Monday, February 21, 2022

வள்ளலாரின் புதிய மார்க்கம்

 

அருட்பெருஞ்ஜோதி                                              அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                       அருட்பெருஞ்ஜோதி

                                     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

                                      வள்ளலாரின் புதிய மார்க்கம்

       பல்லாயிரம் கணக்கான இவ்வுலக உயிர்களிடையே மனித உயிர்கள் மட்டுமே இறைவனை உணரத்தொடங்கி, அவ்விறைவனை அடைய பல்வேறு மார்க்கங்களையும் உருவாக்கி அதன் வழியே நடைபயின்று வருகின்ற உயிரினமாகும். அவ்வகையில் இவ்வுலகில் இந்திய நிலப்பரப்பில் தென் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தமிழனால் ஒரு புதிய மார்க்கம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற இரா.இராமலிங்கம் அவர்களாள் தோற்றுவிக்கப்பட்ட அப்புதிய மார்க்கத்திற்கு அவரே பெயரும் வைக்கின்றார். அவரின் புதிய மார்க்கத்தின் பெயர் சமரச சுத்த சன்மார்க்கம்என்பதாகும்.

 சன்மார்க்கம் என்ற மார்க்கம் புதியது அல்ல. ஆதிமுதல் வழங்கி வருகின்ற சைவ சமயத்தில் சன்மார்க்கமும் அடக்கம். அந்த சைவ சமய சன்மார்க்கத்தின் அடிதொட்டும் ஆனால் அதிலிருந்து வேறுபட்டும் ஓர் புதிய மார்க்கத்தை வள்ளலார் கண்டெடுத்தார். தற்போதுள்ள அனைத்து உலக மார்க்கங்களும் மதம்என்கின்ற பெயரில் இயங்கி வருகின்றன. ஆனால் வள்ளலார் கண்டெடுத்த புதிய மார்க்கம் மட்டுமே மதம்என்கின்ற கொடூர சொல்லில் உட்புகாமல் மார்க்கம்என்கின்ற பெயரிலேயே இயங்குவதை நாம் காண்கின்றோம். இதற்கு காரணம் இப்புதிய மார்க்கத்தின் முக்கிய கொள்கையே மத எதிர்ப்புதான். எனினும் அனைத்து மத மார்க்கங்களும் எனது சமரச சுத்த சன்மார்க்கத்தில் அடக்கம் என கூறுகின்றார் வள்ளலார்.

         ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே.             (திருவருட்பா-5527)

 சன்மார்க்கம் இரண்டு வகைப்படும், வள்ளலாருக்குப் பிறகு அது மூன்றுவகையாக உள்ளது.

         1. சமய சன்மார்க்கம்.

2. மத சன்மார்க்கம்.

3. சமரச சுத்த சன்மார்க்கம்.

 வள்ளலலாருக்கு முன்புவரை சமரச சுத்த சன்மார்க்கம் என்ற மார்க்கம் இல்லை. இந்த சமரச சுத்த சன்மார்க்கம் என்ற தனி மார்க்கத்தை இறைவன் அறிவிக்க அதை அப்படியே இறைவன் முன்னிலையிலேயே அரங்கேற்றுகிறார் வள்ளலார்.

 தன் முன் அரங் கேற்றெனவே தான் உரைத்தான்” (திருவருட்பா-1251)

இவ்வாறு வள்ளலார் அரங்கேற்றிய சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சமயத்தின் நான்கு மார்க்கங்களில் நான்காவது மார்க்கத்தில் இருந்து தோன்றியது.  

சைவ சமயத்தில், மார்க்கம் என்பது நான்கு வகைப்படும், அவை:-

         1. தாச மார்க்கம்

2. சற்புத்திர மார்க்கம்

3. சக மார்க்கம்

4. சன்மார்க்கம்

 முதல் மூன்று நமக்கு தேவையற்றதாக உள்ளதால், நான்காவதாக உள்ள சன்மார்க்கத்தைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.

சத்மார்க்கம் (உண்மை துவாரம் / வழி) என்பதே சன்மார்க்கம் என்று மருவியது என்க. சத்து என்னும் பொருளின் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கமே சன்மார்க்கம். எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞான சித்தியை பெறுதல்,

 "நெல்லை விளைவித்தான்" என்பதன் பொருள், நிலத்தை சீர் செய்து, உரமிட்டு, உழுதல் தொடங்கி, அரிசியை அண்ணமாக்கி அனுபவிக்கும் காலம் வரை அச்சொல்லில் அடங்கியிருப்பது போன்று,

 சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருள் எனக் கொள்க.

