Wednesday, September 20, 2017

ச.மு.க.அருள் நிலைய விண்ணப்பம்

எல்லாம் உடையவனுக்கு ச.மு.க.அருள் நிலைய விண்ணப்பம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

அருட்பெருஞ்ஜோதி இன்னும் சோதனை செய்து கொண்டு இருக்கிறது என் மகளின் துன்பம் தீரவில்லை. நீ உண்மை என்று நம்புகிறேன் எனது மகளை குணமாக்கு அருட்பெருஞ்ஜோதி அப்பா எனது மனம் நடுங்குகிறது. --- DrArul Nagalingam Erode.


அழுது நடுங்கிடும் தந்தையின் உயிரும்
….அணைத்து வளர்த்திட்ட மகளின்
பழுத்த உயிரும் உலகிடை நோய்பறிக்க
….பார்க்கவோ நின்மலரடி நின்று
தொழுத உயிரன்றோ அருட் ஜோதியன்
….திகழும் அருள்நிலைய அருளால்  
எழுந்திடுவாய் பூரண நலமுடன் இன்றே  
….அருள் நாகலிங்கம் மகளே.



Tuesday, September 19, 2017

வள்ளலார் வருவிக்க உற்ற தினம் - 194-ஆம் ஆண்டு



அன்புடையீர் வந்தனம்!

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திட அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே…(திருவருட்பா-5485)

உலகியலர்கள் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை அடைதல் வேண்டும் என்று இறைவன் ஆசைப்பட்டான். அந்த ஆசையினை பூர்த்தி செய்யவதற்காக இறைவன் இவ்வுலகிலே வள்ளற்பெருமானை அனுப்பி வைத்தார். வள்ளற்பெருமானால் இவ்வுலகிடை மக்கள் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.  

வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தை, அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது… “கருணீககுல திலகவதியாகிய சின்னம்மையார் கலியுகம் 4925-ல் நிகழும், சுபானு வருஷம் புரட்டாசி மாதம் 21-ந் தேதி (1823-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பூர்வபஷம் துவிதியை சித்திரை நட்சத்திரம் நாலாம் பாதம் உதயாதி 29 ¾ க்குச் சிவயோகியர் அருளிய வரத்தின்படியே சடாந்த சமரச சுத்த சன்மார்க்க ஞானாசாரியராய் விளங்க வேண்டிய ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தனர். அஞ்ஞான இருள் அகற்றவந்த ஞான சூரியனாய்த் திகழ்ந்து சத்துவகுண மேலிட்ட சைவக்குழந்தை பொலிவுற்று வளர்ந்து வந்து “இராமலிங்கம்” என்னும் பிள்ளைத் திருநாமம் சூட்டப்பெற்றது…”

          வள்ளற்பெருமான் வருவிக்க உற்ற தினத்தை தமிழ் மாத கணக்கின்படி காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. அவ்வகையில் 194-ஆம் ஆண்டு தினத்தை பொற்றடை வருடம் புரட்டாசி மாதம் 06-ஆம் நாள் (22-09-2017) வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் ச.மு.க. அருள் நிலையம் கொண்டாட இருக்கின்றது.

          அவ்வமயம் சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் தங்களது குடும்பத்துடன் அருள் நிலையம் வந்திருந்து அருளாளரின் வருவிக்கவுற்ற தின விழாவில் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.  


Sunday, September 17, 2017

இந்து மதம் எங்கே போகின்றது? - 13




காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் செப்டம்பர் – 2017 ஆம் மாதம் வெளியானவை;
 



இந்து மதம் எங்கே போகின்றது?
தொடர் – 13
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)

             “க்ருப்ணா மிதே சுப்ரஜா அஸ்த்வயா மயாபத்ய ஜலதஷ்டிம் யதாஸஹா” நீ கிழவியான பிறகுகூட உனக்கு இவன்தான் துணை என்கின்றது வேதம். பொதுவாக திருமணம் இப்படி நடந்திருக்கின்றது. வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளத்து திருமணம் எப்படி நடந்தது? ரிக் வேதத்தில் 10-ஆவது மண்டலத்தில் முதல் திருமணம் பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

          சூர்யா என்கிற உஷஸ் என்பவள் சோமராஜனை காதலிக்கிறாள். அதாவது சந்திரனை காதலிக்கிறாள். அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால், இதை தன் அப்பனிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக்கொண்டிருக்கின்றாள். இந்த நிலையில்தான் சூர்யாவின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டாள். எப்படி? உலகெங்கும் உள்ள ராஜாக்களுக்கு அழைப்பு விடுக்கிறான். அவர்களுக்கு ஒரு பந்தயம்.
         
