Sunday, November 19, 2017

நாயன்மார்களின் தத்துவங்கள்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.

நாயன்மார்களின் தத்துவங்கள்
(தி.ம.இராமலிங்கம்)

பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும்…. ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவதத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விஷேச காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தார்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும்…. (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-375)

மேற்குறிப்பிட்டுள்ள 63 நாயன்மார்களும் தத்துவ விளக்கங்கள்தான் என்கின்ற வள்ளலாரின் கூற்றினை விளக்க முற்படுவதே இந்த “நாயன்மார்களின் தத்துவங்கள்” என்ற தொடராகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் இயற்றப்பட்ட “திருத்தொண்டத் தொகை” என்னும் நூலில் 60 சிவ அடியார்களை மட்டுமே குறித்துள்ளார். இந்த 60 சிவ அடியார்களை எப்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்தார் என்பதற்கு ஒரு கதை உள்ளது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சிவபெருமானும் நண்பர்கள் என்று சைவம் கூறும். திருவாரூர் சிவாலயத்தில் இறைவனோடு சுந்தரமூர்த்தி சுவாமிகள் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் எண்ணற்ற சிவனடியார்கள் இருந்தனர். அவர்களை யாரென சிவபெருமானிடம் சுந்தரர் கேட்டார். அதற்கு சிவபெருமான் அங்கு குழுமியிருந்தோர்களின் பெருமையை சுந்தரருக்கு எடுத்துரைத்தார். அதன்பின்பு அடியார்களின் பெருமையை விரித்து பாடுமாறு சுந்தரரிடம் சிவபெருமான் கேட்டுக்கொண்டார். அந்தப் பாடல்களுக்கு சிவபெருமானே “தில்லை வாழ் அந்தணர்” என்று அடியெடுத்துக் கொடுத்தார்.

அடியார் பெருமைகளை சிவபெருமான் பாடியதாக நம்பப்படும் பாடல்…

பெருமையால் தம்மை ஒப்பார்
     பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
     ஊனம்மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
     அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
     இவரை நீ அடைவாய்.

அடியார்களின் புகழைப் பாடுவதால், தன்னையும் அடியார்களின் அடியான் என சுந்தரர் பாடுவார். இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் ஒன்றை அறியலாம். அதாவது சிவபெருமானை சூழ்ந்து நின்றுக்கொண்டிருந்த அந்த 60 அடியார்களும் மனித பிறவிகள் அல்ல என்பதே அது. மனிதர்களாகப் பிறந்து வாழ்ந்திருந்தால் சுந்தரர் என்ற மனிதருக்கு (சுந்தரரும் மனிதரல்லர், இவரும் தத்துவமே) 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருந்த சக சிவ அடியார்களை தெரியாமல் இருந்திருக்காது. இவர்களெல்லாம் யார்? என தமது நண்பரான இறைவனிடம் (சிவன் என்பதும் தத்துவமே) கேட்டிருக்க மாட்டார். இறைவனிடம் தத்துவங்கள் எல்லாம் அடியார்களாக / அடியாட்களாக நின்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தத்துவத்தின் வெற்றியினை விளக்க முற்படும்போது அடியார்களாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது அவ்வளவே. 

சுந்தரர் பாடியது 60 சிவ அடியார்கள்தான். ஆனால் 63 சிவ அடியார்கள் என்று சேக்கிழார் எப்படி வரையறுத்தார்? சேக்கிழாரால் இயற்றப்பட்ட பெரியபுராண 12-ஆம் நூற்றாண்டில் எழுந்தது. பெரியபுராணத்திற்கு மூல நூல் சுந்தரரின் திருத்தொண்டத்தொகையே ஆகும். அதனால் அந்நூலை இயற்றிய சுந்தரர் மற்றும் அவரது தந்தை சடையனார் தாய் இசை ஞானியார் அவர்களைய்யும் சேர்த்து 63 என வரையறுக்கின்றார். மேலும் 11-ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி இயற்றிய “திருத்தொண்டர் திருவந்தாதி” என்கின்ற நூலினையும் வழிநூலாக கொண்டுள்ளது பெரியபுராணம்.

