அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கருணை இல்லா மனிதன் கடுகி ஒழிக
அரிது...அரிது... மானிடராய் பிறத்தல் அரிது! என்பார் ஒளவையார். அப்படிப்பட்ட அரிதான மனித தேகம் எடுத்தவர்கள் இவ்வுலகில் சுமார் 900 கோடி எண்ணிக்கையில் இருப்பார்கள். நமது இந்தியாவில் மட்டும் 130 கோடி இருப்பார்கள். இவர்களில் மொழி, மதம், கலாச்சாரம், இடம் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் நாம் அனைவரும் பல்வேரு குழுக்களாக வாழ்ந்தாலும், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ”மனம்” உள்ளவகளாகவே வாழ்கின்றோம்.
”மனமே குரு” என்கிது சித்த வேதம் சிவானந்த பரமஹம்சர். கருணையே மனிதனின் மனமாக இருக்க வேண்டும். கருணை இல்லை என்றால் என் உயிர் இல்லை என்கின்றார் வள்ளலார். மதத்தின் அடிப்படையிலும், கலாச்சாரத்தின் அடிப்படையில் நாம் எந்த ஒரு செயலை செய்யும் முன், நமது மனம் என்ன சொல்கின்றது என்பதை கேட்டுச் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் கருணை இல்லாத மனம் நம்மை தீய வழிக்கே இட்டுச் செல்லும். இவ்வாறு கருணை இல்லாத மனம் படைத்தவர்களே இவ்வுலகில் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள். இவர்களெல்லாம் இவ்வுலகில் கடுகி ஒழிய வேண்டும். நான் இங்கு அவர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாசம் எழுதவில்லை. இவர்கள் அனைவரும் கருணை உள்ளவர்களாக மாற்றம் எய்தி கருணையற்றவர்கள் ஒழிய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாசம் உள்ளதாக அறிய வேண்டும்.
நாம் விடயத்திற்கு வருவோம். மூன்று நாட்களுக்கு முன்பு நமது நாட்டின் தலைநகரில் (டில்லி) போதைப் பொருளை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது 3 தமிழர்கள் பிடிப்பட்டதாக அறிந்து துயறுற்றேன். அந்த மூன்று தமிழர்களுக்கும் தலைமை யார் என்று அறிந்தபொழுது, சென்னையில் உள்ள ஆளும் கட்சி மற்றும் ஆளும் கூட்டணி கட்சி (தி.மு.க. மற்றும் வி.சி.க.) பிரமுகர்கள் என மூன்று நபர்கள் என அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தேன். இதுவரை நமது இந்தியாவிற்குத்தான் மற்ற நாடுகளிலிருந்து போதைப் பொருட்கள் கள்ளத்தனமாக வரும். ஆனால் இன்று, இந்தியா போதைப் பொருட்களை மற்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாக அனுப்புகின்றது என்றால் அது ஒவ்வொரு இந்தியனுக்கும் தலை குனிவு. தமிழர்கள் என்ற வகையில் நமக்கு மேலும் தலை குனிவு.
போதை கடத்தலை தடுக்கும் சட்டங்கள் இருப்பினும், அதனை நடைமுறை படுத்தும் அதிகாரிகள் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவதால் இவர்களும் கருணை அற்ற மனிதர்களாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக சென்னையிலிருந்து போதைப் பொருள் வெளிநாட்டிற்கு பார்சல் மூலம் கடத்தியிருக்கின்றார்கள். இதனை மத்திய மாநில அதிகாரிகள் தடுக்காமல் இருந்துள்ளார்கள். மேலை நாட்டிலிருந்து புகார் வந்தப் பிறகு தற்போது பிடிக்கின்றார்கள் என்றால், இவர்களை என்னவென்று சொல்வது? கருணை இல்லா மனிதர்கள் கடுகி ஒழிய வேண்டும்!
தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களை அரசியல் கட்சியினர் பணத்திற்காகவும், ஓட்டிற்காகவும் தங்களுடன் நெருக்கமாக வைத்துக்கொள்கின்றன. இவர்களால் உலக அளவில் உள்ள மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. போதை என்பது பெருமளவில் 18 வயது துவங்கி 25 வயதுக்குள் உள்ள ஆண் மற்றும் பெண்களை அதிகம் பாதிப்புள்ளாக்குகின்றது. இளைய தலைமுறைகளை போதைக்கு அடிமைப் படுத்தும் அரசியல் கட்சிகளும் கடுகி ஒழிய வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மதுக்கடைகளை அந்தந்த அரசுகள் மூட வேண்டும். மக்களை கருணையுள்ளவர்களாக வாழ வழிவகை செய்துத் தரவேண்டும். திருவள்ளுவருக்கும், வள்ளலாருக்கும் விழா எடுப்பதோடு அவர்கள் கூறிய கருணை நிறை வாழ்க்கையை மக்களுக்கு கொண்டு செல்ல அரசுகள் முற்பட வேண்டும்.
மனிதனை கருணை வழிக்கு கொண்டு செல்லும் பல்வேறு சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் அனைத்தும் இது போன்ற நேரத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்க வேண்டும். போதை பொருட்களை மக்களுக்கு வழங்கும் அரசுகளையும், மனிதர்களையும் மக்கள் புறந்தள்ள வேண்டும்.
வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்கம் - போதை கடத்தல், மற்றும் போதை உபயோகித்தல், போதைக்கு ஆதரவான அரசுகளை வன்மையாகக் கண்டிகின்றது.
புலை கொலை போதைத் தவிர்த்து மனிதர்கள் யாவரும் கருணையுடன் வாழ்வோம். கருணை இல்லா மதங்கள், சமயங்கள், மார்க்கங்கள், அரசுகள், மனிதர்கள் அனைத்தும்/அனைவரும் கடுகி ஒழிய வேண்டும் என்று வள்ளற்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றேன். நன்றி.
தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com
++++++++++++++++++++
அனைவருக்கும் வணக்கம்.
மேற்காணும் பதிவினை பதிவிட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்று 06-03-2024 புதுச்சேரியில் கஞ்சா போதையில் 19 வயது வாலிபனும், 59 வயது கிழவனும் சேர்ந்து 9 வயது சிறுமியை வன்புணர்வுச் செய்து கொன்று சாக்கடையில் தூக்கி வீசியிருக்கும் சம்பவம் (இது இன்றைக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே நடந்தேறிவிட்டது) புதுச்சேரியையும், தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
ஆர்த்தி என்ற பெயரருடைய ஏதுமறியா 5-ஆம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியை இவ்வாறு செய்யத்தூண்டியது போதை என்னும் பழக்கமே ஆகும். இதனை தடுக்காமல், ஊக்குவித்த புதுச்சேரி அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தக்க தண்டனையை இறைவனும் மக்களும் வழங்க வேண்டும். சிறுமி ஆர்த்தியின் ஆன்மா இறையடிச் சேர வள்ளற்பெருமானை வேண்டுகின்றேன்.
கருணையில்லா மனிதன் கடுகி ஒழிக!
++++++++++++++++++++++
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.