Thursday, February 22, 2024

பரியங்க யோகம்

பரியங்க யோகம்



மூவகை தேகம் அவசியம் என்கின்றார் வள்ளலார்
பக்குவத்தைப் பொறுத்து நம் தேகம் மூன்றுவித மாற்றங்களை அடையும் என்கிறார் என்குரு திருமூலர் மற்றும் வள்ளலார்.
(1)#சுத்த தேகம்
(2)#பிரணவ தேகம்
(3) #ஞான தேகம்
இதில் சுத்த தேகம் என்பது வெளியில் சோப்புப் போட்டுக் குளிப்பதால் ஏற்படும் வெளிச்சுத்தம் அல்ல. உள்ளே ஒவ்வோர் உறுப்பும் சுத்தமாதல்; ஒன்பதுவகை உடலியக்க மண்டலங்களும் சுத்தமாதல்; உடலை இயக்கும் மனமும், பொறாமை, கோபம், கடுஞ்சொல் போன்ற மனக்குற்றங்களிலிருந்து விடுபட்டுச் சுத்தமாதல். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் சுத்த தேகம் பெற உரிமையுள்ளவர்கள். சுத்த தேகம் பெற்ற ஓர் ஆணும், பெண்ணும் இணக்கமாகி ஒன்று சேர்கிறார்கள் என்றால் அது ஓர் அறைக்குள் நிகழும் இன்ப நிகழ்ச்சியல்ல. இந்தப் பேரண்டம் முழுவதும் இன்ப அதிர்வை ஏற்படுத்தும் பிரம்மாண்டப் பேரதிர்வு. "Super Nova"
இந்த இன்ப அதிர்வை உருவாக்க வல்ல தம்பதியர் நிறைய இருக்கும் வரை இந்த பூமிக்கு அழிவு வராது. சண்டை, சச்சரவு, கலவரம், கொலை, கொள்ளை போன்ற சமுதாயச் சீர் கேடுகள் அதிகம் நிகழாது. பூமி,ஓர் இன்பப் பூங்காவாகத் திகழும். இன்ப அதிர்வை உற்பத்தி செய்யும் இந்த மக்கள் இல்லாத பட்சத்தில் மனவேறுபாடுகள் வளரும். மனநோய் உள்ளவர்களாய் மக்கள் மாறுவார்கள். மனக் குற்றங்கள் பெருகும். அந்த மனக் குற்றங்கள் சமூக விரோதச் செயல்களாக உருவெடுக்கும்.
அதனால்தான் வள்ளலார் போன்ற ஞானவான்கள் முதலில் மக்களை மனவளம் உள்ளவர்களாக மாற்றுகிறார்கள். பின்னர் கணவன்-மனைவி உறவுக்கு புத்துயிர் கொடுத்து அவர்களை தெய்வீகமான இன்ப அதிர்வை உண்டாக்கும் தம்பதியராக மாற்றுகிறார்கள். இது ஒவ்வொன்றும் இறைவனின் கட்டளைப்படி நிகழும் பிரபஞ்ச நிகழ்வே தவிர, சாதாரண சமூகப்பணி மட்டும் அல்ல.
"It is not only a social reformation, but also an Universal transformation"
இதைக் காலங்காலமாய்ப் பல்வேறு ஞானிகளும், சித்தர்களும், தீர்க்கதரிசிகளும் தொடர்ந்து செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இன்னும் தொடர்ந்து செய்வார்கள். இந்த பூமி வாழ்வதும் அழிவதும் எந்த அணு விஞ்ஞானியின் கையிலோ, அறியாமை மற்றும் ஆணவத்தின் சின்னங்காளாய்த் திகழும் எந்த அரசியல்வாதியின் கையிலோ இல்லை. அது முழுக்கமுழுக்க இறைவனின் பிரதிநிதிகளாய் இங்கே ஆட்சி செய்யும் சித்தர்கள், ஞானிகளின் கரங்களில்தான் உள்ளது.
மழை பெய்வதும் அவர்கள் வார்த்தையில்தான் உள்ளது. பெய்யாமல் வறுத்து எடுப்பதும் அவர்கள் வார்த்தையில்தான் உள்ளது. அதனால்தான் இறவாப் பெருநிலை எய்திய நம் தாய் அவ்வைப் பிராட்டியார் இதைப் பற்றிச் சொல்லும் போது,
"நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!"
என்று ஓர் இறை ரகசியத்தைக் கூறி அருளினார்கள். "யார் அந்த நல்லார்? அவர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள்?" என்பதெல்லாம் தேவ ரகசியம்.
அதே பெரு நிலையினை எய்திய எம்பெருமான் திருவள்ளுவர்,
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை!"
என்று, சுத்ததேகத்துடன் இன்ப அதிர்வை உருவாக்க வல்ல ஒரு தெய்வீகப் பெண்ணின் ஆற்றலைப் பற்றிய ரகசியத்தைக் கூறி அருளினார்.
அதனால்தான் நம் சித்த பெருமக்கள் , தூய்மையான மனநிலை பெற்ற தம்பதியரை உருவாக்கி, அவர்கள் திருவாயால்,
"உலகமெல்லாம் பருமழை ஒத்தபடி பெய்யட்டும்..."
என்று உலகநல வாழ்த்தைக் கூற வைத்துள்ளார்கள்.
இந்த உள்சுத்தம் பற்றிச் சொல்ல வந்த சிவ வாக்கியர் என்ற மகான்,
"அழுக்கறத் தினம் குளித்தும்
அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்தது அவ்விடம்?
அழுக்கு இல்லாதது எவ்விடம்?
அழுக்கிருந்த அவ்விடத்தில் அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கிலாத சோதியோடு
