(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு
ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர
மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)
திரு அருட்பெருஞ்ஜோதி
அகவல் – உரை
தொடர் - 14
--தி.ம.இராமலிங்கம்
எம்மையு
மென்னைவிட் டிறையும் பிரியா
தம்மையப்
பனுமா மருட்பெருஞ் ஜோதி – 112
ஒரு தாய் தன்
குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டிலும் கடவுள் நம் மீது வைத்திருக்கும்
அன்பு அதிக நிலையானது. ஏனெனில் கடவுள் ஏக காலத்தில் தாயாகவும் இருக்கின்றார், தந்தையாகவும்
இருக்கின்றார்.
‘எம்மை’ என்றும்
‘என்னை’ என்றும் ஒரே பொருளுடைய இருவேறு வார்த்தைகளை வள்ளலார் இங்கே பயன்படுத்தியிருப்பினும்
இவை இரண்டிற்கும் சிறிய வேறுபாடுகளும் உள்ளன. ‘எம்மை’ என்பது தம்மை சார்ந்தனவற்றை குறிப்பதாக
உள்ளது. என்னை சார்ந்த இந்த உடல், இந்த உடலை சார்ந்த எனது சுற்றம், எனது அடியார்கள்,
எனது தொண்டர்கள், எனது பொருட்கள், எனது உலகங்கள், எனது உயிர்கள் என்று விரிந்துக்கொண்டே
செல்லும். ‘எவையெல்லாம் எவையெல்லாம் உள்ளனவோ அவையெல்லாம் எனது’, என்று சொல்லும்படியாக
‘எம்மை’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ‘எம்மை’ என்கின்ற இவைகளை ‘அம்மை’
என்கின்ற தாயாக நின்று அவைகளை என்றும் பிரியாது இருக்கின்றாள்.
‘என்னை’ என்பது
வள்ளற்பெருமானின் ஆன்மாவைக் குறிக்கின்றது. எப்படி எம்மைச் சார்ந்த பொருள்களை அம்மையாக
நின்று சூழ்ந்தாயோ… அவ்வாறே எனது என்கின்ற ஆன்மாவையும் சற்றும் பிரியாது அப்பனாக இருந்து
சூழ்ந்திருக்கின்றாய்.
எம்மை காப்பது
அம்மை, என்னை காப்பது அப்பன் என்கின்றார் வள்ளலார். வள்ளலாரின் பார்வையில் நாமெல்லாம்
அம்மையின் கட்டுப்பாட்டில் உள்ளோம். நாம் எப்போது அப்பனின் கட்டுப்பாட்டில் வருகின்றோமோ
அப்போது நாமும் வள்ளலார் ஆகிவிடுவோம். இவ்வாறு என்னைச் சார்ந்த இவ்வுலகையும், என்னையும்
அம்மையாகவும் அப்பனாகவும் ஒரு சிறிது கணநேரமும் பிரியாது (இறையும் பிரியாது -சிறிதளவும்
பிரியாது) சூழ்ந்துள்ளார் இறைவர்.
ஆன்ம நேயத்தையும்,
ஆன்மாவையும் சற்றும் பிரியாது காத்தருளும் தாயாகி தந்தையுமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
பிறிவுற்
றறியாப் பெரும்பொரு ளாயென்
னறிவுக்
கறிவா மருட்பெருஞ் ஜோதி – 114
உடலை விட்டு
உயிர் பிரிந்தால் மரணம்…
உடலை விட்டு
கரு பிரிந்தால் ஜனனம்…
முன்னது துக்கம்…
பின்னது மகிழ்ச்சி… பிரிதல் என்பது ஆக்கமாகவும், அழிவாகவும் உள்ளது. பல நேரங்களில்
பிரிதல் என்பது மனத்துயரம் அளிப்பதாய் இருக்கும். காதலன் காதலியை பிரிவது, கணவன் மனைவியை
பிரிவது, நண்பன் நண்பனை பிரிவது, தாய் குழந்தையை பிரிவது இவைகள் எல்லாம் மனரீதியாக
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவே இல்லாத ஒன்றை நாம் இந்த உலகியலில் காண முடியாது.
ஆண், பெண் என்று பிரித்தால்தான் உயிர்கள் இன்புற முடியும். நீ, நான் என்று பிரிந்தால்தான்
உலகியல் நடத்த முடியும். பிரிவாலேதான் இன்பமும் துன்பமும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
சில பிரிவுகள் நிரந்தரமான பிரிவுகளாக தோன்றுகின்றன. சில பிரிவுகள் தற்காலிகமான பிரிவுகளாக
தோன்றுகின்றன.
சிலருக்கு ஆசையும்,
சிலருக்கு காமமும், சிலருக்கு கோபமும், சிலருக்கு பொய்யும், சிலருக்கு திருட்டும்,
சிலருக்கு தயவும், சிலருக்கு பணிவும், சிலருக்கு மதமும், சிலருக்கு ஜாதியும், சிலருக்கு
கர்வமும், சிலருக்கு பயமும், சிலருக்கு காதலும், சிலருக்கு அன்பும் தம்மிடமிருந்து
பிரிக்க முடியாதவாறு இணைந்திருப்பதாக உணர்வர். ஆனால் இவைகளும் விழிப்புடன் இருக்கும்போதும்,
தூங்கும்போதும் தம்மிடமிருந்து பிரிவதையும்
மீண்டும் இணைவதையும் காணலாம்.