 நாம் தற்போது சன்மார்க்க வகைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 சன்மார்க்கம் மூன்று வகைப்படும், அவை :-

 1. சமய சன்மார்க்கம்

2. மத சன்மார்க்கம்

3. சமரச சுத்த சன்மார்க்கம்

 1. சமய சன்மார்க்கம் என்பது,  சத்துவகுணத்தைச் சார்ந்தது விளங்குவது. அதாவது,

 # சத்போதம் - உண்மையான அறிவு / ஞானம் / போதனை - விளக்கம்

# சத்கர்மம் - உண்மையான ஒழுங்கு / சீர் / முறைமை

# சத்சங்கம் - உண்மையான கூட்டம் / கழகம்

# சத்காலம் - உண்மையான நேரம் / பொழுது

# சத்விசாரம் - உண்மையான ஆராய்ச்சி / சிந்தனை / எண்ணம் / யோசனை

# சத்பாத்திரம் - உண்மையான உறுப்பினர் / ஒருமையுள் ஒன்றிவிடும் நபர்

# சத்ஜனம் - உண்மையான மக்கள் / பிறப்புகள்

# சத்செய்கை - உண்மையான வெளிப்பாடு

 மேற்கண்ட எட்டு வகைகளும் சத்துவ குணத்தை சார்ந்தது,

 # கொல்லாமை

# பொறுமை

# சாந்தம்

# அடக்கம்

# இந்திரிய நிக்கிரகம் - (ஐம் பொறிகளையும் அடக்கி ஆளுதல்)

# ஜீவகாருண்யம்

மேற்கண்ட ஆறு வகைகளும் சத்துவ குணத்தின் இயல்பாகும் / குணமாகும். இவ்வகை உண்மையைக் கொண்டு சத்துவகுணத்தின் இயல்புகளை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்.

சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்

2. புத்திரனாகப் பாவித்தல்

3. சிநேகிதனைப் போலப் பாவித்தல்

4. தன்னைப்போலப் பாவித்தல்

இது ஜீவ நியாயமாகும்.


2. மத சன்மார்க்கம் என்பதுநிர்க்குண லட்சியம் செய்வதாகும்.

 நிர்குணம் என்பது யாதெனில், மேற்படி சமய சன்மார்க்கத்தின் எண் குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று அதிலிருந்து மேலேறி லட்சியானுபவம் பெறுதல் ஆகும். 

 லட்சியம் / லட்சியானுபவம் யாதெனில்,

 # சோகம்

# சிவோகம்

# தத்வமசி

# சிவத்துவமசி

 என்னும் மேற்படியான வாக்கியத்தில் அமைந்த முக்கிய அனுபவமாகும்.

 முக்கிய அனுபவம் என்பது, மத சன்மார்க்கத்தின் / நிற்குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

 1. தான் கடவுளுக்கு அடிமையாதல்

2. தான் கடவுளுக்கு புத்திரனாதல்

3. தான் கடவுளுக்கு சிநேகனாதல்

4. தான் கடவுளுக்கு நிகராதல் (கடவுளே தானாதல்)

 இது சத்துவ மற்றும் நிற்குணத்தின் / சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் முடிவு ஆகும்.

 3. சுத்த சன்மார்க்கம் என்பது, மேற்கண்ட சத்துவகுணம், நிற்குணங்களின் வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம் ஆகும்.

 சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதன அல்ல, என்கின்றார் வள்ளலார். அதாவது சுத்த சன்மார்க்கத்திற்கு சமய, மத சன்மார்க்கங்கள் தேவையில்லை. ஆனால் அதன் அனுபவங்கள் சுத்த சன்மார்க்கத்திலும் கிடைக்கும் அதற்கு மேற்பட்ட அனுபவங்களும் கிடைக்கும். இதுவரை எந்த அருளாளரும் அறிந்துக்கொள்ளாத ஓர் புதிய அனுபவத்தை அளிப்பதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.

 மேலும் வள்ளலார் கூறும்போது, "சுத்தம் என்பதன் பொருள் ஒன்றுமில்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு பூர்வம் / முன்பு வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களைக் கடந்தது." என்கின்றார்.

 மத சன்மார்க்கத்தில் நான்காவது நிலையில் "கடவுளே தான் ஆதல்" என்ற நிலை வந்து விட்டதே! அதற்கும் மேல் என்ன இருக்கிறது? இந்த சுத்த சன்மார்க்கத்தில்?

