Saturday, January 13, 2018

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர்-3

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர்-3
தி.ம.இராமலிங்கம்

நாயன்மார்களின் தத்துவ விளக்கங்களில் நாம் தற்போது பார்க்கப் போகும் நாயன்மாரின் பெயர் “திரு.அமர்நீதி” என்பவராவார். இவர் கி.பி.300 – 600 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவராக குறிப்பிடப்பட்டுள்ளார்கள். சோழநாட்டிலே கும்பகோணம் அருகில் உள்ள பழையாறை என்னும் சிற்றூரிலே வைசியர் குலத்தில் தோன்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



நாயன்மார்கள் புரிந்த தொண்டின் அடிப்படையில் மூன்று விதமான முறையில் அவர்கள் முக்தி அடைந்ததாக கூறுவர். குருவருளால் முக்தி அடைந்தவர்கள் 11 நாயன்மார்கள். சிவலிங்கத்தால் முக்தி அடைந்தவர்கள் 31 நாயன்மார்கள். அடியார்களை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் 21 நாயன்மார்கள் ஆவர். இப்பிரிவிலே நாம் தற்போது காணும் திரு.அமர்நீதி அவர்கள் அடியார்களை வழிபட்டமையால் முக்தி கிடைக்கப்பெற்றவராவார்.

பெரும் வணிகரான இவர் செல்வச் செழிப்பில் திளைத்தார். தாம் ஈட்டிய செல்வங்களை கொண்டு சிவ அடியார்களுக்கு உதவி செய்து வந்தார். அது என்ன உதவி?... சிவ அடியார்களுக்கு கோவணத்தை தானமாக கொடுத்து வந்தார். அடப் பாவமே…. பெரிய செல்வந்தர்… போயும் போயும் கோவணத்தையா தானமாக அளிப்பது! என்ற வியப்பும் நம்மில் எழத்தான் செய்கின்றது. ஆமாம்… அந்த கோவணத்தை இனாமாக வாங்கவே பல சிவ பக்தர்கள் அன்று திரு.அமர்நீதி அவர்களை நாடி வந்தார்கள் என்றால்… சிவ அடியார்கள் கோவணத்தின் அருமையினை உணர்ந்திருந்தனர். வேஷ்டி கட்டாமல் கூட இருக்கலாம். ஆனால் கோவணம் கட்டாமல் இருக்க முடியாது! இந்த காலத்திலும் கோவணத்தை சிலர் அணியத்தான் செய்கின்றனர். எனது தந்தையார் கூட குளிக்கும்போது மட்டும் கோவணம் அணிவார். மற்ற நேரங்களில் ஜட்டிதான். சரி… விஷயத்துக்கு வருவோம்.


சிவ அடியார்களுக்கு கோவணம் தானம் செய்யவே திருநல்லூர் என்ற ஊரில் சிவமடம் ஒன்றை கட்டினார். அங்கே திருவிழாக் காலங்களில் தன் குடும்பத்தோடு சென்று அடியவர்களுக்கு கோவண தானம் செய்து வந்தார். இதனை அறிந்த சிவபெருமான், இவரை சோதிக்க எண்ணி அந்தணர் குல பிரம்மச்சாரியாய் உருக்கொண்டு கோவணம் மட்டும் அணிந்துக்கொண்டு இரு கோமணம் முடிந்த தண்டுடன் திருநல்லூர் அமர்நீதியார் மடத்திற்கு எழுந்தருளினார்.

தன் மடத்திற்கு வந்திருக்கும் கோவணாண்டி சிவ அடியாரை இன்முகத்தோடு பாத பூஜை செய்து வரவேற்று சாப்பிட அழைத்தார். அதற்கு முன் நீராட வேண்டும்… வானம் மேகக்கூட்டங்கள் நிரம்பி இருக்கின்றன… குளித்துவிட்டு அணிய இருக்கும் ஒரு கோவணத்தை என்னோடு எடுத்துச் செல்கின்றேன்… மற்றொரு கோவணத்தை பத்திரமாக நீ வைத்திரு… நான் நீராடி வந்தவுடன் அதனை என்னிடம் கொடு… என்று கூறியதோடு கோவணத்தில் அருமை பெருமைகளெல்லாம் ஆஹா… ஓஹோ… என்று புகழ்ந்துவிட்டு அவ்வடியார் காவிரி ஆற்றில் நீராடச் சென்றுவிட்டார்.


தம்மிடம் ஏராளமாக உள்ள கோவண துணிகளுடன் அதனை வைக்காமல், தனியான ஒரு இடத்தில் அவ்வடியாரின் கோவணத்தை பாதுகாப்பாக வைத்தார் அமர்நீதியார்.

