Saturday, September 14, 2013

வள்ளலாரின் திருமண வாழ்க்கை



வள்ளலாரின் திருமண வாழ்க்கை

வணக்கம் அன்பர்களே!


வள்ளலார் வாழ்க்கையில் விதி என்னும் மாயை விளையாட்டால் அவருக்கு அவரது விருப்பம் இன்றியே திருமணம் நடைபெற்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அத்திருமணம், வள்ளலாரின் ஆன்மீக பயணத்தை எவ்வகையிலும் தடைசெய்யவில்லையே ஏன்? மூவரும், தேவரும், முத்தரும், சித்தரும், யாவரும் பெற்றிடாத இயலான 'மரணமிலா பெருவாழ்வை' பெற்றாரே அது எப்படி?

ஆன்மீக பயணத்திற்கு திருமணம் என்பது ஒரு தடையா? என்று வள்ளலாரை கேட்டால், அவர் "ஆம்" என்பார். அவரால் உருவாக்கப்பட்ட 'சுத்த சன்மார்க்கம்' என்னும் ஆன்மீக வாழ்க்கைக்கு 'பெண் போகம்' என்பது தடையே என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பெண்களையும் பலஇடங்களில் தரக்குறைவாகவும் பேசியுள்ளார். திருஅருட்பாவை உணர்ந்தவர்களுக்கு இது தெரியும்.

# 'புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்...
... நமச்சிவாயத்தை  நான்மற வேனே.' (822)

இங்கே மங்கயரை 'புன்' என்கிறார். அந்தப் புன்னை யாம் புணர்ந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறக்கமாட்டேன் என்கிறார்.

# 'சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
 சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்' (805)

இங்கே மங்கயரை 'முலைச்சியர்' என்றும் அவரால் என்ன சுகம் கண்டாய்? என்று வினவுகிறார்.

# 'நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
 நாளும் வீழ்வுற்று நலிந்திடேல்... (800)

இங்கே, புல்லர்கள் மனம் அதிகம் நாடும் மங்கயர் குறியினை 'புழுமலக் குழி' என்று புழுக்களுக்கு இடமான மலக்குழி என்று சாடுகிறார். அக்குழியில் தினமும் வீழாதே என்று எச்சரிக்கின்றார்.

# 'மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்' (479)

இங்கே, மங்கையரை 'மடவார்' என்கிறார். அறிவிலார் முலையின் காம்பிற்காக அலைந்தால் இறைவனை மறக்க நேரிடும் என்கிறார்.

# 'மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
 வருந்தி நாள்தோறும் மனம் இளைக் கின்றேன். (433)

இங்கே, நமது மனம் இளைப்பதற்கு மங்கயரின் புழுக்குழி காரணமாக உள்ளதாக கூறுகிறார். நன்றாக கவனிக்கவும், நமது உடல்தானே இளைக்கும், ஆனால் இங்கே மனம் இளைப்பதாக கூறுகிறார்.

# 'பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
 வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்...(293)

இங்கே, 'பெண்களை வைதிலேன்' என்று கூறுவதன் மூலம், பெண்களை வைதல் (ஏசுதல் / தரக்குறைவாக பேசுதல்) என்பது ஒரு அறமாகவே, பொதுவாக எல்லா அடியார்களும் வழிவழியாக கொண்டுள்ளனர் என்பதனை அறியமுடிகிறது. இவ்வாறு பெண்களை வைதல்மூலம் தமது மனதை அடக்க முயல்கின்றனர் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இங்கே பெண்கள் கோபப்படவேண்டிய அவசியம் இல்லை.

# 'முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்' (394)

இங்கே, மங்கயரை, முலையினை காட்டி நம்மை மயக்கும் 'கொடியவர்' என்று கூறுகிறார்.

# 'மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
 வருந்தி மனம் மயங்கிமிகவாடி நின்றேன்...' (115)

இங்கே, மங்கையரை, உயிரற்ற மண்ணோடும், பொருளோடும் ஒப்பிட்டுள்ளதை காணமுடிகிறது.

