Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 12

இந்துமதம் எங்கே போகிறது? - 12
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
                  சரி… சபாவில் குழப்பம் குளறுபடி வந்தால்?
          “சங்க சத்வம்
           சம்ப கத்வம்
           சம்போ மனாம்ஸி ஜானதாம்”

          ஒரே பாதையில் நடங்கள், ஒரே வழியில் சிந்தியுங்கள், ஒன்றாக பேசி முடிவெடுங்கள் (Walk united, Think United, Talk United) என ஒற்றுமையாக வலியுறுத்தி சபாவை ஸ்திரப்படுத்தச் சொல்கிறது ரிக் வேதம்.

          அதாவது... வேதகாலத்தில் சமூக கூட்டமைப்புக்குள் கட்டுப்பட்டு வளர்ந்த மக்களின் பிரச்சனைகளை தீர்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் சபா. இந்த சபாவில் சிந்தனை சக்தி மிகுந்த ரிஷிகள் அமர்ந்திருப்பார்கள். அந்தந்த குழுமத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடி தத்தமது எண்ணங்களை எடுத்துரைப்பார்கள்.

          இறுதியாக ரிஷிகள் இதற்கொரு முடிவு சொன்னார்கள். சரி… இங்கு பெண்களைப் பற்றியே எங்கும் சொல்லக் காணோமே… பிறகு பெண்கள் எப்படி வருவார்கள்?

          உங்கள் கேள்விக்கு இன்னொரு  வேத ஸ்லோகம் விடை சொல்கிறது.

          “தம்பதிஇவ க்ரஹிபிதா ஜனோஸிட்”

          அதாவது நீ எங்கு சென்றாலும்… யாரைப் பார்க்கச் சென்றாலும்… ஏன் கடவுளையே பார்க்கச் சென்றாலும் உன் மனைவியை பத்தினியை உடன் கூட்டிப்போ.

          வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைக்கச் சொன்ன வேதம், கால வளர்ச்சியில் இதனை சொல்கிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். (ஏனென்றால் வேதங்கள் திடுதிப்பென திடீரென்று ஒரே பொழுதில் உண்டாக்கப்பட்டவை அல்ல)

          இதன்படி ஒவ்வொருத்தனும் சபாவுக்கு வரும்போது தன் மனைவியை கூட்டிவர ஆரம்பித்தான். அப்படி வரும்போதுதான் பெண்கள் சபாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

          அப்போது வெளியுலக பிரச்சனைகள் அவர்கள் காதிலும் விழுந்தது. கணவனின் கட்டளைகளாலேயே நிரம்பிப் போயிருந்த காதுகளில் சமூகப் பிரச்சனைகள் வந்து விழுந்தன.

          வாயில்படி தாண்டியிராத பெண்களின் வாயிலிருந்து பொதுக் கருத்துகள் புறப்பட ஆரம்பித்தன.

          பிரச்சனைகளைப் பற்றி பெண்கள் பேசிய பேச்சுகளை கேட்ட ஆண்கள் அசந்து போய்விட்டனர். எப்படி இவளுக்கு இப்படி யெல்லாம் பேசத் தோன்றுகிறது? என வியந்தனர்.

          “அபிப்ராவந்த்தா சமனே இவயோஷாஹத்
           கல்யாண்யஹ ஸ்மயமானாஹா அக்னிம்…”

          ‘எல்லாம் கூடியிருக்கிற இடத்திலே பெண்கள் ஆண்களுக்கு சமமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அது மட்டுமா? அங்கே வெளிச்சத்துக்காக வளர்க்கப்பட்டிருக்கும் அக்னியைச் சுற்றி பெண்கள் அமர்ந்து கொண்டு சிரித்தப்படியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

          இதைப் பார்த்துதான்… அழைத்து வந்த ஆண்கள் வியப்படைந்து போய்விட்டார்கள். அவர்களின் வியப்புக்கு வேதம் விளக்கம் சொல்கிறது கவனியுங்கள்.

          “ஸ்த்ரீநாம் த்விகனம் ஆஹாரம் புத்தீஸ் சாபி சதுர் குணம்” அதாவது வீட்டில் ஆண் கள் சாப்பிட்டு மிச்சம் வைத்துவிட்டு வெளியே போய்விடுவார்கள். இதை யெல்லாம் பெண்தான் சாப்பிடுவாள். அதனால், அந்த ஆண் சாப்பிட்ட சாப்பாட்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவே அவன் ஆஹாரம் புசிப்பாள். இரண்டு மடங்கு உணவு அதிகமாக உண்ணும் பெண்… ஆணைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவைப் பெற்றிருப்பாள்.

          இந்த நான்கு மடங்கு அறிவுதான் பெண்களை சபாக்களில் தைரியமாக பேசவைத்தது. இப்போதுகூட செய்தித்தாள்களில் நாம் படிக்கிறோம். பரிட்சைகளில் பையன்களை விட பெண்கள்தான் அதிகம் பேர் தேர்ச்சி பெற்று, முதலாம் ஸ்தானத்தை கைப்பற்றுகிறார்கள் என்ற செய்திகளை அது ஏன் என்பதற்கு அன்றே வேதம் தந்த விளக்கம்தான் இந்த ஸ்லோகம்.

          இவ்வாறு ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாய் புத்தி பெற்ற பெண்கள் வேத மந்த்ரங்களையும் இயற்றினார்கள். அத்யயணம் செய்தார்கள் என்பது வேதமே ஒப்புக்கொள்ளும் அளப்பரிய உண்மை.

          “அபகேஸ்ம ஸ்த்ரியோ
           மந்த்ர கிருத ஆசுஹீ
           ப்ரா கல்பேது நாரீனாம்
           பெளஞ்ச்சீ பந்தது இஷ்யரே
           அத்யாபனந்த வேதானாம்…”

          பெண்கள் வேதமந்தரங்களையும் இயற்றியுள்ளார்கள். பெண்கள் இயற்றிய வேத மந்த்ரங்களை பெண்களே அத்யயணம் அதாவது தினசரி உச்சரித்தும் வந்துள்ளார்கள். குறிப்பாக அத்ரேய கோத்ரத்துப் பெண்கள் இதில் சிறப்பாக விளங்கினார்கள். ஆத்ரேயெ கோத்ரம் என்றால் ஆத்ரேயர் என்ற ரிஷியின் வழிவந்தவர்கள் என்று பொருள்.

          கோத்ரம் என்றால் என்ன?... ஒன்றும் பெரிய அர்த்தம் இல்லை. வேத காலங்களில் மாடுகளை குழுக்குழுவாக கட்டிவைத்திருப்பார்கள். ஒரு ரிஷியின் குழுவினர் மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து கட்டி வைத்திருப்பார்கள். ‘கோ’க்களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

          இப்படியாக ஆத்ரேய கோத்ர பெண்கள் அறிவில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். இப்படிப்பட்ட பெண்கள்தான் ஸ்த்ரி சம்ஸாதம் அதாவது பெண்களுக்காக மட்டும் கூட்டங்களை கூட்டினர். இதுதான் பெண்களின் மாநாடு. ஒரு நாள் இந்த மாநாட்டில்…?

          ஸ்த்ரீ ஸம்ஸாதம் அதாவது பெண்கள் மாநாடு பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆணைவிட 4 மடங்கு அறிவு கொண்ட பெண்கள் ஒன்றாக கூடி விவாதங்கள் செய்து… வேத காலத்தில் சிறந்து விளங்கினார்கள்.

          கார்க்கி, வாஸக்நவி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி போன்றவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அறியக் கிடைக்கிறது. இவ்வளவு முற்போக்காகவா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற நம் ஆச்சரியக்குறியை ஒடித்துப் போடுகிற அளவுக்கு அடுத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.

          அது என்ன? பெண்களுக்கு இயற்கை மாதாமாதம் அளிக்கும் ஒரு துன்பம்… வலி! உடலியல் காரணங்களால் வெளியேற்றப்படும் கழிவாகிய ‘மாதவிடாய்’ என்பதை காரணம் காட்டி பெண்களை வெறுத்து ஒதுக்கியது வேதகாலம். அவள் தீட்டு அவளை விலக்கிவையுங்கள். அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் சுடுசொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது. ஏற்கனவே இயற்கை தந்த துன்பத்தை சகித்துக் கொண்டிருக்கும் பெண்கள்… அறியாமையால் ஆண்கள் தந்த தீண்டாமை துன்பத்தையும் சகித்துக் கொண்டார்கள்.

          கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக… மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால்… இதை வேதகாலம் எதனோடு ஒப்பிட்டு என்ன காரணம் கண்டுபிடித்தது தெரியுமா? பார்ப்பதற்கு முன்…

          மீண்டும் ஸ்த்ரீ சம்ஸாதம்… பெண்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிரிப்பொலி காற்றில் சிணுங்கல்களாக மிதந்து கொண்டிருக்கிறது. அந்த வேளையில் திடும்மென அவ்விடத்தில் ஒரு பிரகாசம். வெளிச்சப் புகைக்கு நடுவே அங்கே வந்திறங்குகிறாள் இந்திரன்.

          இந்திரன்…? ஆம். தேவர்களின் அரசன் சர்வ சந்தோஷங்களையும் அனுபவித்து… அனுதினமும் பகட்டில் வாழும் அவன் முகமே பார்க்க முடியாத அளவு கோரமாய் காட்சியளித்தது. செம்பட்டு இழையான தலைமுடி கொண்ட இந்திரன் செம்பட்டையும் பரட்டையுமாக மாறிப் போயிருந்தான். புன்னகை வெளிப்பட்ட வாயிலிருந்து கோரப்பற்கள் கறுத்து இருண்ட மேனியுடன் வந்த இந்திரனின் முகத்தில் சங்கட ரேகைகள். கண்கள் மட்டும் அல்ல. அங்கங்கள் அனைத்தும் அழுதன. நடுக்கம் அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

          என்ன ஆச்சு இந்திர ராஜாவுக்கு?

          ப்ரம்மஹத்தி தோஷம் அப்படியென்றால்…

          குற்றங்களிலேயே மிகக் கொடிய குற்றம் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாகும்படியான குற்றம். தலைமைக் குற்றம் என்று கூட சொல்லலாம். இக்குற்றத்தை செய்தவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதைத் தவிர.

          சரி… என்ன செய்தால் இந்த குற்றம் வரும்? ப்ராமணனை கொலை செய்வதுதான் ப்ரம்மஹத்தி குற்றம். பிரம்மம் – பிராமணன். ஹத்தி – கொலை. அதாவது பிராமணனை கொலை செய்யும் குற்றம்தான் ப்ரம்மஹத்தி.

          இப்பேர்ப்பட்ட குற்றத்தைத்தான் இந்திரன் செய்துவிட்டான். இப்போது இந்த காலத்தில் காஞ்சிபுரம் கோவிலுக்குள்ளேயே வைத்து சங்கரராமன் என்னும் பிராமணனை கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் ஹத்தி (கொலை) செய்தார்களே… அவர்களும்கூட வேதத்தின் நீதிமன்றம் முன்பு ப்ரம்மஹத்தி (தோஷம்) குற்றம் செய்தவர்கள்தான் அதாவது அவர்கள் இக்கால ப்ரம்மஹத்திகள்.

          சரி… நாம் இந்திரன் விஷயத்துக்கு வருவோம். ப்ரம்மஹத்தி குற்றம் செய்யும் அளவுக்கு இந்திரன் என்ன செய்தான்? காஸ்யபன் என்றொரு முனிவர் அவருக்கு திதி, அதிதி என இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகள் தைத்யர்கள். அதாவது அசுரர்கள். திதி அசுர குலத்தை சேர்ந்தவள். இன்னொரு மனைவி அதிதியின் பிள்ளைகள் தேவர்குலத்தைச் சேர்ந்தவர்கள்.

          அதிதிக்குப் பிறந்த 12 புதல்வர்களில் ஒருவரான தொஷ்டா, அசுர குலத்தைச் சேர்ந்த ரஸனா என்னும் பெண்ணை மண முடிக்கிறார். தேவனாகிய தொஷ்டாவுக்கும் அசுரப்பெண்ணாகிய ரஸனைக்கும் பிறந்தவன் விஸ்வரூபன். இந்திரன் ராஜ்யத்தில் புரோகிதனாக இருந்தான் விஸ்வரூபன்.

புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான் விஸ்வரூபன். இது தெரிந்த இந்திரன், அசுரர்களுக்கு ஏனடா ஹவிஸ்ஸை கொடுத்தாய்? என விஸ்வரூபனின் 3 தலைகளையும் கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான்.

          விஸ்வரூபன் ஒரு பிராமணணும்கூட… கொலை செய்தவன் இந்திரன் சும்மா விடுமோ? பிடித்தது ப்ரம்மஹத்தி. எங்கெங்கோ போய் சுத்தி பார்த்தான், அலைந்தான், திரிந்தான். கடைசியில் ‘ஞானம்’ வந்த இந்திரன் தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை யாரிடமாவது கொடுத்து விடுதலை பெறலாம் என நினைத்தான். முதலில் பூமாதேவியை போய் பார்த்து அழுதான் இந்திரன். என்னவென்று கேட்டாள் பூமாதேவி.

          இதுபோல்தான் ப்ரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாகி விட்டேன் தேவி. என் தோஷத்தை நீதான் எடுத்துக்கொண்டு எனக்கு அருள வேண்டும் என்றான் இந்திரன். எல்லா தோஷத்தையும் தானே எடுத்துக்கொண்டால் என்மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு ஏது சந்தோஷம். நீ கேட்கிறாய் என்பதற்காக ஒப்புக்கொள்கிறேன். ஒரு பகுதி தோஷத்தை என்னிடம் கொடு… என்கிறாள்         பூமாதேவி.      அதன்படி…இந்திரன் தன் கொலைக் குற்றத்தில் ஒரு சிறுபகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். அதுதான் தானியங்கள் விளைய தகுதி இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலை வனங்களாகவும் மாறிப்போய் விட்டன. தோஷத்தை வாங்கிக்கொண்டதற்கு பரிகாரமாக… பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை வழங்கினானாம் இந்திரன்.

          குற்றத்தில் கொஞ்சம் குறைந்த திருப்தியில்… விருட்சங்களை நோக்கி போனான் இந்திரன். விருட்சங்களே… என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்… என கெஞ்சினான். அப்படியானால்… எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து துளிர்க்க வரம்தா… என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன்… கூடவே தம் ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.

          அதுதான் மரங்களின் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும் ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய விழா, சிரார்த்தம் (தவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் அது பிரம்மஹத்தி தோஷத்தின் அடையாளமாம்.

          இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷத்தை       வைத்திருந்த        இந்திரன் கடைசியாக ஸ்த்ரீ சம்ஸாதம் …. அதாவது பெண்களின் மாநாட்டில் பிரவேசிதான். பூமாதேவியிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும், விருட்சங்களிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் கொடுத்த இந்திரன்… மீதி வைத்திருந்த அந்த குற்ற தோஷத்தை எங்கே கொண்டு போய் கொட்டுவது என யோசித்தான்.

          யோசித்து யோசித்துதான் அந்த ஸ்த்ரி ஸம்ஸாதத்தில் பிரவேசித்தான். எப்படி பிரவேசித்தான் என்பதை சென்ற அத்யாயத்தில் படித்திருப்பீர்கள். அழகு குன்றி, கர்வம் இன்றி, வாழ்ந்து கெட்ட செல்வந்தனைப் போல அந்த ஸ்த்ரீகளிடையே தோன்றினான் இந்திரன். அவர்களிடமும் தனது வழக்கமான வேண்டுகோளை இறக்கி வைத்தான்.

           ‘எனது ப்ரம்மஹத்தி தோஷத்தில்  ஒரு பங்கு இன்னும் என்னிடம் பாக்கியுள்ளது. நீங்கள் அதை தயை கூர்ந்து ஏற்றுக்கொண்டால் பழையபடி இந்திரனாகி விடுவேன்’ என காலில் விழாத குறையாக கெஞ்சினான் இந்திரன்.

          ‘எங்களுக்கென்ன தருவாய்?’

          ‘கேட்டதை தருகிறேன்…’

          ‘அப்படியானால்… நாங்கள் குழந்தைகள் பிரசவிக்கும் வரை எங்கள் புருஷன் எங்களோடு தேகஸம்பந்தம் வைத்துக் கொள்ள வசதி செய்து வரம் கொடு…’ என வேண்டுகோள் வைத்தார்களாம் பெண்கள். மனிதனை தவிர மற்ற விலங்குகளில்… கர்ப்பம் தரித்த நிமிடத்திலிருந்து ஆண் விலங்கு பெண் விலங்கை முகர்ந்துகூட பார்க்காது. மனிதர்களில் தான் பிரசவத்துக்கு முன்பு வரை நெருங்கும் பழக்கம் இருக்கிறது. இந்திரனும்…   பிரசவத்துக்கு    குறிப்பிட்ட காலம் முன்பு வரை பெண்கள் தங்கள் புருஷனோடு தேகசம்பந்தம் கொள்ள வரம் கொடுத்தான். கூடவே ப்ரம்மஹத்தி தோஷத்தையும் வழித்து துடைத்து அவர்களிடம் கொடுத்து விட்டான்.

