Monday, December 29, 2014

அனாதி - சன்மார்க்கக் கதை

ன்மார்க்கக் கதை

னாதி

மழை லேசாக பெய்துக்கொண்டே இருந்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிக்கைவேறு கந்தசாமிக்கு கவலையை அளித்தது. ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஜனவரி முதல் தேதி அன்று வருடாவருடம் கந்தசாமி தனது நண்பன் சிவாவுடன் வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் நடைபயணம் சென்று வள்ளலாருக்கு வாழ்த்துச் சொல்வது வழக்கமாகும்.

ஆனால் இந்த 2015 ஆம் ஆண்டு பயணத்தை மழை வந்து கெடுத்து விடுமோ என அச்சம் மேலிட்டது. நல்ல வேளை அப்படியேது இன்றி அன்றைய தினம் மழை பெய்யவில்லை. வழக்கம் போல் இருவரும் நடைபயணம் மேற்கொண்டனர்.

"டேய், கந்தசாமி, அங்குப் பார்த்தாயா! ஒரு குழந்தை அழுக்காடையில் பிறரிடம் பிச்சைக்கேட்டு கையேந்துவதை பார்க்கும்போது, நாம் மட்டும் சுகமாக வாழ்வது சன்மார்க்கத்துக்கு உகந்ததா?"

"சிவா... அக்குழந்தை ஒரு அனாதையாக இருக்க வேண்டும். அதனால்தான் அக்குழந்தை இப்படி நடந்துக்கொள்கின்றது என நினைக்கின்றேன்."

"அனாதை என்றால் என்னவென்று சொல்ல முடியுமா?"

"தனக்கென்று பெற்றோர்களோ, சொந்தங்களோ, தெரிந்தவர்களோ இப்படி எந்த உறவும் இன்றி தனித்து விடப்பட்டவர்களை அனாதை என்று கூறுகின்றோம். இது நீ அறியாததா?"

"அப்படியென்றால் கடவுள்கூட அனாதை என்கிறார் வள்ளலார். எனவே அவரும் இப்படித்தான் கையேந்திக்கொண்டிருப்பாரோ?"

"சிவா... கடவுளுக்கு கை கால்கள் எதுவும் இல்லை, அதனால் அவர் கையேந்தமாட்டார். ஆனாலும் அவர் அனாதைதான்."

"பெற்றோரால் கைவிடப்பட்ட அனாதையா... கடவுள்!?"

"இல்லை, இல்லை... தனக்கென்று பெற்றோரே இல்லாத அனாதையே கடவுள்!"



"அவர் பெற்றோரே இல்லாத அனாதை என்று உனக்கெப்படி தெரியும்?"

"கடவுள் மட்டுமல்ல.... நாம் இருக்கின்ற இந்த ஆகாசம், நாம் சுவாசிக்கின்ற இந்தக் காற்று, கடவுளிடம் இருக்கின்ற அருட்சத்தியென்ற இயற்கை ஆற்றல் போன்றவையும் அனாதைகளே என்று வள்ளலார் கூறுவார்"

"கந்தசாமி.... நானும் வள்ளலாரின் இந்தக் கருத்தினை படித்திருக்கின்றேன். அதில், "ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி." என்று உரைநடை நூலில் பக்கம் 353 - ல் எழுதியிருப்பார் வள்ளலார். சரியா?"

"சரிதான்..."

"என்ன சரி?.... ஆகாசம் அனாதி என்று எழுதிவிட்டு அதற்குக் காரணம் கடவுள் என்றல்லவா எழுதியிருக்கின்றார். ஆகாசத்திற்கு காரணம் கடவுள் என்றால், ஆகாசத்தை உருவாக்கியது கடவுள் என்றல்லவா பொருள் உண்டாகின்றது. பின்னர் எப்படி ஆகாசம் அனாதையாக இருக்க முடியும்? எனவே ஆகாசத்தில் உள்ள காற்றும் அனாதி இல்லை, கடவுளிடத்தில் உள்ள அருட்சத்தியும் அனாதி இல்லை என்றே தோன்றுகின்றது."

சிவாவின் இந்த உரையாடலால், கந்தசாமி குழம்பியே போனான். எது ஒன்றிக்கு காரணம் உள்ளதோ அது காரியப்பொருளாகிவிடுகின்றது. காரியப்பொருள் எதுவும் அனாதை அல்ல. ஏனெனில் அதற்கு காரணப்பொருள் வேறொன்று இருக்கின்றது. காரணம் இல்லையேல் காரியம் இல்லை. இவைப்போன்ற சிந்தனைகள் கந்தசாமியை மலைக்க வைத்தன. எனினும் வள்ளலார் கூறியதலில் தவறிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும் அவனிடம் இருந்தது.

"சிவா... நீ கூறுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதன் உண்மைப் பொருளை ஒரு ஞானியால்தான் விளங்கிக்கொள்ள முடியும் போல் தெரிகின்றது. எனவே இதன் பொருள் வெளிப்படும்வரை நாம் பொறுத்திருப்போம்."