# 'கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஒர்
 பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன்...' (344)

# 'துயர்செய் மாதர்கள்...' (341)

# 'மாதர் கண் எனும் வலையிடைப் பட்டேன்...' (340)

# 'மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
 பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்...' (338)

# 'வஞ்சமட மாதரார் போகம் என்னும்
 மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்...' (326)

# 'பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
 வதிதரும் நெஞ்சினேன்...' (316)

# 'விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால்...' (266)

# 'கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே...' (269)

# 'கண்ணைக் காட்டி இருமுலை காட்டி
 மோகத்தைக் காட்டி அகந்தைக் கொண்டே
 அழிமண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்...' (259)

# 'மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன்...' (257)

# 'பாவம் ஓர் உருவாகிய பாவையர்...' (255)

# 'முலையைக் காட்டி மயக்கி என் ஆருயிர்
 முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
 குலையக் காட்டும் கலவிக்கிசைந்து...' (253)

# 'மஞ்சட் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள்
 மயங்கவே செயும் வாள்விழி மாதர்பால்
 கெஞ்சிக் கொஞ்சி நிறை அழிந்து...' (252)

# 'கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
 கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே...' (122)

# 'பாழான மடந்தையர்பால் சிந்தை வைத்து...' (117)

# 'மலஞ்சான்ற மங்கையர் கொங்கையிலே ஆசைவாய்த்து மனம்...'(1246)

# 'பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
 மண் நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண் என்றால்
 பேயும் இரங்குமென்பார் பேய் ஒன்றோ தாம்பயந்த
 சேயும் இரங்குமவர் தீமைக்கே...' (1965-393)

# 'வஞ்ச மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ
 வீழ்ந்திடவோ...' (2160)

# 'பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும்
 மூடரைத் தேற்ற எனில் எத்துணையும் அரிதரிதுகாண்...' (2121)

# 'பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ...' (3765)

# 'காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
 காணியின் ஆட்சியும் கருதிலேன்  கண்டீர்...'(3794)

# 'புல்லவரே பொய் உலகபோகம் உற விழைவார்
 புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்...' (4203)

# 'மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே
 மலஞ்சார் தோலிலே ஆசை வைத்து வீண்
 பொழுது தொலைக்கின்றார்...' (4727)

# 'மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கி இது கேள் உன்
 மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு
 உன்சாயை எனும் பெண் இனத்தார்...' (4843)

# 'காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
 கற்பன கற்கிலீர்...' (5559)

# 'படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி'
# 'பாவம் யாவும் பழகுறும் பாழுங்குழி'
# 'குடிகொள் நாற்றக் குழி'
# 'சிறுநீர்தரும் கொடிய ஊற்றுக் குழி'
# 'புழுக் கொள் குழி'
# 'கடி மலக்குழி ஆகும் கருக்குழி'
# 'கள்ளமாதரைக் கண்டு மயங்கினேன்...' (260)

மேற்கண்ட திருஅருட்பா அடிகள், பெண் போகத்தைப் பற்றின வள்ளலாரின் மனநிலையினை எடுத்து இயம்புவதாக உள்ளதை நாம் அறிகிறோம். மேலும் இவைகள் யாவும் யோக மார்க்கத்தில் / சுத்த சன்மார்க்க வழியில் செல்பவர்களுக்கே பொருந்தும். உலகியல் வாழ் மக்களுக்கு இவை பொருந்தாது என்பதனை வள்ளலாரே கீழ்கண்டவாறு கூறுகிறார்...

'ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
 பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
 மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
 யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.' (5549)

உலகியல் வாழ் மக்களுக்கு அவர்கூறும் வாக்கு, வியப்பளிப்பதாக உள்ளது. 'மகா ஸ்ரீ இரத்தின முதலியார்' அவர்களுக்கு வள்ளலார் எழுதியக் கடிதத்தில், "பரமசிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம்." என்று அவரை திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். இங்கு ஒருவர், சிவாயநம என்று சொல்லிக்கொண்டு ஆயிரம் திருமணம் செய்யலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. திருமணம் வேண்டாம் என்று இருப்பவரை, அவரின் ஆன்மீக நிலையறிந்து, திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க கூறப்பட்டுள்ள மொழியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியே பொருள்கொண்டால் அது வியப்பாகத்தான் இருக்கும்.

சரி! சுத்த சன்மார்க்க வழியில் சென்ற வள்ளலார் ஏன் திருமணம் செய்துக்கொண்டார்? அத்திருமணம் அவரை உலகியலில் இழுக்காமல் அருளியலில் செல்ல வைத்தது எப்படி?

