Tuesday, June 4, 2013

ஆண்களின் பார்வையில் பெண்கள்

ஆண்களின் பார்வையில் பெண்கள்




நண்பர்களே! பொதுவாக ஆண்களின் பார்வையில் அன்று முதல் இன்று வரை பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள்? என்ற நோக்கில் இப்பதிவு அமைந்துள்ளது.

படித்துப் பார்த்து நாம் ஆண்களாயினும் பெண்களாயினும் அனைவரும் சற்று சுயபரிசோதனை செய்துக்கொள்வோம்.



இன்றைய நவீனக் காலத்தில் கூட, "பெண்ணின் உடல் பெண்ணுக்கானது அல்ல, அவர்களுக்கான எல்லா விருப்பங்களும் அவர்கள் சேர்ந்த ஆண் குடும்பம், சமுதாயம், மதம் ஆகியவையே தீர்மானிக்கின்றன. அவள் எந்த மாதிரி உடையணிய வேண்டும்? யாரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்? என்ன படிக்கவேண்டும்? எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்? இப்படி அவள் தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் வேறு யாரோ தீர்மானிக்கிறார்கள். உண்மையில் அவள் உடல் மீது எவ்வித உரிமையும் அவளுக்கு இல்லை.



'புருசன் வீட்டில் வாழப்போற பெண்ணே, சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு கண்ணே' என்று பெண்களுக்கு மட்டும் புத்திமதிகள் ஏறாளமாய் இந்தச் சமூகத்தில் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். பெண்களுக்கு மட்டும் புத்திமதி சொல்லும் அளவிற்கு பெண்கள் என்ன புத்திகெட்டவர்களா?



ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது புது அனுபவம்தான். ஆனால் ஆண்கள் தன் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கிறான். பலகீனமான பெண்கள் மட்டும் வேறொருவர் வீட்டில் முற்றிலும் புதிய மனிதர்களிடம் புதிய சூழலில் வாழவேண்டும். இது பற்றி நமது சமுதாயத்தில் போதிய கவனம் இதுவரை ஏற்படவில்லை. ஏன் அவள் மட்டும் இடம் பெயர வேண்டும்?



பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் பழக்கம் இது, ஆதலால் இது நமக்கு மிகவும் சகஜமாக தெரிகின்றது. இருக்கிற வீட்டிலேயே ஒரு நாளைக்கு இடம் மாறிப் படுத்தாலே நமக்குத் தூக்கம் வராது. சுமார் 22 வருடங்கள் ஒரு வீட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பெண்ணை திடீரென்று வேற வீட்டில் போய் வாழு என்று சொல்வதி நியாயம் இருக்கிறதா?



இந்த மன அழுத்தம்தான் புகுந்த வீட்டில் ரொம்ப பயந்து அடங்கிப் போய்விடுகின்றவளாக (ரொம்ப நல்ல மருமகள்) பெண்கள் திகழ்கிறார்கள். அல்லது அதன் எதிர் வடிவமாக மாமனார் மாமியாருக்குக் கஞ்சி ஊத்த மறுக்கிற (கொடுமைக்காரி) பெண்களாகவும் திகழ்கிறார்கள். இந்த இரண்டு குணாதிசயங்களுக்கும் காரணம் பெண்களா? ஆணாதிக்க சமுதாயம் தான். பெண்ணை தன் இயல்பில் வாழ இன்றுவரை நாம் அனுமதிக்கவில்லை. பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி. அப்படி அவள் வாழும்போதுதான் அவளுடைய குணங்களுக்கு அவளே பொறுப்பேற்க முடியும்.



திருமணம் என்னும் நிகழ்வு ஆணுக்குச் சந்தோசமும் கூடுதல் செளகரியமுமானதாக அமைகிறது. ஒரு பெண் தமக்கு வேலைக்காரியாக, சமையல் காரியாக, தாதியாக, தாயாக, தாசியாக, அடிமையாக இருக்க வருவதையும், ஆணின் காரியம் யாவினும் கைகொடுப்பாள் என்ற மனக்குறுகுறுப்புடனும் குதூகுலத்துடனும், மொத்தத்தில் நமக்கு ஒரு அடிமை சட்டப்படி சிக்கப்போகிறாள் என்ற சந்தோஷத்துடன் திருமணத்தை எதிர்கொள்பவர்கள் ஆண்கள்.