ஆனால், பிரிவு
என்பதையே காணாத ஒரு பெரும் பொருள் இருப்பதாக வள்ளலார் இங்கு உரைக்கின்றார். எதனைவிட்டு
பிரியாது இந்த பெரும் பொருள் இருக்கின்றது? என்றால், என்னுடைய அறிவிலிருந்து பிரியாத
பெரும் பொருளாய் இருப்பதாக கூறுகின்றார். பெரும் பொருளாய் இருப்பது இறைவன் ஆகும். என்னுடைய
ஜனனமோ, என்னுடைய மரணமோ, என்னுடைய கனவோ, என்னுடைய நினைவோ, என்னுடைய உறக்கமோ இப்படி நான்
என்னிலையில் இருந்தாலும் என்னுடைய அறிவை செயல்படுத்தும் அறிவாக, என்னுடைய அறிவோடு என்றும்
பிரியாத இணைந்த பேரறிவாக பெரும்பொருளான அவ்விறைவன் என் அறிவாகி இருக்கின்றான் என்று
வள்ளற்பெருமான் பாடுகின்றார்.
எனது அறிவோடு
என்றும் பிரிவைக்காணாது இணைந்து என் அறிவுக்கு அரசாக இருக்கும் எமது பெரும் பொருளே…
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
சாதியு
மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய
நாதியா மருட்பெருஞ் ஜோதி – 116
தமிழக அளவில் மட்டும் 443 சாதிகள் உள்ளன.
இந்திய அளவிலும் உலக அளவிலும் உள்ள சாதிகளும் சேர்த்தால் சுமர் ஆயிரம் சாதிகள் உள்ளதாக
வைத்துக்கொள்ளலாம். இந்த ஆயிரம் சாதிகளுக்கும் சாதீய ரீதியாக தனித்தனி கடவுள்கள் உண்டு.
மதங்கள் என்று எடுத்துக்கொண்டால், உலக அளவில்
சுமார் 12 மதங்கள் உள்ளன. இந்த மதங்களுக்கு என தனித்தனியக ஒரு கடவுள் முதல் எண்ணற்ற
கடவுள்கள் உண்டு.
சமயம் என்பது மதங்களிலிருந்து பிரிந்து வந்தவையாகும்.
ஒவ்வொரு மதத்திற்கும் பல சமயங்கள் உள்ளன. இப்படி சமயக்கடவுள் என்று எண்ணற்றவை பழக்கத்தில்
உள்ளன.
மேற்காணும் சாதிகள், மதங்கள், சமயங்கள் இவை
அனைத்திற்கும் சேர்த்து இவ்வுலகில் 36 கோடி கடவுள்களுக்கும் மேலாக மக்களால் வழிவழியாக
வணங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இந்து மதம் மற்றும் அவற்றின் சமயங்களில் மட்டும்
36 கோடி கடவுள்கள் உள்ளன. இந்த 36 கோடி கடவுள்களும் இந்தியாவில் மட்டும் வணங்கப்படுபவை.
இந்தியாவில் நான்கு நபருக்கு ஒரு கடவுள் என்ற விகிதத்தில் கடவுள் தொகை பெருத்து உள்ளது.
புதிய புதிய கடவுள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளும் மக்களால் வணங்கப்பட்டு
வருகின்றன.
சாதிகளாலும், மதங்களாலும், சமயங்களாலும்
உருவான இத்தனை கடவுள்களும் பொய்… பொய்யே… என்று அறைகின்றார் வள்ளலார். பொய் கடவுள்களை
உற்பத்தி செய்த சாதிகளும், மதங்களும், சமயங்களும் பொய்… பொய்யே… என்றும் இவ்வுலகில்
ஓங்கி அறைகின்றார் வள்ளலார். இவ்வுலகில் பெரும்பாலானவர்களால் வணங்கப்படும் இயேசு அல்லது
பரமபிதா, அல்லா, சிவன், விஷ்ணு, கணபதி, முருகன் போன்ற கடவுள்கள் உட்பட சிறுதெய்வங்கள்
வரை எல்லாம் பொய்த் தோற்றங்களே ஆகும் என்பது வள்ளற்பெருமானின் அனுபவ வாக்கு.
வள்ளலார் காணும் கடவுள், மேற்காணும் சாதிகளிலோ,
மதங்களிலோ, சமயங்களிலோ இதுவரை கண்டிராத கடவுளாகும். அக்கடவுள்தான் உலகியல், வானியல்,
அருளியல் போன்ற அனைத்திற்கும் முதலாக உள்ளது. அந்த முதலானது யாராலும் படைக்கப்படாத அனாதியாகவும் உள்ளது. அந்த அனாதிதான்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.
