Monday, February 18, 2013

செத்தாரை எழுப்புதல்


செத்தாரை எழுப்புதல்

கேள்வி : வள்ளலார் தமது திருவருட்ப்பாவில் இந்த 'செத்தாரை எழுப்புதல்' பற்றி பல இடங்களில் பாடியுள்ளார், ஆனால் அவர் பாடியபடி எவரையேனும் எழுப்பியுள்ளார்களா?

சமய குரவர்கள் நால்வரைப் பற்றி பாடியுள்ள வள்ளலார், ஏன் அவர்களைப் போன்று செத்தாரை எழுப்பவில்லை? திருநாவுக்கரசர் - அப்பூதியடிகளின் மூத்த மகனை எழுப்பியது போன்று, திருஞானசம்பந்தர் - பூம்பாவையை எழுப்பியது போன்று, சுந்தரர் - முதலையுண்ட பாலகனெ எழுப்பியது போன்று ஏதாவது நிகழ்ச்சி வள்ளலார் வாழ்வில் உண்டா?

இக்கேள்விக்கு பதில் காணும்முன் சில கருத்துகளை நோக்கவேண்டியுள்ளது. இந்த 'செத்தாரை எழுப்புதல்' என்பது பல சித்து வகைகளின் ஒன்று. சித்து வகைகள் மொத்தம் 18 என்றும் 8 என்றும் 64 என்றும் சித்தர் உலகம் கூறுகிறது, அவை

1. அனிமா
2. லகிமா
3. மஹிமா
4. ஈநக்தவ
5. வசித்வ
6. ப்ராகாம்ய
7. புத்தி
8. இச்சா
9. ப்ராப்தி
10. ஸர்வகாம
11. சர்வ சம்பதப்ரத
12. சர்வ ப்ரியம்கா
13. சர்வ மங்களகாரண
14. சர்வ துக்கவிமோசன
15. சர்வம் ருத்யுப்ரசமன
16. சர்வ விக்ன நிவாரண
17. சர்வாங்சந்தர
18. சர்வ சௌபாக்ய தாயக

என்றும்

1. அணிமா
2. லகிமா
3. மகிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

என்றும் கூறுகின்றனர்.

1. அணிமா: பெரிய ஒரு பொருளைத் தோற்றத்தில் சிறியதாக  ஆக்குவது, பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்னும் புராணச் செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. லகிமா: கனமான பொருளை லேசான பொருளாக ஆக்குவது, திருநாவுக்கரசரை, சமயம் பகை காரணமாக கல்லில் கட்டி கடலிலிட்ட போது, கல் மிதவையாகி உடலில் மிதந்தது. லகிமா என்னும் சித்தமாகும்.

3. மகிமா: சிறிய பொருளை பெரிய பொருளாக ஆக்குவது, வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூன்று உலகங்களை அளந்ததும், கிருஷ்ணன்,  அர்ச்சுனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி, உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மகிமா என்னும் சித்தாகும்.


4. கரிமா: லேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடம் உள்ள எல்லாப் பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

5. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடல் புராணத்தில் எல்லாம் வல்ல சித்தரான படலம் என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப் போதே தோன்றுதல். அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை  மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

7. ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் சித்தாகும்.

8. வசித்துவம்: ஏழு வகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக,  மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம் வசப்படுத்துதல். திரு நாவுக்கரசர் தன்னைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும் ராமர் ஆல மரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும், வசித்துவம் என்னும் சித்தாகும்.