          இப்படியாக முடிகிறது அந்த வேதக்கதை.

          இந்த இடத்தில்தான் நாம் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் பெண்களிடம் முற்றாக ஒப்படைத்தான் அல்லவா? அந்த தோஷம்தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக்கதை.

          அதனால்தான் அந்த மூன்று நாள்களை பகிஷ்டை என்றே சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டார்கள். அதாவது பகிஷ்கரி… புறக்கணித்திடு… தள்ளி வை… ஒதுக்கி வை என்று இதற்கு அர்த்தம். பிராமணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி கொலைக் குற்றத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதனால் அவள் தோஷம் பிடித்தவள் என்றது வேதம்.

          அதாவது இயற்கை பெண்ணின் உடலில் நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சியை…. ஒரு கற்பனைக் கதையோடு தொடர்புபடுத்தி அந்த நாட்களில் பெண்களை ஒதுக்கிவைத்து துன்புறுத்தியிருக்கிறது வேதம் வகுத்த வதி.

          ஒரு பக்கம் இப்படி பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்… இன்னொரு பக்கம் அழகிப் போட்டிய்யே நடத்தியிருக்கிறதென்றால் பாருங்களேன். அதாவது இன்று மிஸ்வேர்ல்டு என்று சொல்வதை போல ‘மிஸ்வேதா’ என்று வேண்டுமானால் நீங்கள்  கற்பனை  செய்து கொள்ளலாம்.

          அந்த அளவுக்கு பெண்களை அழகுப் பதுமைகளாக முன்மொழிந்து வழிமொழிகிறது வேதகாலம். எப்படி?... இப்படித்தான்.

          ‘யதாஷவை யோஹாஹா
           ஸ்வர்ணம் க்ரணியம் பேசலம்
           விப்ரதீ ரூபானி ஆஸ்தி…’

          வேதகால விதிகளில் பெண்கள் எப்படி நடந்து வந்தார்கள் தெரியுமா? முழுக்க முழுக்க தங்க நகைகள்… ஆபரணங்கள் அணிந்து… மிக மென்மையான உடம்பை பாதங்களால் அளப்பது போல நகர்த்தி நடந்து வருகிறாள் பெண். அவள் அழகு எப்படி  ஜொலிக்கிறதென்றால்… ஜலத்தில் துளியளவில் நெய் பட்டால் எப்படி மினுமினுவென்று தண்ணீர் தகதகக்குமோ… அதே போல தங்க ஆபரணங்களை தாங்கி வரும் பெண்ணும் ஜொலிக்கிறான் என வர்ணிக்கிறது ஸ்லோகம்.

          இந்த அழகு மட்டும்தானா…? பெண்களுக்கு புற அழகுதான் பிரதானமா?

          “சுப்ராஹா கன்யாஹா யுவதயஹா
           சுபேஷசஹா கர்மகிருதஹா
           சுகிர்தாஹா வீர்யாபதிஹி…”

          பெண்ணானவன் ஒளி பொருந்தியவள். அவள் பார்த்தாலே பிரகாசம். அடுத்தவர்களை கவர்ந்திழுக்கக் கூடியவள். இவளோடு சேர்ந்து வாழவேண்டும் என ஆண்களுக்கு ஆசையை ஏற்படுத்தக் கூடியவள். எக்கச்சக்கமான அலங்காரங்கள் செய்து கொள்பவள் எப்போதும் துருதுருவென ஏதாவது காரியம் செய்துகொண்டே இருப்பவள்.
                    எதிர்காலத்தைப் பற்றி கவலை கொண்டு அதற்கேற்றவாறு   வாழ்க்கையை நிகழ்காலத்தில் திட்டமிட்டுக் கொண்டு செல்பவள். இவற்றையெல்லாம் விட உடல் உள்ளம் இரண்டுமே பலம் மிக்கது பெண்களுக்குதான், என வேதகால பெண்களைப் பற்றி வரையறுக்கிறது அந்த ஸ்லோகம்.

          சரி சரி… தேகம் ஆரம்பித்து மனம் வரைக்கும் பெண்களை புகழ்ந்து தள்ளும் வேதம்… வேதகாலத்தில் முக்கிய கர்மாவான யாகம் நடக்கும் போது பெண்களை எப்படி நடத்தியது?... ஒரு உதாரணம் சொல்கிறேன்.

          சில வருடங்கள் முன்பு திருச்சூரில் ஓர் யாகம் சோம யாகம். கிட்டத்தட்ட நான்காயிரம் படித்த பெண்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் இக்கால நவநாகரிக பெண்கள். நானும் அந்த சோம யாகத்தில் கலந்து கொண்டேன். யாகம் நடத்துபவர்கள் யாக சாலையில் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதை கண்டு ஒரு கணம் யோசித்தார்கள்.

          அம்மா… நீங்க எல்லாரும் உங்க சேலைத் தலைப்பால் காது முகத்தை மூடிக்கோங்கோ… என பெருங்குரலில் ஆணையிட்டனர். உடனே பெண்கள் அனைவரும் தங்களது சேலை தலைப்பை எடுத்து காதுகளோடு முகத்தை மூடிக்கொண்டார்கள். ஏன் இந்த மூடு காரியம்…? யாகங்களில் சொல்லப்படும் மந்த்ரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்து விடக்கூடாது. விழுந்துவிட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது. அதற்காகத்தான் சில வருடங்களுக்கு முன் திருச்சூரில்            நடந்த      நிகழ்வு     இது.

வேதத்திலிருந்தே உங்களுக்கு உதாரணத்தை என்னால் காட்டமுடியும்.

          ஆனால், இந்த காலத்திலேயே இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடந்த யாகம். வேத காலத்தில் எப்படி நடந்திருக்கும் என உங்களின் யூகத்துக்கு விடத்தான் தற்கால நிகழ்வைச் சொன்னேன். வேதகால பெண்களின் தேக லட்சணம், யாக லட்சணம் எல்லாம் பார்த்தோம்… அன்று கல்யாணம் எப்படி? முதல் மணமள் யார்?

          பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம் எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா? அடுத்து… நாம் பார்க்கப்போவது பெண்களின் வாழ்க்கையில் முக்கிய தருணமான திருமணம்.

          வேதத்தில் நில இடங்களில் விவாஹம் என்றும் பிறகு பாணிக்ரஹணம் என்றும் குறிப்பிடப்படும் திருமணம் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்டிருக்கிறது. முதலில்… விவாஹம் என்றால் என்னா அர்த்தம் என்று தெரிந்துக்கொள்வோம். ஏனென்றால் இன்றுவரையும் திருமணம் பத்திரிகைகளுக்கு ‘விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை’ என பெயரிட்டு அச்சடிக்கிறார்கள். விவாஹம் என்றால் Tribal வார்த்தை அதாவது மலைப்பிரதேச பழங்குடியினர் வார்த்தை. இதற்கு தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் உறவினர்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு போவது என்ற ஒரு சடங்கை திணித்திருக்கிறார்கள்.

சரி… நாம் வேத திருமணத்துக்குப் போவோம். திருமண நடவடிக்கைகள் எப்படி ஆரம்பிக்கின்றன. தரகரை அனுப்புகிறது வேதம். ‘முதலில் நீ போய் பெண்ணை பார்த்துவிட்டு வா’ என்று,

          “ப்ரதக் மந்தா திய ஸானஸ்ய
           வராபி வராது
           காசுப்ர தீத்தா ஆஸ்மா கமிந்த்ரா
           உபயம் ஜீதோஷதீ…”

          என போகும். இந்த வேத ம்ந்த்ரம்… தரகர் எப்படி பெண் பார்க்க செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீ மிக பகட்டான ஆடம்பர ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு பணக்காரன் போன்ற தோரணையுடன் பெண் பார்க்க செல்ல வேண்டும். இல்லையென்றால் மாப்பிள்ளை வீட்டாரை பிச்சைகாரன் என நினைத்துப் பெண் கொடுக்காமல் இருந்துவிடுவார்கள் என மாப்பிள்ளை வீட்டாரின் பிரதிநிதியாக தரகரை வரையறை செய்து வைத்திருக்கிறது வேதம்.

