகல பா⁴ஷாநி ப³ந்த⁴நபூ⁴தம் வசநம் உச்யதே |  மேக⁴நிர்முக்தஜலம் இவைகஸ்வரூபம் தத்³ ஏவ ச தே³ஸ²விஸே²ஷாத் ஸம்ஸ்காரகரணாச் ச ஸமாஸாதி³தவிஸே²ஷம் ஸத்   ஸம்ஸ்க்ரு«தாத்³யுத்தரவிபே⁴தா³ந் ஆப்நோதி | […]


[…] [பிராகிருதம்]  குழந்தைகள் பெண்கள் ஆகியோருக்கு எளிதாகவும் சகல பாஷைகளின் மூலமாகவும் கூறப்படுகிறது. மேகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர் (பின்னர் பலவடிவம் எடுப்பது) போல, (பிராகிருதம்) ஒரே சொரூபம் கொண்டிருந்து, அதுவே, தேச விதேச வேறுபாடுகளாலும் சமாஸம் முதலிய விசேஷங்களை பெற்று, சமஸ்கிருதம் முதலிய பிற மொழிகளுக்கான பேதத்தை அடைகிறது […]

இதில் இருந்து மிகத்தெளிவாக, ஜைனர்கள் தம்முடைய பிராகிருத மொழியான அர்த்த மாகதியையே சமஸ்கிருதம் உட்பட்ட அனைத்து மொழிகளுக்கும் மூல மொழியாக கருதினர் என்பது தெரிகிறது. அவர்களை பொருத்த வரையில், அனைத்து மொழிகளும் தமது தேவ பாஷையான அர்த்த மாகதி மொழியில் இருந்தே உருவானவை.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.