சாதியும் மதமும் சமயமும் தேடியும் காணாத
அனாதியான முதல் பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
தநுகர
ணாதிக டாங்கடந் தறியுமோர்
அநுபவ
மாகிய வருட்பெருஞ் ஜோதி – 118
ஆன்ம தத்துவங்களை ‘தநு கரணம் முதலியாதிகள்’
என்கின்றார் வள்ளலார். ஆன்ம தத்துவங்கள் மொத்தம் 24.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு
– 5 பூதங்கள்
மெய், வாய், கண், மூக்கு, செவி – 5 ஞானேந்திரியங்கள்
வாய், கை, கால், மலவாய், கருவாய் – 5 கர்மேந்திரியங்கள்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் – 5 தன்மாத்திரைகள்
மனம், அறிவு, நினைவு, முனைப்பு – 4 அந்தக்கரணங்கள்
மேற்காணும் 24 – கும் ஆன்ம தத்துவங்களாகும்.
தநு என்கின்ற உடம்பில் இந்த ஆன்ம தத்துவங்கள் 24-கும் உள்ளன. இவைகளை கடந்து சாதனை புரியவேண்டும்.
எலும்பு, மாமிசம், தோல், நரம்பு, உரோமம்
இவைகள் நிலத்தின் கூறுகள். இவைகளில் எல்லாம் இறை அனுபவம் ஊற வேண்டும்.
உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, இரத்தம்,
விந்து இவைகள் நீரின் கூறுகள். இவைகளில் எல்லாம் இறை அனுபவம் ஊற வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்று வாயுவின் கூறாகும்.
இவைகளில் எல்லாம் இறை அனுபவம் ஊற வேண்டும்.
மூளை நமக்கு ஆகாயத்தின் கூறாகும். இதனில்
இறைவனின் அனுபவம் ஊற வேண்டும்.
பசி, தூக்கம், தாகம், உடலுறவு, அழுகை இவையெல்லாம்
நெருப்பின் கூறுகளாகும். இவைகளில் எல்லாம் இறை அனுபவம் ஊற வேண்டும்.
மெய் காற்றின் அம்சமாததால் குளிர்ச்சி, வெப்பம்,
மென்மை, வன்மை இவைகளை இறை அனுபவமாக உடம்பு அறியவேண்டும்.
வாய் நீரின் அம்சமாதலால் உப்பு, புளி, இனிப்பு,
கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என ஆறு சுவைகளையும் இறை அனுபவமாக அறியவேண்டும்.
கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம், நீளம்,
உயரம், குட்டை, பருமன், மெலிவு என்கின்ற தன்மைகளை இறை அனுபவமாக கண் அறிய வேண்டும்.
மூக்கு மண்ணின் அம்சமாதலால் நாற்றத்தை இறை
அனுபவமாக அறிய வேண்டும்.
செவி வானின் அம்சமாதலால் ஓசையை இறையனுபவமாக
கேட்க வேண்டும்.
இவ்வாறு வாய், கை, கால், மலவாய், கருவாய்,
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவைகள் எல்லாம் இறைவனை ஆழ நுகர்தல் வேண்டும். அவ்வாறு
நமது ஆன்ம தத்துவங்கள் 24- கிலும் இறை அம்சம் நிறைந்த பிறகே நமக்கு இறைவனை அறிகின்ற
அனுபவம் கிட்டும். இங்கு இறை அனுபவம் என்பது இறைவனை கற்பனையால் நமது ஆன்ம தத்துவங்களில்
ஊற விடுவது. அதன் பிறகு அக்கற்பனை சக்தியைக் கடந்து இறைவனை அறிகின்ற உண்மை அனுபவம்
கிட்டுவதாகும்.
உடம்பு, மனம் என்கின்ற புற அகக் கருவிகளை
எல்லாம் கடந்து காணுகின்ற அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
உனுமுணர்
வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா
தீத வருட்பெருஞ் ஜோதி – 120
உனும் – உன்னும் – நினைக்கின்ற உணர்வு. இறுதி
மூச்சு விடும்போதும் நான் உன்னை நினைக்கின்ற வரம் அருள வேண்டும் என வேண்டுதலே ‘உனும்
உணர்வாகும்’.
மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச்
செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி
மறியும் போதறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா
யொற்றியூ ருடைய கோவே! - 455
என்று
பாடுவார் அப்பரடிகள். அதாவது நான் மரணிக்கும்போது நான் என்னை நினையாது உன்னை நினைக்கும்
அறிவை வழங்குவாய் இறைவா, என அப்பர் வேண்டுகின்றார். அப்படிப்பட்ட உனும் உணர்வையும்
கடந்தது, இறைவனைக்கூட நினைக்கின்ற உணர்வினையும் கடந்து எவ்வித அனுபவத்திற்கும் உட்படாது
அனுவபங்களை எல்லாம் கடந்தவர்தான் இறைவன்.
நினைவை எய்துகின்ற உணர்வும், நினைவை அற்ற
உணர்வும் கடந்து, அனுபவங்களை எல்லாம் கடந்து அறியப்படுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.