இதோ எண்வகை சித்துகளைப்பற்றிய சித்தர் பாடல்,

அறவுஞ் சிறிய உயிர்தொறும்தான்
பரமகாட்டை யணுவாச் சென்று
உறையும் சிறுமை அணிமாவாம்
உவரி ஞானமுதன் மேலென்று
அறையும் சிவாந்தம் ஆறாறும்
உள்ளும் புறனும் அகலாதே
நிறையும் பெருமைதனையன்றோ
மகிமா வென்னும் நிரம்பிய நூல்

இலகுமேரு பாரம்போல்
இருக்கும் யோகிதனை யெடுத்தால்
இலகுவான தூலமென
இருப்பது இலகிமா வாகும்
இலகுவான பரவணுப் போல்
இருக்கும் யோகிதனை யெடுத்தால்
இலகுமேரு பாரம்போல் இருப்பது அன்றோ கரிமாவாம்

பிலத்தில் இருந்தோன் அயன் உலகில்
புகுதன் மீண்டும் பிலமடைதல்
பலத்தின் மிகுந்த பிராத்தியதாம்
பரகாயத்தில் நண்ணுதல் வான்
புலத்திலியங்க லிச்சித்த
போகமனைத்தும் தானிருக்கும்
தலத்தினினைந்த படிவருதல்
பிரகாயமாம் தவக்கொடியீர்

விண்ணில் இரவி தன்னுடம்பின்
வெயிலாலனைத்தும் விளக்குதல் போல்
மண்ணிலுளவாம் பொருள்பலவும்
காலமூன்றும் வானத்தின்
கண்ணிலுளவாம் பொருளும்தன்
காயத்தொளியா லிருந்தறிதல்
எண்னிலிதுவும் மறையொருசார்
பிரகாமியம் என்று இயம்புமால்

ஈசனென முத்தொழிலும்தன்
இச்சைவழிசெய் தெழு பிறவி
தேசன் முதல் கோள் பணிகேட்பத்
திகழ்வது ஈசத்துவமாம்
பூசல் அவுணர் புள்விலங்கு
பூதம் மனிதர் முதலுலகும்
வாசவன் ஆதியெண் மருந்தன்
வசமாக் கொள்கை வசித்துவமாம்


மேற்கண்ட இந்த எண்வகை சித்துகளின் 'செத்தாரை எழுப்புதல்' என்பது 'ஈசத்துவம்' என்ற சித்து வகையாகும். இந்த 'ஈசத்துவம்' என்ற சித்துவேலையினைத்தான் நாயன்மார்களில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் உபயோகப்படுத்தியுள்ளனர். இவர்கள் தவிர எண்ணற்ற சித்தர்கள் இதனை சர்வசாதாரனமாக பயன்படுத்தியுள்ளார்கள். அப்படியெனில் இது அவ்வளவு சுலபமானதா? என்று கேட்டால் மிகச் சுலபமானது, அவர்களுக்கு மட்டும். நாமும் பிரயாசைப்பட்டு முயற்சித்தால் இதனை அடையலாம்.

"கட்டுக் கடங்காத பாம்பைக் கையிலெடுத்து ஆட்டுவோம். இந்திரன் உலகத்தை இங்கே காட்டுவோம். தூணையும் துரும்பாகவும் துரும்பைப் பெருந்தூணாகவும் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ஆக்கிக் காட்டுவோம். எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிவோம் ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம். மண்டலத்தைக் கையால் மறைப்போம். வானத்தை வில்லாய் வளைப்போம். நெருப்புக்குள் மூழ்கி விடுவோம் நீருக்குள் முழ்கி மூச்சை அடக்குவோம். பாயும் புலியைத் தாக்கி விடுவோம். இப்பெரிய உலகைச் செம்பொன்னாக மாற்றுவோம். செங்கதிரைத் தண் கதிராகச் செய்வோம். இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்" இப்படி குதிப்பவர் சித்தர்களுள் ஒருவரான 'பாம்பாட்டி சித்தர்', இவ்வாறு சித்து உலகில் புகுந்தால் நம்மால் வெளிவரமுடியாதபடி இயற்கைக்கு மாறான கருத்துகள் நிறைய உள...


