Friday, November 3, 2017

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்! 


யார் இந்த ஆறுமுக நாவலர்? ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா?

//ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் பிறந்தவை.// - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். (1822 – 1879)

ஈழ‌த் தமிழ‌ர்க‌ளிடையே பிரிவினையையும், சாதிவெறியையும் தூண்டி விடும் நோக்கில், அர‌ச‌ ஒத்தோடி ஆறுமுக‌நாவ‌ல‌ர் எழுதிய,‌ "சைவ‌ வினா விடை" புத்த‌க‌ம், இன்றைக்கும் யாழ்ப்பாண‌ பாட‌சாலைக‌ளில் போதிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

யாழ் இந்துக் க‌ல்லூரியில் நான் ப‌டித்த‌ கால‌த்தில், சைவ‌ ப‌ரிபால‌ன‌ ச‌பை மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ரீட்சை வைத்து, அந்த‌ நூலை ப‌டிக்க‌ ஊக்குவித்த‌து. அந்த‌ ந‌டைமுறை இப்போதும் தொட‌ர்கிற‌து.

"சாதிக‌ளை ஒழித்து த‌மிழ‌ர்க‌ளை ஒற்றுமைப் ப‌டுத்திய‌தாக‌" சொல்ல‌ப் ப‌டும், புலிக‌ளின் ந‌டைமுறை த‌மிழீழ‌ அர‌சு கூட‌ அந்த‌ சாதிவெறி நூலை த‌டை செய்ய‌வில்லை. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டைக‌ளில் தாராள‌மாக‌ விற்ப‌னை செய்ய‌ப் ப‌ட்ட‌து. பாட‌சாலைக‌ளில் க‌ற்பிக்க‌ப் ப‌ட்ட‌து. அன்று அது எவ‌ர் க‌ண்க‌ளையும் உறுத்த‌வில்லை.

இன்றும் கூட‌, எந்த‌வொரு த‌மிழ்த் தேசிய‌வாதியும் "நாவ‌ல‌ர் ஒரு த‌மிழின‌த் துரோகி" என்று பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌வில்லை. மாறாக‌, வெட்க‌மில்லாம‌ல் நாவ‌ல‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்குகிறார்க‌ள்.

யாழ்ப்பாணம், நல்லூரில் நாவலர் மண்டபம் இருக்கிறது. அதன் முற்றத்தில் ஆறுமுக நாவலரின் சிலை இருக்கிறது. அந்தச் சிலையை, 1969 ம் ஆண்டு, யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

அப்போதே சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்ததனர். "சாதிவெறியன் நாவலருக்கு சிலை வைப்பது அவமானம்" என்று பிரச்சாரம் செய்தனர். "கடும்போக்கு சாதியவாதி நாவலர் சிலையை தகர்ப்போம்" என்று சுவரொட்டிகள் ஓட்டப் பட்டன. ஆயினும், "ஈழத்து பார்ப்பனர்கள்" என்று சொல்லக் கூடிய வெள்ளாளர்கள், தமது சாதியத் தலைவர் நாவலருக்கு சிலை வைப்பதை பெருமையாகக் கருதினார்கள்.

நான் ஒரு தடவை இலங்கைக்கு சென்றிருந்த நேரம், நாவலர் மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர், மண்டபத்திற்கு பின்னால் இருந்த யாழ் அருங்காட்சியகத்தை பார்வையிட சென்றிருந்தேன்.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், யாழ் கோட்டைக்கு அருகில் இருந்த அருங்காட்சியகம் தற்போது நல்லூருக்கு மாற்றப் பட்டுள்ளது. அந்த இடத்தில், ஆறுமுக நாவலர் வாழ்ந்த வீட்டின் எஞ்சிய சுவர்ப் பகுதி இருப்பது, ஓர் அகழ்வாராய்ச்சிப் பொக்கிஷமாக கருதப் பட்டிருக்கலாம். எதிர்பாராத விதமாக அங்கு வேறு சில ஆர்வத்திற்குரிய விடயங்களும் இருந்தன.

