Sunday, November 19, 2017

கருணைநிறை கருங்குழி

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.


கருணைநிறை கருங்குழி

அருட்பிரகாசர் தமது சென்னை வாழ்வை நீத்த பிறகு சிதம்பரம் கோயிலில் வந்து தங்கினார். சிதம்பரத்தில் தங்கியிருந்த அருட்பிரகாசரை தமது ஊருக்கு வந்து தங்குங்கள் என்று கருங்குழி மணியக்காரர் திரு.வேங்கட ரெட்டியார் அவர்கள் அழைத்தார்கள்.  அவரது அழைப்பினை ஏற்று 1858-ஆம் ஆண்டு
கருங்குழிக்கு எழுந்தருளினார். திரு.வேங்கட ரெட்டியார் இல்லத்திலேயே அருட்பிரகாசர் தங்கினார். அதுமுதல் 1867-ஆம் ஆண்டுவரை கருங்குழியே அவரது வசிப்பிடமாயிற்று. ஒன்பது ஆண்டுகள் அருட்பிரகாசரின் அருள் அவ்வூரில் விளையாடியது. திரு.வேங்கட ரெட்டியார் வீட்டில் தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம் நமது அருட்பிரகாசர் அவர்களால் நடந்தேறியது. இங்குள்ளபோதுதான் சமரச சன்மார்க்க சங்கம் 1865-ஆம் ஆண்டு தோற்றுவித்தார். திருவருட்பா முதல் நான்கு திருமுறைகளும் கருங்குழியிலிருக்கும்போதுதான் வெளியானது. மற்றும் பல அதிசயங்கள் இவ்வூரிலே நடைபெற்றன. காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயாவின் பிரபந்தத்திரட்டில் உள்ள வள்ளலாரின் வரலாற்றை படிக்கையில் கருங்குழியின் ஆற்றல் இன்னும் நமக்கு தெளிவாக விளங்கும்.

  
        அப்படிப்பட்ட கருணைமிகு கருங்குழி கிராமத்தில் மக்களின் எண்ணங்களையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் வண்ணம் சாராயக் கடையினை (டாஸ்மாக்) தமிழக அரசு திறந்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து 26-10-2017 வியாழன் அன்று சன்மார்க்க அன்பர்கள் பலர் சன்மார்க்க கொடியினை ஏந்தி வீதிக்கு வந்து போராடினர். வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் சாராயக்கடையினை விரைவில் மூடிவிடுவதாக அறிவித்ததால் இப்போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர் சன்மார்க்க சங்கத்தினர்கள்.


         
சாராயக்கடைகளை நடத்துவதை அரசு நிறுத்த வேண்டும். முக்கியமாக நற்கருங்குழி, வடலூர், மேட்டுக்குப்பம், திருமருதூர், காரணப்பட்டு, திருவொற்றியூர், வேட்டவலம், சின்னகாவனம், கல்பட்டு, கடலூர் துறைமுகம் போன்ற வள்ளற்பெருமான் திருவடி பதித்த புனித இடங்களில் சாராயக்கடைகள், மாமிசக் கடைகள் போன்றவைகளை நடத்த அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் கேட்டுக்கொள்கின்றது. (நன்றி...திரு.தமிழ் வேங்கை)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.