திருத்தொண்டத் தொகையும், திருத்தொண்டர் திருவந்தாதியும் சிவ அடியார்களின் வரலாற்றை மிகச் சுருக்கமாகவே கூறுகின்றன. ஆனால் பெரியபுராணமோ மிக விரிவான வரலாற்றை கொண்டுள்ளது. காரணம் சேக்கிழார் பெருமானின் கற்பனையோட்டங்களே காரணம் என சொல்லலாம். பெரியபுராணம் இயற்றவேண்டி சேக்கிழார் சிதம்பரம் செல்கின்றார். அங்கிருந்த நடராஜன் ‘உலகெலாம்’ என்னும் அடியெடுத்து கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்…’ என பெரியபுராணத்தை துவங்குகின்றார். 4286 செய்யுள்களைக் கொண்ட பெரியபுராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் இப்புராணத்தை ‘பிள்ளை பாதி; புராணம் பாதி’ என்றும் கூறுவர். ஏன் திருஞானசம்பந்தருக்கு மட்டும் சேக்கிழார் பெருமான் முக்கியத்துவம் கொடுத்தார்? அவருடைய தத்துவம் மற்றவர்களின் தத்துவங்களைக் காட்டிலும் மிக உயர்ந்த தத்துவமாக இருக்குமோ?   

‘உலகெலாம்’ என்பது மெய்ம்மொழிதான் என 19-ஆம் நூற்றாண்டில் வருவிக்கவுற்ற வள்ளற்பெருமானும் ஒப்புக்கொண்டு, அந்த ஒரு சொல்லுக்கு தம்மால் இயன்றவரை பெரும் விளக்கமும் உரைநடையாக அளித்துள்ளார். ‘உலகெலாம்’ என்னும் ஒரு சொல்லுக்கான விளக்கமோ பெருகிக்கொண்டே இருப்பதாகச் சொல்லி அவற்றை எழுத்தில் எழுதிவிட முடியாது என முடித்துக்கொண்டார் வள்ளலார். அப்படி வள்ளலாரால் மெய்ம்மொழி என ஒப்புக்கொள்ளப்பட்டாலும் பெரியபுராணத்தில் உள்ள 63 மனிதர்களான சிவ அடியார்களை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களெல்லாம் உண்மையில் தத்துவங்கள் ஆகும். அத்தத்துவங்களை கடைபிடித்தால் அத்தத்துவமயமாகி சித்துக்களை பெறலாம் என்ற அதன் உண்மையினையும் சொல்கின்றார். வள்ளலார் பெரியபுராணமே பொய் என்று சொல்லிவிட்டதாக அன்பர்கள் நினைத்தல் கூடாது. ஒவ்வொரு நாயன்மார்களின் தத்துவக் கதைகளும் ஒவ்வொரு சித்தியினை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் சுத்த சன்மார்க்க நிலையில் இச்சித்திகளை நோக்கும்போது இவைகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இச்சித்திகளெல்லாம் அற்ப சித்திகளே. எனவே சுத்த சன்மார்க்க நிலையில் சமயங்கள் மதங்கள் எல்லாம் பொய் பொய்யே என வள்ளலார் மிகத்தெளிவாக உரைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

சேக்கிழார் கூறும் 63 நாயன்மார்களில் “மாணிக்கவாசகர்” என்பவர் நாயன்மார்களில் ஒருவராக இல்லை. எனினும் சைவர்கள் நால்வருள் ஒருவராக இவரை பார்த்து பழகிவிட்டதால் இவரையும் நாம் தத்துவ விளக்கத்திற்குள் கொண்டுவரவேண்டியுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால் நாயன்மார்களின் பெயரினை  அகர வரிசையில் எடுத்துக்கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக அவர்கள் கூறும் தத்துவ விளக்கங்கள் என்னென்ன? என்பதனை பார்ப்போம். 

--தொடரும்…

2 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.