 வள்ளலாருக்கு முன்பு வரை வாழ்ந்த யாரும் இந்நிலையினை அடையவில்லைஏனெனில் அவர்களுக்கு உண்மை கடவுள் ஒருவர் உண்டு என்பது தெரிந்தும், அவர் யார் என்று தெரியாமல் பலரும் பலவாறு கூறி பல இக்கட்டான அனுபவங்களை பெற்றுஇருக்கிறார்கள்.

 அதனால தான் நம்பெருமானார், அந்த நான்காவது நிலையினை "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்று தமது சுத்த சன்மார்க்கத்தில் மிக அழகாக கூறுவார். இதுவரை இருந்தவர்கள் கடவுள் நிலையறியாமல் தவறான மார்கங்களில் முயற்சி செய்து அதற்குத் தக்க பலனையும் அடைந்தார்கள்.

இதுவரை இருந்தவர்கள், அந்த நான்காவது நிலையின் பயனாக அடைந்தது என்னவெண்று வள்ளலார் கூறுவது யாதெனில்...

 "சிருஷ்டி, ஸ்திதி, அம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகின்ற பிரமா, விஷ்ணு, ருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, சிருஷ்டியில் ஸ்திதி, சிருஷ்டியில் அம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், சிருஷ்டியில் அனுக்கிராஹம் இப்படியான ஒவ்வொரு தத்துவத்திலும் 5 தத்துவம் என இது மொத்தம் 25 தத்துவங்கள் என்க. இந்த 25-ம் 64,000-ஆல் பெருக்கினால் வரக்கூடிய காலம் (16,00,000/- பதினாறு லட்சம் ஆண்டுகள்) வரை மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்ததேகியாக இருப்பது"

 மேற்கண்டவாறு ஒரு கால வரையறைகுள் இந்த சுத்த தேக அனுபவம் முடிவுற்று அவர்கள் மரணமடைந்து மீண்டும் பிறப்பெய்துவதையே, அந்த நான்காவது அனுபவம் (கடவுளே தானாதல்) உள்ளதாக வள்ளலார் குறிப்பிடுகிறார்.

 ஆனால், சுத்த சன்மார்க்கத்தில், "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்பது "மரணமிலா பெருவாழ்வு" "சாகாக் கல்வி" அதே "சுத்த தேகம்" என்னும் சொல்தான் இங்கேயும் உள்ளது.

 சுத்த சன்மார்க்கம் மூலம் வள்ளலார் அடைந்த சுத்த தேகத்திற்கும், இனி நாம் அடையப்போகும் சுத்த தேகத்திற்கும் ஒரு கால வரையறை என்பதே கிடையாது.

 வள்ளலார் இதனை கூறும்போது, "எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது, அதாவது அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்துவதும், தனிப்பெரும் வல்லமையும், ஏம ரவுப்பிய பிரேதஜீவி தாதி சித்தியும், வஸ்துப் பிரத்யசஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது சுத்த சன்மார்க்கத்தின் முடிபு ஆகும்." என்கிறார்.

 மேலும் வள்ளலார் கூறும்போது, "சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36 வகை. அதனை விரிக்க 6 கோடியாகும். இது போலவே மதத்திலும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி, தேகசித்தி முதலியவை உண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தா மூர்த்திகளான ஈசுவரன், பிரமம், சிவன், முதலிய தத்துவங்களில் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்கு மேல் இரா."

 ஒரு நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றும் ஒரு மேலாளர் மாத ஊதியமாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுகின்றார் எனக் கொள்வோம். அதே நிறுவனத்தில் கீழ் நிலை ஊழியராக பணியாற்றும் ஒருவர், எப்படியாவது தானும் மேலாளராக பதவி உயர்வு பெற்று தானும் மாத ஊதியமாக ஒரு இலட்சம் பெற வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்கான முறையான பயிற்சி பெற்று சில வருடங்களில் அந்த உயர் பதவியினைப் பெற்று அவர் நினைத்தது போல மாதம் ஒரு இலட்சம் பெறுவது போன்றதே இந்த சமய மத சன்மார்க்க அனுபவங்களாகும். அந்த கடைநிலை ஊழியர் மாத ஊதியமாக ஒரு இலட்சத்திற்கு மேல் அதாவது இரண்டு இலட்சம் வாங்க வேண்டும் என நினைத்தும் பார்க்க இயலாது. ஏனெனில் அந்த நிறுவனத்தின் உயர் ஊழியம் ஒரு இலட்சம் மட்டுமே. அந்த இலக்கு வரை மட்டுமே அந்நிறுவன ஊழியர்கள் யாவரும் பணியாற்ற முடியும். இப்படி ஒரு வரையறைக்குள் இருப்பதே சமய மத சன்மார்க்க அனுபவங்கள் ஆகும்.