ஆனால், பெண்களின் நிலை? மேற்கண்ட அடிமைவாழ்வை தமது பொறுப்பு என்றும் கடமை என்றும் ஏற்றுக்கொள்ளுதல். இவைகள் ஒருபோது பெண்களுக்குச் சுமைகள் அல்ல என்று ஆணாதிக்கச் சமுதாயம் கூறுகிறது. அடிமை வாழ்வு கணவனுடன் சென்றுவிடுவதில்லை. கணவனைச் சேர்ந்த குடும்பத்தார்களையும் கவனிக்க வேண்டும். அவர்கள் எப்படிப்பட்டவர்களோ? என்கிற அச்சத்துடன் மன அழுத்தத்துடன் ஒரு பெண் தமது திருமணத்தை எதிர்கொள்கிறாள். பெரும்பாலும் 99 சதவிகிதம் அவள் பயந்தபடியே அவளின் திருமணத்திற்குப் பிறகு, கணவன் உட்பட புகுந்த வீட்டில் உள்ளவர்களால் அவளுக்கு அவமானமே அடையநேரிடுகிறது. இதனை வெளியில் ஒரு பெண் சொல்லமுடியுமா? இப்படிப்பட்ட பெண்களின் மனநிலையினை ஒவ்வொரு பெண்களும் எழுதத் தொடங்கினால் கோடான கோடி காவியங்கள் நமக்குக் கிடைக்கும்.



ஆனாலும் பெண்ணால் எப்படி பொருத்துக்கொண்டு வாழமுடிகிறது! அதிசயம்தான். இவ்வகையில் பெண்கள் தங்கள் குடும்பக்கூட்டிலிருந்து வெளியில் வந்து விவாகரத்து வாங்குவதை நான் ஆதரிக்கின்றேன். அவர்கள் மறுமணம் செய்வதும் என்னை பொறுத்தமட்டில் தவறில்லை. குடும்ப அமைப்பு சிதறாதா? என்றால் அதற்கு பெண்கள் காரணமில்லை. இந்த ஆணாதிக்க சமுதாயம்தான் காரணம் என்பதனை கூறவும் வேண்டுமோ? அடிமைப்பட்டுதான் குடும்ப அமைப்பை பெண்கள் காக்கவேண்டும் என்றால், அக்குடும்ப அமைப்பு என்பது தேவையா? இதனை ஆண்கள் ஏற்பார்களா? பெண்ணின் வீட்டில் வந்து அடிமையாக இருக்க அவர்கள் சம்மதிப்பார்களா?



நாம் பின்பற்றும் மதங்கள் ஒரு ஆணை எப்படிப் பார்க்கிறது? பெண்ணை எப்படிப் பார்க்கிறது? என்றால், பெண்களை அடிமைப் படுத்துவதிலும் அதற்கு ஒரு தெய்வீக நியாயம் வழங்குவதிலும் எல்லா மதங்களுமே மகத்தான பங்கு வகிக்கின்றன.



மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று துறக்க வேண்டிய பட்டியலில் மண், பொன் போன்ற பொருட்களோடு பெண்ணையும் ஒரு பொருளாக (உயிரற்றதாக) சேர்த்து வைத்தது மதம். பெண்ணின் உடம்பு தீட்டுப் பட்டது, புனிதமற்றது, பாவத்தின் சின்னம் என்று இந்து, கிறுத்துவம், இஸ்லாம், பெளத்தம் என எல்லா மதங்களுமே போதிக்கின்றன.



'பெண்ணைப் படைத்த போதே அவளைப் பொய் சொல்லும் குணத்துடனும் நகைகளுக்கு ஆசைப்படுகிறவளாகவும், கோபம், தற்குரித்தனம், சிறுமதி, ஏமாற்று, கெட்ட நடத்தை போன்ற சகல துர்க்குணங்களுடனும் ஆண்டவன் படைத்துவிட்டான். அவளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஆண் கடுமையான முயற்சி மேற்கொள்ளவேண்டும்' என்கிறது மனுசாஸ்திரம்.



