Sunday, January 21, 2024

சன்மார்க் அடையாள அட்டை - SANMARG IDENTITY CARD

சன்மார்க் அடையாள அட்டை

SANMARG IDENTITY CARD 





சன்மார்க்க அன்பர்களுக்கு வந்தனம்!

வள்ளலார் அவர்கள் தமது சுத்த சன்மார்க்க இயக்கம் உலகெங்கும் எடுத்துச் செல்ல ”சங்கம்” என்ற ஊடகத்தை தேர்ந்தெடுத்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று.  

தற்போது உலகெங்கும் நாடெங்கும் சுத்த சன்மார்க்க சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இவைகள் அனைத்தும் அந்தந்த நிர்வாகிகளின் போக்கிற்கு ஏற்ப இயங்கி வருகின்றன. ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இயங்குவதைக் காணலாம். எதிர் காலத்தில் சங்கள் அனைத்தும் இப்படித்தான் இயங்க வேண்டும் என ஒரு வரையறைபடுத்துவது நல்லது. 

மேலும் தற்போது அனைத்து சங்கத்திற்கும் நானே தலைமை சங்கம் எனச் சொல்லி ஒரு சங்கம் இயங்கி வருகின்றது. அச்சங்கத்தை சிலர் ஏற்றுக்கொண்டும், சிலர் எதிர்த்துக்கொண்டும் செயல்படுகின்றனர். எதிர்ப்பதற்கு காரணம் “தலைமை” என்கின்ற வார்த்தையாகும் என நான் நினைக்கின்றேன். எனவே தலைமை என்கின்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும் என்பது எனது கருத்து.

வள்ளலார் எவ்வாறு தமது சங்கத்திற்கு பெயரிட்டாரோ அந்த பெயரில் நாம் எது ஒன்றையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ கூடாது. அப்பெயரினை அப்படியே பதிவு செய்வதே சிறந்தது. எனவே சங்கம் நடத்தும் அன்பர்கள் தங்கள் இட்டத்திற்கான சங்கப் பெயரினை மாற்றாமல் செயல்படுவது உத்தமம். 

அவ்வாறெனில் நாம் எவ்வாறு தலைமை சங்கத்தை வகைப்படுத்துவது? எனில், ”ஐக்கிய சுத்த சன்மார்க்க சங்கங்களின் சபை” என தலைமை சங்கத்தை வகைப்படுத்தலாம். எனினும் அரசு பதிவில் இப்பெயர் வரக்கூடாது. அரசு பதிவில் வள்ளலாரின் சங்கப் பெயர் மட்டுமே வருதல் வேண்டும். ஆனால் சங்க செயல்பாட்டு விதிமுறைகள் இயற்றும் போது அதில் இப்பெயரினை சேர்த்து அதற்கு ஏற்ப விதிமுறைகளை இயற்ற வேண்டும். 

”ஐக்கிய சுத்த சன்மார்க்க சங்கங்களின் சபை” என தனது செயல்பாட்டு விதியில் இருக்கும் இந்தச் சங்கத்தில் இவ்வுலகில் இருக்கும் அனைத்து சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து சங்கங்களும் இச்சங்கத்தில் இணைந்தப் பிறகு அவைகள் அனைத்தும் சேர்ந்து ”சங்கங்களின் சபையினை” இயக்க வேண்டும். இதன் இயங்க விதிகளை பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

தற்போது உலகெங்கும் இருக்கும் சன்மார்க்க அன்பர்களை அடையாளப்படுத்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் “சங்கங்கங்களின் சபை” அடையாள அட்டை வழங்க வேண்டும். அவ்வடையாள அட்டையின் மாதிரியைதான் நான் மேலே உங்கள் பார்வைக்கு பதிந்துள்ளேன். அதற்கு ”சன்மார்க் அட்டை” என பெயராகும். இவ்வட்டைக்கு “அருட்பெருஞ்ஜோதி” ஆண்டவரின் அங்கீகாரம் பெறப்பட்டதாக அறிவிக்கலாம். மேலும் இதற்க்கான அதிகாரம் என்ன? அதைத்தானே நாம் எதிர்பார்க்கின்றோம்!

