Sunday, February 24, 2013

சைவ உணவு சாத்தியமா? No.2

சைவ உணவு சாத்தியமா? No.2
24-02-2013


ஜாகிர் நாயக்: 

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மறுப்புரை:

மனிதனுக்கு உணவு என்று வரும்போது இக்கட்டளை மீறப்பட்டு இரக்கமின்றி பிற சகோதர உயிரிகளை கொன்று சாப்பிடுகிறோம்.

ஜாகிர் நாயக்: 

அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

மறுப்புரை:

மனித பயன்பாட்டுக்காகத்தான் கால்நடைகளையும், தாவரங்களையும் படைத்தான் என்பது ஏற்புடையதல்ல, மாறாக அவைகளின் நிலை அறிந்து நமது அறிவால் அதனை படிப்படியாக நமது ஏவல்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டோம் என்பதே உண்மை, இதற்காக நமது மனித இனம் பல இலட்ச ஆண்டுகள் இப்பூமியில் போராடவேண்டியிருந்தது.

நாம் இப்பூமியில் முதன்முதலில் பிறவியெடுக்கையில் நமக்கு பேசத்தெரியாது, ஒரு மொழியும்கிடையாது, மிருகங்களுக்கும் நமக்கும் வேறுபாடே கிடையாது. இப்பூமியில் உணவிற்காக அணைவரும் (விலங்குகளுடன் சேர்ந்து மனிதர்களும்) வேட்டையாடிதான் உண்டோம்.இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது, நமக்கு முன்னரே இப்பூமியில் வாழ்ந்துக்கொண்டிருந்த நமக்கும் மூத்த இனங்களான  விலங்குகளில் கூட சைவ விலங்கினங்கள் இருந்தார்கள், ஆனால் நாம் அணைவரும் பிறவியால் அசைவர்களே. அப்படியொரு காட்டுத் தர்பார் நடத்திக்கொண்டிருந்தோம், பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் மேம்பட்டு நாம் காட்டை விட்டு ஆற்றங்கரையினிலே வசிக்கும் போது நமது நாகரிக உணவிற்காக விவசாயம் செய்ய தொடங்கினோம், ஆடைகளை அணியத்தொடங்கினோம், உணவினை சமைக்க நெருப்பின் உபயோகம் கண்டோம், சக்கரம் கண்டுபிடித்தோம், பேசும் மொழி அறிந்தோம், அதற்கு ஒரு குறியீடு (எழுத்து) கண்டோம்... இவ்வாறு மெல்ல மெல்ல நாகரிகமடைந்தோம்.

எதிர்பாராவிதமாக நமது உலகில் தோன்றிய உயிர்கள் நாமாக இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே தியரி தான். அது தான் தக்கன பிழைத்தல். எத்தனையோ உயிர் பிணைப்புகள் வந்தாலும் சூழலுக்கு ஒத்துப்போகக்கூடிய உயிர்கள் தான் நிலைத்திருக்கின்றன. இவ்வாறு வந்த உயிரினங்களுக்கு சக்தி (உணவு) தேவைப்பட்டது. அப்போது தொடங்கியது தான் தேடலும் உயிரினங்களின் பரம்பலும்.

இதற்கு பல உதாரணங்கள் நாம் தற்போது காணும் விலங்குகளிடம் உண்டு. கவனித்து பார்த்தால் தாவர உண்ணிகளுக்கு கண்கள் முகத்தின் இரு பக்கமும் பக்க வாட்டில் இருக்கும் ஆனால் மாமிச உண்ணிகளுக்கு கண் நேரே பார்த்தபடி தான் இருக்கும். தாவர உண்ணிகள் மாமிச உண்ணிகளிடமிருந்து இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள சுற்றி இருக்கும் கண் உதவுகிறது, ஆனால் மாமிச உண்ணிகளுக்கு அவற்றின் இலக்கு தான் குறி. அதனாலேயே அவற்றின் கண்கள் முன்னோக்கி இருக்கிறது.

நமக்கு கண்கள் முன்னோக்கி இருப்பதன் மூலம் நாம் எப்படிபட்டவர்கள் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்தக் கண்களைத்தவிர மற்ற மனித கூறுகளெல்லாம் படிபடியாக சைவ உணவிற்கு ஏற்றவாறு மாறிவிட்டது. உதாரணமாக நமக்கு பின்புறம் இருந்த வால் மறைந்துவிட்டது, கூறிய பற்கள் மறைந்துவிட்டன, நீண்ட கை, கால் விரல்கள், மிருக பலத்துடன் கூடிய உடம்பு... இவைகளை கூறலாம். இதற்கு காரணம் நாம் தற்போது காட்டில் வாழவில்லை, ஆனால் சில மிருகங்கள் மட்டும் மனித நாட்டில் வாழ்கின்றன.