'கடவுள் முதலில் படைத்தது ஆணைத்தான். பிறகுதான் பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தார். ஆகவே, பெண் இரண்டாம் நிலைக்கு உரியவள்' என்றும் 'பாவ உடம்பைப் பெற்ற பெண் - கடவுளை ஆணில்தான் காணவேண்டும்' என்றும் கிறுத்துவம் சொல்கிறது.



'பெளத்த மதத்தின் ஜாதகக்கதைகள் பல, பெண்களுக்கு உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு பார்க்கத் தெரியாது என்றும், அவர்களை மணலைப் போல உறுதியற்றவர்கள், பாம்பைப் போல கொடூரமானவர்கள்' என்றும் பேசுகின்றன.



இஸ்லாமும் - பெண்ணைப் புனிதமற்றவள் என்றே கூறுகிறது. கழிப்பறைக்குப் போவது - நோயாளியாக இருப்பது - பெண்ணைத் தொடுவது இம்மூன்றுமே சம அளவில் புனிதமற்றவை. இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்தவன் தன்னைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ளாமல் தொழுகைக்குப் போகக்கூடாது, என்கிறது.



ஆக, எல்லா மதங்களுமே பெண்கள் ஆணுக்கு அடிமைப் பட்டுக் கிடப்பதை நியாயம் என்று சேர்ந்திசை பாடி முழங்குகின்றன. மதங்களின் செல்வாக்கு நாமறிந்ததுதான். உண்மைக் கடவுளே நேரில் வந்து மதக்கருத்துகளை மறுத்தாலும் இனிமேல் நாம் அதனை ஏற்கத் தயாகயில்லை, அந்த அளவிற்கு நாம் நமது மூளையை இழந்து இருக்கிறோம். சமீபத்தில் ஆனந்த விகடனில், காஞ்சி சங்கராசாரியார் கூறியது, 'வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோருமே நடத்தை கெட்டவர்கள்' என பேட்டி யளித்தார். எத்தனைப் பெண்கள் வெகுண்டனர்? அந்த அளவிற்கு நமது மூளையில், பெண்ணடிமைத்தனம் எழுதப்படாத சட்டமாக பதிந்துவிட்டது.



பெண்ணாதிக்க சமுதாயம்: நமது மனித இனம் துவக்கத்தில் தாய்வழி சமூகமாகத்தான் இருந்தது. அதாவது பெண்தான் சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். அப்போது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரங்களெல்லாம் இல்லை. எந்த ஆணும் எந்த பெண்ணோடும் உறவு கொள்ளும் கட்டற்ற பாலுறவுமுறை இருந்தது. பின்னர் அது இனக்குழுவுக்குள்ளேயே ரத்த உறவுகளுக்குள் பால் உறவு கூடாது என்று சற்று கட்டுப்பட்டது. அப்போதும் தாய்தான் தெரியும், தகப்பன் யார் என்ற கேள்வியே கிடையாது. தாய்தான் இரைத்தேடிக் கொண்டுவந்து ஊட்டி வளர்த்தாள். மண உறவுகள் விலக்கப்பட்டு விலக்கப்பட்டு இன்று இருக்கும் ஒருதார மணமுறைக்கு வந்து சேர்ந்துள்ளோம். மனித குலம் காட்டுமிராண்டிகளாகத் திரிந்த காலம் முடிந்து, நாகரிகம் பெற்றபோது ஆடுமாடுகளை மேய்த்துத் திரியும் மேய்ச்சல் காலம் வந்தது.



ஆடுமாடுகள் மனிதனின் சொத்தாயின. பிரசவம் போன்ற காரணங்களால் குகைகளில் தங்கிய பெண்கள் அந்தக் கால்நடைகளின் மீது கொண்ட உரிமைகளைவிட அவற்றை மேய்த்து வந்த ஆண்கள் அச்சொத்தின்மீது கூடுதல் உரிமை பெறமுயன்றனர். என் சொத்து எனக்கு மட்டுமே, அது எனக்குப் பிறந்த பிள்ளைக்கு மட்டுமே போய் சேரவேண்டும் என்கிற சிந்தனையில் செயல் வடிமாக பெண்ணின் பாலுறவுச் சுதந்திரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவள் உடம்பின் மீது அவள் கொண்ட உரிமை நீக்கப்பட்டது. அவள் ஒருவனுக்கு உடமையாக்கப்பட்டாள். பெண்வழி சமூகம முடிவுற்று ஆண்வழி சமூகம் உருபெற்றது. இந்த ஒருதார மணமுறையின் பின்னணியில் சொத்து இருக்கின்றது. எனவே பெண்ணைக் கட்டுபடுத்துவதில் சொத்துரிமைக்கு மிகமிக அவசியமாகிறது. சொத்துரிமைக்கு பெண்ணடிமை மட்டுமே தீர்வு என்பது சரியா?



