வடலூர் பெருவெளி வள்ளற்பெருமானுக்கு எவ்வாறு கிடைத்தது?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
சுத்த சன்மார்க்கர்கள் அனைவருக்கும் வந்தனம்!
வடலூர் பெருவெளி பற்றின தகவல்கள் தற்காலத்தில் அனைவராலும் சமூக ஊடகங்களில் பெருவாரியாகப் பேசப்பட்டு வருகின்றன. சன்மார்க்கத்தை சார்ந்த அன்பர்களும் வள்ளற்பெருமான்மேல் பற்றுள்ள பொது மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது அறியாமையால் வள்ளற்பெருமானை பற்றியும் அவரது பெருவெளி பற்றியும் தவறான செய்திகளை இவ்வுலகிற்கு எடுத்தியம்புகின்றனர்.
1.வள்ளற்பெருமானைப் பற்றின தவறான கருத்து எதுவெனில்?
வள்ளலார் - வடலூர் பெருவெளியினை தானமாகப் பெற்றார் அல்லது யாசகம் செய்து பெற்றார் என்று செய்தி பரப்புவது.
2.வடலூர் பெருவெளி பற்றின தவறான கருத்து யாதெனில்?
வடலூர் பெருவெளியானது பார்வதிபுர மக்களால் வள்ளலாருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது என்று செய்தி பரப்புவது.
மேற்காணும் இரண்டு செய்திகளும் தவறானவை. உண்மை நிகழ்வினைப் பற்றி நாம் இப்பதிவில் பார்ப்போம்....
1.வள்ளலார் பூமி தானம் பெற்றார் என்பது முதல் பொய்யுரை. வள்ளலார் யாரிடமும் சென்று எமக்கு பூமி தானம் வழங்குங்கள் என்று கேட்டதுமில்லை. அவ்வாறு யாரும் தரவுமில்லை. யாசகம் செய்யுமிடத்தில் வள்ளலார் இல்லை. அவரது சக்தி என்னவென்பது அனைவருக்கும் தெரியும், தெரிந்தும் இவ்வாறு அனைவரும் பேசுவது, நீங்கள் அனைவரும் அவரை பிச்சைக்காரனைவிட மிகக் கேவலாமாக எண்ணுவதாகவே உள்ளது. (நீங்கள் யாவரும் அவ்வாறு நினைத்து பேசவில்லை என்பது எமக்குத் தெரியும். இருந்தாலும் வள்ளலார் தானம் பெற்றார் என்றால் அதன் பொருள் பிச்சைக்காரன் என்பதுதான். என்பதை இனியேனும் நீங்கள் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்)
”வள்ளலார் கருங்குழியில் வசித்தத்தருணம், கருங்குழி கிராமத்தில் புருஷோத்தம ரெட்டியாருடைய அம்மான் பாலு ரெட்டியாருக்குள்ள குஷ்டத்தை வள்ளலார் விபூதி அருளிக் குணமாக்கினார்.
கருங்குழி முத்துநாராயண ரெட்டியார் என்பவருக்கு நேர்ந்த கண் குற்றத்தை வள்ளலார் விபூதிக் கொடுத்து குணமாக்கினார். இம்முத்துநாராயண ரெட்டியார் தமது சொத்து யாவையும் வள்ளலார் பெயருக்கு எழுதிவிட்டார். இதையறிந்த வள்ளலார் அச்சொத்துக்களை கருங்குழி சீனிவாச பெருமாள் கோவிலுக்கு எழுதிவிடும்படி கட்டளையிட்டனர். அங்ஙனமே ரெட்டியார் செய்தனர்.” (ச.மு.க. பிரபந்தத்திரட்டு நூல் - பக்கம்-88)
மேற்காணும் வரலாற்று செய்தி எதனைக் குறிக்கின்றது? என்பதை அன்பர்கள் கவனிக்கவும். வடலூர் பெருவெளி வள்ளலாருக்கு கிடைக்கும் முன்பே இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வள்ளலார் நினைத்திருந்தால், முத்துநாராயண ரெட்டியாரின் நிலங்களை தமதாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. கருங்குழி சீனிவாச பெருமாள் கோயிலுக்கு எழுதிவைக்கச் சொல்லிவிட்டார். இதன் மூலம் வள்ளலார் தானம் பெறக்கூடியவர் அல்லர் என்பது மிகத்தெளிவாகத் தெரிகின்றது.