          அவர் பார்த்து பேசிவிட்டு வந்தபின்… அடுத்தது பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்கிறார்கள். பரஸ்பர பார்வை பரிவர்த்தனம். பிறகு கைபிடிக்கிறார்கள். அதாவது Mutual Meeting. அதாவது பாணிக்ரஹணம் எங்கே பார்த்துக் கொள்கிறார்கள்? மண மேடையில்? அப்போது பெண்ணிடம் சொல்கிறார்கள்…

          தொஷ்டா அஸ்பை துவாம்பதிம்
          தொஷ்டா சகஸ்ரமாஹம் ஷிஹீ
          தீர்க்கமாயு க்துனாவதாம்…

          ‘ஏ… பெண்ணே இவன்தான் உனக்கென தெய்வத்தால் அனுப்பி வைக்கப்பட்டவன். இனி இவன்தான் உனக்கு எல்லாம். இவன்தான் உன் கணவன். இவன் சொல்படிதான் இனி உன் சொர்க்கம். இவனை தெய்வத்தின் உத்தரவின் பேரில் நீ திருமணம் செய்து கொள்வாயாக. நீ இவனோடு எதுவரைக்கும் வாழவேண்டும் என்றால்…


                                   to be continue...

இந்துமதம் எங்கே போகிறது? - 11

இந்துமதம் எங்கே போகிறது? - 11
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
                  அதேபோலத்தான் சங்கராச்சாரியார் கஷ்டப்பட்டு ‘மடங்களுக்கான அமைப்பு’ என்னும் மலரை எடுத்து வந்தார். மலர் வாடாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்? யோசித்தோம். மடங்களுக்கான அமைப்பை கஷ்டப்பட்டு உண்டாக்கிய பிறகு அதை முறைப்படி பதிவு (Register) செய்தோம். இதற்காக அனைத்து மடங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து போட்டார்கள். நான் செகரட்டரி என்ற முறையிலும், பரகார மடத்தின் பிரதிநிதி என்ற முறையிலும் கையெழுத்து போட்டேன். சங்கராச்சாரியார்கள் எந்த இடத்தில் தங்கள் கையெழுத்தை போட நேர்ந்தாலும்… பெயரை எழுத மாட்டார்கள். ‘நாராயண ஸ்மிருதி’ என்றுதான் கையெழுத்து போடுவார்கள். அஃது போல் மகாபெரியவரும் நாராயணஸ்மிருதி என கையெழுத்து போட்டார்.
       
        அமைப்பு லெட்ஜரில் பதிவாகி விட்டது. மக்கள் மனதில் பதிவாக வேண்டுமே… அதற்கு புஷ்டியாக செயல்பட வேண்டுமே, அப்படியென்றால் தனம், செல்வம் சேர்க்க வேண்டுமே.

        மகாபெரியவருக்கு செல்வத்தின் மீது பணத்தின் மீது கொஞ்சம் கூட ஆசை கிடையாது. செல்வமோ, நகையோ அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மடத்தில் அன்று நானும் இருந்தேன். வ்டநாட்டுத் தொழிலதிபர் பிர்லா அன்று மகாபெரியவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். எத்தனை தொழிற்சாலைகளை நிர்வகித்துக் கொண்டிருப்பவர், சாதாரணமாகவா வருவார். ஒவ்வொரு நிலையிலும் படாடோபம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.

        வெள்ளித்தட்டு முழுக்க புதுப்புஷ்பம் கமகமத்தது. இன்னொரு வெள்ளித்தட்டில் ரகம் ரகமாய் பழங்கள்… அடுத்ததாக ஒரு வெள்ளித்தட்டு. அதன் மேல் கட்டுக்கட்டாய் பணம்… மூன்றாவது தட்டு முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பணம். பிர்லா… மகாபெரியவரை தரிசித்துக் கொண்டிருக்கும்போதே அவருடன் வந்தவர்கள் அந்த தட்டுகளை மகாபெரியவர் முன் அர்ப்பணிப்பதற்காக எடுத்து வந்தார்கள்.

        புஷ்பத்தட்டை பார்த்த மகாபெரியவர் புன்னகைத்தார். பழத்தட்டை பார்த்தும் புன்னகைத்தார். மூன்றாவதாக அந்த பணத்தட்டு வருவதை பார்த்துவிட்ட உடனேயே…

        பிர்லாவை கூப்பிட்டு… ‘என்ன இது? என்ன இது? என்றார் அவசரமாய்…
       
        ‘ஸ்வாமிஜி… மடத்து காரியங்களுக்காக என்னுடைய சிறிய காணிக்கை..,’என பிர்லா இழுக்க…

        மகாபெரியவரோ சட்டென அந்த தட்டை தூக்கி வந்தவரை பார்த்து ‘வெளியே போய்விடுங்கள்’ என்று பொருள்படும்படி கைகளால் சைகை காட்டிவிட்டார். பிர்லா எவ்வளவோ சொல்லியும்… ‘நான் சன்னியாசி… எனக்கே இவ்வளவு பணம் தேவைப்படுமானால்… லோகத்தில் சம்ஸாரிகளாக இருப்பவர்களுக்கு எவ்வளவு தேவைப்படும். அவர்களிடமே கொடுங்கள். பொது காரியத்துக்காக லோக ஷேமத்துக்காக மடத்துக்கு வெளியே செலவழித்து விடுங்கள்’ என மென்மையாய் மறுத்துவிட்டார் மகாபெரியவர்.

        ‘அர்த்தம் அணர்த்தம்’ என்ற ஆதிசங்கரரின் கூற்றுக்கு எவ்வளவு உண்மையாக மகா பெரியவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதை அப்போது அங்கே நான் பார்த்தேன். இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் மடாதிபதியாக இருந்த மடத்தில் செல்வத்துக்கு அதிகம் வேலையும் இல்லை. தேவையுமில்லை. அதனால் மடங்களுக்கான அமைப்பை ஆரம்பிப்பதிலிருந்து… ஆதீனங்கள் ரொம்ப உதவிகள் செய்தார்கள்.

        திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் உண்டு. அதுபோல மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு. இவற்றை முறைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள… ஒரு திட்டம் தீட்டினோம். அதாவது… மடங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை வருடத்திற்கு ஒரு தடவை ‘மடங்களுக்கான அமைப்பு’க்காக கொடுக்க வேண்டும். இந்த நிதியில்தான் அமைப்பு இயங்க வேண்டும்.  இந்த செல்வம் மூலம்… நமது மதத்தில் நிலவும் பிரிவுகளைத் தாண்டி ஒரு பொதுவான ஆன்மீகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என நாங்கள் திட்டம் போட்டோம்.

          இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க… அமைப்பின் கூட்டத்தையும் கூட்டினோம். இதில் மகாபெரியவர் தலைமையேற்பார். மற்ற மடங்களின் மடாதிபதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். வருஷா வருஷம் கூட்டம் நடந்தது. அனால்… சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 சதவிகித பங்கை கொடுக்க முன்வரவில்லை. கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. ஐந்தாவதோ ஆறாவதோ கூட்டம்… அதில்தான் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சனையை கிளப்பினார்.

          கோவில்களை கட்டியது மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்பு கொடுத்தது… வியர்வை கொடுத்தது… வீரியம் கொடுத்தது… கல் சுமந்தது மண் சுமந்தது எல்லாம் பிராமணர் அல்லோதோர். ஆனால் பூசை செய்வது மட்டும் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா?

          வடநாட்டில் குறிப்பாக காசியில் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல… இங்கேயும் அனைவரும் பூசை செய்ய வேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்.”என்றெல்லாம் மதுரை ஆதினம் புதிய கருத்துக்களை பேசினர்.

          சொன்னதோடு இல்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம், சுவாமிமலை இடையே இருக்கின்ற திருப்புறம்பியத்தில் கோவிலில் குடிகொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தை கோவிலுக்கு வெளியே வைத்து… அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார். இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில் மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “சூத்ரன் பூஜை பண்றது அதுவும் தமிழில் பண்றது ஏத்துக்க முடியாது” என்றார் மகாபெரியவர்.