வள்ளலாரே ஆனாலும், அவர் பெண் இச்சையை நுகர்ந்துவிட்டால் அவரால் 'மரணமிலா பெருவாழ்வு' எய்துதல் என்பது முடியவே முடியாது.

"கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால், அழுத கண்ணீர் மாறுமா? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?" என்று ஆகாரத்தில் கூட இச்சை செல்லாது என்று கூறிய வள்ளலார் பெண் இச்சையை நுகர்ந்திருப்பாரா? என்பதனை நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

"சுத்த சன்மார்க்க லசஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவிலும் மண்ணாசை, கனவிலும் பெண்ணாசை, சுழுத்தியிலும் பொன்னாசை முதலிய மூன்றும் கூடாவாம்." என்று வள்ளலார் தமது உரைநடை பகுதியில் கூறியிருப்பதை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

அதனால்தான் வள்ளலார் அவர்கள் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் சுற்றத்தாரால் மணம் புரிந்துக்கொண்டார். இதனை அவர் ஏதோ ஒரு முன்பிறவி வினைப்பயன் என்று எடுத்துக்கொண்டார். அதனை பின்வரும் பாடல்வரிகளில் கூறுவதை பாருங்கள்.

'புவிமேல் விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன்...' (3819)

ஆக, இத்திருமணம் என்பது வெறும் சடங்கு என்ற நிலையிலேயே முடிவுற்றது. மற்றபடி தன் மனைவியிடம் பெண் இன்பத்தை நுகர்ந்தாரில்லை. தனக்கு வாய்த்த மனைவியும் கலவியலில் ஈடுபாடு இல்லாத ஆன்மீக வாழ்க்கை வாழுகின்றவரையே அவர் தேர்ந்தெடுத்தார் அல்லது இயல்பாகவே அவ்வாறு அமைந்தது என்பதே உண்மையாக இருக்க முடியும். அதற்கான சான்றை வள்ளலாரே கீழ் கண்டவாறு கூறியிருப்பதை காணவும். 

'முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
 தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக்கை தொடச்சார்ந்தேன்
 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
 பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.' (3452)

# முனித்த வெவ்வினையோ - எமது திருமணம் முன்செய்த தீவினையால் நடைபெற்றதோ அறியேன்.
# நின்னருட் செயலோ தெரிந்திலேன் - அல்லது எல்லாம் வல்லவா, இது உன் அருளால் நடைபெற்றதோ அறியேன்.
# மோகம் மேலின்றித்  - மோகம் என்கிற கலவியல் இன்பம் விழையாத
# தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் - தனித்தனியாக / தன்னை மட்டுமே சார்ந்த / எதற்கும் வேறுறொருவரை நாடாத / சாராத, ஒருசார் மங்கையர்களுள்
# ஒருத்தியைக்கை தொடச்சார்ந்தேன் - அப்படிப்பட்ட ஒருத்தியை நான் திருமணம் செய்துக்கொண்டேன். வள்ளலார் ஏற்கனவே எப்போதும் ஒருமையில் இருப்பவர் / தனித்திருப்பவர், அப்படிப்பட்டவர் அதே ஒருமையில் உள்ள ஒருசார் மடந்தையை திருமணம் செய்துக்கொண்டார். உலகியலுக்கும் சுற்றத்தாருக்குத்தான் அது திருமணம். இவர்களுக்குள் தனித்த மனத்தவர்களாகவே இருந்தனர்.
# குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றி கலப்பிலேன் - எனை சிலர் கலவியலுக்கு விரும்பினர். அவர்களை தொட்டேன் அன்றி அவர்களுடன் சுகித்திலன்.
# மற்றிது குறித்தே பனித்தனன் - மேலும் அவர்களைத் தொட்டது குறித்தே பயந்தேன்.
# நினைத்த தோறும் உள் உடைந்தேன் - அவர்களைத் தொட்டது குறித்து நினைக்கையில் என்மனம் நொந்தேன்.
# பகர்வதென் எந்தைநீ அறிவாய் - இதனைப் பற்றி சொல்வதனால் என்ன பயன்? எல்லாம் நீ அறிவாய் அன்றோ?