பத்திரமாக வைத்திருந்த அந்த கோவணத்தை சிவபெருமான் மறையச்செய்தார். வெளியில் மழை வேறு பெய்ய ஆரம்பித்துவிட்டது. தாம் காவிரியில் குளித்துவிட்டு மழையில் நனைந்தவாறே  மடம் வந்து சேர்ந்தார். எதிர்பாராவிதமாக மழையில் நனைந்ததால் எனது மாற்று கோவணம் நனைந்துவிட்டது. நான் உன்னிடம் கொடுத்த மற்றொரு எனது கோவணத்தை கொண்டு வா… என அமர்நீதியிடம் கேட்டார் அவ்வடியார்.

அமர்நீதி அவர்களும் அவர் வைத்த இடத்தில் சென்று பார்க்க… அங்கே அந்த கோவணம் இல்லை. எங்குத் தேடியும் அந்த கோவணம் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தப்பட்டார். எனினும் கோவணம்தானே… அதுதான் நம்மிடம் ஏராளமாக உள்ளதே… என்று தாம் வைத்திருந்த கோவணத்தில் ஒன்றை எடுத்துவந்து அடியாரிடம் கொடுத்தார்… நீங்கள் கொடுத்த கோவணம் காணவில்லை… எனவே நான் வாங்கியுள்ள இந்த கோவணத்தை அணியுங்கள் என்றார் அமர்நீதியார்.


அமர்நீதியாரின் பேச்சைக் கேட்டு சீறி விழுந்தார் சிவ அடியார். ஓ! ஊரெல்லாம் கோவணம் கொடுப்பதாய் நாடகமாடி உன்னிடமுள்ள கோவணங்களை கொள்ளை இலாபத்தில் விற்க இப்படி செய்தாயா என சினந்தார் சிவ அடியார். உங்களிடம் கொடுக்கும்போதே பத்திரமாய் வைத்திருக்க சொன்னேனே. இப்பொழுது என் கோவணத்தை தொலைத்துவிட்டு வேறொரு கோவணத்தை கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம்? என் இடுப்பிலிருக்கும் கோவணம் மற்றும் தண்டிலிருக்கும் நனைந்த கோவணத்துக்கு ஈடானது அந்த கோவணம். மழையில் நனைந்த உடம்பு நடுக்கமாய் உள்ளது. தண்டிலிருக்கும் கோவணமும் உதவாது என்ன செய்வது?

ஐயா மன்னியுங்கள். நான் எமது கோவணத்துடன் பொன்னும் வைரமும் தருகின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் அமர்நீதியார். எனக்கெதுக்கு பொன்னும் வைரமும்? எனது தண்டிலிருக்கும் இந்த நனைந்த கோவணத்திற்கு ஈடாக அதே நிறையுள்ள வேறொரு புதிய கோவணத்தை தாரும்… என சிவனடியார் நிபந்தனை விதித்தார். அது கேட்டு ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைந்த அமர்நீதியார்… உடனே துலாக்கோலை கொண்டு வந்து ஒரு தட்டில் அடியவரது கோவணமும், இன்னொரு தட்டில் தன் கையிலிருந்த கோவணத்தையும் வைத்தார். துலாக்கோலில் உள்ள தட்டு அடியவர் பக்கமே தாழ்ந்திருந்தது. மேலும் சில கோவணங்களை தன் பக்கமுள்ள தட்டில் வைத்தார். அப்படியும் துலாக்கோள் சமமாகவில்லை. மேலும் மேலும் தம்மிடமுள்ள அனைத்து கோவணங்களையும் கொண்டு வந்து வைத்தும் தம் பக்கம் துலாக்கோல் உயராததைக் கண்டு கலக்கமடைந்தார் அமர்நீதியார்.

பிறகு தம்மிடமுள்ள தங்கம், வெள்ளி, வைரங்களையும் அத்தட்டில் வைத்தும் சிறிதும் துலாக்கோல் உயரவில்லை. ஐயா! என்னிடமிருந்த கோவணங்களையும், நல் வழியில் ஈட்டிய பொருள்களையும் வைத்தும் உங்கள் கோவணத்துக்கு அவைகள் ஈடாகவில்லை. அதனால் நானும் என் மனைவியும் என் மகனையும் துலாக்கோலில் அமர்கிறோம். தங்கள் அடிமைகளாய் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்கின்றோம்… என அமர்நீதியார் வேண்டி அனைவரும் துலாக்கோலில் ஏறி கண்களை மூடி வணங்கி நின்றனர்.