அப்படியே அவர் அச்சொத்துக்களை தனதாக்கிக்கொண்டிருந்தாலும், இதனை தானம் வாங்கியதாக கொள்ள முடியுமா? தானம் என்பது என்ன? பிரதி உபகாரம் ஏதுமின்றி கொடுப்பதும் வாங்குவதும்தான் தானம் என்பதாகும். ஆனால் இங்கு வள்ளலார் ஒருவருக்கு மருத்துவம் பார்த்து அவரது நோயினை தீர்த்தப்படியால், நோய் தீர்ந்த அந்த ஒருவர் அதற்கு பிரதிபலனாக அவரது சொத்தினை வள்ளலாருக்கு எழுதி வைக்கின்றார். இங்கே பிரதி உபகாரம் இருப்பதால் இதனை தானம் கொடுத்தார் என்றோ, தானம் பெற்றார் என்றோ கொள்ளக்கூடாது. இதனை மருத்துவக் கூலி என்றுதான் சொல்ல வேண்டும்.
சரி... நாம் தற்போது கருங்குழி சீனிவாசப் பெருமாள் கோவிலைப் ப|ற்றி சுருக்கமாகக் காண்போம். (இலட்சுமி நாராயணத் திருக்கோயில்)
இத்தள பெருமாளிடம் பக்தி கொண்டவர் நமது வள்ளலார். திருவருட்பா பாடல் கொண்ட திருத்தலம். மேலும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் இடிக்கப்பட்ட சமயம், உற்சவமூர்த்தியைப் பாதுகாக்க முயன்ற திருமால் அடியார்கள் கருங்குழி திருக்கோயிலுக்கு கொணர்ந்து பாதுகாத்து வந்தனர். பின்னர் இதனை அறிந்த இராமானுஜர் கருங்குழி வந்து இப்பெருமாளைப் பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியே திருப்பதி அடைந்து அங்கு பிரதிஷ்டை செய்தார்.
விஜயநகர் மாமன்னர் அச்சுதப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். இத்திருத்தலத்தில் உள்ள சீனிவாசன், பாண்டவர்கள் வனவாச சமயம் நடந்து நடந்து புண்ணான திருப்பாதங்களைக் கொண்ட கண்ணபிரானாக உள்ளார். இவர் கல்யாண சீனிவாசனாக திருமணத்தடை அகற்றுபவராகவும் உள்ளார்.
அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் ராஜகோபுரம் அமைக்க அஸ்திவாரம் எழுப்பப்பட்டு திருப்பணிகள் தொடராது நின்றுவிட்டன. சிதிலமடைந்த இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் ஏராளம் இருந்தும் அவை மற்றவர்கள் வசம் அகப்பட்டு விட்டதால் பக்தர்கள் மூலமாகவே தினசரி வழிபாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சரி... நாம் தற்போது மீண்டும் வள்ளலார் செய்திக்கு வருவோம். மேற்காணும் கருங்குழி செய்தியிலிருந்து வள்ளலார் எவரிடமும் தானம் பெறக்கூடிய நிலையில் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆனால்... வடலூர் பெருவெளி.... எப்படி....?
2.வடலூர் பெருவெளி பார்வதிபுர மக்களால் வள்ளலாருக்கு தானமாகத் தரப்பட்டது என்ற செய்தியில் உள்ள உண்மை என்னவாக இருக்கும்?
02-02-1867-ஆம் ஆண்டு வடலூர்க் குடிகள் (பார்வதிபுரம் மக்கள்) சிலரிடமிருந்து இனாமாகப் பெற்றதே வடலூர் பெருவெளி என்று திருவருட்பா உரைநடை நூலிலும், வடலூரிலுள்ள கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளதை ஆதாராமகக் கொண்டே, மக்கள் அனைவரும் வடலூர் பெருவெளியை வள்ளலார் தானமாகப் பெற்றார் என்று பேசிவருகின்றனர்.
1858 ஆம் ஆண்டிலிருந்து 1867 ஆம் ஆண்டு முற்பகுதி வரை வள்ளலார் கருங்குழியில் வசிக்கின்றார். 02-02-1867-க்குப்பிறகு வடலூர் வாசியாக வள்ளலார் விளங்குகின்றார். வடலூர் பெருவெளியை எதற்காக வள்ளலார் பெறுகின்றார்? தருமச்சாலை அமைத்து அன்ன விரயம் செய்யவே முதற்கண் அவ்வெளி அவருக்கு வழங்கப்பட்டது. அப்படி என்றால், இன்றைக்கு 150 வருடத்திற்கு முன்பு வடலூர்க் குடிகள் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றவர்களாகவும், குடிசை வாசிகளாகவும், உண்ண உணவும் இன்றி தவித்திருக்க வேண்டும். அவர்களுக்கு உணவு வழங்கவே வடலூர் பெருவெளி வள்ளலார் கைக்கு வருகின்றது.