இதுதான் மேற்கண்ட பாடலுக்கு எமக்குத் தெரிந்த விளக்க உரை. எனவே இதற்குமேல் வள்ளலாரின் திருமண வாழ்க்கையினைப் பற்றி கூறுவதற்கு திருஅருட்பாவிலோ அல்லது வள்ளல் வாழ்க்கையினைப் பாடிய அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளையின் 'பிரபந்தத் திரட்டிலோ' எமக்குத் தெரிந்து எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வள்ளலார் தமது திருமணத்தன்றே முதலிரவில் தமது மனைவியினை திருவாசகம் படிக்கச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார் என்றோ அல்லது அவர் திருமணத்திற்குப் பின்பு எட்டு ஆண்டுகள் மனைவியுடன்தான் வாழ்ந்தார் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

வள்ளலார் திருமணத்தன்றே வெளியேறினார் என்று பற்பல எழுத்தாளர்களும், வள்ளலார் பற்றிய திரைப்படத்திலும் காட்டப்படுகின்றது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தியாகவே இருக்கவேண்டும். வள்ளலாரின் கருணைக்கு இது ஒவ்வாததாக உள்ளது. அதற்காக அவர் எட்டு ஆண்டுகள் தமது மனைவியினை சார்ந்து இருந்தார் என்பதும் சற்று மிகைப்படுத்தப்பட்டச் செய்தியாக உள்ளது. எப்படி இருப்பினும் அவர்களிருவரும் தங்களுக்குள் ஒத்து தனித்தனியாக ஓர் வீட்டில் தாமரை இலை தண்ணீர் போன்று இருந்தார்கள் என்ற உண்மை அவரது மேற்கண்ட பாடல் மூலம் தெரியவருகிறது.

வள்ளலாரின் திருமணம் நடந்த அன்று இரவே மனைவியிடம் திருவாசகம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டார் என்பது உண்மையா? என்ற கேள்விக்கு, 'வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்' என்ற நூல் ஆசிரியர் திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் கீழ்கண்டவாறு பதில் கொடுத்துள்ளார்கள்.

வள்ளலாரின் வயது 27.

சபாபதிப் பிள்ளையும் சின்னம்மையாரும் பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் வள்ளலார் இருந்ததைக் கண்டு கவலைப்பட்டதுண்டு. வள்ளலாரின் ஞான அறிவைப் புரிந்து கொண்டபின் அந்தக் கவலை நீங்கிற்று. மற்ற பிள்ளைகளைப்போல் இல்லாமல் கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பது தற்சமயம் மிகுந்த கவலையை அளித்தது. ஒரு கால் கட்டு போட்டால் வீட்டோடே தங்காமலா போய்விடுவார் என்று எண்ணிய தாயாரும், அண்ணன் சபாபதியும் வள்ளலாருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். வள்ளலாரோ திருமணம் வேண்டாம் என்று மறுத்தார். அவர்களால் முடிந்தவரை எவ்வளவோ அறிவுரைகள் கூறிப் பார்த்தனர். வாதம் செய்தனர். வள்ளலார் திருமணத்திற்கு இசையவேயில்லை.

வள்ளலார் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நந்தி ஆசிரமத் தலைவராகிய சிவயோகியாரிடம் முறையிட்டு எப்படியாவது இராமலிங்கரைத் திருமணத்திற்கு இசைய வைக்கவேண்டும் என்று வேண்டினர். சிவயோகியாரும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி வள்ளலாரைத் திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார்.

மோகம் மேலிட்டவர்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவது முறையானது. அவ்வாறில்லாத நான் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்றார் வள்ளலார்.

இறைவனே அம்மை அப்பனாகத்தானே விளங்குகின்றான். ஆண், பெண் என்ற படைப்பு இறைவனுடையதுதானே. எல்லா ஜீவன்களிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும்படித் தானே ஆண்டவன் செய்திருக்கின்றான். நீ மறுப்பது என்ன நியாயம் என்று சிதம்பர மாமுனிவர் வினவினார்.

சிவம் என்பது சும்மா இருப்பது என்பது மனம் அடங்கிய தவம். தவம் ஆற்றுவோர் அடைவது சக்தி. அதாவது ஆற்றல் தவம் செய்வோர் எந்த அளவிற்கு அதைச் செய்கின்றார்களோ அந்த அளவிற்கு ஆற்றல் பெறுவர் என்ற தத்துவத்தை விளக்கவே சிவம்பாதி சக்திபாதி என்று கூறி சிவனை ஆணாகவும், சக்தியைப் பெண்ணாகவும் நமது முன்னோர் காட்டியுள்ளனர். இது தத்துவ விளக்கமே தவிர வேறில்லை என்று தாங்கள் அறியாததா. இதை உதாரணம் சொல்லலாமா என்றார் வள்ளலார்.