          மதுரை பெரிய ஆதீனம் உரிமைப் பிரச்சினை கிளப்பியதும்… அதை மகாபெரியவர் சங்கராச்சாரியார் மறுத்ததும், ‘மடங்களுக்கான அமைப்பு’ மேலும் செயல்படுவதில் தடங்களை ஏற்படுத்தியது. சில வருடங்களில் அமைப்பில் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. சேற்றிலிருந்து பறித்து வந்த செந்தாமரைகள் போல வேததர்ம சாஸ்திர பரிபாலனசபை, ஆகமசிற்ப சதஸ், திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு, மடங்களுக்கான அமைப்பு, என சமய ஒற்றுமைக்காக மகாபெரியவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்கள் எல்லாம் அவருடனேயே போய்விட்டன.

          அவரது காலத்துக்குப் பிறகு மடத்தில் இந்த ஸ்தாபனங்கள் பற்றி கவலைப்பட… அக்கறைப்பட யாரும் இல்லை. அந்த செந்தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாய் வாடி… இப்போது சுண்டிச் சுருங்கிவிட்டன. மகாபெரியவர் என்ற மகாபுருஷரோடு என்னுடைய அனுபவங்களை சிலபல அத்தியாங்களில் படித்திருப்பீர்கள். ஆதிசங்கரரில் ஆரம்பித்து மகாபெரியவருடனான அனுபவங்கள் வரை பகிர்ந்து கொண்டாயிற்று. இப்போதைய சங்கராச்சாரியாருடனான சிலவற்றை தக்க சமயத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

          அடுத்து…?

          அடுத்து உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப்போகிறவர் ஆதிசங்கரரின் அத்வைதம் மீது வேதாந்த ஆயுதம் பாய்ச்சியவர் அவர் யார்?

          அதற்கு முன்…

          சோழச்சக்கரவர்த்தி ராஜராஜசோழனின் தனயன் ராஜேந்திர சோழன்… தன் தந்தையின் வெற்றிகளைக் கண்டு பூரித்துப்போனதோடு மட்டுமல்ல… அப்பாபோல நாமும் இந்த தரணி வெல்ல வேண்டும். நம்மை பலரும் பரணி பாடவேண்டும். தந்தை தஞ்சையில் கட்டிய கோவிலைப் போன்றே தானும் கட்டவேண்டும் என நெஞ்சுக்குள் வேட்கையை வெறியாக எரியவிட்டான். விளைவு? படைகளை கிளப்பினான். திக்கெட்டும் வெல்லப் புறப்பட்டவன் வட இந்தியாவை நோக்கிப் படையெடுத்தான். பலநாட்கள் கடந்த அவனது படை கங்கை கரையை முட்டியது. கங்கை கொண்ட சோழன்… அங்கே ஒரு வேத விற்பன்னரை சந்தித்தான்.

          அவரது சாஸ்திர விளக்கங்கள் அறிவு சார்ந்த கருத்துக்களைக் கேட்ட ராஜேந்திர சோழன்… இந்த வித்வானை நம்முடன் அழைத்துச் சென்றால்தான் வெற்றி முழுமைப்படும் என்ற முடிவுக்கு வந்தான். அவர்தான் நாதமுனி. இன்றும் உத்திரபிரதேசத்தின் கோரக்பூரில் நாதமுனியின் உபதேசத்தைப் பின்பற்றுகின்ற “நாதபந்துக்கள் என்ற பிரிவினர் வாழ்ந்து வருகின்றார்கள்.

          நாதமுனியை மிகுந்த மரியாதையோடு தென்னகம் அழைத்து வந்த ராஜேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரம் அமைத்ததோடு… நாதமுனியை தனது ராஜ ஆலோசகராக உபதேசம் செய்பவராக வழிபட்டான்.

          சோழனுக்கு உபதேசங்கள் செய்ததோடு… பல வேத நூல்களையும், உபநிஷதுகளையும் ஆழ்ந்து கற்ற நாதமுனியை வேதமுனி என்றே சொல்லலாம். பல ஸ்லோகங்கள் பண்ணிய நாதமுனியின் பேரன்தான் ஆளவந்தார்.

          நாதமுனியின் பரம்பரைக்கும், சோழ ராஜாக்கள் பரம்பரைக்கும் தலைமுறை தாண்டிய சம்பந்தம் தொடர்ந்தது. ஆளவந்தாரும் தன்காலத்தில் சோழ சாம்ராஜ்யத்துக்கு ராணுவ ஆலோசகராக அமர்ந்தார். சோழனின் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை, ஆகியவற்றுக்கு ஆலோசனை செய்யும் முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருந்த ஆளவந்தாரை… சமய சம்ப்ரதாய விஷயங்களுக்காக தாத்தாவான நாதமுனி பலதடவை அழைத்தார்.

          புண்டரீகாசஷர், முருகை காவலப்பன் என பல தூதுவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகும் நாதமுனியின் உபதேசத்தை கேட்க மறுத்துவிட்டார் ஆளவந்தார். இப்பேற்பட்ட ஆளவந்தாரின் பேத்திக்கு பிள்ளையாக மலர்ந்தவர்தான்… அதாவது ஆளவந்தாரின் பேரன் திருமலை நம்பியின் தங்கையான பூமிபிராட்டி என்பாருக்கு மகனாக வந்து உதித்தவர்தான் விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.
         
          ராமானுஜர் எப்படிப்பட்டவர் என உங்களுக்கு அறிமுகப்படுத்த ஓர் வடமொழி கவிதை எவ்வளவு தகவல்களை தேக்கித் தருகின்றது பாருங்கள்,

          “பாஷண்ட த்ருமஹண்ட தாவதகனாஹா
           சார்வாக சைலாஹனிஹி
           பெளத்த த்வாந்த்த நிராஸ வாஸரபதிஹி
           ஜைனேப கண்ட்டீர வஹா
           மாயாவாதி புஜங்க பங்க கருடஹா
           த்ரைவித்ய சூடாகணிஹி…”

என்று போகும் இந்த கவிதையின் கருத்து என்ன தெரியுமா? அந்த காலத்தில் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டை ஓடுகளை எடுத்து வைத்துக்கொண்டு பூசை செய்யும் ஒரு ‘பயம்’ தரும் வழிபாட்டு முறை பரவிக்கிடந்தது. இப்படிப்பட்ட மண்டை ஓட்டு வழிபாட்டு முறையை எரிக்க காட்டுத்தீயாக வந்தவர். ‘சார்வாகன்’ என்பவரின் உபதேசப்படி தெய்வமே இல்லை எனலாம். மூடர்களின் கற்பனை மனிதர்கள் வாழப்பிறந்தவர்கள். தெய்வத்தை கும்பிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்… என்ற கொள்கை பிடிப்பில் வந்த நாஸ்திகர்கள் இருந்தனர். மலை போன்ற இந்த நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர் பரப்பினார். அந்த இருட்டை கிழித்து வேத வெளிச்சத்தை ஏற்படுத்திய உதயசூரியனாக வந்தவர்.

          ஜைனம் என்னும் யானையை அடக்க சிங்கமாக புறப்பட்டவர். மாயாவாதம் என்னும் துன்பம் தருகின்ற கொடிய மலைப்பாம்பினை கொத்தி கொலை செய்யவந்த வைணவ கருடன்…

          இப்படியாக மண்டையோட்டு வழிபாட்டு கலாச்சாரம், நாஸ்திக கூட்டம், பெளத்த இருட்டு, ஜைனம் என்ற யானை, மாயாவாதம் அதாவது ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் என்கின்ற மலைப்பாம்பு ஆகியவற்றை அடக்கி ஒடுக்க வந்தவர்தான் ஸ்ரீராமானுஜர்.

          இவர் என்ன சொன்னார்…? செய்தார்…?

          காட்டுத்தீயாக… இடியாக, உதய சூரியனாக, சிங்கமாக, கருடனாக வர்ணிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் தன் சிறுபிராயத்திலேயே வேத, உபநிஷத்துக்களை அத்யயனம் செய்ய ஆரம்பித்தார். ராமானுஜர் ஸ்ரீபெரும்பத்தூரில் அவதரித்ததாக தகவல்கள் பரவியிருந்தாலும்… தான் எழுதியுள்ள எந்த க்ரந்தத்திலும் தன் சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரைப் பற்றியோ… அங்கே அமைந்திருக்கும் பெருமானைப் பற்றியோ எந்த ஒரு தகவலையும் ராமானுஜர் குறிப்பிடவில்லை. இன்னொன்று… தமிழ் மொழியில் எந்த க்ரந்தத்தையும் அவர் அருளிச் செய்யவில்லை. வேத உபநிஷத்துகளோடு தன் முன்னோடிகளான நாதமுனி, ஆளவந்தார் பற்றியும் கசடற கற்றார் ராமானுஜர்.