இனி வள்ளலார் மேற்கண்ட சித்திகளைபற்றி என்ன கூறுகின்றார் என பார்ப்போம்,

“அக்கினிக் கலை 64இன் குணங்களைச் சைவத்தில் 64 திருவிளையாடல் களாகவும் சிவனடியார்களாகவும் சந்திரகலை 12ஐயும் வைணவத்தில் நாயன்மார் களாகவும் வழங்குகின்றனர்” என வடலூர் வள்ளலார் கூறுகிறார். இவை நிற்க,

கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி எனச் சித்திவகை மூன்றாம்;-

1. கர்மசித்தியாவது;-

   அணிமா   - துரும்பை மேருவாக்குகிறது
   மகிமா     - மேருவைத் துரும்பாக்குகிறது
   கரிமா     - மேருவை ஒன்று மில்லாமல் செய்கிறது
   லகிமா     - ஒன்றுமில்லாத இடத்தில் அனேகங்களாகச் செய்கிறது
   பிராத்தி    - வேண்டுவன அடைதல்
   ஈசத்துவம்  - குளிகை வல்லபத்ததாலெங்கும் செல்லுகிறது
   பிராகாமியம் - பரகாயப்பிரவேசம்
   வசித்துவம்  - எழுவனகத் தோற்றமாகிய தேவமானஷ்ய நரக மிருக பசஷி   ஊர்வன விரஷம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துகிறது.
              
               தெகத்தை கல்பசித்தி செய்து கொள்ளுதல்; அபரமார்க்கி; சதாசிவாநந்த அனுபவம்; சதாசிவகால வரை; பிரேதத்தை உயிர்பித்தல்; சித்திகாலம் 33/4 நாழிகை முதல் 33/4 வருஷத்திற்குள்.

2. யோகசித்தி விவரம்:- 64 சித்திகளையும் தன்சுதந்தரத்தில் நடத்துகிறது; சங்கல்ப, குளிகை; பிராண கல்பதேகி; பிரமகாலம்; பராபரமார்க்கி; சித்திகாலம் 12 வருஷ முதல் 108 வருஷத்திற்குள்; புதைத்த தேகத்தை நாசமடையாமுன் உயிர்பித்தல்.

3. ஞானசித்திகளின் விவரம்:- அறுபத்து நாலாயிரம் சித்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துகிறது. 647 கோடி பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டம் போல் நடத்துகிறது; காலம் கடந்தது; அடிநிலை, முடிநிலை, சுத்தகர்ம, சுத்தயோக, சுத்தஞான சித்திவல்லபங்களைத் தன் சுதந்தரத்தால் நடத்துகிறது. 

இவை நிற்க. மேலும் சில இடங்களில் இதுபற்றி என்ன கூறுகிறார் என்பதனையும் பார்ப்போம்...

நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்றுக்கொள்வது நலம். ஏனெனில் மேற்படி நெற்றிக்கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டபகல் போல் தெரியும். அவன் தான் சுத்த ஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒருபிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்று எழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால், உடனே அந்த ஜீவன் பஸ்பமாகிவிடும்.... ஒளியைத்தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், அக்கணமே அது ஜீவிக்கும்.... மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள.

இவை நிற்க. மேலும் 'தாயுமானவர்' முதலானவர்கள் (சன்மார்க்கத்தை பின்பற்றிய நாயன்மார்கள் போன்றவர்கள்) சுத்த சன்மார்க்கிகள் அல்லர்; மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்திய தேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச்சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

இவை நிற்க. மேலும் 'பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும்.....  மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தார்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக்கூடும்...

இதுமட்டுமல்லாமல் 'செத்தாரை எழுப்புதல்' பற்றி பல இடங்களில் தனது 'திருவருட்ப்பா' வில் கூறியுள்ளார்கள். சரி இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம்...

வள்ளலார் தமது திருவருட்ப்பாவில் இந்த 'செத்தாரை எழுப்புதல்' பற்றி பல இடங்களில் பாடியுள்ளார், ஆனால் அவர் பாடியபடி எவரையேனும் எழுப்பியுள்ளார்களா? என்றால் இல்லை. ஏன் என்று பார்ப்போம்...

சமய குரவர்கள் நால்வரைப் பற்றி பாடியுள்ள வள்ளலார், ஏன் அவர்களைப் போன்று செத்தாரை எழுப்பவில்லை? திருநாவுக்கரசர் - அப்பூதியடிகளின் மூத்த மகனை எழுப்பியது போன்று, திருஞானசம்பந்தர் - பூம்பாவையை எழுப்பியது போன்று, சுந்தரர் - முதலையுண்ட பாலகனெ எழுப்பியது போன்று ஏதாவது நிகழ்ச்சி வள்ளலார் வாழ்வில் உண்டா? இல்லை. ஏன் என்று பார்ப்போம்...