இதற்கு மேலும் சோதிக்க மனமின்றி, துலாக்கோலை நேர் நிறுத்த சம்மதித்தார் அவ்வடியார். உடனே துலாக்கோலும் அமர்நீதியார் பக்கம் இறங்கி நேர் நின்று சமமாகியது. மூவரும் கண் திறந்து பார்க்க… அதற்குள் அவ்வடியார் மாயமாய் மறைந்தார். அடியாரைக் காணாது அனைவரும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்து, நீலகண்ட பெருமான் உமாதேவியாருடன் காட்சி அளித்தார். விண்ணவர்கள் கற்பக பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும் மனைவியாரும் மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளால் துலாத்தட்டு புஷ்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புஷ்பக விமானத்தில் கைலங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

அமர்நீதியார் உருவாக்கிய திருமடம் கோவிலுக்கு வெளியே குளத்தின் தென்மேலைக்கரையில் சிதிலமடைந்த நிலையில் இன்றும் உள்ளதாக கூறுகின்றார்கள். இங்குள்ள இறைவன் பொன் நிறமாக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகின்றார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என ஐந்து நிறங்களில் காட்சி கொடுப்பதால் ‘பஞ்சலிங்கேசர்’ என பெயர் கொண்டார்.


அமர்நீதியார் முக்தி தலம் “திருநல்லூர்”. முக்தி கொடுத்த இறைவன் திருப்பெயர் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர், இறைவி பெயர் ஸ்ரீ பர்வத சுந்தரி. அமர்நீதியாரின் குருபூஜை நாள் ‘ஆனி – பூரம்’.

          அமர்நீதியாரின் காலத்திற்கும் பிற்பாடு தோன்றியதாக அறியப்படும் அப்பரும், சம்பந்தரும் இந்த திருநல்லூர் கோவிலை பாடியிருக்கின்றார்கள். ஆனால் அப்பாடல்களில் அமர்நீதியாரைப் பற்றி இருவரும் குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

          சரி… நாம் கதைக்குச் செல்வோம். அமர்நீதியார் கதையில் கோவணத்தை தானம் அளித்தே இறையருள் பெற்றதாக அறிகின்றோம். 63 நாயன்மார்களில் நாம் யாரை பின்பற்றினாலும், அந்நாயன்மார் பெற்ற சித்தியினை நாமும் பெறலாம் என வள்ளற்பெருமான் கூறுகின்றார். எனவே நாம் அமர்நீதியார் செய்த தொண்டான கோவண தானத்தை செய்து இறையருள் பெற முயன்றால் என்ன ஆகும்? முதலில் கோவணத்தை வாங்குவார் இவ்வுலகில் இன்று இல்லை. வாங்குவாரின்றி கொடுப்பாரும் இல்லை. அப்படியே இதனையும் ஒரு சடங்காக ஏற்படுத்தி கோவணத்தை கொடுத்து வாங்கினாலும் இறையருள் கிடைக்கப்போவதில்லை. பின்பு இக்கதையில் உள்ள தத்துவம் என்ன?

          பிறருக்கு தானம் செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் தத்துவம். தானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் முக்கியம். இங்கே அமர்நீதியார் என்கின்ற கதைமாந்தர் ஏதோ ஒரு தானம் கொடுக்கின்றார். அவர் யாருக்கு தானம் கொடுக்கின்றார். தமக்கு பிடித்த சிவ அடியார்க்கு மட்டுமே தானம் கொடுக்கின்றார். ஆண் அடியார்களுக்கு மட்டுமே தானம். பெண் அடியார்களுக்கு தானம் இல்லை. அதுவும் எதனை தானம் கொடுக்கின்றார்? மிகச்சாதாரண கோவணத்தை தானம் கொடுக்கின்றார். கொடுப்பவர் மிகப்பெரிய செல்வந்தர். இவர் கோவணத்தையா தானம் கொடுப்பது? இவருடைய அந்தஸ்துக்கு தலைப்பாகை, மேல் சட்டை, வேட்டி, துண்டு மற்றும் கோவணம் என்று ஒரு ஆள் அணியக்கூடிய முழு ஆடைகளையும் கொடுக்கும் தகுதி இவருக்கு உண்டு. அப்படி இருந்தும் இவ்வாடைகளில் மிகச்சாதாரண கோவணத்தை மட்டுமே இவர் தானம் கொடுக்கின்றார்.

          இக்கதையின்படி இறைவனின் நனைந்த ஈரத்துடன் உள்ள கோவணத்திற்கு ஈடாக உலகியல் செல்வங்கள் எதுவும் இல்லை என்று நிரூபிக்கப்படுகின்றது. ஈரத்துடன் உள்ள ஒரு கோவணத்திற்கு ஈரமற்ற பல கோவணங்கள் ஈடாகவில்லை. ஈரத்துடன் உள்ள ஒரு கோவணத்திற்கு பொன்னும் விலை உயர்ந்த பொருட்களும் ஈடாகவில்லை. இந்நிலையில் கோவணம் என்பது பெரிதல்ல. அதிலுள்ள ஈரம்தான் பெரிது. ஈரம் என்பது கருணை, தயவு என்று பொருள்படும்.