          அதாவது சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ராஜாக்கள் தங்களது ரதங்களோடு வந்துவிட வேண்டும். அங்கே அனைத்து ராஜாக்களுக்கும் ரதப்பந்தயம் நடக்கும். குறிப்பிட்ட தூரத்திலிலுள்ள இலக்கை எந்த ராஜாவின் ரதம் முதலில் அடைகிறதோ அவருக்கு சூர்யா மணப்பெண்ணாக கிடைப்பாள். இப்படியாக அனைத்து ராஜாக்களும் அந்த பந்தயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். சூர்யாவை அடைந்தே தீருவது என்ற ஆசையோடு ஒவ்வொரு ராஜாவும் தங்கள் ரதங்களோடு வந்திருந்தனர்.

          அந்த இடமே வண்ணமயமாக இருந்தது. பல தேசத்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்கள் அலங்காரமாய் அணி வகுத்திருந்தன. அந்தக் கூட்டத்தில் சூர்யாவை காதலித்துக் கொண்டிருக்கிற சோமராஜாவும் தன் ரதத்தோடு வந்திருந்தார். சூர்யாவுக்குள் பதட்டம் பரவிக்கிடக்கிறது. நமது நாயகன் பந்தயத்தில் முந்தி வந்து நம்மை கைப்பிடிப்பானா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள் சூர்யா.

          பந்தயம் ஆரம்பித்தது. ராஜ முரசு அறையப்பட்டதும் அனைத்து ரதங்களும் தயாராயின. சூர்யாவை பரிசுப்பொருளாக அடைய வேண்டும் என்ற ஆசையில் ராஜாக்கள் தங்கள் ரதங்களில் கட்டப்பட்டிருந்த குதிரைகளை முடுக்க ஆரம்பித்தனர்.

          இவர்களுக்கிடையே அஸ்வதி ராஜாவும் அழகான சூர்யா மேல் ஆசைப்பட்டான். ஏன் அவன் ஆசைப்படக்கூடாது என்கிறீர்களா? அவன் ரதத்தில் கட்டப்பட்டிருந்தவை குதிரைகள் அல்ல கழுதைகள். குதிரைகள் ரதங்களோடு தனது கழுதை ரதத்தையும் வேக வேகமாக செலுத்தினான் அஸ்வதி ராஜா.

          சூர்யா… தன் அரன்மனை மாடத்திலிருந்து இந்த பந்தயத்தை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தாள். தன் சோமராஜா முந்த வேண்டும் என்று அவள் தியானித்துக்கொண்டிருக்க…

          யாருமே எதிர்பாரா வகையில்… சூர்யாவை பரிசாக பெறுவதற்காக நடந்த அந்த ரதம் பந்தயத்திலே… பல குதிரை ரதங்களை பின்னால் தள்ளிவிட்டு வெகு வேகமாக முன்னேறியது கழுதைகள் பூட்டப்பட்ட ரதம். ஆமாம். பல… ‘குதிரை’ ராஜாக்களை தோற்கடித்து அஸ்வதி ராஜா முதலிடத்திலே வந்துவிட்டான்.

          பந்தயக்களமே ஸ்தம்பித்து விட்டது. இவ்வளவு குதிரை பூட்டிய ரதங்களை எப்படி கழுதை பூட்டிய ரதம் முந்தி வந்தது என எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். அதே நேரம்… பந்தயத்தை பார்த்துக்கொண்டே இருந்த சூர்யா… அஸ்வதி ராஜாவின் வெற்றியைப் பார்த்து திகைத்து விட்டாள். அவள் பிரேமித்த சோமராஜா தோற்றுப் போனதால்… அவனை கைப்பிடிக்க முடியாதென்று அவளுக்கு உறுதியாக பட்டுவிட்டது.

