Saturday, January 13, 2018

இந்து மதம் எங்கே போகின்றது – தொடர்-17

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…) 

                இந்து மதம் எங்கே போகின்றது – தொடர்-17


            --அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்



அதாவது ராமன் சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி. விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜாவின் அரண்மனைக்கு வரும்போது… தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கின்றான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான் ஒடித்துவிட்டு… நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கின்றான். அதன் பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கின்றது.

கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான். ராமனுக்கு 12 வயதுதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது. வனவாசகத்தின் போது சீதாதேவி ஆஞ்சநெயரிடம் சொல்கின்றாள்.

“அஸ்டாதஸ வருஷானி மம ஜென்மனி கல்பதே…”

நான் 18-வது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கின்றது என்பது புரிகின்றது. உதாரணம் சொல்லியாகிவிட்டது. கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்…

“மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்…” என்ற Trade mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?

“அடியே… இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகின்றேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.”

இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம். நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே… பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை-தால்-அதனால் தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.

அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரிய வேண்டும். நீதான் என் மனைவி என்று அதற்காக கட்டுகின்றேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான். மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அதனால் பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?

வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும், சம்மதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால்… மநு உறுதியாக உரத்துச் சொன்னது. “நஸ்த்ரீ சூத்ர வேதமத்யதாம்…” பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்ரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசை கூட அவள் காதில் கேட்கக்கூடாது. அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும், புராணங்கள் சொல்லி வைத்திருந்தார்கள். அதை கேளுங்கள்… வேதத்தின் பக்கம் வராதீர்கள்.

இத்தொடரின் முதல் சில அத்தியாங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகின்றதா? வேதகாலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.

அப்படிப்பட்ட நிலையில்… இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்ரர்களாக பாவித்தது மநு. இன்றும்கூட என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் ‘நீ சூத்ரச்சி… உன் அம்மா சூத்ரச்சி… உன் பெண்ணும் சூத்ரச்சி…’ என்று கூறுவேன். உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு எப்படி? என்பார்கள். நமது ஸ்மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும்… ‘அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிபோய் விடுகிறார்கள்.

ஆக… மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைசியப் பெண்கள், சத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால்… சூத்ரன் வெளியே உழைப்பது போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும். அதாவது…

“ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்…” பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி. “நஸ்த்ரீ சூத்ர வேதமத்யதாம்…” அதனால்… பெண்களும் சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்… அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடவையால் காதை மூடிக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது. அப்புறம்…?

“ஸ்த்ரீதாம உபயநயனஸ்தானே விவாஹம் மநு ரப்ரவீத்…” அதாவது பெண்களுக்கு உயநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது. உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டால் தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்போது வஸ்திரத்தை குறுக்காக அணியவேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக்கொண்டார்கள். இதை நான் முன்பே கூறியிருக்கின்றேன். அப்படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.

பிறகு… இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்… பெண்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப் பற்றி பேசுகின்றார் என்று நினைக்காதீர்கள். சம்பந்தப்பட்ட விஷயம்தான். சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்களை தெளிவுபடுத்திவிட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என மநு சொல்லியிருக்கும்போது… உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே மநு சொல்வதை புரிந்துக்கொள்ள முடியும்.

சரி! உபநயனம் என்றால் என்ன?

இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆக்கிவிட்டார்கள். அதாவது ஏதோ ஆண்மகனுக்கு முதல் கல்யாணம் போல பெரியதாக விழா நடத்துகின்றார்கள். உண்மையில் உபநயனம் என்றால்… பிராமணப் பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது…?

இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியாரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை வேதக்கல்வி கற்பதற்காக அனுப்பி வைப்பார்கள். அந்த ஆச்சாரியார் அந்த சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம். அதாவது ஆசிரியர் மாணவனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதுதான்.

இந்த சமயத்தில் அந்த குழந்தைப்பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணிவைத்து புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் ‘பெல்ட்’ (அந்த காலத்தில் துணியாலேயே) கட்டிவிட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள். அப்போது அவனது அப்பா… ‘பயலே… இனிமெ நீ இந்தப்பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும்வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சார்யரோடு போ…” என்று பையனை வழியனுப்பி வைப்பார்.

அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக்கொண்டு நடப்பான். இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கின்றது? பள்ளியில் படித்துக்கொண்டிருக்கின்ற பையனை லீவு போடச்சொல்லி வீட்டுக்கு வரவழைத்து உபநயனம் பண்ணுகின்றார்கள். உபநயனம் என்றாலே வீட்டுப்பக்கம் வராதே என்று பையனை பாடசாலைக்கு அனுப்புவதுதான். ஆனால்… நடைமுறையில் அப்படியே முரண்பாடாகிவிட்டது.

காரணம்? இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான். இப்போது இங்கே பெண்ணை அழைத்து வருகின்றேன் பாருங்கள். உபநயனம் உட்பட எந்த மந்த்ர சடங்கும் பெண்ணுக்கு கிடையாது என்றால் என்ன அர்த்தம்?

பெண்ணை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. உபநயனம் என்றால் பள்ளிக்குப் போவதுதானே? ஆனால்… இன்று எல்லா ஜாதி பையன்களும் பெண்களும் உபநயனம் பண்ணிக்கொள்கின்றார்கள். ஆமாம்… பள்ளிக்குப் போய் பாடம் படிக்கின்றார்களே! பெண்கள் வாழ்வில் அடுத்த கட்டமாய்…

கல்வியும் கிடையாது… மந்த்ரங்கள் வழியே கூட அதை பெறக்கூடாது. 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து. இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது. வேதத்தில் ‘சதி’ பற்றி பார்த்தோமே… வேதமே அப்படி சொல்கின்றதென்றால் மநு சும்மா விடுமா…? வேதத்தை விட இன்னும் தெளிவாக சொல்கின்றது.

“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்…” கணவனை இழந்த பெண் என்றால்… அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக் கட்டு என உத்தரவிடுகின்றது மநு ஸ்மிருதி. மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது… சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

ஆனால்… அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது. ‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு. தவிர… அந்த விதவைப் பெண் வேறெந்த அணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது. அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.

இதையும் மீறி… வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கின்றோம்.

ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண்… கணவனை இழந்த பின்பு… ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆனை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகின்றது என்கின்றது மநு.

இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகின்றேன். விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன? பிரம்மத்துவம் எனப்படும் கடவுள் தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சனை விவாதமாக எழுந்தது.
                                                     
                                                    (தொடரும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.