 ஆனால், சமரச சுத்த சன்மார்க்க அனுபவமானது, ஒரு கடைநிலை நிறுவன ஊழியர் அந்த நிறுவனத்தையே தனதாக்கிக் கொள்ளும் சிறப்புடையது. இனி சமரசம் என்பதன் பொருளை வள்ளலார் எவ்வாறு விளக்குகின்றார் எனப் பார்ப்போம்

 "சமய மதங்களிலும் சமரசம் உண்டு. அவை:-

# வேதாந்த சித்தாந்த சமரசம்

# யோகாந்த கலாந்த சமரசம்

# போதாந்த நாதாந்த சமரசம்

 இதற்கு அதீதம் "சடாந்த சமரசம்".

இதற்கு அதீதம் "சன்மார்க்க சமரசம்"

இதற்கு அதீதாம் "சுத்த சமரசம்"

ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் "சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தரநியாயப்படி, கடைதலைப் பூட்டாக, "சமரச சுத்த சன்மார்க்கம்" என மருவின."

 "சுத்த சன்மார்க்கத்திற்கு படி மூன்று, அவை:-

 1. சடாந்த சன்மார்க்கம் - சிற்சபை

2. சமரச சன்மார்க்கம் - பொற்சபை

3. சுத்த சன்மார்க்கம்ஞான சபை

 இதன் மூலம் அடையக்கூடிய "சுத்த தேகம்" என்பதின் அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாக தெரிவிப்பார்."

 மேற்கண்டவாறு நமது பெருமானார், சுத்த சன்மார்க்கத்தின் வல்லமையை விரிக்கின்றார்.

 இனி சுருக்கமாக சன்மார்க்கத்திற்கும் சுத்த சன்மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்போம்.

 

எண்

சமய சன்மார்க்கம்

சுத்த சன்மார்க்கம்

1

தத்துவமசி நிலை

சத்துவ நெறி

2

இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் பல

அனைத்திற்கும் அதீதமாக விளங்கும் ஒரே மார்க்கம்

3

சத்துவ குணம் சம்பந்தப்பட்டது

சத்துவம் சம்பந்தப்பட்டது

4

தத்துவங்களை உபாசித்தல், அர்ச்சித்தல் உண்டு

தனித்தலைவன் லட்சியம் தவிர வேறு ஏதுமில்லை

5

ஒவ்வொரு தத்துவங்களுக்கும் தனித்தனி கர்த்தாவாக வழங்கப்பட்டுள்ளது

ஒரே இறைவனை மட்டுமே தொழுதல் கர்த்தாக்களை வணங்குதல் தேவையில்லை

6

சித்திவகைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமய மார்க்கங்கள் நிறைய உண்டு. இவை தத்துவ சித்திக் கற்பனைகள்

சர்வசித்தியை உடைய அந்த ஒரே கடவுள் பற்றி உண்மை அறியும் மார்க்கம்

7

பலவகையில் பிரிக்கப்பட்டதால் பூரணத்துவத்தினை அறியும் காலம் கணக்கிடமுடியாது.

ஒரே பூரணத்துவத்தின் உண்மை அறிவது எளிதில் கூடும்

8

பூரணத்துவம் அறிய முடியாமல் தடைபடும்

எவ்வித தடையுமில்லை

9

ஜீவகாருண்யம் உண்டு. அத்துடன் சடங்கு முதலிய ஆசாரமும் உண்டு. அதனால் கருணை விருத்தியாகாமல் தடைபடும்

கருணை விருத்திக்கு தடையாக இருக்கும் சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்களுக்கு தடையுண்டு, ஆகையால் கருணை மட்டுமே சாதனம், வெற்றி உண்டு.

 

          சுத்த சன்மார்க்கம் என்கிற புதிய மார்க்கத்தை வள்ளலார் ஏன் ஏற்படுத்தினார் என்பதற்கு அவரே கூறும் பதில் இதுதான்,

"நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லசஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லசஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

 தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத்தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

 ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை."

 மேற்படி வள்ளலார், ஆதியிலே ஒரு வல்லவன் இதனை ஏதோ காரணத்திற்காக, இறைவனின் நிலையினை மறைத்து, பொய் உரைத்த கற்பனைகளை அவிழ்த்து விட்டுவிட்டதாக கூறுகிறார். அவன் பூட்டிய பூட்டை இறை அருளினால் அவிழ்துவிட்டார். அப்பூட்டின் சாவியாக அவருக்கு பயன்பட்டது என்னவெனில், "ஆன்மநேய ஒருமை பாட்டுரிமை" என்னும் தயவு ஆகும். இந்த தயவு வர சுத்த சன்மார்க்கத்தில் உள்ள "சாகாக் கல்வி"யை நாம் பயில வேண்டும்.