உன்னைப் பெற்றெடுத்த தாயும் உன்னை வளர்த்த அண்ணனும் மனம் வருந்தலாமா இது சரியா என்றார் சிவ யோகியார். எனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகி விடாதா? எந்த விதத்திலும் எனக்குத் திருமணம் செய்வது சரியல்ல என்றார் வள்ளலார்.

சிவயோகியார் விடுவதாக இல்லை. நீ பக்தி உள்ளவன்தானே. எல்லாம் அவன் செயல் என்பதை நம்புகிறாயா இல்லையா? நீ திருமணம் செய்து கொள்வது ஆண்டவனுக்குச் சம்மதம் இல்லை எனில், சுந்தரரது முன் மணத்தில் ஓலை காட்டித் தடுத்தது போல் தடுக்கட்டும். நீ தடுப்பதில் தர்மம் இல்லை என்றார்.

வள்ளலார் இதற்கு என்ன சொல்வது என்று தயங்கினார். ஆண்டவன் தடுத்துவிடுவான் என்று நம்பினார். பதில் பேசவில்லை.

மெளனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு தமக்கையார் உண்ணாமுலை அம்மாளின் மகளான தனக்கோட்டி அம்மையாரை வள்ளலாருக்குத் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் நடந்தபோது அவருக்கு வயது 27.

இராமலிங்கர் எதிர்பார்த்ததுபோல் அவரது திருமணத்தைத் தடை செய்ய இறைவன் முன்வரவில்லை. இறைவன் தடை செய்வான் என்று இராமலிங்கர் எதிர்பார்த்ததற்கு அவரது பாடலே சான்று.

முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டதுபோல்
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில்
ஒன்றும் ஒரு கணம் வந்துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒரு மணம் செய்வேன் நான். (2019)

அவரது வாழ்வில் திருமணம் நடைபெற்றது என்பதற்கு இந்த அவரது பாடலே சான்றாக உள்ளது.

திருமணம் செய்து கொண்ட அன்றிரவே தனக்கோட்டி அம்மையாரிடம் திருவாசகம் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு வள்ளலார் வீட்டை விட்டு வெளியேறினார் என்றே இதுவரை எழுதி வந்துள்ளனர். இக்கருத்துப் பற்றி ஓர் ஆய்வு.

இராமலிங்கர் திருமணம் செய்து கொண்டபோது அவரது வயது 27. அவரது தாயார் சின்னம்மையார் இறந்த பிறகுதான் அவர் 1858ம் ஆண்டு, அவரது 35ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். திருமணத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் வீட்டில்தான் இருந்திருக்கின்றார். வள்ளலார் தாம் பாடிய திருஅருட்பாவில் தன்னைப்பற்றியும் சில செய்திகளையும் கூறியுள்ளார். அவை அவருடைய வாழ்க்கையின் அகச் சான்றுகள். அந்த வகைப் பாடல்களைப் பொதுப்படையாகப் பாடியவை என்றோ பிறருக்காகப் பாடியவை என்றோ கூற முடியாது. உதாரணமாகப் பிள்ளைப் பெரு விண்ணப்பம் 43வது பாடல் (3452)

'முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
 தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக்கை தொடச்சார்ந்தேன்
 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
 பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.'

மோகம் மேலின்றித் தனித்தனி ஒரு சார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன் என்பதன் பொருள் என்ன?

மோகம் மேலின்றி - மோகந்தகாரமில்லாது
மடந்தையர் - பெண்களுள்
கைதொட - பாணிக் கிரகணம் அதாவது திருமணம்

மோகம் அதிகப்படாது திருமணம் செய்து கொண்டதால் ஒருத்தியைச் சார்ந்து வாழ்ந்தேன்.