ஆறுமுக நாவலர் பிறந்த வீடு இருந்த இடத்தில், டச்சு காலனியாதிக்க வாதிகளின் சமாதிகள் இருக்கின்றன. அதாவது, நாவலர் வீட்டின் இடிந்த சுவர் என்று சொல்லப் படும் சுவருக்கு பின்னால் அந்த சமாதிகள் இருக்கின்றன. அவர்களும் சாதாரணமான ஆட்கள் அல்ல. யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான டச்சு படையணிகளின் தளபதிகளாக பணியாற்றி உள்ளனர். அந்தத் தகவல் சமாதிகளில் எழுதப் பட்டுள்ளது. அதன் அருகில் அருங்காட்சியகம் வைத்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.

ஆறுமுக நாவலர் பிறந்த காலத்தில், யாழ்ப்பாணம் டச்சுக்காரர் கையை விட்டகன்று, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து விட்டிருந்தது. இருப்பினும், காலனிய காலத்தில் ஐரோப்பியரின் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் உள்நாட்டவர்கள் வசிப்பதற்கு அனுமதி இருக்கவில்லை. அது மட்டுமல்லாது, டச்சு காலனிய ஆட்சியாளர்கள் இறந்தால், அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு அருகிலேயே புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தோனேசியா, சுரினாம் போன்ற பிற டச்சுக் காலனிகளிலும் இந்த நடைமுறை இருந்ததை சரித்திர நூல்களில் படித்திருக்கிறேன்.

காலனிய காலகட்டமானது, தென்னாபிரிக்காவில் இருந்ததைப் போன்ற "அப்பார்ட் ஹைட்" காலம் போன்றிருந்தது. அதாவது, வந்தேறுகுடிகளான வெள்ளையர்களும், உள்நாட்டவரான கருப்பர்களும் பிரித்து வைக்கப் பட்டனர். இலங்கையிலும் அதே நடைமுறை இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. வெள்ளையரின் பகுதிகளுக்கு அருகாமையில் வசிக்க அனுமதிக்கப் பட்டவர்கள், அன்றைய காலத்து அரச ஒத்தோடிகள், அல்லது ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்கள் மட்டுமே. ஐரோப்பியர்களுக்கு அடுத்ததாக, அவர்களுக்கு அரச சலுகைகள் கிடைத்து வந்தன.

ஆறுமுக நாவலர் சைவத்தையும், தமிழையும் வளர்த்தார் என்று இலங்கைத் தமிழ்ப் பாடநூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அமெரிக்க மிஷனரிகள் பாடசாலைகள் கட்டி, கிறிஸ்தவ மதம் பரப்பிக் கொண்டிருந்த காலத்தில், நாவலர் இந்துப் பாடசாலைகள் கட்டினார். அங்கு வெள்ளாளர் சாதிப் பிள்ளைகளுக்கு மட்டுமே படிக்க அனுமதித்தார்கள். "நாவலரின் அரும்பெரும் முயற்சியால் தான், யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் பரவுவது தடுக்கப் பட்டது" என்று சொல்லப் படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கு பின்வரும் காரணங்களை காட்டலாம்:

1. ஆங்கிலேய காலனிய காலகட்டத்தில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அது ஒரு சர்வாதிகார ஆட்சி. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் கடுமையான சட்டம் போட்டு, நாவலர் "சைவத்துக்கும், தமிழுக்கும் செய்த தொண்டுப் பணியை" தடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. இதே ஆங்கிலேய ஆட்சியாளர்கள், மறுபக்கத்தில் அநகாரிக தர்மபால "பௌத்தத்திற்கும், சிங்களத்திற்கும் தொண்டு செய்வதை" தடுக்கவில்லை.

2. சிங்களவர், அல்லது தமிழர் ஒருவர், ஆங்கிலேய காலனிய ஆட்சி நிர்வாகத்தில் பதவிகளில் சேர வேண்டும் என்றால், அவர் ஆங்கிலக் கல்வியில் புலமை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். (அதிலும் அங்கிலிக்கன், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவருக்கு முன்னுரிமை. அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்கள்.) இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும், மேட்டுக்குடி சிங்களவர்களும், தமிழர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். "தாய்மொழியை" விட, ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தனர்.