தாய்வழி சமூகத்திற்கு என குறியீடுகளும் இருந்துவந்துள்ளன,



பண்டைய கணித முறையில் ஒன்று ஃபிபனாக்கி அதன்படி பிரபஞ்சம் ஃபீ (PHI) எனப்படும் அலகுகளால் கட்ட்மைக்கப்பட்டது. அந்த ஃபீயின் மதிப்பு 1.618.



# கோபுரக் கிளிஞ்சலில் ஒரு வளையத்தின் விட்டத்திற்கும் மற்றொரு வளையத்தின் விட்டத்திற்குமான அளவு 1.618.



# சூரிய காந்திப்பூ ஒரு புறமிருந்து மறுபுறம் வளைவதன் அளவு 1.618.



# மனித உடலில் தலையிலிருந்து கால் வரை உள்ள நீலத்திலிருந்து, தொப்புளிலிருந்து கால் வரை உள்ள நீலத்தைக் கழித்தால் மீதம் கிடைக்கும் எண் 1.168.



# எகிப்தியப் பிரமிடுகள், ஐ.நா. சபைக்கட்டடம், பீத்தோவனின் ஐந்தாம் சிம்பொனி ஆகியவை எல்லாம் 1.168 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டவையே என்பது நம்பமுடியாத ஆச்சரியம்.



டாவின்சியின் 1.618 என்ற குறியீட்டை வெளிபடுத்துவதற்காகவே சனீரே இந்த போஸில் / நிலையில் மல்லாந்து கிடப்பதாக லாங்தன் புரிந்துக்கொள்கிறார். மேலும் சனீரேயின் வயிற்றின் மேல் ஒரு ஐந்து முனை நட்சத்திரமும் 1.618 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டது.



ஐந்து முனை நட்சத்திரம் என்பது கிறுத்துவ சமயம் தோன்றுவதற்கு முன்பாக பழங்குடி மக்கள் பயன்படுத்திவந்த தாய்வழிச் சமூக குறியீடு, தொன்மைக்குறியீடான அது இன்றைய ஆணாதீக்கச் சமூகத்தில் கூட மிச்ச சொச்சமாக ரகசிய மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.



# நவீன ஒலிம்பிக் சின்னத்தின் ஐந்து வளையங்கள் இந்த ஐந்து முனை நட்சத்திரத்தின் மறு உருவாக்கமே.



# அமெரிக்க ராணுவ மையத்தின் கட்டடம் ஐந்து முனைக்கட்டடமாக வடிவமைக்கப்பட்டது தற்செயலான விஷயமல்ல.



பின்னாளில் வந்த ஆணாதிக்கவாதிகள் தாய்வழி சமூக வழிபாடுகளை ஒழித்தபோது இந்த ஐந்து முனை நட்சத்திரமும் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. பண்டைய தாய்வழி சமூக வழிபாடு ஒழிக்கப்பட்டப்பின்பும் அதனை காக்கும் பணியில் பல ரகசிய சங்கங்கள் ஈடுபட்டன. அவர்கள் ரோஸிக்குரூசியர்கள், சீயோன் சங்கத்தினர், டெம்ப்ளார்கள் என்று பல விதமாக அறியப்படுகிறார்கள்.



டாவின்சி கோட் நாவல் சீயோன் சங்கத்தினரை முன் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஐசக் நீயுட்டன், விடர் ஹியூகோ, லியனார்டோ டாவின்சி போன்றோர்கள் இச்சங்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் படைப்புகளில் குறியீடுகளாக தங்கள் நம்பிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



ஏசு என்பவர் யூத மன்னர் குலத்தை சேர்ந்தவர். சாலமோன் தாவீது போன்ற யூத மரபில் வந்தவர். (ஏசு தன்னை யூதர்களின் ராஜா என்று அழைத்துக் கொண்டதாக பைபிள் குறிப்பு வருகிறது) யூத மன்னரான ஏசுவிற்கு மனைவி உண்டு. அவள் பெயர் 'மகதலேனா'. ஏசுவிற்கு ஒரு மகள் உண்டு. அவள் பெயர் 'சாரா'. யூத மதத்தில் பிரம்மச்சரியத்திற்கு இடம் இல்லை. எனவே ஏசு பிரம்மச்சாரியாக இருந்தார் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது.



