Thursday, March 7, 2024

ஜல சமாதி

 ஜல சமாதி 


பண்டைய பாரம்பரியத்தின் படி இறந்த மனிதர்களை அல்லது மஹா சமாதி அடைந்த மனிதர்களை அப்புறப்படுத்த மூன்று முக்கிய நடைமுறைகள் உள்ளன. அவை, பூ சமாதி (பூமியில் அடக்கம்), அக்னி சமாதி (தகனம்), ஜல சமாதி (நீரில் மூழ்குதல்) ஆகும். இவை மூன்றில் ஏதேனும் ஒன்றை அனைத்து மதத்தினரும் பின்பற்றுவர். இவை இல்லாமல் புத்த மதத்தின் சில பிரிவினர்கள் இறந்தவர்களை பறவைகளுக்கு இறக்குவார்கள். மலைகள் சார்ந்த பிரதேசங்களில் இயற்கையிலேயே வாழுகின்ற புத்த பிட்சுகள், தங்களுடன் வாழ்ந்த நபர் இறந்தவுடன் அவரது பிரேதத்தை மலை உச்சிக்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அங்கே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் பிணந்திண்ணிக் கழுகுகள் உடனே அந்த பிரேதத்தை சூழ்ந்துகொண்டு சில நிமிடங்களில் எலும்புக் கூட மிஞ்சாத வகையில் அந்த மனிதப் பிரேதத்தை உண்டு விடுகின்றன. இவ்வாறு இப்பூமியில் வாழும் மனிதர்களாகிய நாம், நமது பிணங்களை ஏதேனும் ஒரு வகையில் அப்புறப்படுத்துகின்றோம்.

நம்மில் பலர் இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்தல் மற்றும் தீயில் தகனம் செய்தல் ஆகியவைகளையே பார்த்திருப்போம். நாம் தற்போது ஜல சமாதி எவ்வாறு செய்கின்றார்கள் என்பதனைப் பார்ப்போம். இந்தியாவில் தெற்குப் பகுதியான நாம் வாழும் இடங்களிலும் ஜல சமாதி உண்டு. ஆனால் அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவையாக இருக்கும். அதுவும், ஏதேனும் கிணற்றில் குறிப்பிட்ட சுவாமி ஜல சமாதி அடைந்தார் என்கின்ற வரலாறு மட்டுமே உண்டு. தற்காலங்களில் தென் இந்தியாவில் யாரும் ஜல சமாதி வைப்பதில்லை.

ஆனால், வட இந்தியாவில் ரிஷிகேஷ், காசி, அரிதுவார் போன்ற நதிகள் பாயும் சமவெளிகளில் இன்றும் ஜல சமாதி செய்வது சர்வ சாதாரணமாக உள்ளது. நமது வள்ளற்பெருமான் இறந்தவர்களை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மற்ற அனைத்து வழிமுறைகளும் கொலை செய்வதற்கு சமம் என்று தமது போதனையாக இவ்வுலக மக்களுக்கு அறிவுறுத்தும், அவரது கட்டளைகள் பலரது காதுகளுக்குச் சென்று சேரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

நாம் இந்த காணொளியில் ரிஷிகேஷ் நதியில் ஒரு சுவாமிஜியினை எவ்வாறு ஜல சமாதி செய்கிறார் என்பதைப் பாருங்கள். புனித நதி என்று அதனை வழிபட்டுக்கொண்டே இவ்வாறு பிணங்களை அதில் மூழ்கடித்து செல்லும் மனிதர்களை நாம் எவ்வாறு மனிதர்கள் என்று இவர்களைச் சொல்வது? இப்படிப்பட்ட கண்மூடித்தனங்களை அரசு சட்டம் இயற்றி தடுக்க வேண்டும். இப்பூமியில் பாயும் நதிகள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இவ்வாறு மனிதப் பிணங்களை அதில் மூழ்கடித்து நாறடிப்பது மனித குலத்தை இழுக்கும். நன்றி.    



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.