Sunday, February 24, 2013

சைவ உணவு சாத்தியமா? No.3

சைவ உணவு சாத்தியமா? No.3

ஜாகிர் நாயக்:
 
மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் ‘கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.
மறுப்புரை:
இவ்வசனத்தில் 'அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்' என்பதில் 'அவற்றிலிருந்து' கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால், நெய், தயிர் போன்றவற்றை புசிக்கவும், சாணம், தோல் (இயற்கை மரணத்திற்கு பின் கிடைக்கும் தோல் என்று கொள்ளலாம்) மற்றும் கால்நடைகளால் கிடைக்கும் உதவிகளை (உழுதல், சுமத்தல், இழுத்தல் போன்ற பயன்கள்) போன்ற பயன்களையும் பெறுவதாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றிலிருந்து என்றுதான் கூறியிருக்கிறதே ஒழிய 'அவற்றை' நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள் என சொல்ல வில்லை. எனவே இவ்வசனத்தைக்கொண்டு அனுமதியளித்துவிட்டதாக கொண்டாடவேண்டாம்.
ஜாகிர் நாயக்: 

அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் ‘நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள். எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

மறுப்புரை:

இதற்கும் மேற்கண்ட விளக்கத்தினையே அளிக்க விரும்புகின்றேன்.

மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் 14வது வசனம் நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்

மேற்கண்ட வசனத்தை நானே எடுத்துக்காட்டவேண்டியுள்ளது. இவ்வசனத்தில் 'மீன் போன்ற' மாமிசம் என்பது மீன் அல்ல, அது வேறு ஏதோ ஒன்றையே குறிப்பதாக உள்ளது (அருள்மறை - மறைக்கப்பட்டுள்ளது), ஏனெனில் எந்தஒரு ஆபரணமும் மீனிலிருந்து வெளிப்படாது.

இங்கு அருள் மறை வெளிப்படும் விதமாக அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் 48வது வசனம், 'மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.'

இவ்வசனதில் 'உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.' என்ற வரிகளை கவனித்தால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வழிமுறைகளை நம்மை சோதிப்பதற்க்காக உண்டுபண்ணியது புலனாகிறது. இவ்வழிமுறைகளில் நன்மையானவற்றில் முந்திக்கொள்ள சொல்வதை கவனிக்கவேண்டியுள்ளது. எனவே நாம் நமது சமுதாயத்திற்கு எது மனசாட்சிப் படி நன்மை பயக்குமோ அதனில் நாம் முந்திக்கொள்ளவேண்டும்.

மேலும் நீங்கள் எதில் மாறுபாடு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான், என்று கூறுவதின் மூலம் உண்மையினை தெரிவிக்க முகமது நபிக்கு பின் இவ்வுலகத்தில் நிறைய நபிமார்கள் பிறந்திருப்பார்கள், நாம் தான் அறியவில்லை. ஏனெனில் 'இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன்4:79  4:170, 7:158 , 9:33 , 10:57 , 10:108 , 14:52 , 21:107 , 22:49 , 25:1 , 33:40 , 34:28 , 62:3) என்று நாம் நமக்குள்ளேயே குரான் கூறிவிட்டதாகக் கூறி இறையருளை தடைபடுத்திக்கொண்டோம். 

மேலும் 'மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.' என்றும் கூறிவிட்டோம். ஆனால் அருள்மறை திருகுரானில் அனேக வசனத்தின் தொடக்கத்தில் 'முஃமின்களே! நீங்கள்...' என்றே தொடங்குவதை கவனிக்கும் போது இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிலுள்ளவர்களுக்கு அருளப்பட்ட போதனைகளே அன்றி மனித குலம் முழுவதற்கும் கூறப்பட்டதாக சொல்லமுடியவில்லை. நிற்க

மேலும், குரானில் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஏழாவது வசனம்,  'மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்' என்றும் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் எட்டாவது வசனம், 'இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்' என்றும் கூறுகிறது. நாம் இப்போது இவ்வரிகள் கூறும் உண்மைகளிலிருந்து எவ்வளவு தொலைவு நாகரிகத்தை நோக்கி கடந்துவந்திருக்கிறோம் என்பதனை அறியவேண்டும், அது தவறு என்று நம்மால் கூறமுடியுமா? அல்லது தவறு என்று கூறிவிட்டு மேற்கண்ட வாழ்க்கையினைத்தான் வாழத்தான்முடியுமா?
எனவே நாம் அருள்மறை குரான் அனுமதித்துவிட்டதாக தவறாக் கூறி திருகுரான் பெயரில் கால்நடைகளை உண்வுக்காகவும் இறைவழிபாட்டிற்காகவும் இம்சிக்க வேண்டாம் என்று இதனை படிக்கும் உங்கள் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
ஜாகிர் நாயக்: 

மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
மறுப்புரை:
மேற்கண்ட கூற்றை மறுப்பதற்கு முடியாது. ஆனால் அந்த சத்துகளை நாம் மிருக வதையின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி நமக்குத் தருவது சைவ உணவே. சைவ உணவை உண்ணும் மிருகமான யானையைக்காட்டிலும் மற்ற அசைவ உணவு உண்ணும் மிருகங்கள் பலமுள்ளவை கிடையாது. மேலும் பொதுவாக சைவ உணவை உண்ணும் யானை, குதிரை, மாடு, ஆடு போன்றவைகள் ஒரு சமுதாயமாக வாழும். ஆனால் அசைவ உணவை உண்ணக்கூடிய மிருகங்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே முரன்பாடுகளுடன் தனித்து வாழும், இதிலிருந்து உணவுகள் தோற்றுவிக்கும் குணநலன்களையும் நாம் அறியலாம்.
ஜாகிர் நாயக்:
 
4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.

நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.
மறுப்புரை:


சரியாகச் சொன்னீர்கள், நான் ஏற்கனவே சொன்னது போல மனிதன் இப்பூமிக்கு வந்தநாளின் தொடக்கத்தில் மிருகங்களை வேட்டையாடிதான் உண்டான் என்பதனை முதலிலேயே கூறிவிட்டேன். ஆனால் மனிதனுக்கு இப்போதும் கூறிய பற்கள் உள்ளதாக கூறுவது மிகத்தவறு. நம்மால் ஏதேனும் ஒரு மிருகத்தை கத்தியை பயன்படுத்தாமல் பற்களால் கடித்து அதன் தோலை கிழிக்கமுடியுமா? நீங்கள் கூறும் அந்த கூறான இரண்டு பற்கள் தற்போதும் உள்ளது, எப்படியெனில் அதுவும் மற்ற பற்களை போல சமமாக உள்ளது, அதன் இயல்பு தன்மையை இழந்து காணப்படுகிறது. முன்புள்ள மனிதனுக்கு இந்த இரண்டு பற்களும் மற்ற பற்களை விட பெரிதாக இருக்கும். எனவே இறைவன் தட்டையான பற்களைக்கொண்டே மனிதனை தற்போது படைத்துக்கொண்டிருக்கின்றான் என்பதனை அறிந்து அதற்கேற்றாற்போன்று வாழ்ந்தால் நன்று.


மறுப்புரை தொடரும் - 3




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.