'டாவின்சி கோட்' என்ற திரைப்படம் ஆணாதிக்க கிறுத்துவர்களால் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதை நாம் அறிவோம்.



புனிதமாகக் கருதப்பட்டு ஆதிகால விவசாய நிலத்தில் தெளிக்கப்பட்ட பெண்ணின் மாதவிடாய் ரத்தம் இப்போது தீட்டு என்று பழிக்கப்படுகின்றது. நாமெல்லம் இந்தத் தீட்டிலிருந்து வந்த 300 நாள் தூமைகள் என்பதை மறந்து விட்டோம். பெண்களின் சுயமரியாதையும் கடவுளின் அருளும் அந்த நிகழ்ச்சியில்தான் (தீட்டில்தான்) வெளிப்படுகிறது. நாம் அதனை புனிதமாகத்தானே பார்க்கவேண்டும்? எங்கு தவறு நேர்ந்தது? மறுபடைப்புச் செய்யும் அதிசயத்தை நிகழ்த்தும் பெண் உறுப்பு வணங்கப்பட்ட நிலை மாறி பெண்உறுப்பின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆண் உறுப்பின் வடிவமான லிங்க வழிபாடு பழக்கத்திற்கு வந்துவிட்டது. எல்லாம் தலைக்கீழாய் மாறிவிட்டது. பெண் தன் இடத்தை இழந்தாள், அவளும் ஏன் அதற்கு உடன்பட்டாள்?



19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப்புரட்சி வெடித்தது. ஆணும் பெண்ணும் சமம் இல்லையா? பெண்ணுகு சுதந்திரம் இல்லையா? என்ற கேள்விகள் வெடித்தன. நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாக ஒரு பெரெஞ்சுப் பெண் போட்டியிட்டார். அவரை பிரஞ்சு சமுதாயம் பழித்தது. ஒரு பெண் எப்படி அரசியல் வேலை செய்ய முடியும்? என்றனர். அப்பெண்மணி அமைதியாகக் கேட்டார், "பெண்ணாகிய நான் பயன்படுத்தமுடியாத எந்த ஆணின் உறுப்பைக் கொண்டு அரசியல் வேலை நடக்கிறது என்பதை விளக்குங்கள, நான் ஒப்புக்கொள்கிறேன்." பிரஞ்சு சமுதாயம் இக்கேள்வியால் வாயடைந்து போனது.



20-ம் நூற்றாண்டு பெண்கள் உரக்கப் பேசிய நூற்றாண்டாக மாறியது. மனித உரிமைப் பிரகடனம் பெண் சமத்துவத்தை ஏற்றது. உலகமெங்கும் பெண்களின் விடுதலைக்கு ஆதரவாக (சொத்துரிமை உட்பட) ஏராளமான சட்டங்கள் இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன.



வரலாறு எத்தனையோ தூரங்களைக் கடந்து வந்தாலும் நம் வீடுகளில் மாற்றங்கள் வந்து சேர்ந்தபாடில்லை. நாட்டுக் நீ ராணியானாலும் வீட்டுக்கு நீ அடிமையே என்ற போக்கு எப்போது மாறும்?! அங்கீகரிக்கப்பட்ட உறவு வளையத்துக்கு அப்பால் அவள் நட்போ, தோழமையோ கொள்ளக்கூடாது. குடும்ப எல்லைக்கு உட்படாத தனிப்பட்ட மகிழ்ச்சிகள், அனுபவங்கள் அவளுக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. தன் அறிவை விருத்தி செய்யும் ஆணுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் புகுந்து வெற்றி காணவும் இன்னும் பெண்ணுக்கு கதவுகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வீட்டுக்கும் வெளிஉலகுக்கும் இடையில் ஒரு சீனப்பெருஞ்சுவர் இருந்துக்கொண்டே இருக்கிறது.