நாம் வாழும் பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன, இதில் மனிதனின் பயணம் தொடங்கியது 2,50,000 (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ஆண்டுக்கு முன்பிருந்துதான், இடையில் நம்மால் கண்டுபிடிக்கப்பட்டு முழுவதும் அழிந்துவிட்ட இனமான டைனோசர் வாழ்ந்தது வெறும் 65,00,000 அறுபத்தைந்து இலட்சம் ஆண்டுக்கு முன்னர்தான். தாவரங்கள், விலங்குகள் எல்லாம் இப்பூமியில் கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியவைகள். அதனால் மனித இனம் தோன்றியதிற்கு பலகோடி ஆண்டுகளுக்கு முன்னரே தாவரங்களும், விலங்குகளும் தோன்றிவிட்டபடியால், தற்பொழுது இப்பூமியில் முளைத்த மனிதனுக்காகத்தான் இவைகள் படைக்கப்பட்டன என்பது மனிததனின் ஆணவத்தையே வெளிப்படுத்துகின்றது. 

ஜாகிர் நாயக்: 

அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.

மறுப்புரை:

மிக்க சரியான கருத்து. அல்லாஹ் படைத்தவைகளை, மனிதன் தன்னுடைய வசதிக்கா  ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடைகளாகவும் பார்க்கிறான்.  ஆனால் அது அப்படியல்ல, நாம் பிற உயிர்களைக்கூட பொருளாக (பொருள் என்றால் உயிரற்றது) பார்த்துக்கொண்டிருப்பது நமது சுயநலத்தினையே காட்டுக்கிறது. தங்கள் சொற்படி இவ்வுயிர்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதென்றால் அதனை பாதுகாக்கத்தான் நமக்கு உரிமையுள்ளது. அவ்வுயிரான பொருளை அழிக்க நமக்கு ஏது உரிமை? நம்மால் எப்பொருளை / உயிரை உருவாக்கமுடியுமோ அந்தப் பொருளை / உயிரை மட்டுமே நம்மால் அழிக்க உரிமையுள்ளது என்பதனை அறியவேண்டும்.

ஜாகிர் நாயக்:
 
சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.

சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.
மறுப்புரை:
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. எனக்குத் தெரிந்த ஒருசில முஸ்லிம் அன்பர்கள் சைவ உணவுபழக்கத்தோடு தங்கள் உன்னதமான மார்க்கத்தில் தொடர்கின்றார்கள். முஸ்லிம்கள் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் கூட இவர்கள் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்து பலியிடும் குர்பானி என்ற சடங்கினை செய்வதில்லை. ஏனெனில் அவ்வாறு பலியிடுவது இறைவனை சென்றடையாது என்ற உண்மையை இவர்களுக்கு குரான் கூறியிருக்கிறது. பார்க்க வசனம் (22:37). விழாவின் மகிழ்ச்சி பிறஉயிர்களின் துன்பதில்தான் உள்ளது என்பதனை மறுத்து இப்ராஹீம் நபியைப்போல் எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதனை உணர்த்தும் வகையில் இக்கடமையையே (குர்பானி) தியாகமாக்கியுள்ள முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
ஜாகிர் நாயக்:
 
இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.

1. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம், ‘முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன.
என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

மறுப்புரை:
அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குரான் அனுமதியளிக்கிறது, என்ற வரியினில் அருள்மறை என்ற அடைமொழியையும் நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். உண்மையில் குரானில் மேற்கண்ட வசனத்தைப் போல சில வசனங்களில் அருள் மறைந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அல்லது 'அருள்' என்பதற்கு தமிழில் அன்பு, கருணை, இரக்கம், சாந்தம், அமைதி, ஆன்மநேயம், மனிதநேயம், மன்னித்தல் போன்ற பொருளைக் கொடுக்கிறது. அரபு மொழியில் இதன் பொருள் வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தெரிந்தவர்கள் அறிவிக்கலாம் அல்லது அருள்மறையை ஓதியவர் ஒருவர் (அல்லாஹ்) - கேட்டவர் ஒருவர் (முகமது நபி) - எழுதியவர் ஒருவராக இருப்பதால், இதில் எழுதியவர் அசைவ உணவு பழக்கத்தில் இருந்தமையால் அவர் சில வசனங்களில் அவரது கருத்தை ஏற்றி கூறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். 
1. இதன் முழு வசனம் இவ்வாறு உள்ளது, முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
மேற்கண்ட வசனத்தில்  (உணவிற்காக) என்று இவ்வார்த்தை குரானிலும் அடைப்புகுறியிட்டு கூறப்பட்டுள்ளதா? என்பதனை தெரிந்தவர்கள் கூறலாம்.
5:1    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ
இஹ்ராம் என்பது, ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும் போது எடுக்கும் உறுதிமொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதி மொழி எடுக்கும்போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்த இஹ்ராம் அணிந்திருக்கும்போது மட்டும் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுவது ஓரிடத்தில் சரி யென்றும் மற்றொரு இடத்தில் தவறு என்றும் கூறுவது எவ்வகையில் நியாயம். அப்படியே வேட்டையாடுவது என்பது அக்காலத்தில் (6-ம் நூற்றாண்டு) ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகினும் அதனை இந்த நாகரிக காலத்திலும் அருள்மறை குரான் சொல்லிவிட்டது என்பதற்காக தொடரத்தான் வேண்டுமா?

மறுப்புரை தொடரும் - 2





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.