Monday, September 5, 2016

விநாயகர் பிறந்த நாள்




விநாயகர் பிறந்த நாள்

ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி திதி அன்று இந்து மதத்தினர் ஆன்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்திய அளவில் மும்பையில் மிகபிரமாண்டமாக இவ்விழா கொண்டாடப்படுகின்றது. அதன் அடியொட்டி தற்போது எல்லா மாநிலங்களிலும் பொருள் செலவு பாராமல், தெருவுக்குத் தெரு போட்டி மனப்பாண்மையுடன் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாகச் செய்யப்பட்டு, அதனை சில நாட்கள் வழிபாடுகள் செய்துவிட்டு, ஒரு நாளில் அனைத்தினையும் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைத்துவிடுவது வழக்கமாகிவிட்டது.

இதே போன்று இந்து மதத்தினர் தத்தம் இல்லங்களில் சிறிய அளவில் மண் பிள்ளையாரை வாங்கிவந்து படைத்துவிட்டு அதனையும் ஒரு நாளில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைத்துவிடுகின்றனர். 

விநாயகர் எவ்வாறு பிறந்தார் என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. “பார்வதி தேவி கைலாயத்தில் குளிக்கச் செல்லும்போது, தன் உடம்பில் உள்ள அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி, அச்சிறுவனை காவலுக்கு நிற்கச்சொல்லிவிட்டு, யாரையும் உள்ளே விடவேண்டாம் என கட்டளையும் இட்டுவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள். அந்நேரம் பார்த்து சிவபெருமான் பார்வதியைப் பார்க்க அங்குவர, அவரை அச்சிறுவன் உள்ளே போகாதவாறு தடுத்தான். கோபங்கொண்ட சிவபெருமான் உடனே அச்சிறுவனின் தலையினை வெட்டி கொலைசெய்துவிட்டான். பின்னர் தமது ஞானத்தால் அச்சிறுவன் பார்வதியின் ஆக்கம் என்பதை தெரிந்து, பூதகணங்களை அழைத்து, நீங்கள் காட்டினுள் சென்று அங்கு முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையினை கொய்து எடுத்துவாருங்கள் என உத்தரவிட்டார். அவர்கள் முதலில் பார்த்தது ஒரு யானை ஆகும். எனவே அந்த யானையினைக் கொன்று அதன் தலையினை எடுத்துவந்து சிவபெருமானிடம் கொடுத்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் முண்டத்தில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது குளித்துவிட்டு வெளியில் வந்த பார்வதி, இந்த பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன்தான் பிள்ளையார்.

இந்தப் பிள்ளையாரின் பிறந்தநாளைத்தான் நாம் கொண்டாடுகின்றோம். பார்வதி தேவி எவ்வளவு அழுக்குடன் இருந்திருந்தால், அவ்வழுக்கிலிருந்து ஒரு சிறுவனின் பொம்மையினை உருவாக்க முடியும்? என்று நினைத்துப் பார்த்தால் பார்வதி தேவியின்மீது அறுவெறுப்பு தோன்றவில்லையா? ஒரு சிறுவன் என்று கூட பார்க்காமல், அவனை கோபம் கொண்டு கொலை செய்யும் சிவபெருமான் கொலைகாரனாக தோன்றவில்லையா? எதுவும் அறியாத காட்டுயானையை கொலை செய்யும் பூத கணங்கள் கொலைகாரர்களாகத் தோன்றவில்லையா? எவ்வளவு அநியாயங்கள் நடந்தேறிஉள்ளன! இப்படி அழுக்கே உருவாக உடையவனுக்கு பிறந்தநாள் கொண்டாடும் எமது மதியினை என்னென்பது? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். 

இதனை அறிந்த வள்ளற்பெருமான், விநாயகர் பிள்ளையார் கணபதி என்றெல்லாம் அழைக்கப்படுவது நமது உடலில் உள்ள நாடிகளே அன்றி வேறில்லை என்று அதன் உண்மையினை எடுத்துரைக்கின்றார். மக்கள் அந்த உண்மையினை அறியாமல், கொண்டாட்டம் என்று இவ்வுலகில் கூத்தடிக்கின்றனர். 

“கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-375)

“…இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது.

மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-366)


என்ன ஒரு அற்புதமான விளக்கத்தை வள்ளற்பெருமான் கொடுத்துள்ளார். (கவர் – பிரிவுடைய) இவ்விளக்கத்தை படித்தப் பின்பும், மக்கள் பிள்ளையார் வணக்கத்தில் வழக்கம்போல் சடங்குகளை பிசகாமல் செய்தால், அது அவர்களின் அறியாமையின் ஆழத்தை எடுத்தியம்புகின்றது என்றே பொருள்.

அறிவுசார் மக்களே…! புற உலகில் நாம் வணங்கும் உருவங்கள் அனைத்தும் பொய்யே. அதன் உண்மை நமது உடம்பில் இயங்கும் சக்தியாக உள்ளதை அறியுங்கள். பிறந்த நாள் என்பதெல்லாம் உண்மை கடவுளுக்கு இல்லை. நாம் உண்மையினை வணங்க முன்வருவோம். சடங்குகளைத் தவிர்ப்போம். சுத்த சன்மார்க்கப் பாதை காண்போம். கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகக் காண்போம்.

    தித்திமித்திமி யென்னத்திருநடஞ்
                     செய்யுஞ்சிற்சபை யோன்றருந்தெய்வமே
              சித்திமுத்தியும் பத்தியுஞ்செவ்வனே
                     சேர்ந்தனுபவ மாகுந்திறமருள்
              சித்திபுத்தியைச்சேர்ந்துறு மெய்வாழ்வென்றுந்
                     திகழுங்காரணப் பட்டிற்சிறந்துளோர்
              துத்தியம்பெறுமைங் கரத்தூயனே
                     தோன்றலேயருட் ஜோதிக்கடவுளே.  
                                           (ச.மு.க. பிரபந்தத்திரட்டு-3305)

---காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்.

2 comments:

  1. விநாயகருக்கு எத்தனாவது பிறந்தநாள் கூறுங்கள்?

    ReplyDelete
    Replies
    1. அவரவர் உயிர் உடம்பின் வயது

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.