Tuesday, February 20, 2024

பெருவெளியாடல்

                                                                     பெருவெளியாடல்



தமிழக முதல்வர்: சன்மார்க்கரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?

சுத்த சன்மார்க்கர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம் இருக்கின்றது.

முதல்வர் : என்ன குற்றம் கண்டீர்?

சன்மார்க்கர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?

முதல்வர் : ”சர்வதேச மையம் வடலூர்க்கு வேண்டி

சன்மார்க்க வெளியில் கண்டது தவறோ

விரியும் வெளியில் எவ்வளவு கொள்ளினும்

இடம் கொடுக்கும் இயற்கை வெளியில்

இடுக்கும் உளவோ நீ அறியும் வெளியே!”

 

சன்மார்க்கர் : இப்பாட்டின் உட்பொருள்?

முதல்வர் : வடலூர் ஞானசபை வெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதில் தவறேதும் இல்லை. அந்தப் பெருவெளியில் நாம் எவ்வளவு கட்டுமானம் செய்தாலும் அவ்வளவிற்கும் இடம் கொடுக்கும் இயற்கை வெளியாய் அது உள்ளது. எனவே அங்கு எவ்வளவு கூட்டம் வரினும் இடுக்கில்லை. இவ்வுண்மையை அந்த பெருவெளிதான் அறியும்! என்பதே இதன் பொருள்.

சன்மார்க்கர் : இப்பாட்டிலிருந்து எம்மன்னர் வள்ளற்பெருமானுக்குத் தாங்கள் கூறும் முடிவு?

முதல்வர் : ஹஹஹா! புரியவில்லை? வெளி என்றாலே அதற்கு இயற்கையிலேயே விரியும் தன்மை உண்டு என்பதுதான் நான் கூறும் முடிவு.

சன்மார்க்கர் : ஒருக்காலும் இருக்க முடியாது. ஏற்கனவே அங்கு 42 ஏக்கர் வெளியைக் காணவில்லை! இதில் தாங்கள் வேறு 4 ஏக்கர் எடுத்துக்கொண்டால் எவ்வாறு வெளி விரியும்? விரியாது! அதனால் உங்கள் பாட்டில் பிழை உள்ளது.

முதல்வர் : மானிடர் வாழும் பூமியின் வெளிக்கு வேண்டுமானால் விரியாத் தன்மை இருக்கலாம். தேவலோகப் பெருவெளிக்கு?

சன்மார்க்கர் : அவர்களுக்கும்தான். அங்கேயும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பங்களா கட்ட முடியாது.

முதல்வர் : சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கித் தூங்கி வழிகிறானே நாராயணன்? அவன் இருக்கும் வைகுண்ட வெளிக்கும் இதே கதிதானோ?

சன்மார்க்கர் : நாராயணனென்ன! சுடுகாட்டில் ஆடும் சிவன் வசிக்கும் கையிலாய வெளிக்கும் அப்படித்தான்.

முதல்வர் : மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா சாகா வரம் பெற்ற வள்ளலார் வாழும் பெருவெளியும் அப்படித்தானா?

சன்மார்க்கர்: நான் என்றும் வழிபடும் வள்ளலார் வாழும் வெளியும் அப்படித்தான், விரியாது.

முதல்வர்:   அன்னம் வடித்திட்டு, சாம்பார் ரசம் நெய்யூற்றி

                        தின்று கொழுத்திட்டு அகவல் படித்திட்டு – என்றும்

                        கர்கர்என குறட்டைவிடும் சன்மார்க்கரா எம்கவியை

                        ஆராய்ந்து சொல்லத் தக்கவர்?

 

சன்மார்க்கர் : அன்னம் வடித்து அன்ன தானம் செய்து, தானும் உண்டு இறைவனை தொழுண்டு வாழ்வோர் சன்மார்க்கர்…

உம் போன்று அரசியல் செய்து வாழ்வதில்லை!

முதல்வர்: நீ யாரிடம் பேசுகின்றாய் என்று தெரிந்துப் பேசு!.......  சன்மார்க்கரே! நான் எழுதிய தமிழ்ப் பாட்டில் குற்றமா? (முதல்வரின் இரு கண்களும் கோபத்தில் சிவக்கின்றது.)

சன்மார்க்கர்: நீரே செங்கண் முதல்வராயும் ஆகுக. உமது இரு கண்களை சிவப்பாய் காட்டிய போதும் கண்களின் நடுவே கருப்பாய் உருட்டிய போதும் குற்றம் குற்றமே! கருப்பு சிவப்பாய்க் கண்களைக் காட்டிய போதும் குற்றம் குற்றமே!!

முதல்வர்: சன்மார்க்…….கரே! (முதல்வரின் கோபத்தால் சன்மார்க்கர் மரணமடைகின்றார்)

வள்ளலார் : இறைவா! அருட்பெருஞ்ஜோதி! ஜோதிச் சுடரே! ஆராயாமல் எதிர்வாதம் செய்த சன்மார்க்கரை மன்னிக்க வேண்டும். விலை மதிப்பற்ற எங்கள் தலைமைப் புலவனை மீண்டும் உயிர் பெறச் செய்ய வேண்டும்.

இறைவன்/முதல்வர் : வள்ளற் பெருமானே! சினம் இல்லை எமக்கு. வேதனையை விடுக. எமது விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. எமது கருப்பு சிவப்பு கண்களால் வெம்மை தாளாமல் அவதியுறும் சன்மார்க்கர் நலமுடன் எழுந்து வருவார். (சன்மார்க்கர் உயிர் பெறுகின்றார்)

சன்மார்க்கர் : இறைவா! அருட்பெருஞ்ஜோதியரே! பரம்பொருளே!

வெளியும் நீயே!

வெளிக்குள் வெளியும் நீயே!

வடலூர் பெருவெளியும் நீயே!

பன்னாட்டு மையமும் நீயே!

என்னாட்டுக்கும் இறை நீயே!

முதல்வரும் நீயே!

சன்மார்க்கரும் நீயே!

எவ்வுயிரும் நீயே!

அறியாமல் வாதம் செய்த என்னை மன்னியுங்கள்.

இறைவன் : சன்மார்க்கரே! உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம். வந்திருப்பது இறையென்றறிந்தும் வடலூர் பெருவெளி மீது உங்களுக்கிருந்த பற்றின் காரணமாக "செங்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட உங்கள் வாதம் வெகு சூப்பர்! வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் கண்டு சுத்த சன்மார்க்கத்தை நாடெங்கும் பரப்புவீராக! இனியும் இதற்கு யாதொரு தடையும் உண்டோ!

-பெருவெளியாடல் முற்றிற்று. நன்றி.

-T.M.RAMALINGAM

9445545475

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.