Wednesday, June 14, 2017

ஜீவ சமாதி

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று வெளியானவை…

ஜீவ சமாதி

பெருமை அற்றவர்களின் உடல் எரிக்கப்பட வேண்டும். பெருமை உள்ளவர்களின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்று திருமூலர் உரைக்கின்றார்.
                                          
எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணலதம் கோயில் அழவிட்ட தாங்கொக்கும்
மண்ணில மழை விழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

ஞானியர்கள் தங்கள் உடலையே கோவிலாகக் கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீ வைப்பது திருக்கோவிலுக்கே தீவைப்பதற்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டிவரும். அத்துடன், ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்னில் கிடந்து அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு, நாடு வீழ்ச்சியடைந்து பெருந்துன்பம் ஏற்படும் என்கிறார் திருமூல சித்தர்.

பெருமையுடைவர்களின் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடு வளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்கிறார். இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து  வெவ்வேறு இடங்களில் நடமாடி  மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்ததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்ல வேண்டும்.

இறைவன்  நம் எல்லோரின் உடம்பிலும் இருந்து அருள் செய்வதால், நமது உடல்களை எரிக்காது  புதைக்க வேண்டும் என்பது  வள்ளற்பெருமானது கட்டளை. பெருமை யற்றவர்களின் உடலை எரிக்க வேண்டும் என்பது  திருமூலரின் கருத்தை நாம் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது. இறைவன் இருந்த இடம் நமது எல்லோரின்  உடலாகும். அப்படி இறைவன்  இருந்த  இடம் பெருமையுடையதுதானே. இதனை புரிந்துக்கொண்டால் நாம் எல்லோரும் பழக்கத்தின் வழிமுறைகளை விடுத்து புதைக்கவே முற்படுவோம். உடலை  எரிப்பதனால் மழை வளம் கெடும், நாட்டில் பஞசம் ஏற்படும், நாட்டில் அரசாளும் அரசு கெடும் என்றால், நமது தாய், தந்தை, பாட்டன், பாட்டி போன்ற சுற்றத்தார்களின் உடலை  எரித்தால், அவ்வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பை சொல்லவும் வேண்டுமோ?      

செத்தவர் எல்லாம் எழுந்து நடமாடுவதாகவும், நடமாட இருப்பதாகவும் வள்ளற்பெருமான் உரைக்கின்றார். அதற்காகவே இறந்தாரை எரிக்க வேண்டாம் என்கின்றார். புதைக்கப்பட்ட உடம்பை மட்டுமே இறைவன் திரும்பவும் எழுப்புவதாகவும் அருள்கின்றார். எனவே நாமெல்லாம் இனி  பிறரை எரிக்கும் செயலை விடுத்து  புதைப்போம்.

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே – சுத்தசிவ
சன்மார்க்க சங்கத்  தலைவனே நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்க மே. - 5621

கடந்த கால நிகழ்வுகளை நம்மால் காணமுடியுமா?

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று  வெளியானவை…

கடந்த கால நிகழ்வுகளை நம்மால் காணமுடியுமா?

முடியும் என்கின்றது விண்வெளி. தொலை நோக்கி மூலம் நம்மால் கடந்த காலத்தை பார்க்க முடியும். சூரியனிலிருந்து ஒளி புறப்பட்டு நம்மை அடைய 8 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. அப்படியானால் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது 8 நிமிடத்திற்கு முந்தைய சூரியனை. 4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திரத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அது 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைத்தான் இப்போது பார்க்கிறோம். இன்று அது எப்படி இருக்கின்றது என்பதை இன்னும் 4 ஆண்டுகள் சென்றால்தான் நம்மால் பார்க்க முடியும். நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் எல்லாமே இப்படி பல ஆண்டுகளுக்கு முன்புள்ளதைத்தான் பார்த்து வியந்துக்கொண்டுள்ளோம். எனவே கடந்த காலம் எங்கும் ஓடிப்போய்விட வில்லை. அதனை நம்மால் பார்க்க முடியும், பார்த்துக்கொண்டுதான் உள்ளோம் என்பது வியப்பாக உள்ளதல்லவா.

சரி… இந்த தத்துவத்தை பயன்படுத்தி எதிர்காலத்தை நம்மால் பார்க்க முடியுமா? இதற்கு காலம் செல்லும் பாதைக்கு எதிராக நாம் பயணம் செய்ய முடிந்தால் எதிர்காலத்தை பார்க்கலாம். அதாவது மைனஸ் ஒரு நிமிடம், மைனஸ் இரண்டு நிமிடம் என்று செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் நாம் ப்ளஸ் ஒரு நிமிடம்,  ப்ளஸ் இரண்டு நிமிடம் என்று எதிர்காலத்தை பார்க்கலாம். இது விஞ்ஞானத்தால் முடியாது. மெய்ஞ்ஞானிகளால் முடியும்.


எனவே கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலங்களை எல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நிலையாக்கப்பட்டுள்ளது. இன்று நீங்கள் இவ்வசகத்தை படிப்பீர்கள் என்று பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே நிலையாக்கப்பட்டுவிட்டது. நீங்கள் மெய்ஞ்ஞானியாக இருந்திருந்தால் இன்று நீங்கள் படிக்கும் இவ்வாசகத்தை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்க முடியும். 

“சமணம்” - ஜைனர்களின் அர்த்தமாகதி பிராகிருதம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று “சமணம்” என்ற தலைப்பில் வெளியானவை…


ஜைனர்களின் அர்த்தமாகதி பிராகிருதம்

ஜைனர்களின் மத வழிபாட்டு மொழியாக இருந்தது அர்த்த மாகதி மொழி. பிற்காலத்தில் பௌத்த மதப்பிரிவுகள் பெரும்பாண்மையானவை சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலும், ஜைனர்கள் பிராகிருதத்தை கைவிடவில்லை. மிகவும் பின்னரே அவர்கள் சமஸ்கிருதத்துக்கு மாறினர் (இருப்பினும் அவர்களின் மூல நூல்கள் அர்த்த மாகதியிலேயே இருந்தன). ஜைனர்களின் இந்த பிராகிருத பயன்பாடு, வைதிகர்களின் விமர்சனத்துக்கும் ஏளனத்துக்கும் உட்படுத்தபட்டது.

உதாரணமாக, 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், ஜைனர்கள் குறித்து இவ்வாறு பாடுகிறார்.

நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோடி யாரையு நாணிலா
மண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகிய வடிகளே

நமண நந்தி, கர்ம வீரன், தர்ம சேனன் என்றவாறு பெயர்களைக்கொண்டு, குமணன் என்ற பெருமலைக்கு அருகில் இருக்கும் குன்றுகளைபோல, ஆடையின்றி “ஞமண ஞாஞண ஞான ஞோண” என்று நாணமில்லாது உச்சாடனம் செய்யும் ஜைனர்களால் சிவன் பழிக்கப்படுதலுக்கு உடையரோ ?