நல்லது, வள்ளல் பெருமானும் இவ்வாறு ஒரு அருளாடல் நிகழ்வு செய்து அருளினார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதனால் நாம் பெரும் பயன் என்ன? திருக்கடைக்காப்பு - தேவாரம் - திருப்பாட்டு அருளிய மூவர் முதலிகளின் திரு உருவங்களோடு வள்ளலார் திரு உருவத்தையும் ஒன்று சேர்த்து மலரிட்டு வழிபடுவோம் அவ்வளவுதானே! (வள்ளலாருக்கும் இறவாநிலை கிடைத்திருக்காது.) அம்மூவர்களும் நாம் அவர்களை வழிபாடு செய்வான் வேண்டி அச்சித்தாடல் புரிந்தார்களல்லர். மூவர்களின் அருளிய பாடல்களை பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.

1. ஆளுடைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் எழுப்பியது சேமித்துவைத்திருந்த பூம்பாவையின் எலும்பை.

2. ஆளுடைய அரசுகளான திருநாவுக்கரசர் எழுப்பியது கண்ணுக்கு நேரே இருந்த மூத்த திருநாவுக்கரசரான அப்பூதியடிகளின் மகனாரின் யாக்கையை.

3. ஆளுடைய நம்பிகளான சுந்தரர் எழுப்பித் தந்தருளிய நிலை எலும்புமில்லை, யாக்கையுமில்லை, என்றோ முதலை மடிந்த நிலை, உருப்படியாக ஒன்றும் இல்லை. உண்ட முதலையும் இல்லை. முதலை வாழ்ந்த நீரும் இல்லை.

இவ்வகை தன்மைகளை நன்கு கவனிக்க வேண்டும். இந்த மூன்று நிலையிலும் {எலும்பு, யாக்கை, ஒன்றுமே இல்லாத நிலை} உயிர் நீத்தவர்கள் உயிருடன் மீண்டும் வந்தமை ருசிப்பிக்கப்பட்டது. திருவருள் வல்லபம் வெளிப்பட அதற்குரிய தக்கார்களான அருளாளர்களை கொண்டு காட்சி பட்டதே அன்றி வேறு யாது? காரணமும் பற்றியதே அன்று.

இந்த நிலையை மீண்டும் வள்ளல்பெருமான் வழி வெளிப்படுத்த வேண்டிய இன்றியமையாமை திருவருளுக்கு இல்லை. ஏன்? இனி எவ்வகையில் மாண்டோரை எழுப்பிக்காட்டுவது? மூவகையும் முடிந்தது. எவ்வகை சாவும் மீளலும் இவ்வகையில் அடங்கக்கூடியதே, மீண்டும் மீண்டும் செய்வதையே செய்வதில் இலாபம் என்ன? அதே ஆற்றலை வெளிப்படுத்துவதில் மன்பதைக்கு பயனில்லை என்பதை திருவருள் தெரிந்து கொள்ளாமலா இருக்கும்? மூவர் பெருமக்களுக்கு திரு உருவம் செய்து பூப்போட்டு வணங்கி பேழையில் வைத்து பூசிக்க கற்றோமே தவிர அவர்களின் வழி தெய்வீகம், ஒருவரும் பெறவில்லையே என்பதை உன்னியது இறையருள்.

செத்தார் எழுதலான இந்நிகழ்ச்சியை பற்றி பேசியாவது வந்தோமா? புராணம் படித்ததில் 'கதையாக' இதை ஒட்டினோமே தவிர சிறிதேனும் அழிந்தினோமா? எனவே மீண்டும் அருளாடல் புரிந்து ஆட்கொள்ளாத நிலையில், ஆனால் இந்நுட்பம் வெளிப்பட அறிவுத்துறை கூடிய அருளுரைவுப் பிழம்பு ஒளிவிட உள்ள அருளாளரை அனுப்ப திருவருள் திருநோக்கம் கொண்டது.