"கந்தசாமி... இதுவொன்றும் ஞானிகளுக்காக எழுதியது அல்ல. நம்மைப்போன்றவர்கள் தெரிந்துக்கொள்ளத்தான் வள்ளலார் எழுதியிருக்கின்றார். அப்படியிருக்க இதில் ஏன் இப்படி ஒரு குழப்பம்! ஒருவேளை அச்சேற்றத்தில் தவறு நடந்திருக்குமோ? தெரியவில்லை. வள்ளலாரின் கையெழுத்துப் பிரதியை சரிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும். அதற்கு வாய்ப்பிருக்கின்றதா எனத் தெரியவில்லை."

இப்படியே பேசிக்கொண்டு இருவரும் கூட்டத்தோடு மேட்டுக்குப்பம் வந்தடைந்தார்கள். அங்கு சென்னையைச் சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சித்திவாளாக திருக்கதவு அருகில் தீபாராதனை நடத்தினார். அதனை கண்டுகளித்து இருவரும் வீடு திரும்பினர்.

##############


(என்ன அன்பர்களே, இந்த "அனாதி" கேள்விற்கு உங்களிடம் பதில் இருக்கின்றதா? இருந்தால் இங்கு தெரிவிக்கலாமே.) 

Friday, December 19, 2014

"பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழா

"பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழா

ன்புடையீர் வந்தனம்!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு-சமரஸபஜனை ச.மு.கந்தசாமி ஐயா இயற்றிய "பிரபந்தத்திரட்டு" நூல் வெளியீட்டு விழாவிற்கு தங்களையெல்லாம் அன்புடன் அழைக்கின்றோம்.

வருகின்ற மாதப்பூசம் 06-01-2015 அன்று வடலூரில் ஞானசபைக்கு அருகில் உள்ள "கருணீகர் இல்லத்தில்" நூல் வெளியீட்டு விழா மதியம் 03.00 மணியிலிருந்து 06.00 மணிவரை, திருவருட்பிரகாச வள்ளலார் தலைமையில் நடைபெற உள்ளது.

.மு.., அவர்களின் வழிவந்த திரு..திருநாவுக்கரசு அவர்கள் பதிப்பில் வெளிவரும் இந்நூலை முனைவர் அ.நலங்கிள்ளி அவர்கள் வெளியிடுகின்றார். இந்நூலின் முதல் பிரதியினை காரணப்பட்டு K.V.S.இராமலிங்கம் அவர்கள் பெறுகின்றார்கள்.

இவ்விழாவில் பல்வேறு சன்மார்க்கிகள் சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்ற இருக்கின்றார்கள். ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் அமைந்துள்ள இந்நூலின் விலை
` 350/- க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டு விழா அன்று இந்நூலை அன்பர்களுக்கு ` 200/- க்கு .மு.., அறக்கட்டளை வழங்க முன்வந்துள்ளது.

இந்நூலிற்காக முன்பதிவு செய்தவர்கள், தங்களது பெயர்களைக்கூறி இவ்வெளியீட்டு விழாவில் நூலினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்விழாவிற்கு வர இயலாதவர்களுக்கு நூல் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.


இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு தாங்கள் அனைவரும் வடலூர் வந்து கலந்துக்கொண்டு, அன்றைய தினம் நிகழும் மாதப்பூச ஜோதி தரிசனத்தையும் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.





Wednesday, December 17, 2014

வாடிய மழலைகள்!

                                                            வாடிய மழலைகள்!




                                          துளிரும் மொட்டுக்களை அழித்த
                                           துப்பாக்கி குண்டினை கேட்கிறேன்
                                           தவழ்ந்த கொடியில் புகுந்து
                                           துளைத்து சுகமென்ன கண்டாய்?
                                          உளிபட்ட கல்லும் அழகிய
                                           உருவமாகும், தலிபானின் கைப்பட்டு
                                          உயிரும் மண்ணாகும், இனிகருணை
                                          ஒன்றே உயிரெலாம் நிரையட்டும்!
                                          வளிமண்டல மெலாம் வாழ்த்தட்டும்
                                          விடைபெற்ற எங்கள் மழலைகளை!
                                          வலியில்லா சமுதாயம் பாகிஸ்தானில்
                                          வளரட்டும் எங்கும் அருள்
                                          ஒளியே நீக்கமற நிரைந்தோங்கி
                                          இவ்வுலகை நட்புடன் காக்கட்டும்!
                                        அருளே நம்பெயர் அருளேநம்
                                          உயிரென்ற ஆன்மநேயம் ஓங்கட்டுமே!


                                                         அருட்பெருஞ்ஜோதி அடிமை
                                                          தி.ம.இராமலிங்கம் - கடலூர்
                                                                               9445545475

Tuesday, December 16, 2014

"ஆடு" - வணங்கும் காட்சி

                                                  "ஆடு" - வணங்கும் காட்சி



அன்பர்களே!