பொதுவாகவே பிராகிருத மொழிகளில் மெல்லின பிரயோகங்கள் அதிகமாக இருக்கும். எனவே, அவர்களின் மந்திரங்களை மேற்கண்டவாறு (ஞமண ஞாஞண ஞான ஞோண)  ஏளனம் செய்கிறார் சுந்தரர். வேறு சில பாடல்களிலும், ஆகமங்களின் மொழியை (சமஸ்கிருதம்) விடுத்து திரிந்த பிராகிருத மொழியை பயன்படுத்துவதை விமர்சிக்கின்றனர் நாயன்மார்கள்.

இதனால் அக்கால ஜைனர்கள் கவலை ஏதும் பட்டிருக்கப்போவதில்லை, அர்த்த மாகதி தான் அவர்களுடைய தேவ பாஷை ஆயிற்றே. ஜைனர்களின் படி, அர்த்த மாகதியே தெய்வ பாஷையும் மூல பாஷையும் ஆகும். இம்மொழியே வர்த்தமான மஹாவீரராலும், மற்ற (ஜைன) தேவதாமூர்த்திகளாலும் உபயோகப்படுத்தப்படுவது. 

ஜைனர்களின் ஔபாதிக சூத்திரத்தில் இவ்வாறு காணப்படுகிறது:

 


ப⁴க³வம் மஹாவீரே […] ஸவ்வபா⁴ஸாணுகா³மிணீஏ ஸரஸ்ஸஈஏ ஜோயணநீஹாரிணா ஸரேணம் அத்³த⁴மாக³ஹாஏ பா⁴ஸாஏ பா⁴ஸை […] ஸா வி ய ணம் அத்³த⁴மாக³ஹா பா⁴ஸா தேஸிம் ஸவ்வேஸிம் ஆரியம் அணாரியாணம் அப்பணோ ஸபா⁴ஸாஏ பரிணாமேணம்  பரிணமை

பகவான் மஹாவீரர் […] அனைத்து பாஷைகளுக்கும் அனுசரனையாக இருக்கக்கூடிய, அர்த்த மாகதி பாஷையை, ஒரு யோஜனை வரை கேட்கக்கூடிய குரலில் பேசுகிறார் […] அந்த அர்த்த மாகதி பாஷையானது, அனைவரது, ஆர்யர்களினதும் (உயர்ந்தோர்) அனார்யர்களினதும் (உயர்வற்றோர்) , சுயபாஷையாக பரிணமிக்கிறது.

ஆகவே, மஹாவீரர் மாகதி மொழியில் உபதேசிக்க, அந்த உபதேசங்கள் அனைத்து மக்களுடைய சொந்த மொழியில் மாற்றம் அடைகிறதாக கருதப்படுகிறது. இதே போன்றதொரு கருத்து பௌத்தர்களுக்கும் உண்டு. அதை பின்னர் காண்போம்.

11ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜைன ஆச்சாரியர் ஒருவரான நமிசாது, சமஸ்கிருதம் பிராகிருதத்தில் இருந்தே தோன்றியது என்ற கருத்தை முன்வைக்கின்றார்.

 

[…]பா³ல மஹிலாதி³ ஸுபோ³த⁴ம் ஸகல பா⁴ஷாநி ப³ந்த⁴நபூ⁴தம் வசநம் உச்யதே |  மேக⁴நிர்முக்தஜலம் இவைகஸ்வரூபம் தத்³ ஏவ ச தே³ஸ²விஸே²ஷாத் ஸம்ஸ்காரகரணாச் ச ஸமாஸாதி³தவிஸே²ஷம் ஸத்   ஸம்ஸ்க்ரு«தாத்³யுத்தரவிபே⁴தா³ந் ஆப்நோதி | […]


[…] [பிராகிருதம்]  குழந்தைகள் பெண்கள் ஆகியோருக்கு எளிதாகவும் சகல பாஷைகளின் மூலமாகவும் கூறப்படுகிறது. மேகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர் (பின்னர் பலவடிவம் எடுப்பது) போல, (பிராகிருதம்) ஒரே சொரூபம் கொண்டிருந்து, அதுவே, தேச விதேச வேறுபாடுகளாலும் சமாஸம் முதலிய விசேஷங்களை பெற்று, சமஸ்கிருதம் முதலிய பிற மொழிகளுக்கான பேதத்தை அடைகிறது […]

இதில் இருந்து மிகத்தெளிவாக, ஜைனர்கள் தம்முடைய பிராகிருத மொழியான அர்த்த மாகதியையே சமஸ்கிருதம் உட்பட்ட அனைத்து மொழிகளுக்கும் மூல மொழியாக கருதினர் என்பது தெரிகிறது. அவர்களை பொருத்த வரையில், அனைத்து மொழிகளும் தமது தேவ பாஷையான அர்த்த மாகதி மொழியில் இருந்தே உருவானவை.


“புத்தம்” - நமது தனிச் சிறைகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று புத்தம்” என்ற தலைப்பில் வெளியானவை…

நமது தனிச் சிறைகள்

உருவம், வேதனை, குறிப்பு, சங்காரங்கள், விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்கள் உள்ளன. இவ்வைந்தும் நமது அனுபவங்களின் ஐந்து அம்சங்கள். இவற்றோடு பற்றுக்கொள்வது நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொள்வது போல. கந்தம் (kantam, skandha, khandha ) என்றால் தொகுதி, குவியல் (Aggregate, collection, heap) எனப்படும்.

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன  
                   - மணிமேகலை 30-189,190

உதாரணம்: கட்டட வேலை நடைபெறும் இடத்தில் மணற் குவியல், செங்கற் குவியல், ஜல்லிக் குவியல், சிமென்ட் குவியல் போன்ற பொருட்களின் குவியல்களைக் காணலாம். இவற்றைக் கொண்டு கட்டடம் எழுப்பப் படுகிறது.

கந்தங்களின் ஐந்து குவியல்களான உருவம், நுகர்ச்சி (வேதனை), குறிப்பு, பாவனை (சங்காரம்), உணர்வு (விஞ்ஞானம்) ஆகிய ஐந்து. கந்தங்களை அனுபவிக்கும் போது அதனோடு நிற்பதில்லை. அழகிய உருவங்கள், நல்ல நுகர்ச்ச்சிகள் (வேதனா) போன்றவற்றை  நமது, என்னுடையது என்று நினைத்து, இந்த ஐந்து கந்தங்களை வைத்து "நான்" என்ற கற்பனைக் கட்டடம் கட்டி விடுகிறோம். ஆனால் கந்தங்களோ நிலையற்றவை, நம்பத்தகாதவை, சாரமற்றவை, மழை பெய்யும் போது நீரில் உண்டாகும் நுரையைப் போன்றவை என்று வர்ணிக்கபடுகின்றது. ஆனால் அவற்றோடுள்ள நமது இரும்புப் பிடியின் காரணமாக அவை மிகவும் பாரமாகத் தோன்றுகின்றன. இந்த இரும்புப்பிடியின் காரணமாக நாம் துக்கம் அனுபவிக்கின்றோம். அந்த அழகிய உருவமும், இன்ப நுகர்ச்சியும் என்னுடையது, அவைதான் நான் என்று நினைக்கும் போது, மாறும் தன்மை கொண்ட அவை மாறும் போது துக்கம் அனுபவிக்கின்றோம். கந்தங்களை அனுபவிப்பதில் நோக்கம் அத்தியாவசியமானது. ஆகவே நோக்கத்தை மாற்றிவிட்டாலோ, விட்டுவிட்டாலோ துக்கத்தையும் முடித்து விடலாம். இதுவே புத்தரின் போதனைகளின் சாரம். 