அணுகி வாழலாகுமே!"
என்று கூறி அருளினார்.....
சுத்த தேகத்தின் முதல் வெற்றி, நோய் நொடியற்ற உடல்நிலை. ஏற்கனவே இருக்கும் நோய்கள் சுத்த தேகம் பெற்றவுடன் ஓடி ஒழியும். புதிய நோய்கள் எதுவும் எட்டிக்கூடப் பார்க்காது. உங்கள் அறையில் ஈ அல்லது கொசுவை வரவேற்கக் கூடிய அழுக்கான குப்பைகள் இருந்தால் மட்டுமே ஈக்களோ, கொசுக்களோ உள்ளே நுழையும். அவற்றை வரவேற்கக் கூடிய பொருள் இல்லை என்றால் அவை எப்படி உள்ளே வரும்?
நமக்கு வரும் ஒவ்வொரு நோய்க்கும் காரணம் நமக்குள்ளேயே இருக்கிறது. வெளியில் அல்ல. சுத்த தேகத்தால் உள்ளேயுள்ள காரணம் மறைகிறது. வெளியே உள்ள காரியம் உள்ளே நுழைய வழியில்லாமல் போகிறது. அதனால்தான் இருபத்திநான்கு மணி நேரமும் நோயாளிகளுடன் வாழ்ந்து அவர்கட்குச் சேவை செய்த அன்னை தெரசாவை எந்த நோயும் தாக்கியதில்லை. வெறும் வேர்க்கடலைப் பருப்பும், பேரீச்சம் பழமும், ஆட்டுப் பாலும் சாப்பிட்டுக் கொண்டு இடைவிடாத தொண்டு செய்து இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணல் மகாத்மாவை எந்தநோயும் தாக்கியதில்லை. அடிக்கடி வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து உண்ணா நோன்பும் மேற்கொண்டவர் அவர். இன்றைய மகான்கள் உட்பட உலகில் எந்த ஞானிக்காவது அதிர்ச்சி தரக்கூடிய திடீர் நோய்கள் (Alarming Diseases) ஏற்பட்டதாக வரலாறு உண்டா?
அதைத்தான் திருவள்ளுவர் கூறும்போது,
"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்!"
- திருக்குறள்:429
என்றார்......
நம் அரசியல்வாதிகளில் யாராவது அறுபது, எழுபதைத் தாண்டியும் கம்பீரமாய் வாழ்ந்து கொண்டிருப்பதாய் வரலாறு உண்டா? ஆயிரத்தெட்டு நோய்கள்! அத்தனையும் உடல் அழுக்கு, மன அழுக்கால் நேர்பவை!
சுத்த தேகத்தின் இன்னோர் அடையாளம், உடலில் சுரக்கும் ஒவ்வொரு சுரப்பியும் அமுதமாகும் அற்புதம். உமிழ்நீர் தேனாய் இனிக்கும். சிறுநீர் கூட மருத்துவ குணம் உள்ளதாய் மாறும். அதைத்தான் "சிறுநீர் மருத்துவம்" (அமுரி) என்று சித்தர்கள் குறிப்பிட்டார்கள். சாதாரண மக்களின் நாற்றமடிக்கும் சிறுநீரை அல்ல.
சுத்த தேகம் பெற்ற, ஒருமைநிலை எய்திய கற்புடைய பெண்ணின் எச்சில் ருசியைப் பற்றிக் கூறும் போது திருவள்ளுவப் பெருந்தகை,
"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்"
- திருக்குறள்:1121
என்கிறார்......
இந்த சுத்ததேகம், ஒருமைநிலை எய்திய கற்பு என்பது மறுமணம் செய்து கொள்ளும் மாதரசிகளுக்கும் பொருந்தும் பொதுநிலை. எனவே இதை வெறும் உடல் சார்ந்த தகுதியாகக் கொள்வது தவறு.
ஒரு ஞானவானிடம் இதுபற்றி உரையாடிக் கொண்டிருந்த போது, அவர் கேட்ட வினாக்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அளித்தன. எங்களுக்குள் நடந்த உரையாடல் இதுதான்.
''தாவரத்திற்கு எத்தனை அறிவு?"
"ஓர் அறிவு அய்யா?"
"அது வளர்ந்து மலராகும்போது ஞானம் பெறுகிறது. அந்த மலர்கள் சுத்தமாக இருக்கிறதா, அழுக்காக இருக்கிறதா?"
"பரிசுத்தமாக இருக்கிறது!"
"அந்த மலருக்கு அழகிய வண்ணம் உள்ளிருந்து வந்ததா, வெளியிலிருந்து 'Fair & Lovely' தடவியதால் வந்ததா?"
''உள்ளிருந்துதான் அய்யா!" வந்தது....
"அந்த மலரில் சுரக்கும் தேனுக்கு இனிப்பு உள்ளிருந்து வந்ததா, வெளியிலிருந்து செலுத்தப்பட்டதா?''
''உள்ளிருந்துதான் வருகிறது!"....
"உனக்கு இனிப்பு உள்ளிருந்து வருகிறதா, வெளியிலிருந்து கொடுக்கிறாயா?''
"வெளியிருந்துதான் ஊட்டுகிறேன்!"....
"அந்த மலருக்கு வாசம் உள்ளிருந்து வருகிறதா, வெளியிலிருந்து 'சென்ட்' அடிப்பதால் வருகிறதா?"
உள்ளிருந்துதான் வருகிறது!"....
"ஆனால் உனக்கு?"
"வெளியிலிருந்து 'சென்ட்' அடிப்பதால்தான் வருகிறது.....
"ஆனால், புத்தர் பெருமானுக்கு வாசம் உள்ளிருந்து வந்தது. 'சென்ட்' அடித்து வரவில்லை. உனக்குத் தெரியுமா? வள்ளலார் தேகத்தில் கற்பூர மணம் வீசுவது உனக்குத் தெரியுமா?"
"தெரியாது அய்யா.."....