          நாதமுனிகளைப் பற்றி ஆளவந்தார் அருளிய ஸ்லோகம் ஒன்று,

“ஜனித்வா வம்ஸே மாதிக்யா கேஸதாம்
 சுசீனாம் சுத்தாநாம்
 சித்சுதிது ஈஸ்வர தத்வ விஷதாம்…”

பிறக்கும்போதே புகழ் பொருந்திய வம்சத்திலே வந்த நாதமுனிகள்… ‘சித்’ ஆகிய ஜீவாத்மா, அசித்தாகிய ஜடப்பொருளான உலகம், ஈஸ்வரனாகிய ப்ரம்மம் மூன்றும் மெய்யானவை என்றார். அதாவது மாயாவாதத்துக்கு எதிரான சிந்தனையை வெளியிட்டார்…’ என அந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கின்றார் ஆளவந்தார்.

          இதைக்கற்ற ராமானுஜர்… உபநிஷத்துக்களில் ஊறித்திளைத்தார்.

“நஸந்த்ரீசே திஷ்டதீ ரூபமஸ்ய
 நசக் குஹா பத்யயீ
 கஷ்யனயேனம் ஹ்ருதா மனிஷா
 மனசா அபிகிருப்தஹா யயேனம் விதுஹீ
 அமிர்தா ஸ்தே பவந்த்தீ…”

என்று செல்கின்ற உபநிஷத்து ஸ்லோகம் சொல்வது என்னவென்றால்… பகவானுக்கு உருவம் கிடையாது. அருபமானவன். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், உனக்கு வேணுமெனில் உன் மனதுக்குள் அவனை உருவம் உடையவனாக நினைத்துக்கொள். அவன் உருவத்தை (Mental Vision) தியானித்துக் கொண்டிரு...என்கின்றது.

          நதமுனிகள் சொன்னதையும் உபநிஷதுகள் சொன்னதையும் ராமானுஜர் தன் வேதாந்த அறிவில் விதைத்து முழுமூச்சாக சிந்தித்து முளைக்க வைத்தார். அதுதான் விசிஷ்டாத்வைதம். அது என்ன சொல்கின்றது?

          உலகில் எதுவுமே மாயை என்பது தவறு. பகவானுக்கு ரூபம் உண்டு. அவன் வைகுந்தத்தில் வசிக்கின்றான். அவன்தான் ஜீவாத்மாவாகிய நம்மையும், உலகத்தையும் படைத்தான். பகவானின் உருவம் மனசு கற்பித்ததில்லை. அவன் நிஜமான உருவம் கொண்டவன். பக்கத்தில் பிராட்டியோடு… வைகுண்டத்தில் இருக்கும் பகவானை நாமெல்லாம் தியானிக்க வேண்டும் என்பதுதான் ராமானுஜ உபதேசம்.

          இவ்வாறு… புது தத்துவத்தை முரசறைந்த ராமானுஜர் இதை நிலைநாட்டுவதற்கும்… பரப்புவதற்கும் பல பயணங்கள் மேற்கொண்டார். உபநிஷத்தின் வியாக்யானமான ப்ரம்மசூத்திரம் முக்கியமான வேதாந்த நூல். இதைப்படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்ணுவது மிகக்கடினமான காரியம். சமஸ்கிருத மேதாவிலாசமும், ஞான சித்தியும் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே இதை பண்ணமுடியும்.

          அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்ரத்துக்கு சங்கரர் உரை எழுதினார். அது சங்கர பாஷ்யம் எனப்பட்டது. மத்வர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் என அழைக்கப்படுகிறது. அதே ப்ரம்ம சூத்ரத்துக்கு ராமானுஜரும் உரை எழுதினார். ஆனால்… அது ராமானுஜ பாஷ்யம் என அழைக்கப்படாமல் “ஸ்ரீ பாஷ்யம்” என மேன்மையோடு அழைக்கப்படுகின்றது.

          இந்த பாஷ்யத்தை படைப்பதற்காக… காஷ்மீர் பயணித்த ராமானுஜர் அங்கே போதாயணரைப் பார்த்தார். இன்றைய தட்பவெப்ப நிலையிலேயே இந்த்ரியங்களை நடுங்கச் செய்யும் காஷ்மீர்… பல நூற்றாண்டுகள் முன்பு எவ்வளவு பனிக்கட்டிகளை மடியில் கட்டிக்கொண்டிருக்கும். அப்பேற்பட்ட இடரிலும் போதாயணரை பார்த்து அவரிடத்திலே ப்ரம்மசூத்ரத்தை வாங்கினார் ராமானுஜர்.

          ராமானுஜர் ப்ரம்மசூத்ரத்தை பாஷ்யம் பண்ணப்போகிறார், அதில் சங்கரபாஷ்யத்துக்கு பதிலடி கொடுப்பார் என கருதிய அத்வைதிகள் சிலர் ராமானுஜருக்கு ப்ரம்மசூத்ரம் கிடைக்காமல் செய்வதற்கான வழிகளையும் காஷ்மீர் வரை சென்று மேற்கொண்டனர்.

          சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமோ? போதாயண விருத்திக் காரர் என்ற காஷ்மீரத்து ஞானியிடமிருந்து மிகவும் கஷ்டப்பட்டு ப்ரம்ம சூத்ரத்தை வாங்கி அதற்கு பாஷ்யம் அதாவது உரை எழுதினார் ஸ்ரீராமானுஜர். இங்குதான் ராமானுஜரைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் ஆரம்பிக்கின்றன. தான் அருளிய ஸ்ரீபாஷ்யத்தின் முதலிலேயே…

“பகவத் பலன தானக்ருதாம்
 விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்
 பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி
 தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
 வியாக்யாஸ்யந்தே…” என
அதாவது …
“பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி
 தன்மத்

பூர்வாச்சாரியார்கள். அதாவது ப்ரம்மசூத்திரத்தை பண்ணிய ஆச்சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் இங்கு கூறுகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும்” என “ஆமாம்” போட்டுவிட்ட ராமானுஜர். ஸ்ரீபாஷ்யத்தில் அபசூத்ராதிஹிரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்.

          “பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத்தான் மோட்சம். நான் சொல்வது ப்ராமணர்களுக்கு மட்டும்தான். ப்ராமணர் அல்லாத சூத்ரர்கள் மோட்சம் வேண்டும் என்றால் இந்தப் பிறவியை இப்படியே கழித்து, அடுத்த ஜென்மாவில் ப்ராமணனாக பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும். ஒருவேளை அடுத்த பிறவியில் ப்ராமணர்களாக பிறக்க அவர்களுக்கு ப்ராப்தம் கிடைக்குமானால் வேத உபநிஷதுகளை கற்று… பகவானை தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.

          அதுபோலவே… ப்ராமண ஸ்தீரிகளும் சூத்ரர்கள்தான். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும் என்கிறார் ராமானுஜர். (மோட்சம் என்றால் அடுத்த ஜென்மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண்டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுபவிப்பது)

          ஆனால்… ராமானுஜர் திருக்கோட்டியூர் கோவிலில் கோபுரத்தின் மீதேறி… அனைத்து சாதியினருக்கும் மோட்சம் இருக்க வேண்டும் என்பதற்காக திருமந்திரத்தை கூவிச்சொன்னார் என கெட்டியான தகவல் பரவிக் கிடக்கிறது.

          இது ராமானுஜரின் வாழ்வில் நிகழ்ந்திருக்குமானால் தன் க்ரந்தங்கள் எதிலும் இதுபற்றி அவர் குறிப்பிடவில்லையே ஏன்?

          ராமானுஜரின் சிஷ்யரான கூரத்தாழ்வான்.. “ப்ராமணர்களுக்கு மட்டும் மோட்சம் என சொல்வது தவறு… எல்லா வர்ணத்தவரும்தான் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கவேண்டும்.” என சொன்னது ஏன்?

          சூத்ரர்களுக்கு மோட்சம் கிடையாது. (பிராமண) பெண்களுக்கும் மோட்சம் கிடையாது என அபசூத்ரா திஹரணத்தில் ராமானுஜர் அருளியிருந்ததை பார்த்தோம். சூத்ரன் என்று அடிக்கடி சொல்கிறோமே… இச்சொல்லின் அர்த்தம் என்ன? சூசம்-த்ராதி… சூசம் என்றால் கடின உழைப்பால் ஏற்படும் கஷ்டம் என்று பொருள். த்ராதி என்றால்? அதை விரட்டுபவன். அதாவது கடின உழைப்பின் கஷ்டத்தை தானே பெற்று… அந்த கஷ்டத்தை உனக்கு வராமல் விரட்டுகிறவன் தான் சூத்ரன். இன்னும் சொல்லப்போனால் தான் உழைத்து உனக்கு சுகம் கொடுப்பவன் என்கிறது சமஸ்கிருத மொழி.