இவற்றைப் பற்றுக் கந்தங்கள் எனச் சொல்வதற்குக் காரணம் அவற்றோடு "நான்", "எனது" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பற்றுக் கொள்வதால் தான். உறுதியாக மண்ணில் பதிக்கப்பட்ட கட்டையில் கட்டப்பட்ட மிருகம் எப்படி அந்தக் கட்டையையே சுற்றிச் சுற்றி வருகிறதோ, அதன் அருகிலேயே நின்று, உட்கார்ந்து, படுத்துப் புரள்கிறதோ, அது போலவே இவ்வைந்து கந்தங்களைத் ‘தான்’ என்று நினைப்பவன் அவற்றிடமிருந்து தப்பிக்கவே முடியாது. எனவே இக்கந்தங்களோடு உடன்பட்டிருக்கும் துன்பத்திடமும், ஏமாற்றத்திடமும், கவலைகளிடத்திலுமிருந்தும் தப்பிக்கவே முடியாது.

1. உருவம்: ஒருவன் தமது உடலையே நான் எனக்கருதுவது ‘உருவம்’ என்கின்ற கந்தம் ஆகும். உடல் அதன் வாழ்நாளில் மழலைப் பருவம், குழந்தைப் பருவம், வளரும் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயது, முதுமை என்று பல பருவங்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வோர் நிலையிலும் அந்த வயதுக்கான துன்பத்தை அனுபவிக்கிறது. எனவே அதனை "நான்", "எனது" என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் பயன் ஏதும் இல்லை.

2. வேதனை: நமக்குள் எழும் உணர்ச்சிகளையே வேதனா கந்தம் என்கின்றோம். "நான் வசதியாக அல்லது மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கிறேன்," என்று கூறும்போது நாம் உணர்ச்சிகளோடு இணைந்து விடுகின்றோம். "என் மகிழ்ச்சியைப் பற்றி அவன் அக்கறை காட்ட வில்லை, அவன் என் மனதைப் புண்படுத்தினான்," என்று கூறுவதிலிருந்து நாம் உணர்ச்சிகள் நமக்குச் சொந்தமானவை என்று நினைப்பது தெரிகிறது. மூன்று வகையான உணர்ச்சிகள் உள்ளன. அவை இன்பமான உணர்ச்சிகள், கசப்பான உணர்ச்சிகள், நடுநிலையான உணர்ச்சிகள். இவற்றில் எச்சமயத்திலும் இரண்டு வகையான உணர்ச்சிகள் ஒரே சமயத்தில் எழாது. இன்பமான உணர்ச்சி இருக்கும் போது மற்ற இரண்டும் இருக்காது; பிடிக்காத உணர்ச்சிகள் இருக்கும் போது இன்பமான மற்றும் நடுநிலையான உணர்ச்சிகள் இருக்காது; அது போலவே நடுநிலையான உணர்ச்சியிருக்கும் போது மற்ற இரண்டு உணர்ச்சிகளும் எழாது. மஹாநிதான சூத்திரத்தில் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது: உணர்ச்சிகள் இவ்வாறு சிக்கலானவையாக இருக்கும் போது எந்த உணர்ச்சியை ‘நான்’ என்று ஏற்பது? 

வேதனாசம்யுத்தை காற்று மண்டலத்தில் பல விதமான காற்று வேவ்வேறு திசைகளில் அடிப்பது போல இந்த உடலில் எண்ணமுடியா உணர்ச்சிகள் எழுகின்றன என்று கூறுகிறது. நாம் பெரும்பாலும் இவ்வுணர்ச்சிகளை அறிவதில்லை, ஏனென்றால் அவற்றின் மேல் போதுமான கவனம் செலுத்துவதில்லை. நாம் இரண்டு நிமிடத்திற்கு மட்டுமே எவ்வளவு முறை நமது உடலை அசைக்கிறோம் என்பதையும் கால்களை இடம் மாற்றுகிறோம் என்பதையும் கவனித்தால் போதும், நாம் சில வினாடிகள் கூட நிலையாக இருப்பதில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்படுவோம். ஏன் இப்படித் தொடர்ந்து உடல் நிலையை மாற்றுகிறோம்? ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது அசௌகரியமாக இருப்பதால் வசதியைத் தேடி உடல் நிலையை மாற்றுகிறோம். உணர்ச்சிகளுக்குத் தகுந்தார்ப்போல் செயல்படுகிறோம். மேலும் மேலும் இன்பமான உணர்ச்சிகளைத் தேடுகிறோம். பிடிக்காத உணர்ச்சிகளை வெறுக்கிறோம். பொதுவாக நடுநிலையான உணர்ச்சிகளைக் கவனிப்பதில்லை. எனவே இன்பமான உணர்ச்சிகளுக்கு ஆசை பின்னனியில் உள்ள மனப்போக்காகவும், துன்பமான உணர்ச்சிகளுக்கு வெறுப்பும், நடுநிலையான உணர்ச்சிகளுக்கு அறியாமையும் பின்னனியில் உள்ள மனப்போக்காகவும் இருக்கின்றன. ஆகவே எல்லா உணர்ச்சிகளும் திறமையற்ற உள் நோக்கம் கொண்டுள்ளன. எனவே துக்கத்தைச் சார்ந்திருக்கின்றன. வசதியையும் இன்பத்தையும் வாழ்நாள் முழுவதும் தேடினாலும், நிரந்தரமான இன்பம் பாலைவனத்தில் உள்ள கானல் நீரைப் போல நமக்குக் கிடைப்பதில்லை.