          அடுத்த சணத்திலிருந்தே அஸ்வதிராஜாவுக்கு சூர்யாவை திருமணம் செய்ய ஏற்பாடுகள் மளமளவென ஆரம்பித்தன. தான் பிரேமித்த சோமராஜா தன் கைநழுவி போய்விட்டானே என சூர்யாவின் கண்கள் சமுத்திரமாகின. கன்னப் பிரதேசங்கள் உப்பளமாயின.

          இந்த நிலையில்… அஸ்வதிராஜா ஜெயித்தது போலவே மறுபடியும் யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியம் சம்பவித்தது. அஸ்வதிராஜாவே சூர்யாவை அழைத்தான். “தேவி… சோமராஜா மீதான உன் பிரேமை எனக்குத் தெரியும். பந்தயத்தில் கலந்துக்கொள்ளத்தான் நான் வந்தேன். நானே எதிர்பார்க்காமல் உனது மணாளன் ஆகிவிட்டேன். இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. நீ உன் இஷ்டபடி சோமராஜாவையே திருமணம் செய்து கொள். எனக்கு இதில் பூரண இஷ்டம்…” என யாருமே எதிர்பாராத வகையில் சூர்யா சோமராஜாவை ஜோடி சேர்த்து வைத்தான் அஸ்வதிராஜா.

          இப்படித்தான் வேதத்தின் முதல் திருமணமே… மிக கோலாகலமாக நடந்தது. வேதப்படி… பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது… சீதனம் ரொம்ப முக்கியமானது. இனி அவளுக்கு எதை செய்யப் போகிறோம்… அதனால் மொத்தமாக அவளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிடு… என்கிறது வேதம்.

          அதனால்...பெண்ணுக்காக ஆபரணங்கள், வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் என பல விலை மதிப்பற்ற பொருள்களை பெண்ணுடன் சேர்த்து அனுப்புவார்கள். சீதனம் எவ்வளவு இருக்கும் என்பதை யூகிப்பதற்காக ஒரு வேத மந்த்ரம் பாருங்கள்…

          “ஏ… கந்தர்வாஹா அப்சரஸ்ய தேவிஹி
           ஏஷீ விருஷ்ஹேசு ஆஷதே ஷிவாஸ்தே…”

          ஏ… தேவதைகளே… கந்தவர்களே… எங்கள் பெண்ணை திருமணம் செய்து அனுப்புகிறோம். அவளுக்காக சீதனங்களை வண்டி வண்டியாக அனுப்புகிறோம். அவை அனைத்தும் அவளோடு பத்திரமாக போய்ச்சேர வேண்டூம். எல்லாமே விலை மதிப்பற்ற பொருட்கள் என்பதால் பேய்கள், பிசாசுகள் அவற்றை அண்டாமல் அபகரித்துச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்… என வேண்டுகிறது அந்த வேத மந்த்ரம்.

          சீதனம் என்றால் நகைகள். வாசனை வஸ்துக்கள், போன்ற ஜடப்பொருள்கள் மட்டும்தானா? இன்னொரு புதிய சீதனத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது வேதம். அதன் பெயர் அனுதேயி. அனுதேயி என்றால் என்ன பொருள்? அதன் பயன் என்ன? நீங்கள் கேட்பது புரிகின்றது.

          அனுதேயி என்றால் ஜடப்பொருள் அல்ல. அது இயங்கும் உயிர்ப்பொருள். மணப்பெண் மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லும்போது கூடவே இந்த உயிர்ப் பொருளும் செல்லும். அவள் சொன்ன வேலைகளைச் செய்யும். அப்படி என்ன சீதனம் அது என யோசிக்கிறீர்களா?...

          அதாவது அனுதேயி என்றால்… பின்தொடர்ந்து வந்து சொன்னதை செய்பவர். அதாவது இங்கே இன்னொரு பெண் ஆமாம்… பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது. முதல் மணமகளான சூர்யாவுக்கு… இதுபோல ரைபி என்னும் பெண்ணை சீதனமாகக் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். மணப்பெண்ணோடு தோழி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படும் இந்த சீதனப் பெண்… தொடர்ந்து மணப்பெண்ணின் புகுந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமா…? அவர்களுக்கென்று தனி வாழ்க்கை அமையாதா…? அதாவது அவளுக்கு திருமணம் நடக்காதா…? என்றெல்லாம் அந்த சீதனப்பெண் அனுதேயியை மையமாக வைத்து நாம் கவலைகளை கேள்விகளாக எழுப்பினால்… அதற்கு வேதம் பதில் சொல்கிறது, ‘என்ன சொல்வது?... அவளைப் பற்றி ஏன் யோசிக்கிறீர்கள்…?’