          அப்படித்தான் பெண்களையும் சூத்ர மரியாதை கொடுத்து வைத்திருந்தார்கள். பெண்களுக்கு என்றுமே இந்த நிலைதானா? இந்த கேள்வியை சற்று ஆழமாகவே அலச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

          வேதம் தோன்ற முனைந்த காலகட்டத்திலும், வேத காலத்திலும் பெண்கள் எப்படி இருந்தனர்? அவர்கள் ஆரம்பகாலத்திலேயே ஆண்களால் அடக்கப்பட்டனரா?... வழிபடப்பட்டார்களா?... சமுதாயம் மதம் என கட்டுமானங்கள் ஏற்பட்ட பிறகு பெண்ணின் முக்யத்துவம் எப்படி இருந்தது?... இந்த கேள்விக்கான விடைகள் அன்று முதல் இன்றுவரை என்ன?...

          ப்ரிமிட்டிவ் கல்ச்சர் (Premetive Culture) காலம்... அதாவது நாகரிகத்தின் தொடக்க காலம் (the intial stage of civilization) இதற்கும் முன்னால் நாகரிகம் வளராத காலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆணும், பெண்ணும் நிர்வாணமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நாம் பிறந்தோம் என அவனுக்கு தெரியாது. அவனை நாம் தான் பெற்றெடுக்கிறோம் என அவளுக்கு தெரியாது. அதாவது… ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை போட்டு வைத்திருந்த முடிச்சை அவிழ்க்க தெரியாத அறியாமை காலம் அது. வெட்கம் கிடையாது. விருப்பம் கிடையாது. காமத்துக்கு வடிகால் அவள்தான் என்றோ… அவன்தான் என்றோ இருபாலருக்கும் கண்டுபிடிக்கத் தெரியாத காலம்.

          இப்படிப்பட்ட காலத்தில் ஆண் கூட்டம் தனியாக அலைந்து கொண்டிருக்கும். மரங்களில் ஏறுவது… பழங்களை பறிப்பது… தொப்பென கீழே விழுவது... இப்படி மலை, காடு, மேடுகளில் ஊர்ந்து கொண்டிருந்த மனிதன் பெண்ணை முழுதாக நிமிர்ந்து பார்த்தான். தன் கை, கால்களை ஒரு தடவை பார்த்தும் கொண்டான். முகத்தை தடவி மூக்கைப் பிடித்துப் பார்த்தான். தன் வாய்க்குள் கையை விட்டுப் பார்த்தான். காதுகளை சுண்டிக்கொண்டான். கன்னத்தை தட்டிக்கொண்டான். மறுபடியும் தன்னை கால்களிலிருந்து கழுத்து வரை கண்களால் அளந்தான்.

          பிறகு பெண்ணை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தவன் அச்சு அசலாய் தன்னைப் போலவே அவள் இருப்பதை கண்டு திடுக்கிட்டான். சில வித்யாசங்கள்… அவளுக்கு மார்பகங்கள் திரண்டு நின்றன. கேசம் இடுப்பு வரைக்கும் ரோமநார்களாய் தொங்கிக் கொண்டிருந்தது. கன்னங்கரேரென முகத்தை சுற்றி மறைத்து நின்ற கேஸத்தை பார்த்ததும்… ஆதிமனிதனுக்கு முதலில் வந்தது பீதி.

          அய்யோ… பேய்… பிசாசு… மிருகம்… என அக்காலத்தில் அவன் பயம் கொள்ளத்தக்க விஷயங்களை பட்டியல் போட்டான். சத்தம் கேட்டு பக்கத்தில் நின்ற ஒரு சிலர் ஓடிவந்தனர். அனைவரும் அவளைப் பார்த்து… அவளின் தலைவிரி கோலத்தை பார்த்து மிரண்ட விழிகளைப் பார்த்து பயந்தனர். “அய்யோ பேயை பிசாசை அடித்து விரட்டனும்” என்ற முடிவுக்கு வந்து கம்பு, கல், மண் என கண்டதையும் எடுத்து அடித்தான்.

          பெண்ணைக் கண்டதும் ஆணுக்கு ஏற்பட்ட முதல் உணர்வு பயம்தான். ஆனால் இந்த பயம் நீடித்ததா? கூந்தலை அவள் ஒதுக்கியபோது தான் முகத்தின் அழகு முழுதாய் தெரிந்தது. காலப்போக்கில் இயற்கையின் தத்துவம் விளங்கத் தொடங்கியது. முதலில் பெண்ணைப் பார்த்து பயந்தவன்… பெண்ணை பயமுறுத்தத் தொடங்கினான். அவன் கூந்தலைப் பிடித்து இழுத்தான். அடித்தான். அவளது மிரட்சி இவனது மிரட்டலை அதிகப்படுத்தியது.

          நாகரிகத்தின் தொடக்க காலத்தில் சமவெளிகளில் வாழ்ந்த மனிதன்… விவசாயம் செய்யத் தொடங்கியபோது ஏர் போன்ற கருவி செய்தான். அப்போது விலங்குகளை எல்லாம் கண்டு வெகுவாக பயந்ததால் அவைகளிடமிருந்து விலகியே இருந்த மனிதன் அவைகளை பழக்குவதற்குரிய பரிணாம வளர்ச்சி இல்லாத நிலையில்…

          ஏரில் பூட்டி உழவு செய்வதற்கு என்ன செய்வது என யோசித்தபோது தான்… மிரண்டு கிடந்த பெண்கள் அவனது யோசனையில் வர ஆரம்பித்தனர். என்ன சொன்னாலும் கேட்ட பெண்களின் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். அந்த சடைமுடியை இழுத்து ஏரின் நுனியில் கட்டினான். அவர்களது பின்னங்கழுத்தில் (புரடி) ஏரை சுமத்தி பெண்களைக் கொண்டே உழவு செய்ய ஆரம்பித்தான். அதுமட்டுமா? கம்பைக் கொண்டு அடித்து அவர்களை துரிதப்படுத்தினான். கழுத்து வலி தாங்காத பெண்கள் கதறினர். ஆனாலும் ஆதிமனிதன் விடவில்லை. அவர்கள் அழுதபடியே உழுதார்கள். ஆணை பார்த்து தொழுதார்கள்.

          இதை உங்களால் மனக்கண்ணில் யூகிக்க முடிகிறதா?... முடியவில்லை என்றால், ‘பழனி’ என்ற பழைய சினிமாவில் ஒரு காட்சி வரும். (என்னடா… தாத்தாச்சாரியார் சினிமாவை எல்லாம் ஆன்மீக தொடரில் சம்பந்தப்படுத்துகிறாரே… என எண்ணாதீர்கள். மக்களுக்கு பல உண்மைகளை சொல்லவேண்டி வரும்போது அவர்களுக்கு எது புரிகிறதோ அந்த வழியில் சொல்லிட வேண்டுமல்லவா?..)
          இனி அந்த சினிமா காட்சி… அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினையின் போது சிவாஜிக்கு கரடு முரடான கட்டாந்தரை தான் வாய்க்கும். அவருக்கோ அதை பண் படுத்த மாடுகள் வாங்க கூட முடியாத வறுமை நிலை. அப்போது ஏரில் தன் குடும்பப் பெண்களையே பூட்டி உழவு செய்வார். ஏரின் நுகத்தடி பெண்ணின் புரடியில் இருக்கும். சிவாஜி அந்தப் பெண்களை சாட்டையால் அடித்து ஏரை செலுத்துவார்.

          இப்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது அந்த சினிமாக் காட்சி. இதே கற்பணைக் காட்சி தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிஜக் காட்சியாக நடைபெற்றிருக்கிறது. கேசத்தை கண்டு பயந்தவனே பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான். பிறகு?...

          நாகரிகம் முளை விடுவதற்கு முன்பு மூளை இருந்தும் சிந்திக்கத் தெரியாத அறியாமை பொந்துக்குள் வாழ்ந்த மனிதன். .. பெண்களை ஏரில் கட்டி உழுத கொடுங்கதையை பார்த்தோம். இந்த காலகட்டம் தாண்டி… வேதம் தோன்ற முனைந்த காலத்தில் அவன் மீது கொஞ்சமாய் நாகரீக வெளிச்சம் கொட்டியிருந்தது. ஆனாலும்… பெண்ணின் மீதிருந்த பயம் மிரட்டலாய் மாறியிருந்தது.

