Saturday, January 13, 2018

இறுதி வார்த்தை

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

இறுதி வார்த்தை

திருவருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்வதற்குச் சில நாளைக்குமுன் தமது அன்பர்களை நோக்கி:

          "நம்மோடு கூடிப் பழகியிருந்தவர்களையும் பின் கேள்வியால் விரும்புகின்றவர்களையும் கைவிட மாட்டோம், ஆணை, ஆணை" என்று உறுதி கூறியருளினர்.

          ஸ்ரீமுக வருஷத்தில் மார்கழி மாதம்முதல் வள்ளலார் சித்திவளாகத் திருவறைக்குள் சென்று சிலநாள் கதவை மூடிக்கொண்டு இருப்பதும் பிறகு வெளிவந்து பிரசங்கஞ் செய்வதும், மறுபடியும் சிலநாள் தாளிட்டுக்கொண்டு உள்ளே இருப்பதும், பின்னர் வெளிவந்து பிரசங்கஞ்செய்வது மாகிய அருட்பெரு நெறியில் திகழ்ந்தனர்.

          அங்ஙனம் நிகழுநாட்களில் ஒருநாள் அன்பர்களை நோக்கிக் "கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம். நீங்கள் அருள் அடைவதற்கு இந்தத் தீபத்தினைக் கடவுளெனக் கொண்டு ஜீவகாருண்யமுடையயராய்ச் சிந்தித்துக் கொண்டிருங்கள். இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்ற மாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம். நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆஞ்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்". என்று கட்டளையிட்டுச் சித்தசாந்தம் உண்டாக்கி ஸ்ரீமுக வருடம் தை மாதம் புனர்ப்பூசத்தன்று இரவு 12-மணிக்கு மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக் கொண்டனர். (ச.மு.கந்தசாமி ஐயா பிரபந்தத்திரட்டு-அ.திருநாவுக்கரசு பதிப்பு-பக்கம்132)

                                                          –திருவருட்பிரகாச வள்ளலார்  


          சன்மார்க்க அன்பர்களுக்கு எமது இனிய வணக்கங்கள். நமது வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்டு இம்மாதத்தோடு 144 ஆண்டு காலங்கள் ஆகின்றது. வருகின்ற 31-01-2018 புதன் கிழமை அன்று வடலூரில் தைப்பூசம் காண இருக்கின்றோம். உலகெங்கிலுமுள்ள சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் தைப்பூசம் காண வடலூர் நோக்கி வரவுள்ளனர். அவர்களை எல்லாம் வருக வருக என வரவேற்கின்றேன்.

          ஐயா அவர்கள் திருக்காப்பிட்டுக்கொள்ளும் முன் கூறிய உறுதிமொழியினை இவ்வேளையில் நினைவுறுவோம். “நம்மோடு கூடிப் பழகியிருந்தவர்களையும் பின் கேள்வியால் விரும்புகின்றவரகளையும் கைவிட மாட்டோம், ஆணை, ஆணை” என்று இருமுறை அழுத்தமாக ஆணை இட்டு கூறும் இந்த சத்திய வாக்கு நம்மை எல்லாம் சன்மார்க்கத்தை நோக்கி ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

          “நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்கு உபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகளாய் இருத்தல் வேண்டும்” என்கின்ற வள்ளற்பெருமானின் அவாவினை நாமெல்லாம் தலைமேல் கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

          1865-ஆம் ஆண்டு துவங்கிய சன்மார்க்க சங்கம், 1867-ஆம் ஆண்டு துவங்கிய தருமச்சாலை, வைத்தியசாலை, சாஸ்திரசாலை, உபகாரச்சாலை, விருத்திசாலை, உபாசனாசாலை, யோகசாலை, விவகாரசாலை, சன்மார்க்க விவேக விருத்தி மற்றும்  சன்மார்க்க போதினி, 1872-ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஞானசபை,  சமரச வேத பாடசாலை போன்ற சாதனங்களின் மூலம் சுத்த சன்மார்க்கத்தை நிலை நிறுத்த வள்ளற்பெருமான் முயன்றார்.

          இவைகளில் சன்மார்க்க சங்கமும், தருமச்சாலையும் தவிர மற்ற அமைப்புகள் எல்லாம் அன்றைய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஞானசபை உட்பட எல்லாம் தோல்வியில் முடிந்தன. இன்றைக்கும் மக்களில் 99 சதவிகிதத்தினர் பொருளியல் மற்றும் உலகியல் நாட்டத்துடன் இருக்கின்றார்களே தவிர அருளியல் நாட்டம் அறவே இல்லை என்பதனை காணமுடிகின்றது. அன்றைய மக்கள் எல்லாம் சாதி, மதம், சமயங்களில் அபிமானித்து இருந்தனர். அவர்களுக்கு சுத்த சன்மார்க்க கொள்கைகள் கசப்பூட்டுவனவாக இருந்தன. இதன் காரணமாக மனமுடைந்த நமது வள்ளற்பெருமான் “கடையை விரித்தோம், கொள்வார் இல்லை, கட்டிவிட்டோம்” என்று மக்களிடையே இறுதியாக முழங்கி திருக்காப்பிட்டுக்கொண்டார்.

          உலக மக்கள் என்று சுத்த சன்மார்க்க கொள்கைக்கு வருகின்றார்களோ அன்று திருக்கதவம் திறக்கும். வெள்ளாடை மேனி வெளிப்படும். அருட்பெருஞ்ஜோதி ஒளிரும், சித்துக்கள் பல நடந்தேறும். அப்படிப்பட்ட காலம் இன்று வந்துக்கொண்டிருக்கின்றது.

“அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர், உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலம்” என்று வள்ளற்பெருமான் கூறும் அந்த பொற்காலம் / சன்மார்க்க காலம் விரைவில் வரப்போகின்றது.

மக்களாகிய நாமெல்லாம் சன்மார்க்க காலத்தில் வாழ தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டு வருவோம். அதற்குள் மரணம் வந்துவிட்டதே என கலங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் சன்மார்க்க காலத்தில் எழுவீர்கள். அஞ்ச வேண்டாம். அஞ்ச வேண்டாம்.

வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் சமரசபஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் அருள் நிலையம் என்றென்றும் உங்களுக்கு பக்கத் துணையாக இருந்து  அருள் வழிநடத்தும் என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மொழிகின்றார்.

இவ்வேளையில் வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுதம் ஐயா, கல்பட்டு இராமலிங்கம் ஐயா மற்றும் வள்ளற்பெருமானிடம் கூடிப் பழகிய நண்பர்கள் எல்லாம் நம்மை சன்மார்க்க வழி நடத்துவார்கள் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மொழிகின்றார்.


“என்னால் நீங்கள் நன்மையடைவது சத்தியம்” என்கின்ற வள்ளலின் சத்திய வார்த்தைகளை எண்ணி நன்மையடைவோம். தைப்பூசம் காண வடலூர் வாருங்கள் என காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் உங்களை அன்போடு அழைக்கின்றது. 
                                                          --தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.