வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு
ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி”
என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.
அருட்பெருஞ்ஜோதி
அகவல் உரை
(தொடர்-12)
தி.ம.இராமலிங்கம்
எனைத்துந் துன்பிலா
வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை
யருட்பெருஞ் ஜோதி – 92
அணு அளவேனும்
துன்பமில்லாத நிலை எப்படிபட்டதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடிகின்றதா?
அப்படிப்பட்ட பூரன சுகத்தை நம்மால் நினைத்துப்பார்த்து கற்பனை சுகமேனும் காண முடியுமா?
நாம் காணுகின்ற உலகியல் சுகங்களெல்லாம் துக்கம் சம்பந்தப்பட்டது. இவ்வுலகியலில் அமிழ்தும்
அளவுக்கும் மிஞ்சினால் விஷமாகிவிடுகின்றது. எல்லாச் சுகமும் ஒரு வரம்பிற்கு உட்பட்டு
அமைந்துள்ளது. வரம்பில்லா சுக நிலையை ஞான தேகம் மட்டுமே பெற இயலும். மலக்குடலை இயக்கும்
நமது தேகமானது பூரண சுகத்தை அனுபவிக்காது. மனம் இயங்காது ஆன்ம இயக்கத்தில் மட்டுமே
பூரண சுகம் காணமுடியும். ஆன்ம நிலை இயங்கும்போது மட்டுமே நாம் எண்ணிய அனைத்தும் கைகூடும்.
அப்படிப்பட்ட நிலையினை நமக்குள்ளே அமைந்துள்ள சிற்சபை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
அருள் மாளிகையே நமக்கு அளிக்கும்.
எவ்வளவு சிறிய
அளவிலும் (எனைத்து) துன்பம் இல்லாத நிலையை அளித்து நான் எண்ணியதை அனைத்தும் தருகின்ற
ஞானசபையில் அமர்ந்திருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
பாணிப் பிலதாய்ப்
பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ னம்பலத்
தருட்பெருஞ் ஜோதி – 94
மேன்மையுடைய எமது பொன்னான தேகத்தில் விளங்கிக்கொண்டிருக்கும்
எமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே… உம்மிடம் ஒரு வேண்டுகோள்… சாதி, சமயம், மதம் இவைகளை
விடுத்து உண்மை தெரிந்து வடலூர் ஞான சபையே இறைவன் விளங்கும் பொது இடம் எனத் தெளிந்தொர்க்கு
தாமதம் ஏதும் செய்திடாமல் உடனே உமது பேரருளை பொழிய வேண்டும் என்று வள்ளற்பெருமான் சுத்த
சன்மார்க்கிகளுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றார்.
பதிஞானம்
அடைந்தவர்களை பரவினோர் என்பர். பாணிப்பு என்றால் தாமதம்.
உண்மை பொருள் உணர்ந்தோர்க்கு ஒரு சிறிதும்
தாமதமின்றி அருள் புரிய வேண்டுமென் மேன்மை பொருந்திய பொன்னுடம்பில் வீற்றிருக்கும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
எம்பல மெனத்தொழு
தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய்
யருட்பெருஞ் ஜோதி – 96
நமது பலம் என்ன? பலவீனம் என்ன? என்று நாம்
ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளோம். எவர் ஒருவர் எமது பலம் அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் என்று உண்மை அறிந்து அவரையே தொழுது தொழுது அவரையே ஏற்றி பாடுகின்றாரோ அவருக்கு
இறைவனின் அருள் என்னும் பலம் கிட்டும்.
மலங்கழிந் துலகர் வானவர் ஆயினர்
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.(திருவருட்பா-5536)\
நமக்கு பக்கபலமாக
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கின்றார் என்போருக்கு அருள் புரிய வேண்டும் என தமது ஆண்டவருக்கே
கட்டளை இடுகின்றார் வள்ளற்பெருமான். அதனால் இன்றிலிருந்து எனது பலம் சுத்த சன்மார்க்கம்
என்று சொல்லுங்கள். எனது பலம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று சொல்லுங்கள். எனது தொழுகை
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கே என்று சொல்லுங்கள். அருள் பெற விழைவதைப் பாருங்கள்.
எனது பலம் சுத்த சன்மார்க்கமே என்றும், சுத்த
சன்மார்க்க பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே அணு தினமும் தொழுது அவரை ஏற்றி வழிபடுவோர்க்கு
அருள் புரியவேண்டுமென் அம்பலத்தில் ஆடல் செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
தம்பர ஞான சிதம்பர
மெனுமோர்
அம்பரத் தோங்கிய
அருட்பெருஞ் ஜோதி – 98
தமது பரம் / கடவுள் உத்தரஞான சிதம்பரமான
வடலூரிலே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆவார் என வள்ளலார் குறிப்பிடுகின்றார்.
வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து ஆகாய வெளியில் (அம்பரம் – ஆகாயம்) ஓங்கி அருளுகின்றார்.
உத்தரஞான சிதம்பரமான
வடலூர் ஞானசபை என்னும் ஆகாயத்தில் ஓங்கி அருளுகின்ற எனது பரமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
எச்சபை பொதுவென
வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு
மருட்பெருஞ் ஜோதி – 100
எல்லா உயிர்களுக்குள்ளும் பொதுவாக இருப்பது
சிற்சபையும் பொற்சபையுமாகும். இச்சபைகள் இல்லாத உயிர்களே கிடையாது. எனவே இச்சபைகள்
உயிர்களுக்கெல்லாம் பொதுவென இருப்பதாக சன்மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். இவ்வாறு பொதுவாக
இருக்கின்ற சபைதனிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குகின்றார். இதனையே உயிருள் யாம்…
எம்முள் உயிர் என்பார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். எல்லா உயிர்களிடத்தும் கடவுள் பொதுவாக
விளங்குகின்றபடியால், ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை வேண்டும் என வள்ளலார் விளம்புகின்றார்.
அப்படிப்பட்ட பொது சபையினையே வடலூரில் சத்திய ஞான சபையாக உருவகப்படுத்தி அங்கு அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரையே குடிகொள்ள வைத்துவிடுகின்றார் வள்ளலார். தற்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதுபோல் சத்தியஞான சபையிலும் விளங்குகின்றார். சத்திய
ஞான சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. அது கடவுளின் உயிரோட்டம் கொண்ட பேராற்றல் உடையதாகும்.
புற உலகிலே சத்திய ஞான சபையே எல்லா உயிர்களுக்கும் பொதுவென இருக்கின்றது.
சன்மார்க்கர்கள் சத்திய ஞான சபையினை பொதுவென
உரைப்பதால், அப்பொதுவிடமே தமது இடமாகக் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.