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
''ஒற்றை அறிவுள்ள ஒருதாவரத்தின் மலருக்கு அத்தனையும் உள்ளிருந்து வரும்போது, ஆறு அறிவுள்ள உனக்கு மட்டும் ஏன் எல்லாம் வெளியிருந்து ஊட்ட வேண்டும்...?" என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார். "சுத்த தேகம் பெற்ற தெய்வீகப் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்பதை நிரூபிக்க வேண்டி, செண்பகப் பாண்டியன் அவையில் இறைவன் நிகழ்த்திய வாதம்பற்றித் தெரியுமா?"
திருவிளையாடல் திரைப்படத்தில் பார்த்திருக்கிருக்கிறேன்!"
“அந்தப் பாடல் தெரியுமா?"
"தெரியும்".....
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறீஇ எயிற்று அறிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே!"
என்பதுதான் அந்தப் பாடல்.....
"ம்ம்ம்... அந்த சுத்த தேகம் உனக்கு வேண்டுமா, வேண்டாமா?"
"கட்டாயம் வேண்டும்"....
''அதற்குச் சில உணவு முறை, யோக முறைகள், தியான முறை, வைராக்கிய சித்தம் ஆகியவை தேவை."
இதுதான் அந்த சுவையான உரையாடல்....
"பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே...
காமனை வென்றாக வேண்டும்..."
என்கிறார் கவியரசர் கண்ணதாசன்....
யாரையும் ஈர்க்கக் கூடிய உடற்பொருத்தம் வாய்க்க வேண்டும் என்றால் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலில் தேவை அந்த "சுத்த தேகம்" என்கிறார் என்குரு திருமூலர் பெருமான்..
அது உங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா?
சிந்தியுங்கள்.....!!
அதற்கும் திருமூலர் பெருமான் விடையினை சொல்கிறார்...

நன்றி: சிவயோகி, 16 கவர்னகர், திருக்குறள்
கனகசுப்புரத்தினம் ஐயா அவர்களின் உரையில் இருந்து

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.