 சுத்த சன்மார்க்க நடை உடையவர்கள், தாம் ஏறவேண்டிய படிகள் மூன்றுதான். இந்த மூன்று படிக்கட்டுகளில் முதலில் ஒன்றாம் படிக்கட்டு என்பது என்ன? என்று பார்ப்போம். 

 சடாந்த சன்மார்க்கம்என்பதே அந்த ஒன்றாம் படிக்கட்டு. இந்தப் படிக்கட்டைத்தான் நாம் முதலில் ஏறி கடக்கவேண்டும். சடாந்த சன்மார்க்கம், சடாந்தங்களின் பொதுவாக அமைந்துள்ளது. ஆறு வகையான முடிபுகள்தான் சடாந்தம் எனப்படுகின்றது.

 சைவ சமயம் கூறும் ஆறு முடிபுகளை வள்ளலற்பெருமான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆறு முடிபுகளையும் தமது அனுபவத்தால் செப்பனிடுகின்றார்.  அதற்கு அடையாளமாக ஒவ்வொன்றிர்க்கும் அடை மொழியினை சேர்க்கின்றார். தூய கலாந்தம், ஞான யோகாந்தம், விமல போதாந்தம், பெரிய நாதாந்தம், சுத்த வேதாந்தம், சுத்த சித்தாந்தம் என்று தமக்கே உரிய அனுபவத்தால் வேறுபடுத்தி காட்டியிருக்கின்றார். ஏன் வேறுபடுத்தினார் எனில்?, சைவ சமயவாதிகளால் அனுபவிக்கப்பட்ட ஆறு முடிபுகளின் அனுபவங்களும்சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள்என்றும் அவற்றை பின்பற்ற வேண்டாம் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளற்பெருமானுக்கு தடை செய்து அருளியிருக்கின்றார். இச்செய்தியினை வள்ளலார் தாம் இயற்றிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் கூறுகின்றார். எனவே வள்ளற்பெருமான் கூறும் ஆறு முடிபுகள் என்பது சைவ சமயம் கூறும் ஆறு அந்தம் அல்ல என்பது தெளிவாகின்றது. ஆனாலும் சமயத்தில் உள்ள ஆறு அனுபவங்களும், மிகச்சிறிய  அனுபவங்களாக சுத்த சன்மார்க்க அனுபவத்திலும் தோன்றும்.

 வள்ளற்பெருமான் கூறியிருக்கும் மேற்காணும் ஆறு முடிபுகளுக்கும் பொது என்பது எதுவெனில்?, சுத்த வேதாந்த அனுபவமும், சுத்த சித்தாந்த அனுபவமும் இணைந்த அனுபவத்தைத்தான் பொது எனக்கூறுகின்றார். இந்தபொதுதான் சடாந்த சன்மார்க்கமாகும். இவ்வனுபவம் சுத்த சன்மார்க்கத்தின் முதல் படியாகும்.

 இரண்டாம் படிக்கட்டுசமரச சன்மார்க்கம்ஆகும். மேற்காணும் ஆறு முடிபுகளின் முடிபும் தனக்கு முதன்மையாக்கி அதனையும் கடந்து மேல் நிலை அனுபவம் அடைவது சமரச சன்மார்க்கம் ஆகும். இவ்வனுபவத்திற்கு பெயர் குருதுரிய அனுபவமாகும். தத்துவராயர் போன்ற மகான்கள் பெற்ற அனுபவமானது சமரச சன்மார்க்க அனுபவமாகும் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார். இந்த அனுபவம் இரண்டாம் படிக்கட்டு ஆகும்.

 மூன்றாம் படிக்கட்டுசுத்த சன்மார்க்கம்ஆகும். மேற்காணும் இரண்டு படிக்கட்டுகளை சைவ வேதாகமங்களிலும், தத்துவராயர், தாயுமானவர் போன்ற மகான்களாலும் ஒருவாறு (முழு அனுபவம் இல்லாமல்) அனுபவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் படிக்கட்டு என்பது இதுவரை எவர் ஒருவராலும் ஏற முடியாமல் இருந்து வந்துள்ளது. மூன்றாம் படிக்கட்டை அடைந்தவர் நமது வள்ளற்பெருமான் மட்டுமே. 