குளித்த - வளைத்த - (அல்லது) என்னை விரும்பிய
மற்றவரை - மற்ற பெண்களை
தொட்டனன்றிக் கலப்பிலேன் - தொட்டிருக்கலாம் ஆனால் அவர்களோடு சேர்ந்து கலந்ததில்லை.
மற்றது குறித்து - தொட்டதை நினைத்தே
பனித்தனன் - நடுங்கினேன்

திருமணம் செய்து கொண்டதால் அதுவும் மோகாந்தம் இல்லாது ஒருத்தியைச் சார்ந்தேன்; என்னை விரும்பி வளைத்த மற்ற பெண்களோடு கலப்பிலேன் என்பது நமக்குப் பொருந்தாது. இந்தத் திருமணமும் வெவ்வினையின் காரணமா அல்லது நினது திருவருட்செயலா என்று இறைவனைக் கேட்கிறார். இது பொதுவான பாடல் அல்ல அவரது வாழ்வின் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டும் அகச் சான்று என்பதில் ஐயமில்லை. எனவே அவரது வாக்கின்படித் திருமணம் செய்து கொண்டதால் ஒருத்தியைச் சார்ந்தேன். மற்றவரோடு கலந்ததில்லை என்பதும், 27 வயதில் திருமணம் செய்து கொண்டவர் தனது 35ம் வயதில் வெளியேறியதால் அதுவரை அவர் வீட்டில்தான் இருந்தார் என்பதும் உண்மை. திருமணத்தன்று இரவு மனைவியிடம் திருவாசகம் கொடுத்து வெளியேறினார் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.

ஐந்து வயது குழந்தையாய் இருந்த போதே அண்ணியாரின் கண்ணீர் கண்டு இரங்கிய வள்ளலார், உணவிலே விருப்பமில்லா விட்டாலும் பெற்ற தாய் முகவாட்டம் பார்ப்பதற்கஞ்சி இரக்கம் காரணமாகப் பேருணவு கொண்ட வள்ளலார், இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும் என்று கூறிய வள்ளலார், ஜீவகாருண்யமே தெய்வ வழிபாடு என்று கூறிய வள்ளலார் தனக்கோட்டி அம்மாவிடம் கருணை இல்லாமல் இருந்திருப்பாரா என்று சிந்திக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டால் ஞான நிலை அடையமுடியாது என்று வள்ளலார் கூறவில்லை. 27ம் வயதில் திருமணம் கொண்ட இராமலிங்கர் தனது 35ம் வயதில் தான் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது உண்மை.

'வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்' என்ற நூல் ஆசிரியர் திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் மேற்கண்ட விளக்கத்தை தனது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இந்நூலாசியரை யாம் அறிவோம். மிகுந்த வள்ளல் பக்தி கொண்டவர் என்பதைவிட வள்ளல் இவரிடம் காரியப்படுகிறார் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு அன்று வடலூர் தருமச்சாலையிலிருந்து சித்திவளாகத்திற்கு அகவல் பாடிக்கொண்டே இவரது தலைமையில் நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். யானும் சில வருடங்கள் தொடர்ந்து இவரது தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஒருவனாக நடைபயின்றுள்ளேன். சில ஆண்டுகள் இவர் கடலூரில் அலுவல் செய்தபோது கடலூரில் உள்ள சன்மார்க்கச் சங்கத்தில் வியாழன்தோறும் சொற்பொழிவும் ஆற்றுவார். அதனையும் யாம் கேட்டு களித்துள்ளேன். ஆனால் எம்மை யார் என்று அவருக்குத் தெரியாது.

ஆசியர் அவர்கள் இங்கு எழுதியுள்ள சில கருத்துகளை யாம் மறுக்க தளைப்படுகிறோம். இங்கு உள்ள ஆசிரியரின் கருத்தாழத்தைப் பார்த்தால் வள்ளலார் தன் மனைவியுடன் சிற்றின்பத்தில் ஈடுபட்டார் என்று கூற வருவது போன்று உள்ளது.

சிலர் தமக்கு திருமணம் ஆகிவிட்டதால், அதனால் எங்கே இறை அருள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து, எமக்கு மட்டுமா திருமணம் நடந்தது, வள்ளலாருக்கே திருமணம் நடக்கவில்லையா? என்று தமது பிழையினை வள்ளலார்மேல் போடுவார்கள். அவ்வாறுதான் இவ்வாசியரின் கூற்று உள்ளது. ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள், திருமணம் ஆகிறதோ இல்லையோ, ஒருவர் சிற்றின்பத்தில் ஈடுபட்டுவிட்டால் பேரின்பம் (மரணமிலா பெருவாழ்வு) கிடைக்காது. அதனால்தான் வள்ளலார் தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவனடியில் ஒப்படைத்தார். நம்மவர்களையும் மரணமிலா பெருவாழ்வு கிடைக்கவேண்டுமெனில் அவ்வாறே ஒப்படைக்கச் சொன்னார்.

