(வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும்
“சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம்
வெளியானவை…)
சித்தர்கள்
பார்வை
ஞானம்
என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ?
பொதுவாக உடல்
அசுத்த உடலாகத்தான் இருக்கிறது .இது காரண தேகத்தால் உண்டாவது. இது அறிவில்லாதது. இந்தக்
காரண தேகம் எப்படி உண்டாகிறது. எடுத்துக்காட்டாக பெருங்காயம் வைத்த பாத்திரம் பெருங்காயம்
காலி ஆனாலும் வாசனை போவதில்லை அல்லவா?? அது போல போன பிறவியில் உடல் செய்த தீய நல்ல
காரியங்கள் உடலும் உயிரும் பிரியும் மரணம் என்ற காரியத்திற்கு பின் உயிருடன் தொடரும்
வாசனையே இந்த காரண உடல். அந்த காரண தேகம் சேர்ந்த உயிரும், நம் இந்த அசுத்த உடலும்
சேர்ந்த பிறவியில், உடலின் அறிவில்லாத தன்மையும் உயிரின் அறிவுள்ள தன்மையும் சேர்ந்து
உடலில் அறிவில்லாததாகவும், அறிவுள்ளதாகவும் சிற்சில நேரங்களில் வெளிப்படுகின்றது.
புலன்களின்
வழியே மட்டுமே செயல்படும் மனம், சித்தம், புத்தி இவைகளின் ஒரு செயல்பாட்டை கவனித்தால்
உங்களுக்கு இது புரியும். ஒரு பஸ் உங்களை மோத வருகிறது. நீங்கள் அதைப் பார்க்கும் திசையில்
இல்லை, பயங்கர திருவிழா ரேடியோ சத்தத்தில் உள்ளீர்கள், காதும் பஸ் வரும் ஓசையை கேட்கவில்லை.
ஆனால் நீங்கள் திடீரென ஒதுங்கி விலகிவிட்டு அப்பப்பா நல்ல வேளை பஸ் மோதாமல் தப்பிவிட்டேன்
என்று நினைத்திருப்பீர்கள்.
இது போன்ற சம்பவங்கள்
உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்த்தீர்களானால்,
உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கண்ணோ பார்க்கவில்லை, காதோ கேட்கவில்லை. புலன்களின்
வழியே சென்று செயல்படும் மனம் இந்தப் புலன்களின் வழியே உணரவில்லை. அதை புத்தியில் ஒப்பிட்டு
பார்த்து கால்களுக்கு ஒதுங்கு என்று கட்டளையிடவில்லை. ஆனால் எப்படி உடல் ஒதுங்கித்
தப்பித்தது.
அதற்குக் காரணம்
உள்ளே இருக்கும் எல்லா பேரறிவிற் சிறந்த உயிர் சித்தத்தின் வழியே செயல்பட்டு ஒதுங்கு
என்று கட்டளையிடுகிறது. இது எப்படி நிகழ்கிறது. உடலும் உயிரும் பிரிய வேண்டிய சூழல்
உருவாகும் போது உயிர் அதை விரும்பாவிட்டால், தான் பெற வேண்டிய அனுபவங்கள் இன்னும் இந்த
உலகில் இருக்கிறது என்றால், தன் பேரறிவினால் உடலை நகரச் சொல்லி சித்தத்தினால் கட்டளையிடுகிறது.
இல்லையெனில் இதையே விபத்தாக்கி உடலைப் பிரிந்து உயிர் பறந்துவிடும்.
இந்த ஒரு வினாடி
சித்தத்தின் மூலம் செயல்படும் உயிரை, எல்லா நாளும் சித்தத்தின் மூலம் செயல்பட வைத்தால்
நீங்கள் சித்தர். இல்லையானால் தினம் நாய் போல் நம்மை அலைக்கழிக்கும் மனதால் செயல்படும்
சாதாரண மனிதர்.
இந்த காரண தேகமான
வாசனை நம் உடலில் இருக்கும் வரை நம் உடல் சுத்த தேகமாகாது. உடல் சுத்த தேகமாகவில்லை
என்றால் சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாது. சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாவிட்டால்
நீங்கள் ஞானத்திலும் தெளிய இயலாது. காயமும் சித்தியாகாது. முக்தியும் கிட்டாது.
எனவே உடலை முதலில்
நோயில்லாமல் ஆக்கவேண்டும். பிறகு அசுத்த தேகத்தை சுத்த தேகமாக ஆக்க வேண்டும். நோயணுகாத
வஜ்ர தேகமான பின் காயத்தை சித்தியாக்கி சித்தத்தின் வழியே செயல்கள் புரிந்து சித்தராக
வேண்டும். பின் முக்தி அடைய வேண்டும்.