அதிகாரம் பொருள் இல்லாமல் (பணம்) வராது. எனவே “சங்கங்களின் சபை” குறைந்தது நூறு கோடி பணத்தை தமது வங்கி கணக்கில் குவிக்க வேண்டும். நூறு கோடி சேரும் வரை அப்பணத்தை எவரும் எடுக்கக் கூடாது என தீர்மானம் இயற்ற வேண்டும். சேர்ந்தப்பிறகு ”சங்கங்களில் சபை” வடலூர் பெரு வெளியை தமது ஆளுகைக்குள் கொண்டுவர தமிழ அரசிடம் போராட வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற வழக்காட வேண்டும். இவைகளை செயல்படுத்த வேண்டுமெனில் நூறு கோடி பணம் “சங்கங்களின் சபை” வங்கிக் கணக்கில் இருந்தால் தான் நமக்கு, எடுத்தக் காரியத்தை முடிக்க வேகம் வரும்.

இதற்காக “சன்மார்க் அட்டை” மூலம் ”அக இனத்தார்களை” மட்டும் நாம் “சங்கங்கங்கின் சபை”யில் இணைக்க வேண்டும். குறைந்தது ஐந்து இலட்சம் சன்மார்க்கர்களை இணைத்துவிட்டால் போதுமானது. இவர்கள் ஒவ்வொருவரிடமும் இரண்டாயிரம் ரூபாய் அன்பளிப்புத் தொகையாக வசூலித்தால் நூறு கோடி (100,00,00,000/-) நமது வங்கிக் கணக்கில் வரவாகிவிடும். ”சன்மார்க் அட்டை” பெறுபவர் அனைவரும் இரண்டாயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என்பதல்ல. ஏனெனில் நமது சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவே இருப்பர். அதனால் “சன்மார்க் அட்டை” அக இனத்தார்கள் அனைவருக்கும் இலவசமாகவே வழங்க வேண்டும். அவர்களது அடையாள எண் மற்றும் விவரங்கள் அனைத்தும் “சங்கங்கங்களின் சபை” இணையத்தில் பதியப்பட வேண்டும். (இதனால் தவறான முறையில் அச்சடிக்கப்படும் அடையாள அட்டை செயலிழக்கும்).

இவையெல்லாம் முடிந்துவிட்டால், நாம் அளித்த “சன்மார்க் அட்டை” யானது வடலூர் பெரு வெளியிலும் உலகெங்கும் உள்ள சன்மார்க்க சங்கங்களிலும் தங்களது அதிகாரத்தை காண்பிக்க ஆரம்பித்துவிடும். அதாவது அட்டைதாரர்களுக்கு உரிய மரியாதை சன்மார்க்கர்களுக்கிடையேயும், சன்மார்க்க தளங்களிலும் கிடைத்து விடும். இதற்கான அதிகாரம் என்னென்ன என்பதனை பிறிதொரு பதிவில் காண்போம்.

5,00,000 உறுப்பினர்கள் 2,000 ரூபாய் என்பதே நாம் தற்போது முன்னெடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை. உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்போது டிஜிட்டல் முறையிலேயே மேற்காணும் வண்ணம் ஐ.டி. கொடுக்கலாம். இதனால் செலவினை தடுக்கலாம். 

மேற்காணும் செயல்களை செய்து முடிக்க தற்போதுள்ள தலைமை சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும், சன்மார்க்க சாதுக்களும், சன்மார்க்கர்களும், அக இனத்தார்களும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை இத்தளத்தின் வழியே இறைவனை வேண்டி விண்ணப்பம் வைக்கின்றேன். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

தி.ம.இராமலிங்கம்
9445545475   


   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.