          இதெல்லாம் திருமணம் முடிந்தபிறகு நடக்கும் சமாச்சாரங்கள். இங்கே இன்னொரு முக்யமான திருமணத்துக்கு முதல்நாள் நடக்கக்கூடிய ஒரு விஷயத்தை விலாவாரியாக சொல்ல வேண்டும். அந்த விஷயத்துக்கு போவதற்கு முன் விசேஷமான இந்த மந்த்ரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

          “மாதாமுத்ராணாம் துஹிதா பசூனாம்
           ஸ்வஸ் ஆதித்யானாம் அமிர்த ஸ்யனாபிஹி
           ப்ரனுபோசம் சிதுஹே ஜனாயோ
           மாகா பனாகாம் அதிது விசிஷ்ட…”

          நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன். ஏன் திருமணம் என்னும் புனிதமான விஷயத்தை இப்படி ரத்தக்களறியாக்குகிறீர்கள். பாவம் அவையெல்லாம். அவற்றை ஏன் கொன்று குவிக்கிறீர்கள். அவற்றை நாம் தாயாக எண்ணி புனிதமாக வழிபட வேண்டும். அதை விட்டுவிட்டு அவற்றின்மேல் வாள் வைப்பதா? நிறுத்துங்கள்.

          ஏன் திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகின்றான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.

          “விவாஹே கெளஹீ… க்ருஹே கெளஹீ..”

          திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்… வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம்தான். மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல்நாள் நிகழ்ச்சியில் மதுவர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும்… மறுநாள் திருமணச் சடங்குகளிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

          பக்கத்தில் ஒரு கிராமத்தில் (வீட்டில்) திருமணம் நடக்கிறது. யாகங்களும் மந்த்ர ஒலிகளும் பூமியிலிருந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு புறப்படுகின்றன. திரவியங்களின் வாசனை நாசிக்குள் நாட்டியமாடுகின்றது. இப்படிப்பட்ட சுகந்தமான சூழ்நிலையில் அந்தக் கிரகத்தின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

          ‘என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?’

          உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல்யாணம். ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள். பாவம்… இன்று கன்றுகுட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடாயதே… (அதாவது மடமடன்னு கேட்கிறது) என்கிறான் மற்றவன்.

          இது ஒரு வேதக்கதை அதாவது கல்யாண காரியங்களிலே கன்றுகுட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள். ஆனால்… இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங்களை ஓதுகிறார்கள். ஆனால்… மதுவர்க்கத்தில் கோமாமிசத்துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.

          அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி வெட்டச்சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே!

          இதேபோல… ‘கெளஹீ… கெளஹீ…’ என சொல்லிக்கொண்டே இன்னொரு கல்யாண சடங்கையும் நடத்துகின்றார்கள். கல்யாண தினத்தன்று கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்திரத்தை சொல்கிறார்கள். அந்த நேரத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

          ஏன் இந்த முரண்பாடு? காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக்கொண்ட பிராமணர்கள்… மந்திரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கின்றார்கள். இது பிராமணர்களின் கல்யாணங்களில் மட்டுமல்ல… மற்ற ஜாதியினரின் கல்யாணங்களிலும் இந்த பொருந்தா மந்திரங்கள்தான் போற்றப்படுகின்றன. மாட்டு மாமிசத்தின் தின்பதற்கும், தேங்காய் உருட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?
         
          இதற்கான மேலும் சில மந்திர உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம். இப்படியாக கல்யாணம் நடக்கிறது. பெண்ணானவன் புருஷன் வீட்டில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்.

‘பரித்வா கிர்வனோ க்ரஹ
 இமாபவந்து விஷ்வதஹா
 வ்ருத்தாயும் அனில்ருத்தயா
 ஜீஷ்டா பவந்து ஜீஷ்டாயா…’


– (தொடரும்…)