முன்போந்த அருளாளர்களை கொண்டு மீண்டும் திரு அவதாரம் செய்வித்து மக்களை திருத்த நினைக்காமல் தாமே ஒரு தனி நிலைக் கொண்டு திருக்கருவுற்றது, வள்ளல் பெருமான் திருவடிவ உருவில் அவ்வளவுதான். பெருமானின் திருவருட்பாக்கள் மலர்வதற்கு முன்பு நம்மில் எவராகிலும் ஒருவர் 'செத்தார் எழுதல்' பற்றி சிந்தித்தோமா? இல்லையே.

'செத்தார் எழுதல்' என்று பெருமான் முரசம் முழங்கியதும், மக்கள் கொஞ்சமேனும் உள்ள பக்குவ பண்பாடில்லாது சவங்களை கொண்டு வந்து எழுப்பித்தர மன்றாடியபோது பெருமானும் ஏதேனும் ஒரு சவத்தை எழுப்பியிருந்தால், அதன் பிறகு அன்றைய சமுதாய நிலமையில் (இன்றிலிருந்து ஏறத்தாழ 150 வருடங்கள் முன்பு அவ்வளவே, செய்திகளலெல்லாம் உடனே மக்களிடம் பரவத்தொடங்கிய காலம்) அவர் நிலமை என்னவாகும் என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

"யான் புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான்புரிந்த
அம்பலத்தான் நல்லருளால் அந்தோ நான் மேற்போர்த்த
கம்பலத்தால் ஆகும் களித்து" (திருவருட்பா - 5525)

பாடல் பச்சையாகத் தெளிவாகப் பளிச்சென மின்னுகிறது. அங்குள ஒரு சொல்லை இங்குசேர்த்து, இங்குள்ள ஒரு சொல்லை அங்கு சேர்த்து கொண்டும் கூட்டியும் அதை சொல்லெனக் கழித்தும் பார்த்தாக வேண்டிய பா அல்ல இது. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அடித்த்ல் திருத்தல் இன்றி திருத் தள்லால் வந்தவை, தங்குதடையின்றி ஆற்றொழுகுப் போல ஓடுகிறது, எழுதினால் எழுதியதுதான் இக்காலத்தில் உள்ளதுபோல் மாற்றமுடியாது.

"நான் போர்த்த கம்பளத்தால் ஆகும் களித்து" என்ற அடியை சற்றே சிந்திப்போம். நான் மேற் போர்த்திய வெள்ளாடை (லாங்கிளாத் - மல்) என்று பகரவில்லை. அடிகள் உடுத்திய ஆடை வெண்மை நிறைந்தது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அப்படியானால் மேற்போர்த்திய கம்பளம் என்பது யாது? கம்பளம் என்பது வடசொல். இதன் தமிழ் சொல் உரோமம் (மயிர்) கம்பளம் என்பது திருமேனியில் உள்ள உரோமமும் தம் உடம்பில் உள்ள உரோமம் (மயிர்) ஒன்று மட்டுமே செத்தாரை எழுப்பிவிடுமென்பது கருத்து.

மேலும் ஒரு சான்று நாம் நன்கு கண்டுகொள்ளலாம். இன்றும் மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக திருமாளிகைக்கு அருகில் அ.முத்தைய படையாச்சி என்பவர் வசித்து வருகிறார், அவருடைய தந்தை அப்பாவு படையாச்சி என்பவர். இந்த முத்தையன் என்பவரின் பேரன்தான் அ.முத்தைய படையாச்சி. இவர்கள் வீட்டுத் திண்ணையில் சிலபோது வள்ளல் பெருமான் அமர்வது வழக்கம். பெருமானால் தந்தருளப்பெற்ற திருவருட்பா அச்சிட்ட நூல் ஒன்று நான்கு திருமுறைகள் கொண்டது இன்றும் இவர்களிடம் இருந்து வருகிறது. இதனை பொன்னைப்போல் இக்குடும்பத்தினர் போற்றி வருகின்றனர்.