சிறிது நாட்களுக்கு முன் சித்திவளாகத்தில் "ஆடு" ஒன்று நுழைந்து வள்ளல் பெருமானை வணங்கிவிட்டு சென்ற காட்சியை கண்டு களியுங்கள்!!

"ஆட்டு வித்தால் ஆடுகின்றேன்" என்று சொல்கின்றதா அல்லது
"ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்" என்று நமக்கு அறிவுரை புகல்கின்றதா.... தெரியவில்லை....

அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் - கடலூர்
9445545475

Monday, December 15, 2014

இறை சோதனை



றை சோதனை


வாழ்வு முடிந்தது வென்றவர் வாழ்க!
வீழ்ந்து விடாதவர் வீரமும் வாழ்க!
நன்றி நவின்றிட்ட நல்லவர் வாழ்க!
என்னை வளர்த்திட்ட என்னவர் வாழ்க!

சுவாசங்கள் நின்றது சுகமெலாம் சூழ்க!
நிவாரண மில்லை நீர்த்துளி சூழ்க!
ஆழ்துயில் கொண்டதால் அமைதியே சூழ்க!
தாழ்கொண்ட கண்களில் தயவொளி சூழ்க!

ஊழ்வினை விதியெனும் உறவுகள் வீழ்க!
ஏழ்பிறப் பெடுக்கும் ஏந்தலும் வீழ்க!
நாயகன் பயந்திடும் நரகமும் வீழ்க!
ஆயகலை களும் அவர்தாள் வீழ்க!

பிறப்புறும் நிகழ்வும் புண்ணிய மில்லை!
இறப்புறும் நிகழ்வும் இனியது மில்லை!
இடைப்பட்ட நாட்களில் இறைவனு மில்லை!
விடைபெற்றுக் கொண்டவர் விண்டது மில்லை!

பிறந்தவர் இறைவனை பார்க்கவு மில்லை!
இறந்தவர் இறைவனை அடையவு மில்லை!
புண்ணியன் கணக்குகள் புரியவு மில்லை!
மண்ணினில் மனிதர்கள் மறக்கவு மில்லை!

மதங்களும் பூமியில் மரணிக்க வில்லை!
அதனால் இறைவன் அருளுவ தில்லை!
தலைவனின் தருமம் தவறிய தில்லை!
வலையெனும் மாயையை விட்டவ ரில்லை!

இலையுதிர் மரங்களும் அழுதிட வில்லை!
கலையுறும் கற்களும் கலங்கிட வில்லை!
உறவுறும் நினைவுகள் உறங்கிட வில்லை!
மறதியைப் போலொரு மாமருந் தில்லை!

வந்தனம் புகன்ற வாய்மொழி எங்கே?
சந்தனம் தடவிய சொந்தங்கள் எங்கே?
கருணைக் கொண்ட கண்ணொளி எங்கே?
நருமணம் பூசிய நாயகன் எங்கே?

திருமணம் புரிந்த தருமனும் எங்கே?
குருவென வணங்கிய குணங்களும் எங்கே?
என்னுடல் தழுவிய என்னவன் எங்கே?
தன்னையே எனக்குத் தந்தவன் எங்கே?

கன்னங்கள் வருடிடும் கைகளும் எங்கே?
என்மடி சுவைத்திடும் உதடுகள் எங்கே?
உச்சியை முகர்ந்திட்ட உத்தமன் எங்கே?
எச்சிலை உண்டிட்ட அச்சிலை எங்கே?

கண்ணென வணங்கிய கால்களும் எங்கே?
உண்டு உறங்கிய உறவோன் எங்கே?
மோகம் கொண்டிட்ட மன்னவன் எங்கே?
தேகம் புதையுண்ட தடங்களும் எங்கே?

மரணமிலா தொரு மார்க்கமும் எங்கே?
சரணம டைந்தேன் சற்குரு எங்கே?
ஜீவ காருண்ய ஜீவனும் எங்கே?
பாவ புண்ணியம் பகர்ந்தவர் எங்கே?

செத்தாரை எழுப்பிடும் சித்தனும் வருக!
நித்திரை யாளரை நிறுத்திட வருக!
மாண்டவர் எழுந்திட மருந்தோடு வருக!
ஆண்டவர் கட்டளை ஆமென்று வருக!

மரணம் தவிர்த்த மன்னவன் வருக!
பரமா காச பரவொளி வருக!
அருட்பெருஞ் ஜோதி அளித்திட வருக!
பருஉடம்பி னுள்உயிர் புகுத்திட வருக!

தனிப்பெருங் கருணை தலைவன் வருக!
பனித்துளிபோல் துயர் போக்கவே வருக!
சித்தெல்லாம் செய்யும் சித்தன் வருக!
சுத்த சன்மார்க்க சுகந்தர வருக!

அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி..இராமலிங்கம் - கடலூர்.

9445545475