புத்தர் உணர்ச்சியை ‘உணர்தல்’ என்ற நடவடிக்கை என்றார். உணர்ச்சி என்ற பொருள் ஒன்றும் இல்லை, உணர்ச்சி என்றால் உணர்தல். எனவே உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். அவை நிலையற்றவை. நமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையும் இல்லை. ஏனென்றால் நாம், "எனக்கு இந்த உணர்ச்சி வேண்டும் அல்லது அந்த உணர்ச்சி வேண்டாம்," என்று சொல்லமுடியாது. உணர்ச்சிகள் தானாக வந்து போகும். அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது. அவை நமக்குச் சொந்தமும் அல்ல. எனவே புத்தர் இவ்வாறு வலியுறுத்துகிறார்: "உங்களுக்குச் சொந்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்." மாற்றத்துக்குட்பட்டதையும், விரைவில் மாறுவதையும் ‘நமது, எனது’ என்று நினைப்பது துயரத்தை உண்டு செய்யும். அப்படி உணர்ச்சிகள் மீது சொந்தம் கொண்டாடுவதை விட்டு விட்டால் துக்கத்தின் முடிவைக் காணலாம்.

3. குறிப்பு: நமது மனம் ஒன்றை குறித்து குறிப்பெடுப்பதை குறிப்பு கந்தம் என்கின்றோம். நமது மனக்குறிப்புகளையே நமது கருத்துக்கள் என்கின்றோம்.     நமது கருத்துக்களோடு நாம் பற்றுக் கொண்டு அவை தான் நாம் என்று நினைக்கின்றோம்: "இது என் கருத்து, இது என் அபிப்பிராயம், இதைத்தான் நான் சொல்லவந்தேன்" - இது போன்ற சொற்களெல்லாம் நாம் கருத்துகளோடு ஒன்றி விட்டு அவற்றை நாம், நமது என்று நினைப்பதைக் குறிக்கிறது. சில சமயம் அதிகப் பற்றின் காரணமாக ஒரு கருத்துக்காக உயிரையும் விடத் தயாராகி விடுகிறோம். உலகில் கருத்துக்களைப் பரப்பவோ, பாதுகாக்கவோ போர்கள் நடத்தப் படுகின்றன. இது ஒரு குறிப்பிடத் தக்க பற்றென்பதால் புத்தர் இதனை "தித்'உபாதானா" என்றார் - நாம் நம்பும் ஒரு குறிப்பிட்ட கருத்தோடு பற்றுக் கொள்வது.

மன உத்வேக மாற்றத்தினாலும் சூழ்நிலைகளின் மாற்றத்தினாலும் நமது கருத்துக்களும் மாறுகின்றன. நண்பன் பகைவனாகிறான், பகைவன் நேசனாகிறான்; அறிமுகமில்லாதவர் கணவனாகிறார். ஆகவே கருத்துக்களும் மாற்றமில்லாமல் நிலையாக இருப்பதில்லை. அவற்றோடு "நான்", "எனது" என்று பற்றுக் கொண்டு விட்டால் பின் துயரம் அணுபவிக்காமல் இருக்கமுடியாது. 

பொதுவாகச் சில விஷயங்களில் இருவர் மேலோட்டமாக ஒரே கருத்துக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது மனக் குறிப்புகளைப் பொருத்தவரையும் நாம் ஒவ்வொருவரும் தனிச் சிறையில் இருப்பதை ஏற்றுக் கொள்வோம். நுண்ணறிவையும் மகிழ்ச்சியையும் உணர வேண்டுமானால் நாம் கருத்துக்களோடு உள்ள பற்றினையும் விட்டு விட வேண்டும். நீண்ட வருடங்களாகக் கற்றதை மறக்க வேண்டியிருக்கும். மனத்தை வெறுமையாக்க வேண்டியிருக்கும்.

4. சங்காரங்கள்: நாம் செய்யும் அல்லது செய்த வினைகளை செய்கைகளை நான் எனக் கருதுவதே சங்கார கந்தம் ஆகும். நான் செய்தேன், நடந்தேன், நின்றேன், படித்தேன், உட்கார்ந்தேன், வேலை செய்தேன், ஓய்வெடுத்தேன் என்ற செய்கைகளில் எல்லாம் “நான்” என்கின்ற பற்றுதலை இணைப்பதால் நாம் மிக ஈடுபாட்டுடன் ஒரு வேலையை செய்ய வேண்டியதாகின்றது. ஈடுபாட்டுடன் வேலைசெய்வதுமன்றி மற்றவரை மிஞ்சவும் பார்க்கின்றோம்.

இந்த அறிந்து செய்யும் செய்கைகளினால் நாம் பிறந்திதிலிருந்து இறக்கும் வரை தொடர்ந்து எதற்கேனும் தயார் படுத்திக் கொண்டே இருக்கின்றோம். மழலைப் பருவத்தில் குழந்தைப் பருவத்திற்காகத் தயாராகிறோம். தவழ, நடக்க, பேசத் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். குழந்தைப் பருவத்தில் இளமைப் பருவத்திற்காகவும், இளமைப் பருவத்தில் தொழில், வேலை செய்வதற்கான திறன்களை வளர்த்துக் கொண்டும் இருக்கின்றோம். இளமைப் பருவத்தைத் தாண்டியவர்கள் பெற்றோராகப் பொறுப்பேற்கத் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதுமையிலும் தயார் செய்வதை விடுவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்று சமயங்களின் பக்கம் திரும்புகிறோம். இதனை ‘சேதனா, நோக்கம்’ என்றும் சொல்லலாம். இந்த நோக்கம் தான் கன்ம சக்திகளுக்கு இடம் கொடுத்து ஒரு பிறப்பிலிருந்து அடுத்த பிறப்பிற்குச் செலுத்துகிறது. 

நமது விதியினை விரும்பிச் செய்யும் ‘செய்கைகள்’ என்ற சிறையிலிருந்தபடி நாம் தனியாக உருவாக்குகிறோம். நாம் சுதந்தரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் இந்தச் சிறை மதிலோடும்கூடப் பற்றுக் கோள்ளாமல் விட்டுவிட வேண்டும்.

5. விஞ்ஞானம்: ஒரு பொருளை நமது புலன்களைக் கொண்டு தெரிந்திருப்பது என்பதே விஞ்ஞான கந்தமாகும். கண்-விஞ்ஞானம், காது-விஞ்ஞானம், மூக்கு-விஞ்ஞானம், நாக்கு-விஞ்ஞானம், உடல்-விஞ்ஞானம் மற்றும் மன-விஞ்ஞானம் ஆகியவைகள் உள்ளன. புலன் களால் அறியும் அறிவு மிக வேகமாகவும், தொடர்ந்தும் நடைபெறுவதால் நாம் புலன்களின் நடவடிக்கைகளோடு இவ்வாறு பற்றுக் கொள்கிறோம்: "நான் கண்டேன். நான் கேட்டேன். நான் முகர்ந்தேன். நான் சுவைத்தேன். நான் எண்ணினேன்." புத்தரின் போதனைப் படி நான் என்றும், ஆத்துமா என்றும் புலன் பொருட்களை அறிந்து அனுபவிக்கும் ஒன்றும் இல்லை. புலன்களால் அறியும் அறிவு காரண காரியத் தொடர்பினால் உண்டானது. புலன் உறுப்புகளும், பொருட்களும் இருப்பதால் தான் விஞ்ஞானம் உண்டாகிறது.