ஒருநாள் பெருமானார் வெளிப்போந்துள்ளபோது பாட்டனாரான முத்தைய படையாச்சி காலமாகி, சவம் அடக்கத்துக்கு கொண்டுபோகபட்டுவிட்டது. சுவாமிகளும் சித்திவளாகம் வந்து சேர்ந்தார்கள். உடனடியாக செய்தி தரப்பட்டது. பெருங்கருணை வடிவரான்படியால் உடனே 'கைப்பிரம்புடனும்' 'ஒரு செப்பு தண்ணீர்' உடனும் சவ அடக்க இடத்திற்கு புறப்பட எத்தனித்தார்கள். ஆனால் உடனடியாக நின்றுவிட்டார்கள். "சரி, சவம் அடக்கமாகட்டும்" என்று வழக்கமாய் அமரும் அத்திண்ணையில் உட்கார்ந்து விட்டார்.

இதனைநாம் சிந்திக்க வேண்டும். கருணாமூர்த்திக்கு இரக்கம் தவிர வேறொன்றுமே செயற்படவில்லை.ஆகவே உயிர்பிக்க எத்தனித்தார்கள். ஆயினும் திருவருள் உடன்பாடாகவில்லை. அனுமதிக்குப் பதில் தடையாயிற்று. இந்த தடுப்பும் உடனடியாக ஒரே நொடியில், உயிர்பிக்க வேண்டிய எண்ணத்தோடு சமவேளையில் உருவாகும் ஆண்டவன் ஆணை அணுகூலமில்லாமை உணரப்பெற்று நிறுத்திவிட்டார்கள். இதை மீறிச் செய்தாலும் குறைவு ஒன்றுமில்லை. உயிர்பித்துவிடவும் முடியும். ஆண்டவனருள் அடியவர்களை ஒருநாளும் காட்டிக் கொடுக்காது. என்றாலும் தொடர மாட்டார்கள் அருளாளர்கள். தமக்கென ஒன்றுமே இல்லாதபோது ஏன் இறையாணையை மிஞ்சுகிறார்கள்? அருள்நிலை சாதகமாய் இருப்பதும் பாதகமாயிருப்பதும் அவர்கள் ஒருவருக்கு மட்டும்தான் தொன்றமுடியும். ஏனையோர் இதில் தலையிட்டு ஆயமுடியாது, ஆயக்கூடாது.

"அட்டசித் திகளுநின தேவல்செயு நீயவை
 அவாவியிடல் என்ற ஒளியே" (திருவருட்ப்பா)

சித்து விளையாட்டின் மீது ஆசை வேண்டாம் என்று இறைவன் கூறியதாக அவரே பாடியுள்ளதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

சித்து விளையாட வரவில்லை வள்ளலார், மேலும் சித்து விளையாட ள்ளலார் ஒன்றும் சித்தரில் ஒருவர் அல்லர்; மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயலாக / தன்மையாக விளங்குவாதக அவரே பாடுகிறார், இதில் சித்தர்கள் நான்காம் இடத்தில்தான் உள்ளார்கள் என்பதனை கவனிக்கவேண்டும், முதலில் உள்ள மூவர் சிவன், விஷ்ணு, பிரம்மா, இரண்டாமதாக முப்பத்து முக்கோடி தேவர்கள், மூன்றாவதாக முத்திநிலையடைந்த முத்தர்கள் / ஞானிகள், நான்கவதாக சித்தர்கள், ஐந்தாவதாக வள்ளலார் காலத்திற்கு முன்னர் பிறந்தும் {1823ம் ஆண்டிற்கு முன்} பிறக்காமலிருக்கின்ற உலகியலார்கள் மற்றும் வானகத்தார்கள் யாவரும் பெற்றிடாத ஓர் தனி நிலை யில் உள்ளதாக அறியவேண்டும். நிறைகுடம் தளும்பாது என்பார்கள் இருப்பினும் இறைவனின் சித்தாடல் சில இவர் மூலமும் தளும்பியிருக்கிறது, அதனை வேறோர் இடத்தில் பார்போம். சுபம்.

அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.