அப்படியிருக்க வடலூர்க் குடிகளால் வள்ளலாருக்கே தானம் கொடுக்கும் வகையில் அவர்கள் நிலக்கிழார்களாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே இருப்பினும், அவர்கள் எதற்கு வள்ளலாருக்கு எந்தவித பிரதி உபகாரமும் இன்றி நிலத்தை வழங்க வேண்டும்? வடலூர் குடிகளுக்கு வள்ளலாரால் யாதொரு பயனும் இல்லை. யாரோ ஒரு சாமியார் என்ற அளவில் மட்டுமே வள்ளலாரை வடலூர் குடிகள் அன்று நினைத்திருக்கக் கூடும். வள்ளலாரும் வடலூர் குடிகளை நோக்கி சென்றதாக வரலாறு இல்லை. அவர்களிடம் யாதொரு சித்தாடலும், அதிசயமும், நோய் தீர்த்தலும் வள்ளலார் செய்யவே இல்லை. யாரிடமும் எமக்கு தானமாக நிலம் வழங்குங்கள் என்று கேட்கவும் இல்லை. கருங்குழியிலிருந்து உடனே வடலூருக்கு இடம் பெயருகின்றார் வள்ளலார். வள்ளலார் வடலூர் வந்து சிறிது சிறிதாக இப்பெருவெளியை தனதாக்கிக் கொண்டதாக வரலாறும் இல்லை. வடலூர் பெருவெளியை கருங்குழியிலிருந்து உடனே அடைகின்றார் வள்ளலார். இது எப்படி சாத்தியம்? 120 ஏக்கர் என்பது மிகப்பெரிய வெளி. அன்றைக்கு வடலூர் குடிகள் இருந்த வசிப்பிடமே 120 ஏக்கர் இருந்திருக்காது.
வடலூர்க் குடிகளால்தான் இவ்வெளி வந்ததாக எப்படி கருதமுடியும்? சுமார் 50 வடலூர்க் குடிகள் இவ்வெளியை தானமாக தந்தார்கள் என்றால், இவர்கள் 50 குடிகளும் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள்? வள்ளலாரும் இவர்களிடம் நிலம் கேட்கவில்லை. இவர்களே மனமுவந்து கொடுக்க வள்ளலார் இவர்களுக்கு யார்? 50 நபர்களில் 40 நபர்கள் தானத்திற்கு ஒப்புக்கொண்டாலும் 10 நபர்கள் நான் கொடுக்க முடியாது என்று சொல்லக்கூடிய வாய்ப்புதானே அதிகம். அப்படி என்றால் அப்பெருவெளி முழுமையாக இல்லாமல் நடு நடுவே அந்த 10 நபர்களின் இடம் இருந்திருக்கும் அல்லவா? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் பெருவெளி தானத்தில் உள்ளன.
பெருவெளி இனாம் பத்திரத்தில் உள்ள, தானம் கொடுத்த நபர்களை இன்றைக்கு உள்ள பார்வதிபுர மக்களுக்கு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அப்பத்திரம் உண்மை அல்ல. பார்வதிபுர மக்களில் யாரும் தானம் அளிக்கவில்லை.
அப்படியெனில், வடலூர் பெருவெளி யாரால் வந்தது? அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் திட்டமிட்டபடி வந்தது! அத்திட்டத்தின்படி வள்ளலார் வேட்டவலம் நோக்கி நகர்த்தப்படுகின்றார்.
