Wednesday, June 14, 2017

எனது தாகம்

எனது தாகம்

தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்குகின்றது. அலுவலகம் செல்வதற்காக நான் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தேன். தாகம் அதிமகாவே பத்து ரூபாய் கொடுத்து “அம்மா” வாட்டர் பாட்டில் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.

சற்று தூரம் பேருந்து சென்றிருக்கும். அதற்குள் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் நான் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை அறிந்து, “தண்ணி கொஞ்சம் கொடுங்களேன்” என்று மெதுவாகக் கேட்டார். நான் காது கேளாதது போல கண்டுக்கொள்ளவில்லை. பத்து ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கின்றேன்… எனக்கே சொந்தமான தண்ணீரை இவர் எப்படி கேட்கலாம்? உள்ளுக்குள் அவர் மீது ஏகப்பட்ட கோபம் எனக்கு. இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஜன்னல் வழியே பார்வையை ஓட்டவிட்டேன்.

எங்கும் கல்லும் மண்ணும் நிறைந்த நிலப்பரப்பு. அனல் காற்று வீசியது. மரம், செடி, புல், பயிர் இப்படி பசுமை இனங்களை பார்க்கவே முடியவில்லை. ‘எனக்கு சொந்தமான தண்ணீர்’ என்று வானம் நினைத்ததால், பூமியில் மழை பெய்யவில்லையோ? என்று எனது மனம் உண்மையை உணரத்தொடங்கியது. அப்போது மீண்டும் சற்று வேகமானக் குரலில், சார் கொஞ்ஞம் தண்ணீர் தர்ரீங்களா? என்று கேட்டார் என் பக்கத்து இருக்கைக்காரர்.

அப்போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை. வேண்டா வெறுப்பாக எனது தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தேன். அவரும் அதனை வாங்கி பாதி பாட்டில் தண்ணீரை காலி செய்துவிட்டு, “அப்பா… இப்பத்தான் உயிரே வந்தது!” என்று என்னிடம் ஏறத்தாழ ஒன்றும்மில்லாத பாட்டிலை தந்தார். அவர் எனக்கு நன்றிகூட சொல்லவில்லை. ஆனாலும் அவர் சொன்ன அந்த வார்த்தை “இப்பத்தான் உயிரே வந்தது” என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.


“உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க” என்று எத்தனை முறை நான் அகவல் படித்திருப்பேன். ஆனாலும் என்னிடம் கெஞ்சி கேட்பவருக்கு கொஞ்சம் தண்ணீர் கூட என்னால் கொடுக்க முடியவில்லையே. என்ன நான் சன்மார்க்கி என என்னை நானே நொந்துக்கொண்டேன். எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இறைவன்தான் என்பதை நான் எனது அலுவலகம் அடைந்தப் பிறகு அறிந்துக்கொண்டேன்.                                                                    TMR

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.