(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு
ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர
மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)
ஜனவரி மாதத்தில் அன்று…
ஜனவரி-1856 - சென்னையில் அக்காலத்தில் விளங்கிய சில புலவர்களுக்குத்
தொண்ட மண்டலமா தொண்டை மண்டலமா என ஐயம் நிகழ, பிள்ளைப்பெருமானை அப்புலவர்களும் பிரபுக்கள் சிலரும் இலக்கண நுணுக்கம் அறிவிக்க
வேண்டினாராக, பிள்ளைப்பெருமான் 'தொண்டமண்டலம்'
என்று வழங்குதல் நியாயம் என்று தொல்காப்பியத்திலிருந்தும் சில கல்வெட்டுகளிலிருந்தும் பிரமாணங்காட்டி நிறுவினர்.
16-01-1867 - கடலூரைச்
சார்ந்த திருப்பாதிரிப்புலியூர்க் கடுத்த பெண்ணை நதித் தென்கரையில் உண்ணாமுலை செட்டிச்
சாவடிக்குச் சமீபத்தில், ஓர் நைமித்தியத் திருவிழாவைப்பற்றி அறிவுடைய அனேகர் கூடினர்.
அவ்விடத்தில் வள்ளற்பிரானுக்கும் சம்பேடு-ஸ்ரீதர ஸ்வாமி நாயக்கர் அவர்களுக்கும் பிரம்மத்தை
பற்றின வாது நடந்தேறியது. பிரம்மத்தை அறிய உருவ வழிபாடு அவசியம் என வள்ளற்பிரான் தீர்ப்பு
உரைத்தார்.
11-01-1872 - சமரச
வேத பாடசாலை பற்றின விளம்பரம் வள்ளற்பெருமான் அவர்களால் வெளியானது. "இப்பாடசாலையில்
வாசிக்க விரும்புகின்றவர்கள் 15 வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள் பக்தி,
உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல்,
இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு
உரியவர்களாயிருத்தல் வேண்டும்" என வள்ளற்பிரான் மாணவர்களின் தகுதியினை குறிப்பிடுகின்றார்.
25-01-1872 - இறந்தவர்
உயிர்பெற்றெழுதல், மூப்பினர் இளமையைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் காண
இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம்
விளங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து விளையாடும் சத்திய ஞானசபையில் வள்ளற்பிரான்
தமது முதல் ஜோதி தரிசனத்தை (பூசம்) மக்களுக்கு காண்பித்தார்.
30.01-1874 - வள்ளற்பிரான்
அன்பர்களை நோக்கிக் "கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம்.
நீங்கள் அருள் அடைவதற்கு இந்தத் தீபத்தினைக்
கடவுளெனக் கொண்டு ஜீவகாருண்யமுடையயராய்ச் சிந்தித்துக் கொண்டிருங்கள். இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்ற மாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம். நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி
ஆஞ்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்". என்று கட்டளையிட்டுச் சித்தசாந்தம் உண்டாக்கி ஸ்ரீமுக வருடம் தை மாதம் புனர்ப்பூசத்தன்று
இரவு 12-மணிக்கு மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக்
கொண்டனர்.
19-01-1881 - வடலூர் சத்திய ஞானசபையை வள்ளற்பிரான் பூட்டிட்டு சென்ற பின்னர், மூடியே
இருக்கும் அந்த சத்திய ஞானசபையினை திறந்து வழிபாடு நடத்த, ஏழு நபர்கள் ஒன்று கூடி இதற்கான
ஏற்பாடுகளை செய்தனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.