இதற்கு சித்தர்
விஞ்ஞானத்தின் முக்கிய அங்கங்களான வைத்தியமும், மருந்துகளின் அறிவும், காய கற்பங்கள்
முடிப்பதும், பற்ப, செந்தூரங்கள், சுண்ணம் முடிப்பதும் வான சாத்திர அறிவும் அடிப்படைத்
தேவைகள். இரத்தம் கடுங்காரமாக வேண்டும். இப்படி ஆனால்தான் சுண்ணாம்பால் ஆன நம் எலும்புச்
சட்டகம், இரத்தம் ( URIC ACID ) யூரிக் அமிலம் போன்ற அமிலங்களால் அமிலத் தன்மையாகாமலும்,
அதன் விளைவாக எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்படும். அப்படி எலும்புச்
சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்பட்டால்தான் உடல் அழியாது. இவை எல்லாம் தெரியாமல்,
ஒருவன் ஒரே பிறவியில் ஞானியாகவே இயலாது .
உடம்பார் அழியின்
உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம்
சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும்
உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே!!!
— திரு மூலர்
—
உடம்பு அழிந்தால்
உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது. எனவே உடம்பை வளர்க்கும் உபாயம்
அறிந்து உடம்பையும் வளர்க்கலாம், விளைவாக உயிரையும் வளர்க்கலாம். உயிரை வளர்த்தால்
சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .
முதலில் ஒரு
விடயத்தை தெளிவாக்குகிறேன். உலகில் உள்ள அனைத்துக் அறிவு சார்ந்த கலைகளையும் 64 கலைகளாக
பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள். அந்த கலைகள் அனைத்தையும் படிப்பறிவு என்று கொண்டால்
நம் பட்டு அனுபவித்து தெரிந்து கொள்ளும் அறிவு பட்டறிவு, அடுத்தவர் அனுபவத்தின் மூலம்
தெரிந்து கொள்வது அனுபவ அறிவு (இதில் அடுத்த நபரின் படிப்பறிவும், பட்டறிவும் அடக்கம்).
சித்தர்களின் ஞானமும், மருத்துவமும், கற்ப சூத்திரங்களும் இந்த அனுபவ அறிவின் பால்
பட்டவை. நாம் அனுபவித்துத்தான் தெரிய வேண்டும் என்றால் பல பிறவிகள் தேவை. சித்தர்கள்
பெருங்கருணையினால் இவற்றை நமக்காக எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இவை நமக்கு கிடைத்தற்கரிய
பொக்கிஷங்கள்.
முதலில் ஆன்மா
கொண்ட சிற்றறிவு பேரறிவாகப் பரிணமிக்க வேண்டும். பின் இந்த பேரறிவு “தான் “ என்ற
எண்ணத்தினால் வளர்ந்தது. அதனால் பேரறிவாக வளர்ந்த பின் “தான் “ என்ற
அகங்காரத்தை விட வேண்டும் விட்டால், ஜீவன் முக்தியடைய முடியும். தேகத்தோடு காயசித்தியடையும்
மார்க்கத்தையும் இந்தப் பேரறிவால் நிகழ்த்த முடியும். இப்பிறவித் துன்பம் எல்லாம் இன்றோடே
போச்சு என்றும், செத்தவரும் எழுவார் என்றும் வள்ளலார் கூறுகிறார் .
இது நம் செந்தமிழ்
மொழிப் பாடல்களில் இப்போதும் மறைவாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. இதையே வள்ளலார்
கீழ்க்கண்ட பாடலில் பாடுகிறார் .
கையறவி லாதுநடுக்
கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந்
துண்டுநடு நாட்டு…(5258) என்ற பாடல் தொடர்களில் காணலாம்.
-நன்றி
– சித்த ஞானசபை
அய்யா ... ! நல் விளக்கமுடன் கூடிய பதிவு -- பல சந்தேகங்கள் தீர்ந்தன ...! அய்யா ... ! நம் வள்ளல் பெருமானார் " பாலும் நீரும் போல பார்ப்பன சிநேகம் " -- என்று ஒரு திரு முகத்தில் குறிப்பிட்டிருந்தை படித்ததாக நினைவு -- இதன் உள் அர்த்தம் பற்றி விளக்குவீர்களா ...? நன்றியுடன் ... சிங்கார செல்வராஜன் ... !!!
ReplyDeleteநல்லது ஐயா… முயல்கின்றேன். நன்றி.
ReplyDelete