Wednesday, June 14, 2017

“மாதம் ஒரு மகான்” - திரு விக்டோபா சுவாமிகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று “மாதம் ஒரு மகான்” என்கின்ற தலைப்பில் வெளியானது…

திரு விக்டோபா சுவாமிகள்

திரு விக்டோபா சுவாமிகள் இளைஞராக இருக்கும்போதே உலக வாழ்க்கையில் விருப்பமின்றி வீட்டைவிட்டு வெளியேறினார். வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் சுற்றித்திரிந்தார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். யாராவது உணவு கொடுத்தால் வாங்கி உண்பார். இல்லாவிட்டால் பட்டினிதான். கோவிலோ, வீட்டுத் திண்ணையோ, சாக்கடையோ அதுபற்றிய விருப்பு வெறுப்பு உணர்வின்றி அங்கேயே தங்குவார் தூங்குவார். யாராவது  ஏதும் விசாரித்தாலும் பதில் கூறாமல் மெளனமாகவே இருப்பார். சதா பிரமத்தில் லயித்திருந்ததால், தான் தனது என்ற எண்ணமும் உடல் உணர்வுமுமற்ற நிலையில் அவர் இருந்தார்.


ஒருமுறை போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அவர் எப்போதும் மெளனமாக இருப்பதும், எது கேட்டாலும் பதில் பேசாமல் நகர்ந்துவிடுவதும் சில போக்கிரிகளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அவரைச் சூழ்ந்துக்கொண்டு கிண்டல் செய்வதும் சீண்டி விளையாடுவதும் அவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது.

ஒரு நாள்…

சுவாமிகள் மெளனமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அன்றும் போக்கிரி இளைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவரைப் பேச வற்புறுத்தினர். சுவாமிகளோ பதில் பேசாமல் மெளனமாகவே இருந்தார். அவர்கள் பலமுறை வற்புறுத்தினர். சுவாமிகள் இறுதிவரை பேசவில்லை. அவர்களின் ஒருவன் மிகவும் ஆத்திரத்துடன், ‘இப்பொழுது நான் இவரைப் பேச வைக்கிறேன் பார்’ என்று கூறிச் சவால் விட்டான். தன் கையில் இருந்த குறடால் சுவாமிகளின் நாக்கைப் பிடித்து இழுத்தான். இரு தாடைகளையும் குறடால் நசுக்கினான். சுவாமிகள் வேதனையால் துடித்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. வலி பொறுக்க மாட்டாமல் ‘விட்டோபா, விட்டோபா’ எனக் கதறினார். கண் கலங்கினார். சுவாமிகளைப் பேசவைத்த மகிழ்ச்சியுடன் அந்தப் போக்கிரிகள் அங்கிருந்து ஓடினர்.

ஆனால்…

அவர்கள் செய்த தவறுக்கு ஓரிரு நாட்களிலேயே பலன் கிடைத்தது. போக்கிரி இளைஞர்கள் அனைவரும் காலரா நோய்க்கு ஒருவர்பின் ஒருவராகப் பலியாகினர்.  அவர்களது குடும்பமே வாரிசுகளற்று அனாதையானது.

சுவாமிகள் ஒரு மகான் என்றும், மகத்தான ஆற்றல் பெற்ற அவருக்குத்  துன்பம் விளைவித்ததால்தான், போக்கிரிகளுக்கு இந்நிலை ஏற்பட்டது என்பதனையும் மக்கள் உணர்ந்தனர். அவரைத்  தொழுது தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். சுவாமிகளோ பதில் ஏதும் பேசாமல் அந்த ஊரை விட்டுச் சென்று விட்டார். “விட்டோபா, விட்டோபா” என அரற்றியதால், அன்று முதல் அவர் “திரு விக்டோபா சுவாமிகள்” என்று அழைக்கப்பட்டார்.

மகான்களுக்கு அபவாதம் செய்தால் அது செய்தவர்களை மட்டுமல்ல. அவர்களது தலைமுறையையே பாதிக்கும். எனவே, ‘தான்’ என்ற அகந்தையை விடுத்து இவர்போன்ற ஞானியரது ஆசிகளைப் பெறவே முயல வேண்டும். நாம் இவரைவிட  பெரிய ஞானியை வழிபடுகிறோம். எனவே இவரெல்லாம் நம்மை ஒன்றும்  செய்துவிடமுடியாது என்ற அகம்பாவத்தால் பிறமகான்களை ஏளனம் செய்தல் கூடாது. பெரிய ஞானியானாலும் பைத்தியக்காரனனாலும் அவர்களுக்குள் இருப்பது ஒரே இறைவனே. நாம் யாவரையும் இறை அம்சமாகவே பார்த்து பழகுதல் வேண்டும்.


          சாகாதவனே சன்மார்க்கி என்பது உண்மை. ஆனாலும் பல ஞானிகள் அவர்களுக்கே தெரியாமல் சன்மார்க்க நிலைக்கு மிக அருகாமையில் வந்து சன்மார்க்க நிலையை அடையாமல் பல காரணங்களால் இறந்து விடுகின்றனர். இறந்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களை நாம் இனம் காண்பது அரிது. அவர்கள் இறந்துவிட்டனரே என்று நாம் எள்ளி நகைக்கக்கூடாது. நாம் சன்மார்க்கத்தை கடைபிடிப்பதால் நமக்கு வருகின்ற அகம்பாவம் இது. பெரும்பாலும் நாம் புறத்திலேதான் சன்மார்க்கத்தை கடைபிடிக்கிறோமே ஒழிய அகத்திலே கடைபிடிப்பதில்லை. அப்படியிருக்க, நாம் எள்ளி நகைக்கப்படுபவர் நமது நிலைக்கும் பல படி மேலே இருக்கின்றார் என்பதனை அவ்வப்போது நினைக்க வேண்டும். நாம் அவர்களை வழிபடவும் வேண்டாம். துச்சமாக நினைக்கவும் வேண்டாம். நமது நிலையினை உயர்த்துவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இங்கு மாதந்தோறும் ஒரு மகானின் வாழ்க்கையினை சுருக்கமாக தெரிவிப்பது எதனால் என்றால், அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அளவிடத்தான். மாறாக இங்கு கூறப்பட்டிருக்கும் மகானை மற்றொரு மகானுடன் ஒப்பிடுவதற்காக அல்ல என்பதனை நினைவு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.