 இவ்வனுபவத்தை சுத்த சிவ துரியாதீத நிலை என்பார் வள்ளலார். சிவ அனுபவம், பரசிவ அனுபவம் இவை இரண்டினையும் மறுத்தது சுத்த சிவ அனுபவமாகும். சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இவை இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். முதலில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். எனவே சடாந்த சன்மார்க்கம் எனவும், அதன் மேற்பட்டு சமரச சன்மார்க்கம் எனவும், அதன் உச்சியில் சுத்த சன்மார்க்கம் எனவும் மூன்று நிலை சன்மார்க்க அனுபவங்களை பெறுவதே நமது நோக்கம். 

 சத்தென்னும் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கம். ஆதலால் இம்மார்க்கம் எவ்வகையிலும் உயர்வுடையது. பாவனாதீத அதீதம், குணாதீத அதீதம், லட்சியாதீத அதீதம், வாச்சியாதீத அதீதம் ஆகியவையே சுத்த சன்மார்க்கமாகும். எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும்  வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யசானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மூன்றாவது படிக்காட்டாகிய சுத்த சன்மார்க்கத்தின் முடிபாகும். 

 மேற்காணும் மூன்று படி நிலைகளையும் சிற்சபை, பொற்சபை, சுத்த ஞானசபை அனுபவங்களாக குறிக்கின்றார். சிற்சபை அனுபவமானது சடாந்த சன்மார்க்க அனுபவமாகும். பொற்சபை அனுபவமானது சமரச சன்மார்க்க அனுபவமாகும். சுத்த ஞானசபை அனுபவமானது சுத்த சன்மார்க்க அனுபவமாகும். 

 சிற்சபைக்கு அடுத்து பொற்சபை, பொற்சபையை கடந்து சுத்த ஞானசபைக்கு செல்ல வேண்டும். இதனை விளக்கவே வடலூரில் சுத்த ஞானசபைக்குள் சிற்சபையும், பொற்சபையும் வள்ளற்பெருமான் அமைத்துள்ளார். சிற்சபை என்பது நெற்றிக்கண் அல்லது புருவ மத்தி என்பதாகும். புருவமத்தியில் அதாவது சிற்சபையில் ஆன்மா இருக்குமிடம் பொற்சபையாகும். ஆன்மாவின் ஒளி / வெளிச்சம் / பிரகாசமே ஞானசபையாகும். 

 சிற்சபையை அறிவதற்கு நாம் சடாந்த சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும். பொற்சபையை அறிவதற்கு நாம் சமரச சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும். ஞானசபையை அறிவதற்கு நாம் சுத்த சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும். இவை மூன்றும் ஒருங்கே அடைந்த மகான் நமது வள்ளலார் மட்டுமே. மற்ற மகான்கள் எல்லாம் சிற்சபை அனுபவத்தையே பெரிதும் அடைந்துள்ளனர். அதில் மிகச்சிலரே பொற்சபை அனுபவத்தையும் அடைந்துள்ளனர். சமயம், மதம், சடங்குகள் கடந்து ஆன்ம நேய உணர்வுடன் உயிரிரக்கம் கொண்டவர்களால் மட்டுமே ஞானசபை அனுபவத்தைப் பெறமுடியும். 

 சிற்சபை அனுபவம் பெற்றவர்கள் சுவர்ணதேகமுடையவர்கள். பொற்சபை அனுபவம் பெற்றவர்கள் பிரணவ தேகம் உடையவர்கள். ஞானசபை அனுபவம் பெற்றவர்கள் ஞானதேகம் உடையவர்கள். இந்த மூன்று தேகங்களும் பிறர் பார்வையிலிருந்து மறைபடும். முதல் இரண்டு தேகத்திற்கு மரணம் உண்டு. மூன்றாவது ஞான தேகத்திற்கு மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு உண்டு. 

 ஞானசபை அனுபவத்தின் மூலம் மரணமிலா பெருவாழ்வு பெறுகின்ற ஓர் புதிய மார்க்கத்தையே வள்ளலார் உருவாக்கினார். அதன்படி அனுபவத்தையும் பெற்றார். சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடையாக இருப்பது, சமயங்கள், மதங்கள், ஜாதிகள், ஆச்சார சங்கற்ப விகற்பங்கள், மூட நம்பிக்கைகள், பல்வேறு வகையான சடங்குகள், சிறு தெய்வ வழிபாடுகள், புலால் உண்ணுதல், உயிரினங்களை கொலை செய்தல் போன்றவைகள் விளங்குவதாக அறிவிக்கின்றார். இவற்றை எல்லாம் அறவே விடுத்தவர்தான் சுத்த சன்மார்க்கத்தில் நடைபோட முடியும் என்பது வள்ளலாரின் புதிய கொள்கையாகும்.