ஏன் ஆண்களால் 'பார்க்கப்படுகின்ற' ஒரு கவர்ச்சிப் பொருளாக பெண் இருக்கிறாள்? சிறு பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன்? அதே பெண் திருமணம் என்று வரும்போது வரதட்சணையோடு வந்தால் மட்டுமே ஒரு ஆணால் விரும்பப்படுபவளாக மாறுவது எதனால்? பத்தினி தெய்வமாக பெண்கள் மட்டுமே இருக்கவேண்டும், ஆண்கள் ஏன் பத்தன ஆணாக இருக்கக் கூடாது? ஆணுக்குச் சமமாக பெண்களும் படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும், பெண்ணுக்கே உரிய கடமைகளிலிருந்து அவளுக்கு விடுதலை இல்லையே ஏன்? சலிப்பும் கோபமும் பெண்களுக்கு ஏன் வரவில்லை? சமைப்பது உண்மையில் யாருடைய வேலை?



சோசலிச சமூகம் பற்றிக் கனவுக்கண்ட மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றவர்கள், குழந்தை பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் போன்றவை சமுதாய தொழிலாக மாற்றப்படவேண்டும் என்று விரும்பினர். சமுதாய பொது அடுப்பில் மொத்தமாக சமைத்து வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை லெனின் அறிமுகப்படுத்தினார். "நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனிதகுல விடுதலை சாத்தியமே இல்லை" என்றார் லெனின்.



தந்தை பெரியார் நடத்தி வைத்த பல சுயமரியாதை திருமணங்களில் பெண்கள் தாலி கட்டிக் கொள்ள மறுத்தனர். ஏன் நான் மட்டும் தாலி கட்டவேண்டும்? அது என் சுயமரியாதையைப் பாதிக்கிறது என்று பெரியாரிடமே வாதம் செய்தனர். பெரியார் அத்தகய எதிர்ப்புகளை வரவேற்றார். ஆண் பெண் சமத்துவத்தை உற்சாகப்படுத்தினார்.



ஆண் பெண் சமத்துவத்தின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான வேலைப் பிரிவினையோடு கூடியதாக நமது குடும்பங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான காதலே குடும்பத்தின் அடிநாதமாக அமைய வேண்டும். அந்தக் காதல் சுதந்திரமானதாக - பெருந்தன்மை மிக்கதாக - எந்த நிர்பந்தமும் இல்லாததாக முழு மனதோடு கூடியதாக இருந்தாக வேண்டும்.



உணர்ச்சிகரமானவையாகவும் சோறு பொங்கிச் சாப்பிட்டு தொலைக்காட்சி பார்த்துத் தூங்கும் இடங்களாக மட்டுமே இருக்கும் நம் குடும்பங்கள் இனி அறிவு வளரும் இடங்களாகவும் மாறவேண்டும். புத்தகங்களும், வாசிப்பும் குடும்ப வாழ்வின் அன்றாட நிகழ்ச்சியாகவேண்டும். அப்படியான குடும்பங்களை உருவாக்குவதில் பெண்களே முன்னிற்க வேண்டும். ஆண்கள் மனமாற்றம் பெற பெண்கள் முயற்சியும் போராட்டமும் அடிப்படையாக அமைய வேண்டும்.



பெண்விடுதலைக்காக மகாக்கவி பாரதியார் கூறுவதும் இதனையே, "சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனர்களாகவும், தந்தை பாட்டனார்களாகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவர்களாய் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது என்னுடைய மனம் குருச்சேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ச்சுனனுடைய மனது திகைத்தது போல திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்காத காரியம். அதுபற்றிய சாத்வீக எதிர்ப்பினால் அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்... இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமெனில், இந்தக் காலமே சரியான காலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாசமே சரியான மாசம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே நல்ல முகூர்த்தம்."