3. "சைவமும், தமிழும் வளர்த்த" ஆறுமுக நாவலர், அதை ஒரு காலனிய எதிர்ப்பு நடவடிக்கையாக செய்யவில்லை. அத்துடன் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே நாவலர் காலமாகி விட்டார். ஆகவே, "சைவமும், தமிழும் வளர்த்த நடவடிக்கை" உள்ளூர் மக்களை, அதாவது தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்திருக்கும். கிறிஸ்தவம், ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்த ஒரு நாட்டில், சைவத்தையும், தமிழையும் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்க முடியும்?

4. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக, தமிழர்கள் மத்தியில் உள்ள, வர்க்க, சாதிய முரண்பாடுகளை கூர்மைப் படுத்துவதற்கு, நாவலரின் "சைவமும், தமிழும் வளர்த்த" நடவடிக்கை உறுதுணையாக இருந்திருக்கும். அன்று, ஆதிக்க சாதியினரான வெள்ளாளரில், ஒரு சிறு பிரிவினரே மேட்டுக்குடியினராக இருந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாகவும், ஆங்கிலக் கல்வியில் புலமை பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அதே சாதியில் பெரும்பான்மையானோர் ஏழை விவசாயிகளாக, அதாவது உழைக்கும் வர்க்கமாக இருந்தனர். அவர்கள் தான், நாவலரின் "சைவமும், தமிழும் வளர்த்த பாடசாலைகளில்" படித்திருப்பார்கள். அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்திருக்கும். ஆனால், தாம் ஆங்கிலேய ஆட்சியில் ஒரு வர்க்கமாக ஒதுக்கப் படுகிறோம் என்ற உண்மை தெரிந்து விடாமல் மறைப்பதற்கு, நாவலர் அவர்களுக்கு சாதிவெறிக் கருத்துக்களை போதித்து இருக்கிறார்.

5. அந்தக் காலத்தில் இலவசக் கல்வி கிடையாது. எல்லா இடங்களிலும் கட்டணக் கல்வி தான். அதே நேரம், பொதுக் கல்வியும் இருக்கவில்லை. நாவலர் கட்டிய இந்துப் பாடசாலைகள் தனியார் மத நிறுவனம் ஒன்றால் நிர்வகிக்கப் பட்டன. மேலும், அங்கு தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கல்வி உரிமை மறுக்கப் பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பள்ளிக்கூடங்களில் மட்டும், கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் குறைந்த எண்ணிக்கையில் சிலரை சேர்த்துக் கொண்டனர்.

இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியது என்னவெனில், ஆறுமுக நாவலர் ஒரு காலனிய எதிர்ப்பாளர் அல்ல, மாறாக ஒரு காலனிய ஒத்தோடி. அதை நிரூபிப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை காட்டலாம். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் நடத்திய காந்தி போன்ற "தீவிரவாதிகளை" கூட பிரிட்டிஷ் காலனிய அரசு கடுமையாக நடத்தவில்லை. நாவலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுண்டு விரலைக் கூட நீட்டாதவர். அவரால் என்ன ஆபத்து வந்து விடப் போகிறது?

ஆறுமுகநாவலர் சாதித் தீண்டாமை பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார். ஆனால், குறைந்தது ஒரு வரியாவது ஆங்கிலேயரின் நிறவாத/இனவாத தீண்டாமை பற்றி எழுதவில்லை. தனது சொந்த மக்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டுகொள்ளவில்லை. அதையெல்லாம் கண்டும் காணாத மாதிரி புறக்கணித்தார். அப்படியான ஆறுமுகநாவலர் ஒன்றில் அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக் குழுத் தலைவராகவே இருந்திருக்க வேண்டும்.
                                      --Kalaiyarasan. – Netherland



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.