”வள்ளலார் பசியால் வருந்தும் ஆயிரங்கணக்காண மக்களுக்கு அன்னமளிக்க ஒரு பொது இடம் தருமச்சாலையாக அமைக்கத் திருவுளம் கொண்டார். அவ்வாறு கட்டப்படும் தருமச்சாலை நாலு பக்கத்து ஜனங்களுக்கும் போக்குவரவுக்குரிய நடுப்பாங்கில் அமையவேண்டுமென்று தமது அன்பர்களுக்கு கட்டளையிட்டனர். பல அன்பர்கள் பலப்பல இடம் குறித்தனர். ஒரு கால் வள்ளலார் தாமே சென்று வடலூர்ப் பெருவெளியில் நின்று இங்கே அமைத்தல் வேண்டும் என்று ஆஞ்ஞாபித்தனர். அவ்விடத்தைக் குறித்ததற்குக் காரணம், சிதம்பரம், கூடலையாற்றூர், விருத்தாசலம், திருவதிகை, திருஇரும்மை மாகாளம், திருப்பாதிரிப்புலியூர், தியாகவல்லி முதலிய ஸ்தலங்களுக்கு மத்திய இடமாயும் தென்பெண்ணையாறு, கெடிலநதி, வெள்ளாறு, மணிமுத்தாநதி முதலிய நதிகளால் சூழப்பட்டாதாயுள்ள வடலூர்ப் பெருவெளி வழியாய்ச் செல்வார்க்குப் பசிதீர்த்து அனுப்புவதற்கு வசதியுள்ள தருமச்சாலை உண்டாக்குவதே, அன்றியும் சிதம்பரத்தின் ஸ்தூல லிங்கமாகிய நான்கு கோபுரங்களும் அவ்விடத்தே நின்று நோக்குவார்க்குத் தரிசனமாதலாலும் என்பது,
நடிப்பார் வதிதில்லை நற்கோபு ரத்தின்
அடிப்பார்வை யும்வடக்கே யார்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோ னெஞ்சேபார்த் தாற்றெரியும்
இன்றெவ் விடத்தெனிலிப் பாட்டு. (திருவருட்பா நெஞ்சொடுகூறல் -8)
என்ற பாசுரத்தால் விளங்கும்.
மேலும் நகர வாசனையை விட்டுத் தனியே ஓரிடத்திலிருந்து அருள் நிலையிலேயே திளைக்க வேண்டுமென்று வள்ளலார் கொண்ட பெருவிருப்புமாகும். அவ்வடலூரில் பிள்ளைப் பெருமான் மீது அன்பர்கள் எண்பதுகாணி நிலம் பட்டா செய்தனர்.” (ச.மு.க. பிரபந்தத்திரட்டு நூல் - பக்கம்-103)
இவ்வாறு வடலூர்ப் பெருவெளி எவ்வாறு வரப்பெற்றது என்பதனை, எமது தந்தைவழிப் பாட்டனாரும் - வள்ளலாரின் அணுக்கத்தொண்டருமான ”காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை” அவர்கள் தான் எழுதிய பிரபந்தத்திரட்டு நூலில் குறித்துள்ளார்கள்.
வடலூர் பெருவெளியில், மன்னர் காலத்து இடிந்தக் கோட்டையும், சிவலிங்கமும், குளமும் மண்ணில் நம் கண்களுக்கு தெரியும் வகையில் புதையுண்டு உள்ளன. அப்படி எனில் அவ்விடம் எவ்வாறு குடிமக்களுக்கு சொந்தமாக இருக்க முடியும்? அன்றைக்கு ஒரு ஜமீந்தாரருக்கு அவ்விடம் சொந்தமாக இருந்தது. அந்த ஜமீந்தாரர்தான் வேட்டவலம் ஜமீன்தார் அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதிராய அப்பாசாமி பண்டாரியார். அதை அன்பர்கள் அறிந்த சமயம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், வேட்டவலம் ஜமீந்தாரரிடமிருந்தே வள்ளலாருக்கு அழைப்பு வருகின்றது.
“வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்க்கு மனைவியர் இருவர். ஒருவரை பிரம்மராசஷசி பற்றிக்கொண்டிருந்தது, மற்றொருவருக்கு மகோதரம். இத்துன்பங்கள் நீங்க மந்திரவாதிகள் கூறுகின்றபடி உயிர்க்கொலை பலசெய்தும் குணமாகவில்லை. வள்ளலாரது மகிமையைப் பிறராலறிந்த பண்டாரியார் வள்ளலாரை அழைத்துவரும்படி தக்க முதியோரை அனுப்பி, தன் மனத்தில் தோன்றியபடி இரண்டு ஒரேமாதிரியான நாற்காலிகளை அமைத்து அவ்விரண்டில் தான் குறித்த நாற்காலியில் உட்காருவராயின் மஹான் எனத் தீர்மானிக்கலாமென்று எண்ணியிருந்தனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.