இவ்வாறு அனைத்து மதங்களும், மதம் சாராத சித்தர்களும் பெண்களை மனிதப் பிறவியாகவே மதிப்பதில்லை. இந்நிலையை முதன்முதலில் களைத்தெரிந்த ஞானி நமது வள்ளல் பெருமான். இவரே பெண்கல்விக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவர். அது மட்டுமல்ல, பெண்களுக்கும் தவம் முதலிய சாதனங்களை சொல்லித்தர வேண்டும் என்று குரல் கொடுத்தார். எதிலும் பொதுநோக்கம் வரவேண்டும் என்பதற்காகவும், தயவினை விருத்தி செய்யவும் தடைகளாக இருக்கும் மதாச்சாரியங்கள், சாதிய ஆசாரங்கள், குல ஆசாரங்கள் போன்ற கட்டுப்பாடுகளை உடைத்தெரிய சொன்னார். தயவு வந்துவிட்டால் அங்கு பெண் என்ற பேதம் ஏது? தீட்டுதான் ஏது? அனைவரும் ஆண்டவரின் மக்கள் என்ற பொது நோக்கம் வந்து எய்தும். எனவே முதலில் பெண்கள் தங்களது மத, குல, சாதி ஆச்சாரங்களை உடைத்தெரியுங்கள். வள்ளலார் மார்க்கம், பெண்களையும் மரணமிலா வாழ்வில் அழைத்துச்செல்ல தயங்கவில்லை.

இதன் எதிரொளியாக அன்றைய பெண்கள் தங்களுக்குக்கென்று "மாதர்கள் சன்மார்க்கச் சங்கம்" என்று பல்வேறு இடங்களில் துவங்கி சுத்தசன்மார்க்க கருத்துகளை பரப்பினர் என்றால், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம், பெண்களையும் தன்னோடு அரவனைக்கத் தவறவில்லை என்பது புலப்படும். பெண்களையும் சுத்தசன்மார்க்கத்தில் ஈடுபடவைக்க வேண்டும் என்பதற்காகவே நம்பெருமானார், மடம், ஆஸ்ரமம் போன்றவற்றை தமது இயக்க பரப்புதலுக்கு துவங்காமல் அனைவருக்கும் பொதுவான 'சங்கம்' என்ற அமைப்பை துவங்கினார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால் இன்றைய பெண்கள் ஏன் இதனைக் கைவிட்டனர்?




கீழே உள்ளது சீர்காழியில் உள்ள மாதர்சங்கத்தின் நுழைவுவாயில்.




மனிதர்கள் மரணமிலா பெருவாழ்வு அடைய வேண்டின் சில கட்டுப்பாடுகளை வள்ளலார் கூறும்போது, அவர் ஆணாக இருப்பதினால் 'பெண் இச்சை' கூடாது என்கிறார். வள்ளலார் ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் 'ஆண் இச்சை' கூடாது என்று சொல்லியிருப்பார். அதாவது ஆணாகயிருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைய பாலுறவுக் கூடாது என்று அவர் போதிக்கிறார். மற்றபடி அவர் ஆண்களையும் பெண்களையும் சமமாகவே பாவிக்கிறார்.



வள்ளலார் தமது உபதேசத்தில், நாம் நகைகள் அணிந்து பொன்னாசையினை எவ்வாறு வளர்க்கிறோம் என்பதை கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார்,



'காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர், ஆணுக்கு கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால், காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்கமாட்டாரா?" என்று நம்மைக் கேள்வி கேட்கும்போதுக் கூட ஆண்களையும் பெண்களையும் பொதுவில் வைத்தே கேட்கிறார்.



ஆணாதிக்கச் சமுதாயத்தை மீண்டும் பெண்ணாதிக்க சமுதாயமாக மாற்றவேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் யாவரும், ஆணாகினும் பெண்ணாகினும் பொதுநோக்குடன் யாருடைய ஆதிக்கமும் இன்றி தயவு கருணையின் அடிப்படையில் உலகியலில் நடைபோடவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.



வாழ்க பெண்களின் சுயமரியாதை! வளர்க ஆண்களின் கருணையும் தயவும்!



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

















4 comments:

  1. Today, women empowerment is gradually increasing day by day.

    ReplyDelete
  2. இது போன்ற தேவையற்ற பதிவுகளை வெளியிட்டு நல்லா வாழ்கின்ற பெண்ணின் வாழ்கையில் புரட்சியை விதைக்காதீர்கள் தற்காலத்தில் பெண்கள் தான் ஆண்களின் வாழ்கையை வீணாக்குகிறார்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.