சாதாரண மக்களாகிய நாம் நமது வாழ்க்கையினை பிறத்தல் என்பதில் துவங்கி இறத்தல் என்பதில் முடிக்கிறோம். அதாவது,

 பிறந்து அழுகிறோம்

வளர்ந்து படிக்கிறோம்

படித்து வேலைக்குச் செல்கிறோம்

வேலையால் ஊதியம் பெறுகிறோம்

ஊதியத்தால் திருமணம் செய்கிறோம்

திருமணத்தால் பிள்ளைகள் பெறுகிறோம்

பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்

அவர்கள் படித்து வேலைக்குச் செல்கிறார்கள்

அவர்கள் வேலைக்குச் சென்று ஊதியம் ஈட்டுகிறார்கள்

அவர்களது ஊதியத்தால் திருமணம் செய்விக்கின்றோம்

அவர்கள் நமக்கு பேரபிள்ளைகளை தருகிறார்கள்

அதற்குள் நமக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கிறது

அடுத்து ஓர் பத்து ஆண்டுகள் முதியபருவம் ஓடுகிறது

ஓர் நாள் நாம் இறந்து விடுகிறோம்

 இவ்வாறு நாம் நமது வாழ்க்கையினை நடத்திவருகிறோம். இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான வாழ்க்கைக்கும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? மேற்கண்ட மிகச் சாதாரண வாழ்க்கையினை, சுத்தசன்மார்க்கம் ஒன்றே மரணமிலா பெருவாழ்விற்கு இட்டுச்செல்கிறது. எப்படி என்று பார்ப்போம்...

 "என்னால் நீங்கள் நன்மை அடைவது சத்தியமே" என்கிறார் வள்ளலார். இல்லற வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்றும் இறை அருளை எவ்வாறு பெறவேண்டும் என்றும் மிகத்தெளிவாக தமது திருஅருட்பாவில் கூறியுள்ளார்.

 இல்லத்தரசிகளும் இல்லத்தரசர்களும் தாங்கள் இதுவரை கடைபிடித்துவந்த கடவுள் வழிபாட்டு முறைகளை தூக்கியெறிந்துவிட்டு, ஜீவகாருண்ய ஒழுக்கத்தையே கடவுள் வழிபாடாக கொள்ள வேண்டும் என்கிறார்.

 சிறுதெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடு அறவே கூடாது என்கிறார். தெய்வங்கள் பெயரால் உயிர்பலியிடுவதையும் கண்டிக்கிறார். தெய்வம் ஒன்று என்று அறியும் அறிவு வேண்டும் என்கிறார்.

 மனிதர்கள் எக்காரணங்கொண்டும் புலால் உண்ணக்கூடாது என்கிறார்.

தமது நித்திய கரும விதியில் இல்லத்தார்கள் காலையில் எழுவது முதல் இரவு உறங்கும் வரை என்னென்ன எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கியுள்ளார்.

 தமது மருத்துவக் குறிப்பில் மனித நோய்கள் தீரும் வழியினை கூறியிருக்கிறார்.

 தமது உபதேசக்குறிப்பில் சமய மத புராணங்களின் உண்மை நிலைகளையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளையும் விளக்கியுள்ளார்.

 கடவுள் அருளை பெறுவதற்கு ஜீவகாருண்ய வழிபாடு என்கிற தயவு மார்க்கம் மட்டுமே வழியாக உள்ளது என்கிறார்.

 நாம் இதுவரை கடைபிடித்துக்கொண்டிருக்கும் ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை தயவினை பெருக்க தடையாக உள்ளதால் அவைகளை அறவே விடவேண்டும் என்கிறார்.

 ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் தவமும் கைகூடினால் மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும் என்கிறார். தவம் என்பது தன் சுதந்தரமான தேக சுதந்தரம், ஜீவ சுதந்தரம், போக சுதந்தரம் ஆகிய மூன்று சுதந்தரத்தையும் இறைவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு ஒருமையுடன் இறை சிந்தனையுடன் இருத்தல். ஒருமை என்பது 'தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடுவது ஒருமையாகும்.

 மரணம் தவிர்த்தால் மட்டுமே பிறவி பெருங்கடலை கடக்கமுடியும் என்கிறார். எமது மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்கிறார்.