வள்ளலாருக்கு 27ம் வயதில்தான் திருமணம் நடந்தது என்பதற்கு எந்தஒரு ஆதாரமும் இல்லை. எனவே அவர் மனைவியுடன் எட்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தார் என்பதனை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவ்வாறே இருந்திருந்தாலும் தனக்கோட்டி அம்மையாரின் பக்குவ நிலையினையும் தனித்தனி ஒருசார் நிலையினை பெற்றிருப்பதாலும்தான் வள்ளலார் அவரை திருமணம் செய்துக்கொண்டார். எனவே இருவரும் வீட்டில் சேர்ந்திருந்தபோதுக்கூட யாம் ஏற்கனவே கூறியது போல் அவர்களிருவரும் தாமரை இலை தண்ணீர் போன்றுதான் இருந்துள்ளார்கள்.

மேலும் திருமணம் ஆன முதல்நாள் அன்றே வள்ளலார் வெளியேறிவிட்டார் என்பதை ஆசிரியர் மறுப்பதை யாமும் வரவேற்கிறோம்.

அடுத்ததாக, இல்லற வாழ்வில் ஈடுபட்டால் ஞான நிலை அடையமுடியாது என்று வள்ளலார் கூறவில்லை, என்று ஆசிரியர் கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது. வள்ளலார் இதுபற்றி மிகத்தெளிவாகவே கூறியிருக்கிறார்,

"ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக முடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்தரத்தையுடையவனுக்கே அன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல." (பக்கம் 423)

சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர் யாவர்? என்று கூறுகையில்,

காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்கள்தான் (பக்கம் 411) சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் என்று வள்ளலார் கூறுவதை இவ்வாசியரும் நாமும் அறிந்து தெளிய வேண்டும்.

வள்ளலார் உலகியலில் ஒரு பெண்ணுக்கு கணவராக இல்லாமல் இறைவனுக்கு மனைவியாக இருந்தார் என்பதே உண்மை. அந்த இறைவனோடு தாம் கலந்த சுகத்தைத்தான் அந்த புணர்ச்சியைத்தான் திருஅருட்பா முழுவதும் பார்க்க காண்கிறோம். இதோ ஒரிரு பாடலை படித்து நாமும் அப்பாடலோடு புணருவோம்.

'இரவகத்தே கணவரோடு கலக்கின்றார் உலகர்
     இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
 கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
     கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
     சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
     உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.' (5786)

'உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
     உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
     கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
     குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
     துரைப்பதென் அடிக்கடி உனக்கே.' (4072)


வள்ளலார் தமது பிரம்மச்சரிய ஒழுக்கத்தை கடைபிடித்ததால் தான் மேல்நிலை சென்றார் என்பதில் நமக்கு எள்ளவும் ஐயம் வேண்டாம். மனித வாழ்வில் சில நடைமுறை சிக்கல் வருவது போன்று வள்ளலாருக்கும் திருமணம் என்ற துன்பம் வந்து ஒழிந்தது. அதனை நாம் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

'ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
 ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.' (4710)   

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி








  


20 comments:

  1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  2. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  3. அருமையான வள்ளலார் வாழ்க்கை எடுத்துக்காட்டு

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  4. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  5. உடலுறவு தவறல்ல. ஆண், பெண் புணர்ச்சி இன்பம் ஆத்ம சாந்தியை அளிக்கும். வள்ளலாரின் வாழ்க்கை வேறு. அவர் என்ன வாத்யாயயரா நமக்கு செக்ஸ் க்ளாஸ் எடுப்பதற்கு ?

    ReplyDelete
  6. அடியேனின் ஆன்மீகத்தேடலுக்கு அருமையான ஆன்மீகச் செய்திகள் பகிரபட்டிருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  7. அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா...🙏

    ReplyDelete
  8. பெருமானார் எந்த இடத்திலும் பெண்களை தாழ்த்தி கூற வில்லை அருணகிரி நாதர் பல இடங்களில் நீங்கள் குறிப்பிடுகின்ற வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். பொருளை உணராமல் தவறான புரிதலுடன் பதிவிடுவது தவறு...

    ReplyDelete
  9. இதன் மூலம் உனக்கு தமிழ் புரியவில்லை என்று தெரிகிறது.... கற்பனையில் எழுதகூடாது...இந்த பாடல்களின் அர்த்தம் வேறு..

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.