நமது புலன்களால் உருவாகும் அறிவை ‘நான்’ என்று உணர்வது தவறு. உதாரணமாக மூவர் இரு சிறுவர்கள் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மூவரும் சண்டையிடும் ஒருவனின் நண்பன், விரோதி மற்றும் பெற்றோர் என்றால் அவர்கள் மூவரும் வெவ்வேறு விதமாகத்தான் அச்சண்டையை உணர்வார்கள். அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கும். எனவே புலன் சம்பந்தப்பட்ட அனுபவங்களிலும் நாம் தனிப்பட்ட சிறையிலேயே அடங்கியிருக்கின்றோம்.
 
    இந்த ஐந்து கந்தங்களும் நமக்கு ஒரு நிஜமான தனிச் சிறை போன்றதாகும். இந்தச் சிறையோடு பற்றுக் கொள்வதாலும் அது எப்படி இருக்கவேன்டும் என்ற நமது எதிர்பார்ப்பினாலும் நாம் மிகவும் துன்புறுகிறோம். உலகினைப் பற்றிய நமது குறிப்பும் மற்ற மனிதருடன் உள்ள நமது உறவுகளும் இந்தச் சிறையின் இயல்பினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், உறவுகளும் மற்றவரிடத்தே கருத்துப் பறிமாற்றங்களும் மிகவும் சிக்கலாகி, துன்புறுத்தும், பிரச்சனைகளாகி விடுகின்றன. நாம் எந்த அளவு இந்தத் தனிச்சிறையோடு பற்றுக் கொள்கிறோமோ அந்த அளவு பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.


நமது தனித் தன்மையின் (பர்ஸனாலிடி) வட்டத்தினுள் நாம் ஒவ்வொருவரும் தனியான வாழ்க்கை நடத்துவதால், மனிதரிடையேயான உறவுகளும் மிகவும் சிக்கலானவையாகின்றன. இந்தச் சிறையிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்த ஐந்து கந்தங்களை 'நான்' அல்லது 'எனது' என்று நினைப்பதை நிறுத்தவேண்டும். 

“இஸ்லாம்” - கழிப்பறை ஒழுக்கங்கள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று “இஸ்லாம்” என்ற தலைப்பில் வெளியானவை…

கழிப்பறை ஒழுக்கங்கள்

இஸ்லாம் கூறும் கழிப்பறை ஒழுக்கங்களை பற்றி பார்ப்போம்…
1. கழிவறையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவறையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும்.
2. முடிந்தவரை குனிந்து ஆடைகளை திறக்க வேண்டும்.
3. இறைவசனம் அல்லது நபி அவர்களின் திருநாமம் கண்ணுக்குத் தென்படுகின்ற அளவு எழுதப்பட்டுள்ள மோதிரம் போன்ற பொருட்களை கழிவறையில் நுழையும் முன்பு களைந்துவிட்டுச் செல்ல வேண்டும்.
4. கழிவறையில் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது. பின்னோக்கவும் கூடாது. (கிப்லா-காஃபா இருக்கும் திசை)
5. மலஜலம் கழிக்கும்போது அந்தரங்க உறுப்பை வலது கையால் தொடாமல் இருக்க வேண்டும்.
6. மலஜலத் துளிகள் உடலில் படாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
7. கழிவறை இல்லாத இடங்களில் காடு, கரைகளுக்குச் செல்லும்போது பிறர் பார்வை படாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
8. சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யுங்கள்.
9. சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும்போது சிறுநீர்த்துளிகள் தெறிக்காத, நீர்களை உறிஞ்சி விடும்படியான மண்பகுதியினைத் தேடிச் செல்ல வேண்டும்.
10. சிறுநீர், மலம் கழிக்கும்போது பேசக்கூடாது. அதனால் அல்லாஹ் கோபப்படுகின்றான்.
11. பொது இடங்களில், நடைபாதைகளில், நிழல் தரும் மரத்தடியில் அசுத்தம் செய்யக்கூடாது.
12. வலது கரத்தைக்கொண்டு பிறவி உறுப்பைத் தொடக்கூடாது.

13. தகுந்த காரணமின்றி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது.

“கிறுஸ்து” - திறமைகள் – Talents

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று “கிறுஸ்து” என்ற தலைப்பில் வெளியானவை…

திறமைகள் – Talents

 கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாகக் குறிப்பிடலாம். இது புனித விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.


நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து ஒவ்வொரு பணியாளரின் திறமைக்கு ஏற்ப, ஒருவருக்கு ஐந்து ரூபாயும் வேறொருவருக்கு இரண்டு ரூபாயும், இன்னொருவருக்கு ஒரு ரூபாயும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து ரூபாயைப் பெற்றவர் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் ஐந்து ரூபாய் ஈட்டினார். அதே போன்று, இரண்டு ரூபாயைப் பெற்றவர் மேலும் இரண்டு ரூபாயை ஈட்டினார். ஆனால், ஒரு ரூபாயைப் பெற்றவரோ அதை நிலத்தில் புதைத்து வைத்தார்.

நீண்ட நட்களுக்கு பிறகு அந்த எசமானர் திரும்பிவந்து, பணியாளர்களிடத்தில் தான் அவர்களுக்கு கொடுத்த ரூபாய்களுக்கு கணக்குக் கேட்டார். அப்பொழுது, ஐந்து ரூபாயைப் பெற்றவர், மேலும் ஐந்து ரூபாய்களை கொண்டுவந்து: “ஐயா, ஐந்து ரூபாயை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து ரூபாயை ஈட்டியுள்ளேன்" என்றார். எசமானர் அவரை நோக்கி: “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்” என்றார். இரண்டு ரூபாயைப் பெற்றவரும் வந்து: ஐயா நீர் என்னிடம் இரண்டு ரூபாயை ஒப்படைத்தீர். இதோ பாருங்கள், மேலும் இரண்டு ரூபாயை ஈட்டியுள்ளேன் என்றார். எசமானர் அவரை நோக்கி: "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்" என்றார்.

ஒரு ரூபாயைப் பெற்றவரோ வந்து: “ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய ரூபாயை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார்.

அவனுடைய எசமான் மறுமொழியாக: "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார். எனவே அந்தத் ஒரு ரூபாயை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் ரூபாய் உடையவரிடம் கொடுங்கள். உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற பணியாளனாகிய இவனை வீட்டுக்கு வெளியே இழுத்து போய் வெளியே தள்ளுங்கள் என்றார்.


ரூபாய் உவமை சொல்லும் கருத்து : கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் கொடுத்துள்ள திறமையை மென்மேலும் வளர்க்க முயல வேண்டும். அவ்வாறு செய்தால் கடவுள் மேலும் திறமைகளைக் கொடுப்பார். திறமையை வளர்க்காது இருந்தால் கொடுக்கப்பட்ட சிறிய திறமையும் மங்கி மறைந்து விடும்.

“திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்” – உரை.

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று வெளியான திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்” – உரை.

சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி                - 32

சுத்தமெய்ஞ் ஞானம்: சுத்த+மெய்+ஞானம். ‘சுத்த உடம்பைப் பெறுகின்ற அறிவு’ என்பதே சுத்த மெய்ஞ்ஞானமாகும். சுத்த உடம்பிற்கே “மெய்” எனப்பெயர். சிலர் மெய்ஞ்ஞானம் என்றால் உண்மை அறிவு என்றும் கூறுவர். இடத்திற்குத் தக்க நாம் பொருள் கொள்ளலாம். “தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்…” (3766) என்றும் “சாகாத கல்விநிலை காணேன் பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்…”(3035) என்றும் சுத்த உடம்பைப் பெறுகின்ற அறிவை எனக்கருள்வாய் என வள்ளற்பெருமான் இறைவனிடம் வேண்டுகின்றார்.  

அவ்வேண்டுதல் கிடைத்ததா?... கிடைத்தது. “தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே…”(4626) என்றும் “எல்லாம் வல்ல சித்தனைக் கூடிக் குலவி அமுதுண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன்…”(5413) என்றெல்லாம் அந்த சுத்த மெய்ஞ்ஞான தேகத்தை தாம் பெற்றுவிட்டதை தெரிவிக்கின்றார்.

சுகோதய வெளி: அலுப்பில்லாத ஆனந்த நிலையே சுகம் ஆகும். அப்படிப்பட்ட சுகம் உதயமாகின்ற இடமே சுகோதய வெளியாகும். அது எந்த இடமெனில் “அத்துவிதமாக” விளங்குமிடமான சிற்சபை அல்லது புருவமத்தியாகும்.

“என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
 இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்…”(5818)

“நான்” என்கின்ற ஜீவாத்மா இருக்குமிடமான சிற்சபையில் பரமாத்மா என்கின்ற சாமி வந்து அமர்ந்துவிட்டப் பிறகு, “நான்” என்பது ஆசாமியா? சாமியா? என்று கூறமுடியாது, இருவரும் இரண்டற கலந்துவிடும் நிலையே அத்துவிதமாகும். அப்படிப்பட்ட அத்துவித நிலையை தருகின்ற இடமே சுகோதய வெளியாகும்.

          “…ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
                    தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
           ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
                   உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.”(5440)

தம்முடைய சிற்சபையில் நடைபெற்ற அத்துவித நிகழ்வினை எவ்வளவு அழகாக எடுத்துரைக்கின்றார் பாருங்கள். சிற்சபையில் உதயமான சுகமான அனுபவம் பெருவெளியெல்லாம் நிறைந்தது என்கின்றார். இதனைத்தான் இந்த திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளிலே நாம் காண்கின்றோம். அத்துவிதம் என்பதை “கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்பார் வள்ளலார். நாம் அடையவேண்டிய நான்கு புருஷார்த்தங்களில் இந்த அத்துவிதமும் ஒன்று. புருஷார்த்தம் என்றால் சத்தான பொருள்  எனக்கொள்க. இப்படிப்பட்ட அத்துவிதத்தை நாம் அடைய வேண்டுமானால் நமக்கு ஜீவ ஒழுக்கம் தேவை.

          ஜீவ ஒழுக்கம் என்பது, “ஆண் மக்கள் பெண் மக்கள் முதலிய யாவர்களிடத்தும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்வது.”

          ஜீவ ஒழுக்கத்தை சுருங்கக் கூறவேண்டுமாகில், மனித நேயமே ஜீவ ஒழுக்கமாகும். மனித நேயம் வேண்டுமானால் முதலில் நாம் ஒவ்வொருவரும் மேற்காணும் ஜாதி, சமயம் போன்ற பேதங்களை விட்டொழிக்க வேண்டும். அவ்வாறு விட்டவர்களால்தான் மற்றவர்களை பேதமின்றி பார்க்கமுடியும். நம்மை அடுத்தவர்கள், ஜாதிகளை மதங்களை குலங்களை சாத்திர சம்பந்தங்களை இவைபோன்ற பிற பேதப்பொருட்களை கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லாம் நம்மவர்கள்தாம் என்று தமக்கு சமமாக மற்றவர்களை உணர்வதே ஜீவ ஒழுக்கமாகும்.

          ஜீவ ஒழுக்கத்தை கடைபிடிப்பவன் எவனோ அவனே, “தன்னைப் போன்றே இறைவனும்” என்ற உறுதி பொருளை அடைவான். என்னைப்போன்றே மற்ற மனிதர்களும் இருக்கின்றார்கள் என்ற உண்மையானது, என்னைப்போன்றே கடவுளும் இருக்கின்றான் என்ற பேருண்மையை நோக்கி அழைத்துச்செல்கின்றது.

அதாவது நாம் எவ்வாறு பிற மனிதர்களும் நம்மைப்போன்றவர்கள் என்று எண்ணி ஜீவ ஒழுக்கத்தில் இருக்கின்றோமோ, அதேபோல கடவுளும் ஜீவ ஒழுக்கத்தை கடைபிடித்து, நம்மைப்போன்றே மற்ற உயிர்களும் இருக்கின்றன என்று கருதுவான். கடவுளின் ஜீவ ஒழுக்கத்தை அறிய வேண்டுமாகில் மனிதன் தன்னளவில் ஜீவ ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். “உயிருள் யாம் எம்முள் உயிர்” என்பதுதான் இறைவனின் ஜீவ ஒழுக்கமாகும். இதனை இறைவனே வள்ளற்பெருமானுக்கு அறிவிக்கின்றார்.   

இப்படி இறைவனின் ஜீவ ஒழுக்கத்தை அறிந்துக்கொண்டால், கடவுள் “நிலை”யாக தம் தேகத்தில் இருப்பதை உணர்வான். அதன் பிறகு தம் தேகமே “கடவுள் நிலை” என அறிவான். அவ்வாறு அறிபவன் உத்தமன். அதன் பிறகு தம் தேகத்தை நிலையாக்கிக் கொள்வதே “கடவுள் நிலையாதல்” (அம்மயமாதல்) என்றுணர்ந்து முத்தேக சித்தி அடைவான். அவ்வாறு முத்தேக சித்தியடைந்தவன், சுத்தமெய்ஞானியாவார். சுத்தமெய்ஞ்ஞானி என்பவர் இறைமயமாய் இருப்பவர். இதுதான் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்பதின் விளக்கமாகும். இதுவே அத்துவிதம் என்பதாகும். இப்படிப்பட்ட அத்துவிதம் நமது தேகத்தில் நெற்றிக்கண்ணான சிற்சபையில் நடந்தேறும்.

“கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமம்…. பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்தமாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும்.” என்று திருவருட்பா உரைநடை நூல் (பக்கம் 374) உரைப்பதையும் காண்க.