 சாதி, மதம், இனம், நாடு, மொழி போன்ற தடைகளை நீக்கி நாம் அனைவரும் மனிதர்கள் என்ற "மனித நேயமும்", எறும்பு முதல் யானை வரை இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரனங்களும் உண்மையில் நமது சகோதரர்களே / தாய் தந்தையர்களே / சகோதரிகளே / பிள்ளைகளே என்கிற உணர்வு பெற்ற "ஆன்ம நேயமும்" மனிதர்களுக்கு வரவேண்டும் என்கிறார்.

 ஏழைகள் பசி தீர்க்க தருமச்சாலை துவக்கியுள்ளார். இந்த தருமச்சாலையில் அவரால் ஏற்றிவைக்கப்பட்ட அடுப்பு இதுநாள் வரையில் அனையாமல் எரிந்துக்கொண்டே இருக்கிறது. அதாவது ஏழைகளுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கிய வண்ணம் உள்ளது. இந்த தருமச்சாலை இயக்கத்தில் உங்கள் பங்கும் மிக முக்கியமாக இருக்கவேண்டும் என்கிறார்.

 தாம் கண்ட ஒருமை இறையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு, ஆண்டவரின் சம்மதத்துடன் நாம் வணங்குவதற்காக எண்கோண வடிவில் ஒரு சபையினை கட்டினார்கள். இச்சபையினுள் சென்று இறைவனை வழிபடவேண்டுமானால், கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளெ செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் யார்? என்றால், இவ்வுலகில் இதுவரை மக்களால் உருவாக்கப்பட்ட மதம் மற்றும் சமயக் கடவுள்களுள் இவர் ஒருவரல்லர். அப்படி உருவாக்கப்பட்ட கடவுளர்கள் அனைவருக்கும் தலைமைப் பதியாக இருப்பவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று மிகத் தெளிவாக தமது புதிய மார்க்கத்திற்கு ஓர் புதிய தலைமைப் பதியை கூறுகின்றார் வள்ளலார்.

 சுத்தசன்மார்க்க கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை' உருவாக்கினார். அதற்கென்று தனிக் கொடியினையும் (ஆன்மக் கொடி) கண்டார். ஒளி வடிவமாக இருந்துக்கொண்டு, நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்று கூறும் வள்ளலாரின் வாய்மை போற்றுதலுக்குரியது

 மேற்படி சுத்த சன்மார்க்கத்தையும் அம்மார்க்கக் கடவுளையும் வெளிஉலகத்தாருக்கு 12ம் தேதி ஏப்ரல் மாதம் 1871ம் ஆண்டு, அவர் தனது அறிவிப்பில் கீழ்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளார்கள்.

 சுத்த சன்மார்க்கம் ஒன்றேஎல்லா உலகத்தும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்றபெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்….

 இந்த பெருநெறியான சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்க நாம் ஜாதி, சமயம், மதம் அவற்றிலுள்ள ஆசாரங்கள், சங்கர்ப்பங்கள், விகற்பங்கள் ஆகியவற்றை முழுமையாக மூட்டைகட்டி குழித்தோண்டி அவற்றில் போட்டுவிட்டு மண்ணைக்கொண்டு மூடிவிட்டு சுத்த சன்மார்க்க கடவுளாகிய தனிப்பெருங்கருணையினை அருட்பெருஞ்ஜோதியாக வணங்குதல் வேண்டும். இதன் பயனாக நாம் பெருவதுமரணமிலா பெருவாழ்வு”. “சாகாதவனே சன்மார்க்கி” என்கிறார் கருணையே வடிவான வள்ளலார்.

 தான் கண்ட புதிய மார்க்கத்தால் தான் பெற்ற வடிவத்தைப் பற்றி நமக்கு அவரே தமது திருவருட்பாவில் கீழ்கண்டவாறு வெளிப்ப்டுத்துகிறார்

 எதனாலும் தடுக்கப்படாத வடிவம்

 ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே

  அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே

காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்

  கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்

  படுதலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே

சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான

  சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே. (788)

 எதனாலும் அழியாத வடிவம்

 காற்றாலே புவியாலே ககனமத னாலே

  கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

  கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

  மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

  எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே. (1733)

 வள்ளலாரின் தேகம் ஒரு தனிநிலை வடிவம் என்பது இதனால் அறிய முடிகின்றது.  இவ்வடிவத்தை நாமும் சுத்த சன்மார்க்கத்தின் மூலம் மட்டுமே பெறமுடியும், பெறுகின்றோம், பெறுவோம்.

 

தி..இராமலிங்கம்

கடலூர்.

+91 9445545475