          ஏற்கனவே பெண்களை பிசாசு, மிருகம் என கர்ண கொடூரமாய் வர்ணத்து பார்த்தவன் அவள் கர்ப்பவதியாய் இருப்பதை பார்த்தான். அடிவயிறு புடைத்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்ததை பார்த்த அவனுக்குள் ‘சரிதான் இவள் சாட்சாத் பிசாசுதான்… சிலநாள் முன் சப்பையாய் இருந்தாள். இப்போது திடீரென உப்பித் திரிகிறாளே’ என்ற தீர்மானம் ஆணுக்குள் பளிச்சிட்டது.

          இப்போது கல்லெடுக்கவில்லை. கம்பெடுக்கவில்லை. அக்னியை மூட்டினான்… அவள் அருகில் எரியவைத்தான், எதற்கு…? அவளுக்குள் இன்னொரு பிசாசு புகுந்து வீங்கியிருக்கிறது. அதை விரட்டதான் இந்த அக்னி சூட்டுக்கு பயந்து பிசாசு ஓட்டம் எடுக்கும் என நம்பினான். அதனால் பற்ற வைத்தான்.

          இதுவே வேதத்தில் ஜாதகர்மா என்று ஹோமமாக வடிவம் பெற்றது. முதன்முதலில் கர்ப்பிணியை ‘பிசாசுக்குள் பிசாசு’ என நினைத்து விரட்ட நெருப்பு பற்ற வைத்த மூடநம்பிக்கையை முழுதாக தத்தெடுத்துக் கொண்டது வேதம். வேதம் என்றால் பற்பல நிஷிகள் சேர்ந்து செய்த நெறிமுறைகள். கட்டுப்பாடுகள் தான் என்பதை இக்கட்டுரைத் தொடரின் முதலாம் அத்யாயத்திலேயே பார்த்தோம் அல்லவா? அப்படித்தான் இந்தப் பழக்கத்தையும் தன்னுள் துரித்துக் கொண்டது வேதம்.

          இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால்… இந்த ஜாதகர்மா என்ற ‘தீவைக்கும்’ பழக்கத்தை இன்றும் தங்கள் பிழைப்புக்கு பயன்படுத்திக் கொள்ளும் பிராமணர்கள்… கல்யாண வைபோகங்களில் ஜாதகர்மா என்றொரு ஹோமச்சடங்கை நடத்துகிறார்கள். இங்கே இதன் அர்த்தம் என்ன தெரியுமா? மணமகளாய் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளை பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகத் தான் இந்த சடங்கு.

          காட்டுக்கு நடுவே அன்றைய மனிதன் தீயின் மீது வைத்த மூடநம்பிக்கையை இன்னும் நவநாகரீக உலகத்தில் வாழும் மனிதன் அப்படியே பின்பற்றப் பார்க்கிறான்… என்றால்… அந்த வேதத்தீயின் வீச்சைப் பாருங்கள். பெண்களை இதுபோல் பயம் தரும் கோபம் தரும் விசித்திர ஐந்துவாக சித்தரித்தவன் மெல்ல மெல்ல தான் அவளது அழகை பருக ஆரம்பித்தான்.
         
இதையும் வேதம் எப்படித் தெரியுமா சொல்கிறது. ‘இந்த உலகம் ஆற்றுபடுவதற்கு (Relaxation) இயற்கையும் பெண்களும்தான் மூல காரணம். அவர்கள் இருவரிடமும்தான் உலகை சாந்தப்படுத்தும் சக்தி, அழகு என்ற ரூபத்தில் நிரம்பிக்கிடக்கிறது. அதனால்… அதனால்…
         
“புரந்திர் யோஷா ஜாயதாம்…” அப்படியென்றால்?... ‘தேவனே… பெண்களை எப்பொழுதும் அழகாகவே வைத்திருப்பாயாக. அப்போதுதான் உலகமும் வாழ்க்கையையும் அழகாக இருக்கும்.’ இது பிராமணர்கள் செய்ய வேண்டிய பிரார்த்தனைகளான வேதம் வகுத்தவற்றில் ஒன்று.  அதாவது… இது ‘Vedic Prayer’ என அழைக்கப்படும். இன்னின்ன வேண்டும் என தெய்வத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
         
“ஆஸ்யே எஜமானஸ்ய விரோ ஜாயதாம்…” நல்ல குணங்கள் கூடிய குழந்தைகள் பிறக்க வேண்டும். “சபாயோ யுவா ஜாயதாம்…” அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி சான்றோர்கள் சிந்தனையாளர்கள் நிரம்பிய சபையிலே மரியாதையுடன் திகழ வேண்டும். “நிகாமே நிகாமே பர்தன்யோ வர்றது…” நாங்கள் ஆணையிட்டவுடன் வானைவிட்டு மேகம் மழையாய் மண்ணில் இறங்க வேண்டும். அதாவது பெய்யெனச் சொன்னால் மழை பெய்ய வேண்டும்.
          இப்படிப்பட்ட வேண்டுதல்களில் முக்கியமான ஒன்றாகத் தான்… “பெண்கள் எப்போதும் அழகாகவே இருக்க வேண்டும். அவர்களால் உலகமும் அழகாகவே அமைந்திருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனையும். சரி… பெண்கள் காலம் முழுவதும் அழகாகவே இருந்து என்ன பண்ண போகிறார்கள்? வேதத்திடம் நாம் வினா தொடுத்தால் பதில் கொடுக்கிறது, இந்த ஸ்லோகம் மூலம்…
          “பத்னிஹீ பாரீனஷ்யஸ்ய ஏஸே பத்னியைவ அனுமதம் நர்வபதி…” பெண் என்பவள் அனுதினமும் அழகாக இருக்க வேண்டும் எவ்வளவு அழகுடையவளாக இருந்தாலும் அவள் வீட்டுக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். அவள் வீட்டின் அதிகாரி. அதாவது வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் செய்து கொண்டு… தன் கணவன் வெளியிடங்களுக்கு பிழைப்புக்காக செல்லும் நேரங்களில் வீட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தன் புனிதமான அழகை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே நேரம், கணவன் தன் செலவில் ஏதேனும் யாஹங்கள் ஹோமங்கள் நடத்தப் போகிறான் என்றால், அதற்கு மனைவியிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏனென்றால், யாகங்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வீட்டில் இருந்துதானே எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வீட்டு அதிகாரியான பெண்ணிடம் கேட்க வேண்டுமே.

          என வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்று விந்தை மனிதர்களால் நிரம்பியிருந்தது வேதம். ஒரு பக்கம் இப்படி பெண்ணை வீட்டுச் சிறைக்குள் வைக்கச் சொல்லும் வேதத்தின் இன்னொரு பக்கத்தில்… இன்று நாம் காணும் காட்சிகளைப் போன்று பெண்ணைப் பார்க்க முடிகிறது.

          எங்கே?... ஸ்த்ரி சம்ஸாதத்தில்… ஸ்த்ரி சம்ஸாதம் என்றால் நிறைய பெண்கள் ஓரிடத்தில் கூடியிருக்கிறார்கள். ஆமாம் அதாவது பெண்கள் மாநாடு. .. வேதத்தில் பெண்கள் மாநாடா?... உங்கள் பிரமிப்பு புரிகிறது.

          அந்த ஸ்த்ரி சம்ஸாதத்துக்குள் நாம் நுழைவதற்கு முன் பொதுவான சபாவைப் பற்றி பார்த்து விடுவோம்!

          ரிக் வேதத்தில் வருகின்ற ஸ்லோகங்கள் இவை.

          “நஸப சபாயத்த நபாது  செய்ஹ
           நஸா சபாயத்த விபாது செய்ஹ”

          அதாவது… எதையுமே எந்த விஷயத்தையுமே கூடிப்பேசி விவாதித்து இந்த முடிவெடுத்தால் நல்லது கெட்டதுகள் என்னென்ன ஏற்படும் என்பதை பலரின் கருத்துக்கு விட்டு பெரும்பாலும் என்ன சொல்கிறார்களோ? அதை முடிவாக கருதவேண்டும்.


          இன்று நமது பார்லிமென்ட் (Parliament) நடைமுறையில் உள்ள தத்துவத்தை ரிக் வேத சிந்தனையாளர்கள் ஆயிரங்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ரீங்கார மிட்டுள்ளார்கள்.
                                           to be continue...