           எந்த ஒரு காரியத்தையும் நாம் தயவுடன் செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் தத்துவம். தயவன்றி செய்யும் அறங்கள் கூட பாவமாகும். கோவணம் போன்ற மிகச்சாதாரண எளிமையான தானம் செய்தாலும் அதனையும் கருணையுடன் வழங்கவேண்டும்.

இங்கே அமர்நீதியார் தான் ஒரு செல்வந்தர் என்ற நிலையில் இருந்துக்கொண்டு தானம் செய்கின்றார். மேலும் தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே தானம் செய்கின்றார். மேலும் பெண்பாலுக்கு தானம் கிடையாது. இக்காரணங்களால் இவர் செய்யும் தானத்தில் கருணை அல்லது தயவு அல்லது ஈரம் இல்லாமல் போகின்றது. கருணையுடன் அவரது தானம் அமைந்திருப்பின் சிவ அடியார்களுக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்கும் வறியவர்களுக்கும் அவரது கோவண தானம் சென்று சேர்ந்திருக்கும். ஆனால் அவரது தானம் ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டுமே சென்று சேர்ந்தது, அதனால் அது அவரது கர்வத்தை ஆணவத்தை அதிகரிக்க செய்திருக்கின்றது. சாதி, மதம், ஆசாரங்கள், சடங்குகள் எல்லாம் தயவினை தடைசெய்வதாக வள்ளற்பெருமான் அறிவிப்பதை நாம் இந்த நேரத்தில் அறிந்து உணர வேன்டும். 

இதையறிந்த இறைவன் அவரது கர்வத்தை ஆணவத்தைப் போக்குகின்றார். இறுதியில் அச்செல்வத்தால் ஆணவமடைந்த அமர்நீதியாரையும் அவரது குடும்பத்தார்களையும் ஈர கோவணத்தை வைத்து, எதிலும் ஈரம் வேண்டும் என புரியவைத்து தம்மை சரணாகதி அடைய வைத்து முக்தி கொடுக்கின்றார். பிறருடைய மானம் காக்கக்கூடிய பொருளாகினும், அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் அதனை அன்போடு கொடுக்க வேண்டும்.

இச்செய்தியை / தத்துவத்தை உணர்த்தவே அன்றைய பெயர் தெரியாத சித்தர்கள் அமர்நீதி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள்.

 அவருக்கான சாஸ்திரத்தை / கதையை ஈர கோவணம் என்கின்ற விதத்தில் அமைத்து,

 அக்கதைக்கு இடமான ஆலயத்தை திருநல்லூரில் அமைத்து மேற்படியான சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயராக ‘கல்யாணசுந்தரேஸ்வரர்’ என்றும் ‘கல்யாண சுந்தரி’ என்றும் கடவுள் பெயராக அமைத்து,  

அந்த சித்தி முடிக்குங் காலமாக ஆனி மாதம் பூரம் நட்சத்திரம் எனவும் அவ்வாலயத்திற்கு விஷேச காலமாக்கி வழக்கத்தில் கொண்டுவந்தார்கள்.

நாமோ இக்கதையினை உட்பொருளை, தத்துவத்தை புறந்தள்ளி கோவிலையும், கடவுள் சிலைகளையும், நாயன்மார் சிலைகளையும் வணங்கி வாழ் நாள் தள்ளுகின்றோம். இதனால் யாதொரு பயனும் இல்லை. எனவே நாம் நமது வாழ்க்கையில் பிறருக்கு தானம் செய்ய வேண்டும். அதுவும் கருணை நெஞ்சுடன் தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் “சத்மெய்” என்கின்ற சித்து கிடைக்கும். 63 கலைகளில் “சத்மெய்” என்பது ஒரு கலை. கருணையுடன் தானம் செய்தால் நமது ஆன்மா ‘சத்மெய்’ என்கின்ற ஒரு கலையுடன் வளர்ச்சியடைகின்றது. ‘சத்மெய்’ என்கின்ற ஆன்ம அறிவை அடைகின்றது. ‘சத்மெய்’ என்கின்ற கலையானது இறைவனையும் நம்மையும் நேர் நிறுத்தும் வல்லமையுடையது. இவ்வாறு தானம் அளித்துவர நமது கதைமாந்தர் அமர்நீதியார் போல நாமும் ஆவோம்.

--தத்துவங்கள் தொடரும்…  

2 comments:

  1. இறைவன் இருக்கின்றான் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இறைவன் இல்லை என்று சொல்லாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இறைவன் இல்லை என சொல்லவில்லை..

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.