வள்ளற்பெருமான் இறைவனுடன் இரண்டற கலந்துவிட்டார் என்றால், வள்ளற்பெருமான் இறைவனாகிவிட்டார். இனி வள்ளற்பெருமான் என்கின்ற தேகம் கிடையாது என்பதல்ல. இறைவன் எவ்வாறு நிலைத்த தன்மையோடு இருக்கின்றாரோ அதுவாறு தமது தேகத்தையும் நிலைத்த தன்மையாக்கிக்கொண்டார் என்றே பொருள். அதுதான் முத்தேக சித்தி. அதுதான் வள்ளற்பெருமானின் அத்துவிதமாகும். அதுதான் கடவுணிலை யறிந்து அம்மயமதலாகும்.   அதுதான் வள்ளற்பெருமானின் சுத்த மெய்ஞ்ஞான சித்தியாகும்.       

என்னுடைய உடம்பினுள் சிற்சபை இடத்தே இரண்டறக் கலந்து, பேரானந்தச் சுகத்தை கொடுத்து, சுத்த மெய்ஞ்ஞான சித்தியை எனக்கு அளித்த இறைவனே.   
  
தூய கலாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 34

அந்தங்கள் (முடிபுகள்) மொத்தம் ஆறு வகைப்படுகின்றன. இதனை ஷடாந்தம் என்பர். வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்பனவையே அவை.

அந்தமோ ராறும் அறிவார் அதிசுத்தர்
அந்தமோ ராறும் அறிவார் அமலத்தர் – 2371

மேற்காணும் அந்தவகைகள் ஆறின் அனுபவத்தையும் ஒருங்கே அடைந்தவர்கள் சுத்த தேகியர் மற்றும் மலமற்றவர்கள் என்கின்றார் திருமூலர். இந்த ஆறு அந்தத்தில் இறுதியாக உள்ளது கலாந்தம். கலாந்தம் என்றால் அருள்ஒளியின் முடிபு. சிற்சபையில் தோன்றும் ஒளிகாட்சி நிறைவுபட்டு (பாழ்பட்டு) அதற்கும் மேற்பட்ட துரிய நிலைக்குச் செல்லுதல். ஒளிக்காட்சி பாழ்படும் நிலைக்கு கலாந்தம் எனப்பெயர். இவையெல்லாம் வள்ளலார் வருகைக்கு முன்னம் இவ்வுலகம் கண்ட சமயத்தார்கள் கண்ட முடிபுகள் ஆகும். வள்ளற்பெருமானின் அனுபவ முடிபுகளானது இவைகளையொட்டியே இன்னும் சற்று மேலான அனுபவத்தைக் காண்கின்றார். அப்படி தான் கண்ட அந்த ஆறு முடிபுகளுக்கும் ஒவ்வொரு அடைமொழியினை அளித்து எமது அனுபவமானது சற்று மாறுபட்டது மேலானது என்று இவ்வுலகிற்கு அறிவிக்கின்றார். ஆனாலும் சமயத்தில் காணப்பட்ட ஆறு அந்தங்களின் அனுபவமும் எமது அனுபவத்திற்கு அநந்நியமானது  அந்நியமல்ல என்கின்றார். அதாவது சமய அந்தத்தின் அனுபவங்கள் எனது அனுபவத்திற்கு உறவுகளாகத்தான் உள்ளன. ஆனால் அந்த அனுபவத்தைவிட எமது அனுபவம் சற்று மேலானது என்கின்றார். ஒரே வகுப்பு படித்த மாணவர்களுள் 60 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும், 100 சதவிகித மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் உள்ள விக்தியாசம் இது எனலாம்.

          சுத்த வேதாந்தம், சுத்த சித்தாந்தம், விமல போதாந்தம், பெரிய நாதாந்தம், ஞான யோகாந்தம், தூய கலாந்தம் என்று தமது அனுபவத்தின் மாறுபாட்டை பெயரிலும் மாறுபடுத்திக் காட்டுகின்றார். மேலும் போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆகிய நான்கு அந்தங்களும் தனித்து இயங்காமல் அவைகள் வேதாந்தத்திலும் சித்தாந்தத்திலும் ஐக்கியமாக உள்ளன என்கின்றார் வள்ளலார். எப்படி எனில் போதாந்தமும் யோகாந்தமும் வேதாந்தத்தில் ஐக்கியமாகி உள்ளன. நாதாந்தமும் கலாந்தமும் சித்தாந்தத்தில் ஐக்கியமாகி உள்ளன. இப்படிப்பட்ட அந்தங்களின் இரகசியம் வள்ளற்பெருமானால் இவ்வுலகில் வெளிப்பட்டுள்ளது.

          இவ்வாறு போதாந்தந்தமும் யோகாந்தமும் அடங்கிய வேதாந்தத்தை “சுத்த வேதாந்தம்” என்றும், நாதாந்தமும் கலாந்தமும் அடங்கிய சித்தாந்தத்தை “சுத்த சித்தாந்தம்” என்றும் வள்ளற்பெருமான் அழைக்கின்றார். இப்புதிய இரண்டு அனுபவங்களான சுத்த வேதாந்தத்திற்கும் சுத்த சித்தாந்தத்திற்கும் அதீதமாக விளங்கும் சுத்த வேதாந்தாந்தம், சுத்த சித்தாந்தாந்தம் ஆகிய இவையே வள்ளற்பெருமான் இப்புவியில் புதியதாக வெளிப்படுத்திய “சமரச சுத்த சன்மார்க்கம்” ஆகும். இந்த சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கமாகும். இப்போது நாம் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளுக்கு வருவோம்…                               
ஆய சிற்சபை: வலது கண், இடது கண், நெற்றிக்கண் ஆகிய முக்கோண மாடத்தை ஆய்த எழுத்தாக வரையறுத்ததை நாம் இதற்கு முன்பே கண்டோம். அப்படிப்பட்ட ஆய்த இடத்திற்கு சிற்சபை எனப் பெயரிட்டு அழைக்கின்றோம். ஆய்த சிற்சபையே இங்கு ஆய சிற்சபை என வழங்கப்பட்டுள்ளது.

          மாசற்ற ஒளி வடிவின் முடிபைக்காட்டுகின்ற வெளி, சுகந்தரு வெளியாக உள்ளது. அப்படிப்பட்ட சுகந்தரு வெளியான சிற்சபையில் விளங்குகின்ற இறைவனே.

ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 36

ஞான யோகாந்தம்: சித்தத்தை அடங்குதலே யோகம் ஆகும். சித்தத்தின் விரிவுகளாகிய மனம், அறிவு, அகங்காரம் இவைகளை அடக்குவதே யோகமாகும். இதுவரை அனைத்து சமயங்களிலும் யோக வழிமுறைகள் இவ்வாறே கற்பிக்கப்பட்டுள்ளன. இந்த கற்பினைகளை கற்கும் ஒருவர் இறுதியில் சமாதி நிலை அடைவார். அதனையே யோகாந்தம் என்பர். யோகத்தின் முடிபு சமாதியாகும். வள்ளற்பெருமான் கூறுவது ஞான யோகாந்தம். ஞான யோகம் என்பது, மேற்கூறிய மனம், அறிவு, அகங்காரமாகிய சித்தங்களை அடக்காமல் அவைகளை ஞான வழியில் செலுத்துதல் ஆகும். இதனைத்தான் “சமாதி பழக்கம் பழக்கமல்ல. சகஜ பழக்கமே பழக்கம்” என்று திருவருட்பா உரைநடை பக்கம் 438 கூறுகின்றது. ஞான வழியில் சித்தத்தை திருப்புவதே சகஜ பழக்கமாகும். ஞான யோகத்தின் முடிபு அதாவது ஞான யோகாந்தம் என்பது மரணமிலா பெருவாழ்வு ஆகும்.

நெகிழ்ச்சியுறுதல், ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை கொள்ளுதல், சிற்சபையின் கண்ணே மனதை நிறுத்துதல் போன்றவையே மனம் ஞான வழியில் செல்லுதலாம்.

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிந்து அதன் வழி செல்லுதலும், உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளுதலும் - அறிவு ஞான வழியில் செல்லுதலாம்.

தன்னை மதியாதிருத்தலும், தன்னை தாழ்த்திக்கொள்ளுதலும், மானமெலாம் போன வழி விடுத்தேன் என்று நடப்பதுவே – அகங்காரம் ஞான வழியில் செல்லுதலாம்.

இவ்வாறு ஞான யோகத்தை பயின்றால் ஞான யோகத்தின் முடிபான மரணமிலா வாழ்வு கிடைக்கும்.

ஆனியில் சிற்சபை: ஆன் என்றால் பசு. பசு என்பது நமது ஆன்மாவைக்குறிக்கும் சொல். ஆன்மிகம் என்றால் ஆன்மவியல் அல்லது ஆன்மநேயம் எனப்பொருள். “ஆனின்பால் ஆடுவீர் வாரீர்” (4432), எல்லா உயிருள்ளும் ஆடுவீர் வாரீர் என்றும் வள்ளலார் பாடுவதையும் காண்கின்றோம்.  ஆன்மாக்களை திருவெளி என்கிறார் வள்ளற்பெருமான். சிற்சபையிலிருக்கும் ஆன்மா என்பதே ஆனியில் சிற்சபை என்கின்றோம். ஆனி என்றால் ஆன்மாவைக்குறிக்கும். மரணத்தை “தேக ஆனி” என்று வள்ளற்பெருமான் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிற்சபையிலே அமர்ந்துள்ள எனதுயிரான திருவெளியில் ஞான யோகாந்த நடனமிடுகின்ற இறைவனே. 

விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 38

விமலம் என்றால் சுத்தம் எனப்படும். போதம் என்றால் அறிவின் மலர்ச்சி எனப்படும். இதனை தாமரைப்பூ மலர்ந்திருக்கும் காட்சிக்கு ஒப்பிடுவர். போதாந்தம் என்றால் அறிவின் எல்லை, அறிவின் முடிபு எனப்படும். அமலம் என்றால் மலமற்றது.

சுத்த அறிவின் முடிபே மெய்ப்பொருள் வெளியாக விளங்குகின்றது. சுத்த சன்மார்க்கத்தில் நடப்பதே சுத்த அறிவாகும். அப்படி சுத்த சன்மார்க்கத்தின் முடிபுகாக விளங்குவது எதுவெனில், இவ்வுடம்பே பொருள் வெளியாக இருக்கக்காணலாம். பொருள் என்றால் இறைவன். பொருள் வெளி = இறைவெளி.

மலமற்ற சிற்சபையை எமது உடம்பினுள்ளே காணும்போது சுத்த அறிவின் முடிபாக எமது உடம்பையே இறைவெளியாக ஆக்கிய இறைவா. 

                                                 – தி.ம.இராமலிங்கம் – கடலூர்        

எனது தாகம்

எனது தாகம்

தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்குகின்றது. அலுவலகம் செல்வதற்காக நான் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தேன். தாகம் அதிமகாவே பத்து ரூபாய் கொடுத்து “அம்மா” வாட்டர் பாட்டில் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.

சற்று தூரம் பேருந்து சென்றிருக்கும். அதற்குள் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் நான் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை அறிந்து, “தண்ணி கொஞ்சம் கொடுங்களேன்” என்று மெதுவாகக் கேட்டார். நான் காது கேளாதது போல கண்டுக்கொள்ளவில்லை. பத்து ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கின்றேன்… எனக்கே சொந்தமான தண்ணீரை இவர் எப்படி கேட்கலாம்? உள்ளுக்குள் அவர் மீது ஏகப்பட்ட கோபம் எனக்கு. இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஜன்னல் வழியே பார்வையை ஓட்டவிட்டேன்.

எங்கும் கல்லும் மண்ணும் நிறைந்த நிலப்பரப்பு. அனல் காற்று வீசியது. மரம், செடி, புல், பயிர் இப்படி பசுமை இனங்களை பார்க்கவே முடியவில்லை. ‘எனக்கு சொந்தமான தண்ணீர்’ என்று வானம் நினைத்ததால், பூமியில் மழை பெய்யவில்லையோ? என்று எனது மனம் உண்மையை உணரத்தொடங்கியது. அப்போது மீண்டும் சற்று வேகமானக் குரலில், சார் கொஞ்ஞம் தண்ணீர் தர்ரீங்களா? என்று கேட்டார் என் பக்கத்து இருக்கைக்காரர்.

அப்போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை. வேண்டா வெறுப்பாக எனது தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தேன். அவரும் அதனை வாங்கி பாதி பாட்டில் தண்ணீரை காலி செய்துவிட்டு, “அப்பா… இப்பத்தான் உயிரே வந்தது!” என்று என்னிடம் ஏறத்தாழ ஒன்றும்மில்லாத பாட்டிலை தந்தார். அவர் எனக்கு நன்றிகூட சொல்லவில்லை. ஆனாலும் அவர் சொன்ன அந்த வார்த்தை “இப்பத்தான் உயிரே வந்தது” என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.


“உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க” என்று எத்தனை முறை நான் அகவல் படித்திருப்பேன். ஆனாலும் என்னிடம் கெஞ்சி கேட்பவருக்கு கொஞ்சம் தண்ணீர் கூட என்னால் கொடுக்க முடியவில்லையே. என்ன நான் சன்மார்க்கி என என்னை நானே நொந்துக்கொண்டேன். எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இறைவன்தான் என்பதை நான் எனது அலுவலகம் அடைந்தப் பிறகு அறிந்துக்கொண்டேன்.                                                                    TMR